புதின ஆசிரியர்கள் சங்க இலக்கிய மரபுநெறியைப் பின்பற்ற வேண்டும்! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 58/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
59/ 69
மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் (2019)
மாக்கவி சுப்பிரமணிய பாரதியின் சின்ன சங்கரன் கதையில் தொடங்கி, செயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் வரையிலான முப்பத்தாறு புதினங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை, ‘மேலை நோக்கில் தமிழ் நாவல்கள்’ என்னும் தலைப்பில் இரு நூல்களாக அளித்துள்ளார். ஒவ்வொரு புதினத்திற்கும் அதன் சிறப்பை வெளிப்படுத்துவதற்குரிய அணுகுமுறையைப் பயன்படுத்தி உடன்பாட்டுத்திறனாய்வு முறையில் ஆராய்ந்துள்ளார்.
‘நாவல் இலக்கியம்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள 47 பக்கக் கட்டுரை இலக்கியப் படைப்பாளர்களுக்குத் தக்க வழிகாட்டியாய் அமைகின்றது.எத்தகைய பாத்திரங்கள் வாழும், எவை வீழும் எனவிளக்கி, வாழும் பாத்திரங்களைப் படைக்க வலியுறுத்துகிறார்.மேனாட்டாய்வாளர்கள் பலரின் மேற்கோள்களை எடுத்துக் கூறிப் புதின இலக்கியத்தைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறார். புதுமை என்ற பெயரில் மரபுச் சீரழிவில் ஈடுபடுவோருக்குத் தக்க நெறியுரையும் வழங்கியுள்ளார்.
“பொழுதுபோக்கிற்காக நடத்தப் பெறும் இதழ்களால் கிடைக்கும் எளிய விளம்பரத்திற்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு அவற்றுக்காக எழுதத் தொடங்கிப் பெரும்பாலான படைப்பாளிகள் தம் கலைவாழ்விற்குமுற்றுப்புள்ளி வைத்துக் கொள்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்ப்படைப்பிலக்கியக்காரர்கள் புதுமை செய்ய முனையும்போது நம் மொழிமரபு, இலக்கிய மரபு, பண்பாட்டு மரபு ஆகியவற்றை நன்கு அறிந்து உள்வாங்கிக் கொண்டு பின்னரே புரட்சிக் கூறுகளின் தேவையை எடையிட்டுச் செயல்படுத்தல் வேண்டும். மரபு அறியாதவர்கள், மரபைப் புரிந்து கொள்ளாதவர்கள் எக்கலைத்துறையிலும் புரட்சி செய்ய முனைதல் வீண்வேலையாக முடியும் என்பதை உலகப்புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படவேண்டிய எசுரா பவுண்டு வலியுறுத்தியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் ஓவியக் கலையில் பெரும்புரட்சி செய்த பிகாசோ(Picasso) தமது கியூபிச(Cubism) ஓவியங்களைத் தீட்டுமுன் செவ்வியல் ஓவிய(classical paintings) ஆய்வில் கரைகண்டவர் என்பதை எசுரா பவுண்டு இலக்கியக் கலைஞர்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாகக் காட்டுவார். இருபதாம்நூற்றாண்டுத் தமிழ் எழுத்தாளர் கவிஞரானாலும் புதின ஆசிரியரானாலும் சங்க இலக்கிய மரபை அறிந்திருக்க வேண்டுமென்று பலமொழி இலக்கியங்கள் பயின்ற சியார்சு ஆர்த்து கூறுவது பின்பற்றவேண்டிய கருத்தாகும்.”
இவ்வாறு இலக்கியப் படைப்பாளர்கள் சங்க இலக்கிய மரபு நெறியைப் பின்பற்ற வலியுறுத்துகிறார். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் அறியாமல் படைப்பாக்கத்திலும் வரலாற்று நூல் எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வலியுறுத்தும் வழியில் பேரா.ப.மருதநாயகம் கருத்தும் உள்ளமை உணரத்தக்கது.
சங்கஇலக்கிய ஆய்வு – தெ.பொ.மீ.யும் மேலை அறிஞரும்(2008):
சங்கப்பாடல்கள் குறித்த ஆய்வுகளைக் கட்டுரை மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் அறிஞர் தெ.பொ.மீ. வெளியிட்டுள்ளார்.தமிழ் வளர்ச்சியில் முதன்மைப்பங்குகள் அளித்த முச்சங்கங்கள், முச்சங்கங்கள்பற்றி நிலவும் தரவுகள், பழந்தமிழ் இலக்கியங்களின் சிறப்புக் கூறுகளான இறைச்சி முதலானவைபற்றிய அவர் கருத்துகளையும் ஆய்வு முடிவுகளையும் மேனாட்டுத் திறனாய்வு அணுகுமுறைகள் வழி நோக்கிச் சிறப்பான சொற்பொழிவைப் பேரா.ப.மருதநாயகம் வழங்கியுள்ளார். அதன் எழுத்துவடிவமே இந்நூல்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60/69)
Leave a Reply