புத்தகக் கொடையாளர்

கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய உரைகளைச் சுருக்கெழுத்து அறியாமலேயே சொல் பிறழாமல் எழுதி அச்சில் கொண்டு வந்தவர் கவிக்கொண்டல்.  மூத்த எழுத்தாளர், மூத்த இதழாளர், மூத்த கவிஞர், மூத்த நூலாசிரியர், மூத்த பதிப்பாளர், மூத்த தமிழறிஞர், புத்தகக் கொடையாளர் எனப் பல்வகைப் பெருமைகளுக்கும் உரியவர்.

பிறப்பு

திருத்தங்கூர் மாணிக்கனார்-விருத்தாம்பாள் இணையராக வைகாசி 26, 1959 / 8.6.1928 அன்று இப்போதைய திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் பிறந்து சிறந்தவர்.

பள்ளி இறுதி வகுப்பு முடித்ததும் பெரும்புலவர் இராமநாதம்(பிள்ளை) என்பாரிடம் இலக்கிய இலக்கணப்பாடங்கேட்டுத் தமிழ்ப்புலமை மிக்கவர் ஆனார்.

 

இதழ்ப்பணி

1949 முதல் பல்வேறு இதழ்களில் துணையாசிரியர், பொறுப்பாசிரியர், ஆசிரியர் எனப் பல பொறுப்புகள் வகித்து இதழ்ப் பணியாற்றி வருகிறார்.

விடுலை, மாலைமணி, நம் நாடு, நவமணி, மன்றம், தனியரசு, தமிழினஓசை(மும்பை) குடும்பநல எழுச்சிக் கதிர், காவியம்,  முதலான இதழ்களில் பணியாற்றித் திராவிட இயக்கக் கருத்துகள் பரவுவதற்கு உறுதுணையாக இருந்தார். இவரே எழுச்சி என்னும் இதழை நடத்தி வந்தார்.

1955இல் உவமைக் கவிஞர் சுரதாவுடன் இணைந்து ‘காவியம்’ என்னும் கவி இதழை நடத்தினார். மரபுக் கவிதைகள் நிலைப்பதற்கு 1979இல் ‘கவிக்கொண்டல்’ என்னும் இதழை நடத்தினார். 5 ஆண்டுகளில் இவ்விதழை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் 1991இல் மீண்டும் கவிக்கொண்டல் இதழைத் தொடங்கித் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

1983 இல் மும்பையில் தங்கியிருந்து ‘தமிழின ஓசை’ என்னும் திங்களிருமுறை இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

தம்  இதழ் மூலம் இளம் கவிஞர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறார்.

கவிதைக் காவலர்

 இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களை உருவாக்கியுள்ளார். புதுக்கவிதை என்ற பெயரில் எழுத்துப் பிழைகளுடனும் அயற்சொற்கள் கலந்தும் எழுதும் இளைஞர்கள் நல்ல தமிழில் மரபுக் கவிதைகள் எழுதக் கற்பிக்கின்றார்.

புதுதில்லித் தமிழ்ச்சங்கம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், அந்தமானில் வி.சி.பி.தமிழ்ச்சங்கமாநாடு, எனத் தமிழகத்திற்கு வெளியேயும் கவியரங்கங்களில் பங்கேற்றுள்ளார். கப்பல் கவியரங்கம், வானூர்திக் கவியரங்கம், ஆமதாபாத்து, ஆக்கிரா, அரித்துவார், இரிசிகேசு ஆகிய நகர்களுக்கான இலக்கியப் பயணம், கோவா இதழாளர் பயணம் ஆகியவை மூலம் கவிதைப் பணியாற்றியுள்ளார்.

உலக மாநாடுகளில் பங்கேற்பு

சென்னையில் 1968இல் நடந்த இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு, கோலாலம்பூரில் 1987இல் நடந்த ஆறாவது உலகத்தமிழ் மாநாடு ஆகியவற்றில் கவியரங்கங்களில் பங்கேற்றார். 1989இல் அண்ணாமலைப்பல்கலைக்கழக வைரவிழாக் கவியரங்கிலும் பங்கேற்றுள்ளார்.

வெளிநாட்டுப்பயணங்கள்

மலேசியா(நான்கு முறை), இலங்கை(இரு முறை), சிங்கப்பூர், செருமனி, பிரான்சு, நெதர்லாந்து, தென்மார்க்கு, பெல்சியம் ஆகிய நாடுகளுககுப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் இலக்கியச்சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

செருமனி நூலகத்திற்கு உதவி

செருமனி வாழ் தமிழர்கள் தமிழ்நூல்களுக்காக ஏங்கி இருந்தனர். அவர்களின் குறைகளை யறிந்து தோர்ட்டுமண்டு (Dortmund )நகரில் நூலகம் அமைப்பதற்கு 10,000 நூல்களைத் திரட்டிக் கப்பல மூலம் அனுப்பி வைத்தார். கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் உதவியுடன் நிறுவப்பட்ட நூலகம் என அந்நூலகத்தில் குறித்துள்ளது. இந்த அருவினை அவருக்குப் புகழ் மகுடம் சூட்டியுள்ளது.

புத்தகக் கொடையாளர்

இவரது நூலக அமைப்புப் பணியால் பலரும் இவரும் உதவியை நாடி வந்தனர். சென்னையில் வி.சி.பி.நிறுவன நூலகம்,கமலஃகாசன் இரசிகர் மன்ற நூலகம், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவன நூலகம், அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள பேராசிரியர் ஆய்வு நூலகம், சென்னை வடபழனியில் உள்ள அண்ணா பொதுநல மன்ற நூலகம், மும்பை திராவிட முன்னேற்றக் கழக நூலகம், எனப் பல நூலகங்களுக்கும் பல நூறு நூல்களைத் திரட்டி அளித்துள்ளார்.

இதனால், புத்தக வள்ளல் என்றும் புத்தகக் கொடையாளர் என்றும் அழைக்க்ப பெறுகிறார்.

ஊடகவழிப் பரப்பலும் பிறவும்

வானொலி, தொலைக்காட்சிகளிலும் நூற்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஊடக வழியான தம் தமிழ்ப்பணியை ஆற்றிவருகிறார். சிங்கப்பூர் வானொலியிலும் 4 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளதுடன் இவரது செவ்வி(பேட்டி)யும் ஒலிபரப்பாகியது.

இலக்கிய ஓவியரான கவிக்கொண்டல் செங்குட்டுவன் சித்திர ஓவியரும்கூட. சென்னையில் உள்ள வாகினிப் படநிலையத்தில் ஓராண்டு ஓவியராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் பொது நூலகத் துறையில் நூல் தேர்வுக்குழு உறுப்பினராகப் பத்தாண்டுகள்பணியாற்றியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராக இருந்து அதன் வழித் தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.

விருதுகள்

தமிழக அரசின் பாவேந்தர் விருது(1990), 1997 இல் சென்னைக் கலாச்சாரக் கழகத்தின் சார்பில் தமிழன்னை விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது(2008), கலைஞர் விருது, பேராசிரியர் விருது(2018), ஆகியன இவருக்கு வழங்கப் பெற்றுள்ளன. கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் கவிக்கொண்டல் என்னும் பட்டம், மலேசியாவில் செந்தமிழ்க் கலா நிலையத் தலைவர் தமிழ்மாமுனிவர் சுவாமி இராமதாசர் என்பரால் இயற்றமிழ்ப் புலவர் என்னும் பட்டம், சென்னைத் தமிழ் முன்னேற்றக் கழகம் செந்தமிழ்க் கொண்டல் என்னும் பட்டம், தமிழ்நாடு நல்வழி நிலையத்தின் சார்பில் செந்தமிழ் மாமணி என்னும் பட்டம், வி.சி.பி. அன்னை சந்தானம்மாள் இலக்கியப் பேரவை சார்பில் நற்றமிழ் நக்கீரர் பட்டம் எனப் பல்வேறு பட்டங்கள் இவரின் தொண்டுகளையும் சிறப்புகளையும் பாராட்டி வழங்கப் பெற்றுள்ளன. உலகக் கவிஞர் மன்றத்தின் சார்பில் அமெரிக்காவில் உள்ள தான்சிக்கு(Dancic) பல்கலைக்கழகம் கவிப்பணிகளுக்காக முனைவர் பட்டம்(D.Litt.) வழங்கியுள்ளது. மேலும் திருவையாறு தமிழிசை மன்றம், சென்னை ழகரப் பணிமன்றம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் ஆகியவற்றின் சிறப்பு விருதுகள் முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளும் சிறப்புப் பட்டங்களும் பெற்றுள்ளார்.

நூல்கள்

முதன் முதலில், கழகக்கதிர்மணிகள், கவிக்கொண்டல் கவிதைகள், தமிழ்ச்சொல் கேளீர், கோட்டமும்  குமரியும், இலக்கிய முழக்கம், மலைநாட்டில் ஓர் இலக்கிய உலா, கலைஞர் கண்ட வள்ளுவர் கோட்டம், மலேசியாவில் அண்ணா, அண்ணா என்னும் அண்ணல், நெஞ்சம் மறவா நிகழ்ச்சிகள், கழகம் பிறந்தது ஏன்?, புகழ்பூத்த பொன்மலர்கள், சாதிகள் இல்லையடி பாப்பா, பாவேந்தர் வழி வந்த பாவலர்கள் (200 கவிஞர்கள் பற்றிய 2 தொகுப்பு), ஓர் அரிமா நோக்கு எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.

இவரது நூல்களையும் இதழ்களையும் ஆராய்ந்து இளமுனைவர் பட்டமும் முனைவர் பட்டமும் இருவர் பெற்றுள்ளனர்.

தாமரைச் செல்வி பதிப்பகம் எனப் பதிப்பகம் நடத்திப் பல நூல்களை வெளியிட்டு வருகிறார்.

கோலாலம்பூரில் நடந்த ஆறாவது உலகத்தமிழ் மாநாட்டு மலர் உருவாக்கத்திலும் இவருக்குப்பெரும்பங்கு உண்டு.

குடும்பம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருவேதிகுடியில் சீனிவாசன்-விருத்தாம்பாள் இணையரின் மகள் அரவிந்த நாயகி. இவரின் வகுப்புத் தோழர் திருவேதிக்குடி தியாகராசன் தங்கையே இவர்.  நண்பர் சீர்திருத்தத்திருமணத்திற்கு ஒப்புக் கொண்டமையால் தாமரைச்செல்வி எனப் பெயரை மாற்றி 31.08.1959 அன்று பேரா.க.அன்பழகன் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் தி.மு.க. மகளிரணியில் சேர்ந்து வெற்றிச்செல்வன் அன்பழகன், அலமேலு அப்பாத்துரை, சற்குண பாண்டியன் ஆகியோருடன் இணைந்து தொட்டாற்றினார். மனையரசியாய்ச் சிறந்து விளங்கிய இவர், புரட்டாசி 31, 2049 / 17.10.2018 அன்று புகழுடல் எய்தினார்.

 இவர்களுக்கு மணிமொழி, அன்பரசு, மதிவாணன், புகழேந்தி, முத்துச் செல்வன் ஆகிய மக்கள். இவர்களுள் மணிமொழி இரண்டரை அகவையில் இறந்தான். மகன் புகழேந்தியைச் செங்குட்டுவனார் தம் தங்கை மங்கையர்க்கரசிக்குத் தத்து கொடுத்து விட்டார்.

செம்பியன் அன்பரசு, அமிர்தகணேசன் புகழேந்தி, கபிலன் முத்துச்செல்வன் எனப்  பெயரர்களும் செந்தமிழ் அன்பரசு, ஆர்த்தி புகழேந்தி, ஓவியா மதிவாணன், எனப் பெயர்த்திகளும் உள்ளனர்.

திராவிடஇயக்கத்தின் வேராகவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரணாகவும் திகழும் சிலருள் ஒருவரே கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன். இதழ்ப்பணியிலும் இலக்கியப்பணியிலும் முத்திரை பதித்து வரும் மூதறிஞர்! தனது உழைப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற மதிப்பு கிட்டாதபொழுதும் தடுமாறாமல் தடம் புரளாமல் வாழும் கொள்கைக் குன்று!

வளர் தமிழுக்குப் பெருமை சேர்க்கும்

மூத்த இதழாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

பன்னூறு ஆண்டுகள் வாழிய!

– இலக்குவனார் திருவள்ளுவன்