புரட்சிப் பூ புவியை நீங்கியது! மண்டேலாவிற்குத் தலைவர்களின் போலிப்புகழாரம்!
தென் ஆப்பிரிக்கக் கருப்பர் இன மக்களின் அடிமைத்தளையை உடைத்தெறிந்த தலைவர் நெல்சன் மண்டேலா மறைந்தார்.
உலக மக்கள் பலரின் கண்ணீர் அஞ்சலிகளிடையே உலகத்தலைவர்களின் போலிப்புகழாரங்களும் சூட்டப்பட்டன.
இன விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவரை
தேசிய இனங்களை ஒடுக்கும் தலைவர்களும்
இன வாழ்விற்காக வாழ்ந்தவரை இனப்படு கொலைபுரிந்தவர்களும் அதற்குத் துணை நின்றவர்களும்
நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவரை வீட்டுமக்களுக்காக மட்டுமே வாழும் தலைவர்களும்
அறவழியில் இருந்து மறவழிக்கு மாறிய ஆயுதப்புரட்சியாளரை, புரட்சிக்கு எதிரானவர்களும்
வாழ்த்துப்பாக்கள் சூடி அஞ்சலி செலுத்தினர்.
மண்டேலாவின் இயற்பெயர் உரோலிலாலா மண்டேலா(Rolihlahla Mandela)
1918 சூலை 18 இல் தென்னாப்பிரிக்காவில் குலு என்னும் சிற்றூரில் பிறந்தவர்; சட்டம் பயின்றவர்; தொடக்கத்தில் தங்கச் சுரங்க பாதுகாப்பு அலுவலராகவும், தோட முகவராகவும் பணியாற்றியவர்; இளம் அகவையில் குத்துச்சண்டை விரராக அறியப் பெற்றவர்; இன்றளவும் உலக வீரர்களிடையே பெருமதிப்பிற்குரியவராகத் திகழ்பவர்.
நெல்சன் மண்டேலா, தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காகவும் கருப்பர் இன மக்களின் உரிமைக்காகவும் கடுமையாகப் போராடியவர். 27 ஆண்டுகள், சிறைவாழ்க்கைக்குப் பின்னர், 1990இல் விடுதலையானார். 1993இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1994 மே 10 இல் தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். சூன் 2008 இல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஐ.நா.பொது அவைத்தீர்மானத்திற்கிணங்க, இவர் பிறந்தநாள் 2010 ஆம்ஆண்டு முதல் நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் என உலகநாடுகளால் கொண்டாடப்படுகின்றது.
மக்கள் உரிமைகளை மீட்க அறவழிப்போராட்டம் உதவாது என மறவழியைத் தேர்ந்தெடுத்த ஆயுதப் போராளி மண்டேலாவை வாழ்த்தும் நாடுகள் தமிழர் உரிமையை நசுக்குவது ஏன் எனத் தெரியவல்லை.
அவருக்கு அகவை95. கடந்த சில திங்களாக நுரையீரல் தொற்றினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் துன்புற்று மருத்துவம் பார்த்து வந்தார். எனினும் பண்டுவத்தால் பயனின்றி – தென் ஆப்பிரிக்கா தலைநகர் யோகன்னெசுபர்க்கில் (Johannesburg )தம்முடைய இல்லத்தில் – கார்த்திகை 19 , தி.பி.2055 / திசம்பர் 5,2013 – வியாழனன்று – காலமானார்.
அவர் மறைவுச் செய்தியை அந்நாட்டின் குடியரசுத்தலைவர் இயாக்கோபு சூமா (Jacob Zuma) அறிவித்தார். “தென் ஆப்பிரிக்க மக்களே, நமது அன்பிற்குரிய … மக்கள்நாயகத் தென் ஆப்பிரிக்காவிற்கு வித்திட்ட அதிபர், நம்மை விட்டுப் பிரிந்தார். நமது தேசம் தனது மிகப் பெரிய பிள்ளையை இழந்து விட்டது. மக்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர்” என்று அவர் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
கார்த்திகை 28, திசம்பர் 14 அன்று, பிரிட்டோரியா மாகாணத்தின், கேப் மாவட்டத்தில் உள்ள மண்டேலாவின் சொந்த ஊரில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
நெல்சன் மண்டேலாவின் மறைவுச் செய்தி உலகெங்கும் அதிர்ச்சி அலையை எழுப்பி உள்ளது. “மனிதகுலத்தின் மணிவிளக்கு; உரிமைப்போரின் விடிவெள்ளி; காலத்தால் அழியாத கறுப்பு மலர்” என வைகோ அவர்கள் குறித்துள்ளார். எனினும் இரங்கல் செய்திகளில் தங்கள் போலிஉணர்வுகளை வெளிப்படுத்தி உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
‘மனித நேயத்தின் அடையாளம் மண்டேலா’ என மனிதநேயம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் மனித நேயமின்றி இனப்படுகொலை செய்யும் சிங்களத்தின் தோழர் பிரணாப்பு தெரிவித்தார்.
ஈழத்தில் காந்திவழி போராடுபவர்கள் மடிவதற்குக்காணரமாக இருந்த இந்திய அரதசின் மன்மோகன், உண்மையான காந்தியவாதி மறைந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலைபுரியும் சிங்களத்தின் தோழமையான சீன அரசு, சீனமக்களின் தோழர் மண்டேலா எனக் குறிப்பிட்டுள்ளது.
உலக மக்களின் உரிமைகளைத் தம் நாட்டு நலனுக்காகப் பறிக்கும் அமெரிக்க ஒபாமா, ‘மண்டேலா ஈடு இணையற்றத் தலைவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனமாற்றப்பாதையில் செல்கிறார் என்னும் நம்பிக்கைக்கு உரியவர்தானா எனக் கருதப்படும் பிரித்தானியத் தலைமையாளர் தாவீது கேமரூன், உலகின் சுடர் ஒளி மறைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஐ.நா. ‘நீதியின் காவலர் மண்டேலா’ எனக் குறிப்பிட்டுள்ளது.
சிங்கள இனவெறிக்குத் துணை நிற்கும் ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு ஈகங்களைச் செய்தவர் மண்டேலா எனக் குறிப்பிட்டுள்ளார்..
‘உண்மையான தலைவர்கள் தங்கள் மக்களுக்காகத் தங்களது அனைத்து உரிமைகளைகளயைும் இழக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.’ என வாழ்ந்து காட்டிய மண்டேலாவின் மறைவிற்கு, ‘ வீட்டை நினை! நாட்டை மற!’ எனத் திசை மாறிய தலைவர், ‘குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர்’ எனவும் ‘வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்புநிலா’ மறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொடுமைகள் யாவினும் கொடுமையாகப் பொதுவளஆயத் தலைவர் என்ற முறையில் இரங்கல் தெரிவிப்பதாக இனப்படுகொலையாளன் பக்சே தெரிவித்துள்ளான்.
இவர்கள் யாவரும் மனித நேயத்துடன் நடந்து கொண்டால் உலகெங்கும் இனப்படுகொலைகள் நடைபெறுமா? சொல்லொன்றும் செயலொன்றுமான ‘மேல்மக்களை’ நம்பி உலகம் இருக்கின்றதே!
Leave a Reply