புதிய பாடத்திட்டம்  : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா!

 தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன்? மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில்  எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை.

 பாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம் வினவியபொழுது அவர்களும் இதே நிலைதான் என்றனர். சில பள்ளிகளில், “தளத்தில் காணமுடியும் என்ற பொழுது இணையம் வேலை செய்யவில்லை எனவே இதுகுறித்து ஒன்றும் தெரியவில்லை” என்றனர்.  ’’ஆகா, ஓகோ என்று அவர்களே பாராட்டிக்கொண்டு சிறிய மாற்றம் மட்டும் செய்துவிட்டுக் கல்விப்புரட்சி என்பர்’’ என்றனர் ஆசிரியர்கள் சிலர்.

  இப்பொழுது சில நேரங்களில் இணையத்தளத்தில் பாடத்திட்ட வரைவு காணப்படுவதால், வரைவைப் பார்க்க முடிந்தது. தனித்தனிப் பாடமாகச் சொல்வதெனில் விரிவாகப் போகும். எனவே, சுருக்கமாகச் சிலவற்றைக் பார்ப்போம். அதற்கு முன்பு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-
பயிற்சி நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள். உங்களது அறிவிப்புகளும் வரைவுக் குறிப்புகளும் பிழைகளுடன் உள்ளன. இயக்குநர் என்பதுகூட இயக்குனர் என்றுதான் உள்ளது. முதலில் உங்கள் அறிவிப்பையும் குறிப்புகளையும் பிழையின்றி வெளியிடுங்கள் என வேண்டுகிறோம்.

  ”தமிழ் நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லாமும் தமிழ்  மொழியில் நடத்த வேண்டும் என்பது பொருள்” எனப் பாரதியார் விளக்குகிறார். மேலும், அவர் ’’நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும்’’ என்கிறார். எனவே, முதலில் அனைத்து நிலைகளிலும் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் தமிழ்வழிக்கல்வியை அறிமுகப்படுத்துவதே உண்மையான கல்வி மேம்பாட்டிற்கும் அறிவு  வளர்ச்சிக்கும் துணைநிற்கும். ஆங்கிலவழிக்கல்வியை  நடைமுறைப்படுத்திக் கொண்டு பாடத்திட்ட முறையைமட்டும் மாற்றி என்ன பயன்? இருப்பினும் இருக்கின்ற பாடத்திட்டத்திற்கேற்ற கருத்துகளைப் பார்ப்போம்.

 1. தமிழ்

  தமிழ்ப்பாடத்திட்டத்தில் முதலில் மெய்யெழுத்தும் பிறகு உயிரெழுத்தும் இடம் பெறுவதாகப் பாடநூலைப்பார்த்த ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். (1,6,9,12 ஆம் வகுப்பு மாதிரி நூல்கள் வெளியிட்டுள்ளதாகவும் பள்ளிகளுக்கு இன்னும்வரவில்லை என்றும் பள்ளிகளில் கூறுவதால் அதனைப் பார்க்க இயலவில்லை.) உயிரெழுத்து, ஆயுத எழுத்து, மெய்யெழுத்து என்ற வரிசையில்தான் சொல்லித்தரவேண்டும். கிரந்த எழுத்துகள் தமிழ்  நெடுங்கணக்கில் சொல்லித்தரப்படக் கூடா. செவ்வியல் இலக்கியங்களுக்கு முதன்மை அளிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருத்தல் வேண்டும்.

 அயலகத்தமிழ்ப்படைப்புகள் ஒரு பாடமேனும் இருக்க வேண்டும். 

 1. ஆங்கிலம்

 ஆங்கிலம் முதலான பிற மொழிப்பாடங்கள் அனைத்திலும் தமிழ்மொழிச்சிறப்பு, தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்நாகரிகச் சிறப்பு, தமிழ்ப்பண்பாட்டுச்சிறப்பு, தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள்குறித்த பாடங்கள் இடம் பெற வேண்டும். இவை தொடர்பான உரையாடல்  பயிற்சிகளும் இடம் பெற வேண்டும். தமிழ்ப்பாடல் வரிகளையும் மேற்கோள்வரிகளையும் மொழி பெயர்க்கப் பயிற்சி அளித்தல் வேண்டும்.

 

 1. கணக்கு

  கீழ்வாயிலக்கம், மேல்வாய்இலக்கம் முதலான தமிழ் எண்ணலளவைகள், நிறுத்தலளவை, முகத்தலளவை,  பெய்தல் அளவை,  நீட்டலளவை , வழியளவை, நிலவளவை,  தெறிப்பு அளவை(கால வாய்ப்பாடு) எனத் தமிழ் அளவைகள் கற்பிக்கப்பட வேண்டும்.

  காக்கைப்பாடினியார் எழுதிய கணக்குநூல் முதலான மறைந்து போன தமிழ் நூல்கள், பிற கணக்கு நூல்கள் பற்றிய விவரங்கள் பாடங்களில் இடம்பெற வேண்டும்.

கணக்கதிகாரத்திலிருந்தும் கணக்குகள் இடம் பெற வேண்டும்.

 1. அறிவியல் துறைகள்

  பயிரியலில் வீட்டுத் தோட்டத்தில் விளையும் காய்கனிகள், கீரைவகைகள் இடம் பெற வேண்டும். இவைபோல், அறிவியல் துறைகள் தொடர்பான அனைத்துப்பாடங்களிலும் பயிர்களுக்கு உயிர் உண்டு என்பதுபோன்ற தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் அறிவியல் உண்மைகள் இடம்  பெற வேண்டும். காய், கனி, பூ, தண்டு, வேர் முதலானவற்றைப்பற்றிய பாடங்களில் தமிழ்கூறும் அவற்றின் மருத்துவப் பயன்களையும் குறிக்க வேண்டும். மாணாக்கர்கள் ஊட்டமாக வளரவும் நலமாக வாழவும் இத்தகைய கல்வி உதவியாய் அமையும்.

 கிரேக்கர், ஆரியர், முதலான பிறநாட்டார்போல் கோள்களை உயிருள்ள பிறப்பாகக் கருதாமல் அவற்றின் தோற்றம், விரைவு, தன்மை  முதலானவற்றின் அடிப்படையில் பெயர்சூட்டியுள்ள வானறிவு, காற்றில்லாப்பகுதி உள்ளதை அறிந்த வான் மண்டில அறிவு, வானூர்தி, ஆளில்லா வானூர்தி, வானக்குடை(பாராச்சூட்டு), இயந்திர யானை (ரோபோ), தாழிமரம்(போன்சாய்), அணுவியலறிவு, புவியின் வடிவம், சுழற்சி, ஐந்திணைப் பாகுபாடு முதலான புவியியல், கவரிமா, அன்னப்பறவை, அசுணமா, இருதலைப்புள், புலம்பெயர் பறவைகள், [வலசைப் பறவைகள் -migration birds, வம்பப்புள்- immigration bird, வதிபறவை -non-transit bird],   எனப் பலவாறான பறவையியல், உயிரினங்களுக்கு அறிவியல் உண்மை அடிப்படையில் பெயர் சூட்டியுள்ளமை, காந்தத்திறன், புவிஈர்ப்புத்திறன், மழையியல், முகிலியல், உளவியல்,  மகப்பேற்றறிவு முதலான மருத்துவ அறிவு என எண்ணிறந்த அறிவியல் உண்மைகளைப் பழந்தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். உரைநடையில் இல்லாமல்  செய்யுளில் உள்ளமையால்  இவற்றைக் கற்பனை என்ற ஒதுக்கக்கூடா. இவை தமிழ்ப்பாடங்களில் இல்லாமல் அறிவியல் பாடங்களில் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் அறிவு மாணாக்கர்களிடம் மேலோங்கும்.

 1. வரலாறு

  “மன்பதை முதலில் தோன்றிய இடமே குமரி நாடாகும்.” எனவே, இந்திய வரலாறு என்பது தெற்கேஇருந்து தொடங்கப்பெற வேண்டும் என்பது ஆய்வறிஞர்கள் கருத்து. இதற்கிணங்கப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும் என்கிறார்.  ஆனால், தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தமிழக வரலாறு  புறக்கணிக்கப்டுகிறது. தொடக்க இந்தியா என்னும் பாடத்தில் பிற்பட்ட ஆரிய வரலாறு முதன்மையாகக் கற்பிக்கப்படுகிறது. வேதகாலப் பண்பாடு என்பது முறையற்ற உறவுகளிடையே முறையற்ற வழியில் பிறந்தவர்களைப்பற்றியனவே! அவ்வாறிருக்க அறநெறி சார்ந்த தமிழக வரலாறு பின்தள்ளப்டுவது சரியல்ல.

  பிற்காலச் சோழர்கள்பற்றி மட்டும் பாடம் இடம் பெறுகிறது. ’இந்தியப்பண்பாட்டில் பேரரசுகளின் கொடை’ என்னும் பாடத்தில் அயலவர்களான வடநாட்டு ஆட்சியர்கள்பற்றித்தான் குறிப்பு உள்ளது. அங்கும் தமிழக மூவேந்தர்கள், கடையெழுவள்ளல்கள் முதலானவர்கள்பற்றி ஒன்றும் இல்லை.

 உலகப்போர் பற்றியெல்லாம் படிக்கின்றோம். தமிழ்நாட்டில் 7 போர்கள் நிகழ்ந்துள்ளன. இவையும் பாடத்தில் இடம் பெற வேண்டும்.

 1. விளையாட்டு

 இணைக்கல்வித்திட்டத்தில் உடற்பயிற்சி, இசை, ஓவியம், தையல் ஆகியன உள்ளன.

  உடற்பயிற்சியில் 3ஆம்வகுப்பில் கண்ணாமூச்சி ஆட்டம் உள்ளது. ஒற்றையா இரட்டையா, நொண்டியாட்டம், பாண்டியாட்டம், குலைகுலையாய் முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, காற்றாடி, பந்தாட்டம், வழுக்குமரம் ஏறுதல், நீச்சல், தட்டாமாலை, தட்டாங்கல், சடுகுடு, ஊஞ்சல், சிலம்பாட்டம், தற்காப்புக்கலை முதலான பல மரபு விளையாட்டுகளும்  தொடக்கவகுப்பிலிருந்தே இடம் பெற வேண்டும். மாணாக்கர்கள் எம்மொழி வழி பயின்றாலும் கட்டளைகளும் சொல்லப்படும் எண்களும் தமிழிலேயே இருத்தல் வேண்டும்.

  பாடத்திட்டத்தல் ஓகம்(யோகம்) இடம் பெற்றுள்ளது. ஆனால் இருக்கைகள் பெயர்கள் தமிழில் குறிக்கப் பெறவில்லை. இவையும் தமிழில்தான் குறிக்கப் பெற  வேண்டும்.

 1. இசை

  இசைக்கான பாடம் 6 ஆம் வகுப்பில் இருந்துதான் உள்ளது. பாடுவதற்கும் ஆடுவதற்கும் வரைவதற்கும் மழலைப்பருவம் ஏற்றதுதான். அதற்கேற்ப எளிய பாடல்கள் முதல் வகுப்பிலிருந்தே வாய்வழிச் சொல்லித்தரவேண்டும். அஃதாவது எழுத்துப்பயிற்சி தேவையில்லை. தமிழ் வாழ்த்துகள், திருக்குறள், அறநெறிப்பாடல்கள் சொல்லித்தரப்பட வேண்டும்.

  6 ஆம் வகுப்பில் இருந்து இசைப்பாடம்  இணைப்பாடமாக உள்ளது. மாலை வாரம் இரு முறையேனும் அனைவரும் கற்கும் வண்ணம் இசை வகுப்புகள் இருத்தல் வேண்டும்.

  சீர்காழி மூவரில் முத்துத்தாண்டவர்பற்றி மட்டுமே பாடம் உள்ளது. அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா(ப்பிள்ளை)  ஆகிய மற்றுமிருவர்பற்றியும் பாடம் இடம் பெற வேண்டும். இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் ’ஆதி மும்மூர்த்திகள்’ என்ற வராற்றுப்பிழையுடன் குறிக்கக்கூடாது. தியாகராசர் முதலான கருநாடக மும்மூர்த்திகளை விட மூத்தவர்கள் என்பதற்காக இவ்வாறு கூறுவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருக்கும் தமிழிசை வரலாற்றை மறைப்பதாக அமையும்.

  தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களில் உள்ள இசைப்பாடல்களும் பாடங்களில் இடம்பெற வேண்டும்.

  கலைச்சொற்கள் அனைத்தும்  ஏறுநிரை, இறங்கு நிரை என்பன போன்று தமிழில் குறிக்கப் பெறாமல், ஆரோகணம், அவரோகணம் என(க் கிரந்த எழுத்துகளைப்பயன்படுத்தி)ப் பிற மொழிச்சொற்களாக இடம் பெற்றுள்ளன. பாடம் தமிழிசைபற்றித்தான் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். தக்கத் தமிழிசைவாணரைக் கொண்டுபாடம் வகுக்காவிட்டால் இப்படித்தான் நிகழும்.

 தமிழிசைக்கருவிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றையும் அறியும் வகையில் பாடத்திட்டம் இருத்தல் வேண்டும்.

 தமிழ்நாட்டில் இசை என்றால் தமிழிசைதான் என்பதை மனத்தில் கொண்டால் தமிழிசை அறிமுகம், வளர்ச்சி, தமிழ்ப்பாடல்கள் பாடமாகும்.

 

 1. ஓவியம்

 தமிழ்நாட்டு விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள், பூக்கள் என வீட்டுச்சூழலிலும் நாட்டுச் சூழலிலும் அமைவனவற்றை வரைய பயிற்சி அளிக்க  வேண்டும்.

 7 ஆம் வகுப்பில் வாழ்த்து அட்டை உருவாக்கமும் 10 ஆம் வகுப்பில் விளம்பர அட்டை உருவாக்கமும் இடம் பெற்றுள்ளன. தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் அவர்களின் கைவண்ணங்களுக்கேற்ப வாழ்த்து அட்டைகள், விளம்பர அட்டைகள் உருவாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.

 கோவில்களுக்கு அழைத்துச் சென்று இசைத்தூண்கள், கலைச்சிற்பங்கள் ஆகியவற்றை வரையவும் பழக்க வேண்டும். தமிழ்க்கலைகள் ஓவியமாக அமைவதற்கான பயிற்சி அளித்தல் வேண்டும்.

 

 1. தையல்

 பூத்தையலில், ஓவியத்தில் குறிக்கப்பெற்ற ஓவியங்கள் இடம்பெறும் வகையில் தையல் பயிற்சி அளிக்க வேண்டும்.

  கலைப்பொருள்கள் உருவாக்குவது தொடர்பான பாடங்களும் வேறு சிலவும் தமிழில் குறிக்கப் பெறவில்லை. எல்லா இடங்களிலும்தமிழ்தான் இடம் பெறவேண்டும்.

 1. சிறப்புத்தமிழ்

  மேனிலை வகுப்பிற்கான சிறப்புத்தமிழில் தொழில்நுட்பத்தமிழ் இடம் பெற்றுள்ளது பாராட்டிற்குரியது. தமிழ் விசைப்பலகை அறிமுகம், பாடமாக உள்ளது. கணிணி உலகில்,  தொடக்கத்திலேயே அறியும் வாய்ப்புள்ள கணிணியியலை- அதற்கான விசைப்பலகையைமேனிலை வகுப்பில்  கற்றுத்தருவது என்பது வேடிக்கையாக உள்ளது.

 பொதுநிலையிலேயே கணிணியின் தொடக்கப்பாடங்கள் இடம்பெற வேண்டும்.  மேனிலை வகுப்பில் கணிணி தொடர்பான கலைச்சொற்கள், கணிணிக்கல்விதான் இடம் பெற வேண்டும்.

 தொடக்கநிலையில் விசைப்பலகைபற்றிய பாடம் இடம் பெறும் பொழுதும் தட்டச்சு விசைப்பலகையும் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் அரசு தொடர்பான  பணி வாய்ப்பு கிட்டும்.

 1. அரசியலறிவியல்

 அலகு 6 இல் அரசியல் சிந்தனையில் பிளேட்டோ, அரிசுடாடில், சாணக்கியர், மாக்கியவல்லி முதலனவர்களுடன் திருவள்ளுவர் இடம் பெறுகிறார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் செவியறிவுறூஉ  முதலான துறைகள் அரசியல் கருத்துகள் அடங்கியவையே! நீர்நிலைகளை உருவாக்கவும் வரிவிதிப்புமுறை பற்றியும்  அரசர்க்குப் புலவர்கள் கூறும் அறிவுரைகள், அரசியலிலும் பொருளியலிலும் இடம்பெற வேண்டியவை அல்லவா? அறநெறி இலக்கியங்களில் அரசு நெறிகளும் இடம் பெற்றுள்ளன.  எனவே, தமிழ் இலக்கியங்கள் கூறும் அரசியலறிவியல் கருத்துகள் அரசியலறிவியல் பாடங்களில் இடம்பெற வேண்டும்.

 

 1. தமிழகப்பண்பாடும் அறிவியலும்

 11 ஆம் வகுப்பில் ’தமிழகப்பண்பாடும் அறிவியலும்’  என்னும் பாடத்திட்டம் உள்ளது.  இதிலுள்ள பல கருத்துகள் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும்  சேர்க்கப்பட வேண்டும்.

 இப்பாடத்திட்டத்தில் தொல்காப்பியம் கூறும் அறநெறிகள், சங்க இலக்கியம் கூறும் அறநெறிகள்  சேர்க்கப்பட வேண்டும். சங்கக் கால விழுமியங்கள் என்னும் தலைப்பு இருந்தாலும் சங்க இலக்கிய அறநெறி தனித்தலைப்பில் கற்றுத்தரப்பட வேண்டும்.

  அலகு 10 இல்  காந்தியடிகள்  அறக்கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகப்பண்பாட்டில் இவ்வாறு சேர்ப்பது தவறு. சாதி வேறுபாடற்ற, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறிதான் தமிழர் நெறி. காந்தியடிகள்  ’’சாதிப்பாகுபாடுதேவை, ஆனால்  வேறுபாடு காட்டக்கூடாது’’ என்றவர். அவர் தமிழ்நாட்டவருமல்லர். ஆதலின் அவரது கருத்துகள் தமிழகப்பண்பாட்டில் அமையா. (இந்தியப் பண்பாட்டில் சேர்க்கலாம்.)

  மாறாக, வாடிய பயிரைக்கண்ட பொழுதெல்லாம் வாடிய வள்ளலார் அற நெறி சேர்க்கப்பட வேண்டும்.

  மறுமலர்ச்சிப்பாடல்கள வழி உணர்த்தப்படும்  பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை முதலானவை சேர்க்கப்பட வேண்டும்.

  ’’தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்’’. என்னும் கொள்கையுடைய ஐயா வைகுண்டர் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய நாராயணகுரு,  தந்தை பெரியார், முதலானவர்களின் கொள்கைகளும் நீதிக்கட்சிகள், திராவிட இயக்கம் முதலானவற்றின் மறுமலர்ச்சிப்  போராட்டங்களும் இடம்பெற வேண்டும்.

 விருப்பப்பாடமாக அமையும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இவை இடம்  பெற்றிருந்தாலும் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும் இடம் பெறவேண்டும். அப்பொழுதுதான் அனைத்து மாணவர்களும் வரலாற்றினை அறிவர்.

. இந்தியநாகரிகமும் பண்பாடும் என்பனவற்றில் பெரும்பகுதி தமிழக நாகரிகமும் பண்பாடும்தான் என்கிறார் கவிஞர் இரவீந்திரநாத்து தாகூர். ஆனால், இப்பாடத்தில் தமிழக நாகரிகமும் பண்பாடும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

  மகாபாரதமும் இராமாயணமும் சங்கக்காலத்திற்கு முற்பட்டவை அல்ல.  (இதை விளக்கினால் பெரிய கட்டுரையாகிவிடும்.) “வியாசர், வேதங்களை நான்கு கூறாகப் பிரிக்கும் முன்னரே தொல்காப்பியம் இயற்றப்பட்டது’’ என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியருக்குப்பிற்பட்டவர் புத்தர். புத்தர் காலத்திற்குப் பிற்பட்டது இராமாயணக் காலம். அதற்கும் பிற்பட்டது மகாபாரதக்காலம்.  இவ்வாறிருக்க, ஆரியர்களின் பொய்யுரைகளை நம்பி வேதங்களை முற்பட்டதாகக் காட்டி நம்நாட்டு மாணவ மன்பதையையும் தவறான வரலாற்றுப் புதைகுழியில் தள்ளுவது சரியல்ல.

 1. நெசவியல்

 நெசவும்  ஆடை வடிவமைப்பும் என இரு பாடத்திட்டங்கள் உள்ளன. நெசவுக்கலையில் தமிழர்கள் பண்டுதொட்டே சிறந்துள்ளனர். பஞ்சு, பட்டு, மயிர் முதலானவற்றில் ஆடை நெய்தல், கால நிலைக்கேற்ற உடை,   உள்ளங்கையில் அடக்கும்வண்ணம் மடிக்கத்தக்க சேலை, ஆவிபோல் மெல்லிய ஆடை, பூத்தையல் ஆடைகள் எனப் பல்வகைகளில் சிறந்துள்ளனர். எனவே, இவை பாடங்களில் இடம் பெற வேண்டும்.

 1. புத்தகத்துணையுடனான தேர்வு

  பொதுவாக எல்லா வகுப்பிலும்  புத்தகத்தைப் பார்த்து எழுதும் ஒரு தாள் இருக்க வேண்டும். அதில் தமிழின் எல்லா வகைச் சிறப்பும் இடம் பெற்றிருக்க வேண்டும. தங்கள் கருத்துநடையில் எழுதுவதற்காக இரு வினாக்கள் இடம் பெற வேண்டும். சுருக்கக்குறிப்பினை விரித்து எழுதும் வகையிலும் விரிவாக  உள்ளதைச் சுருக்கி எழுதும் வகையிலும் ஒவ்வோர் வினா இருக்க வேண்டும். பார்த்து எழுதுவதற்குத்தான் இவை என்றாலும் தத்தம் நடையில் எழுதுவதால் எழுத்தாற்றல் வளரும். பிற வினாக்கள் உள்ளது உள்ளவாறு அல்லது தத்தம் நடையில் எழுதும் வகையில் இடம் பெற வேண்டும்.

 1. ஊர்த்திருவிழா உலா

 பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் ஊர்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு  அழைத்துச் சென்று மரபு முறை, கலை, பண்பாடு முதலானவற்றை மாணவர்கள் அறியச் செய்ய வேண்டும். கட்டுரை,  பேச்சுப்பயிற்சி, ஓவியம் முதலானவற்றை இவ்வுலா அடிப்படையில் அமைக்க வேண்டும்.

 பெரும் முயற்சிகளின் அடிப்படையில்தான் பாடத்திட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழியச்சிந்தனை இல்லா ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கியமையாலும் இந்தியத் திட்டத்தை அடியொற்றி உருவாக்கப்பட்டுள்ளமையாலும் தவறுகள் நேர்ந்துள்ளன. 1947 இல் இந்தியா விடுதலை ஏற்பட்ட பொழுது இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுது தவற விட்ட நாம், 1967 இலிலாவது இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்.  அப்பொழுது தமிழியச் சிந்தனையாளர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் ஆரியச் சிந்தனையாள அதிகாரிகளே தொடர்ந்தமையால் கல்விப்புரட்சி ஏற்படவில்லை. இப்பொழுது நல்வாய்ப்பு கிட்டியுள்ளது. எனவே, மண்மணம் கமழும் கல்வித்திட்டத்தை உருவாக்குமாறு துறைஅதிகாரிகளையும் அரசையும் வேண்டுகிறோம்.

 பணித்தேர்வுகளுக்கேற்ற வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அரசு பணித்தேர்வுகளுக்கான  தேர்வுகளைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டுப்பாடத்திட்டத்தில் இடம் பெறும் பாடங்கள் இந்திய அளவிலான பிற பாடத்திட்டங்களில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 “தமிழ் நாட்டில் தேசியக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் மொழியை முதன்மையாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி  ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் ஒருவிதத் துணை மொழியாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை.” என்றார் பாரதியார். அவர் மறைந்து 100 ஆண்டை எட்ட உள்ள இக்காலத்திலும் அக்கனவு நனவாக்கப்படாமல் எத்தகைய புதிய  கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தியும் பயனில்லை என்பதை அரசு உணர வேண்டும். இல்லையேல்  அவ்வாறு உணருவோர் அரசுக்கட்டிலில் அமர்வார்கள்!

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை. (
திருவள்ளுவர், திருக்குறள் 400)

 தாய்மொழிவழி-தமிழ்மொழிவழிக்கல்வியே நமக்குக் கேடற்ற செல்வம் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். அத்தகைய செல்வத்தை நாம் பெற அரசு துணை நிற்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை :அகரமுதல 215, கார்த்திகை 17- கார்த்திகை 23,  2048 /   திசம்பர் 03  – திசம்பர் 09,  2017