பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது!

நடந்து முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது. பா.ச.க வாக்கு எண்ணிக்கையின் பொழுது குறுக்கு வழியில் வெற்றி பெற்றால் அதற்குச் சார்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தீட்டப்பட்ட நாடகம் என இதனைப் பொதுமக்களே கூறுகின்றனர்.

வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து நாம் பின்வருவனவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

எந்தெந்த வாக்குச்சாவடிகளில் எவ்வப்பொழுது எத்தனை பேரிடம் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற விவரம் இல்லை.

இதுவரை ஒருவர்கூட “என்னிடம் கருத்துக் கணிப்பு கேட்டார்கள், நான் தெரிவித்தேன்” என்று கூற வில்லை. கருத்துக் கணிப்பில் கருத்து தெரிவித்த மரும மனிதர்கள் யாவர்?

கருத்து தெரிவிக்க மறுத்தவர்கள் எத்தனை பேர் எனக் கருத்துக் கணிப்பு நாடக இயக்குநர்கள் தெரிவிக்க வில்லை. அததனை பேரும் கருத்து தெரிவித்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.

கட்சிக்காரர்கள் அல்லது தீவிர ஆதரவாளர்கள் தவிர யாரும் இன்னாருக்கு வாக்களித்தேன் என்று சொல்வதில்லை. எல்லாத் தொகுதிகளிலும் பணம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தொடர்ந்து வந்தன. தங்கள் வாக்குகளை விற்றவர்கள் உண்மையைச் சொன்னால் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம் அல்லது தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் யாருக்கு வாக்களித்தோம் எனக் கூற மாட்டார்கள். எனவே,   இது நம்பும்படி இல்லை.

கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில்கூட அக்கட்சி பெறும் வாக்கு விகிதம் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றாக வடக்கே உத்தரகாண்டு மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை. ஆனால், அத்தொகுதியில் ஆம் ஆத்மிக்கு 2.9%  வாக்குகள் கிடைக்கும் என்று ஒரு நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை. ஆனால், அத்தொகுதியில் அது 3% முதல் 6% வாக்குகள் பெறும் என க் கருத்துக் கணிப்பு  ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் முன்னதாகவே என்னவாறு அறிவிக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கேற்ப கருத்துக் கணிப்பு விவரம் புனையப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மிகப் பெரிய பித்தலாட்டம்  ஒட்டு மொத்த எண்ணிக்கையில் உள்ளது. மாநில வாரியாகக் கணக்கெடுத்தால் பா.ச.க.விற்குக் குறைவான ஆதரவுதான் உள்ளது. ஆனால் நாடு தழுவிய கணிப்பாகக் கூறும் பொழுது அது மிகுதியாகப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னக மாநிலங்களில் கருநாடக மாநிலம் தவிர பிற மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்தாம் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கற்பனைக் கணிப்பு கூறுகிறது. கருநாடகாவில் பா.ச.க.வை முன்னிறுத்துவதன் காரணம்,  அங்கே ஆளும்  ம.ச.த. – பேராய (காங்.) கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து மாறுபாடு உள்ளது. எனவே, அங்கே பா.ச.க. வெற்றி பெறும் என்று தெரிவித்தால் இப்போதைய சட்ட மன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி ஆட்சியைக் கவிழ்க்கலாம் எனக் கருதுவதாக அம்மாநிலத்தவர் தெரிவிக்கின்றனர். ஆகவே, இதுவும் பொய்க்கணக்குஎன்றுதான் தெரியவருகிறது.

குசராத்து, தில்லி, அசாமில் பா.ச.க. தனிப்பெரும்பான்மை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த எண்ணிக்கையில் இவை குறைவானவையே!

மகாராட்டிரத்தில் பாசக கூட்டணி மிகுதியாகப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதன் கூட்டணி சிவசேனா பா.ச.க.விலிருந்து விலகலாம்.

மே.வங்காளம், .பி., பஞ்சாபு, வடகிழக்கு மாநிலங்களில் தென்னகம் போன்று பா.ச.க. பெரும்பான்மை பெறவில்லை.

சம்மு,காசுமீரில் பாதி எண்ணிக்கையில் பாசக வெற்றி பெறுமாம்.

பொதுவாகத் தொகுதிகளைக் கணிக்கும் பொழுது ஒன்று அல்லது இரண்டு வேறுபாடு இருந்தால் ஏற்கலாம். ஆனால் அவ்வாறில்லை. சான்றாக ஒரிசாவில் பாசக 6 இலிருந்து 19 தொகுதிகள் வரை பெறுமாம். அம்மாநில ஆளுங்கட்சியான பிசு சனதா தளம் 2 இலிருந்து 15வரை பெறுமாம். மொத்தத் தொகுதியான 21 என்பதைக் கணக்கு காட்டவேண்டும் என்ற சொல்லப்பட்டதாக உள்ளது. உண்மையை எதிரொலிப்பதாக இல்லைஇவ்வாறு குறைந்த எண்ணிக்கை ஒன்றையும் மிகுதியான எண்ணிக்கை ஒன்றையும் தெரிவித்துவிட்டு இறுதியில் மிகுதியான எண்ணிக்கையைக் கூட்டிப் பா...விற்குப் பெரும்பான்மை  என்று கதையளக்கின்றனர். இதனையே மாற்றிச் சொன்னால்  – பிசு சனதா தளத்திற்கு 15, பா.ச.க.விற்கு 6 எனக் கணக்கிட்டால் – இவ்வாறு ஒட்டு மொத்தத் தொகுதி முடிவைக் கணித்தால் – பா.ச.க.மண்ணைக் கெளவுகிறது என்றுதானே வருகிறது.

மாநிலக்கட்சிகளை இழுப்பதற்கான நாடகம் என்பதற்கு மற்றொரு சான்று. தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணி  அறுதிப்பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதால் அது இந்தக் கருத்துக் கணிப்பை நம்பும்.  எனவே,  மத்தியில் பாசகதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பை ஏற்று அதன் பக்கம் சாய முயலலாம் என்பதே பா.ச.க. எண்ணம். அதற்கேற்ப இதழ் ஒன்றில் பா.ச.க. தலைவர் அமித்துசா தி.மு.க. தலைவர் மு.க.தாலினுடன் பேச முயலுவதாகச் செய்தி வந்துள்ளது. ஆனால் பா.ச.க.வின் பக்கம் சாயும் நிலையில் தி.மு.க.இல்லை.

அ.தி.மு.க. சில தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறுவதன் மூலம் அதனை மிரட்டலாம் எனப் பா.ச.க. எண்ணலாம். ஆனால், இதனால் அ.தி.மு.க.வினர் தினகரனின் அ.ம.மு.க.பக்கம் சாயத்தான் இஃது உதவும்.

இக்கணிப்பை வெளியிட்ட பா.ச.க. ஆதரவு இதழ்களே இதனை நம்பவில்லை. எனவே , நம்புவதற்கில்லை, என்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 இல் தான் உண்மை தெரியும் என்றும் இறுதியில் குறித்துள்ளனர். அதுபோல் பா.ச.க. தலைவர்களுக்கே நம்பிக்கை இல்லை. அதனால்தான் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா போன்றோர் இதனை ஏற்க இயலவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

எனவே, நடைமுறைக்கு ஒத்து வராத கற்பனையான பா.ச.க.வின் ஆதரவுக் கருத்துக் கணிப்புகளை மக்கள் தூர எறிந்து விட்டார்கள்.

அடுத்து மத்தியில் அமையும் ஆட்சி  எப்படி கணிப்பு மேற்கொண்டார்கள் என விசாரணை ஆணையம் வைத்து இட்டுக்கட்டிய தகவல்களைப் பரப்பிய ஊடகங்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

ஆளுங்கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்படும் தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்அப்பொழுதுதான்  இனிமேலாவது தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் நடந்து கொள்ளும்.

எற்றிற்கு உரியர் கயவர்-ஒன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து.(திருவள்ளுவர், திருக்குறள் 1080)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல