புறநானூறு சொல்லும் வரி நெறி! -இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூறு சொல்லும் வரி நெறி!
மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன், சூலை 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைத்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் புறநானூற்றுப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்பையும் பண்டைத் தமிழரின் வரி விதிப்புக் கொள்கையையும் உலகம் அறியச் செய்துள்ளார். எனவே, அவருக்கு நம் பாராட்டுகள். அவரால் மேற்கோளாகக் கூறப்பட்ட பாடலை நாமும் அறிவோமா?
புலவர் பிசிராந்தையார் காணாமலேயே கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர்; அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பொழுது தாமும் உண்ணாமல் உயிர் துறந்தவர். இதனால் இருவரும் நட்பிற்கு இலக்கணமாகக் கூறப்படுவர். புறநானூற்றில் நான்கு, அகநானூற்றில் 1, நற்றிணையில் 1 என அவரின் 6 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.
புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வரிவிதிப்பு எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கூறிப் பாடல் இயற்றினார். இப்பாடல் புறநானூற்றில் 184 ஆவது பாடலாக அமைந்துள்ளது. அப்பாடல் பொருளை நாமும் அறிந்து அகம் மிக மகிழ்வோம்.
அந்தப் பாடலும் விளக்கமும் வருமாறு:
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 5
கோடியாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத், 10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே!
இதன் பொருளைப் பார்ப்போம்:
காய்ந்து விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளங்களாக யானைக்குக் கொடுத்தால் ‘மா’ என்னும் சிறிய அளவு கூட இல்லாத மிகச் சிறிய நிலத்தில் விளைந்த நெல், அதற்குப் பல நாள் உணவாக வரும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே உண்ணுமாறு மேயவிட்டால் என்ன ஆகும்? யானை தின்னும் நெல்லின் அளவை விட அதன் கால்களில் மிதிபட்டு அழியும் நெல்லின் அளவு மிகுதியாகும்.
அரசன் வரி திரட்டும் நெறிக்கேற்ப முறையாக மக்களிடம் வரி பெற்றால், மக்கள் துன்பமில்லாமல் கொடுக்கும் வரியால் கோடிக்கணக்கில் பொருள்களைத் திரட்டுவான். இதனால் நாடும் தழைக்கும் மக்களும் பயனுறுவர்.
அரசன் அரசியல் அறிவில் குறைந்தவனாக, அறமுறை அறியாச் சுற்றத்துடன் ஆரவாரமாக, மக்கள் அன்பு கெடுமாறு முறையின்றி நாள்தோறும் பெருமளவு வரியை வற்புறுத்திப் பெற முற்பட்டால் என்ன ஆகும்? யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடைய மாட்டான். அவனால் நாடும் கேடுறும்.
இப்பாடல் மூலம், யானைக்கு உணவு வழங்கும் முறையைப் புலவர் பிசிராந்தையார் வேந்தனுக்கு உணர்த்தி அறமுறைப்பட்ட வரி திரட்டலே பெருஞ்செல்வம் தரும் என உணர்த்தினார். பாண்டியன் அறிவுடை நம்பியும் உணர்ந்து அதற்கேற்ப வற்புறுத்தி வரி திரட்டும் முறையைக்கை விட்டு வரி நெறியைப் பின்பற்றினார்.
கணக்கில் ‘மா’ என்பது இருபதில் ஒரு பங்கு (1/20) என்னும் அளவைக் குறிக்கும். நில அளவையில் 100 குழி கொண்ட வயல் பரப்பைக் குறிக்கும். 16 சாண் அளவு 1 கோல் என்றும் 18 கோல் அளவு 1 குழி என்றும் கூறப்பெறும். அஃதாவது சதுர அளவையில் 288 சாண் அளவு 1 குழி.
‘செய்’ என்பது சங்கக்காலத்தில் பயன்படுத்தப்பெற்ற நில அளவு. இதனைச் சிலர் 100 சிறுகுழி என்கின்றனர். இது தவறாகும். ‘மா’ என்னும் நில அளவைவிடச் ‘செய்’ என்னும் அளவு பெரிது என்பதை இப்பாடலே உணர்த்துகிறது. அவ்வாறிருக்க 100 குழி அளவு கொண்ட ‘மா’ என்னும் நிலத்தை விட 100 சிறுகுழி கொண்ட ‘செய்’ என்னும் அளவு எப்படிப் பெரிதாக இருக்க முடியும். ‘செய்’ என்பது பெரு நில வயலைக் குறித்திருக்கிறது.
இதன் மூலம் சிறிய அளவான ‘மா’ அளவு நிலத்தில் பயிராவதை முறையாக யானைக்குக் கொடுத்தால் யானைக்குப் பல நாள்களுக்கு உணவாக அமையும்.. மாறாக 100 வயல் பரப்பில் யானை தானே போய் உண்ணும் படி விட்டால் அங்குமிங்குமாகச் சென்று யானை உண்பதால் அதன் காலில் பட்டு அழிவது உண்ணும் அளவை விட மிகுதியாக இருக்கும். இவ்வாறு உவமையைக் கூறி வரி நெறியை உணர்த்துகிறார் புலவர்.
சங்க இலக்கியப் பாடல்கள் திணை என்றும் துறை என்றும் வகுக்கப்பட்டிருக்கும். ஒருவரின் வலிமை, சிறப்பு, புகழ் முதலானவற்றைப் பாடும் ‘பாடாண்திணை’ப் பிரிவில் இப்பாடல் உள்ளது. குறைகளை எடுத்துக்கூறி செய்யவேண்டியனவற்றைச் செவியில் அறிவுறுத்தும் ‘செவியறிவுறூஉ’ என்னும் துறையில் இப்பாடல் அடங்கும். மன்னராட்சியாக இருந்தாலும் மன்னருக்கு அறிவுரை கூறுவதையே ஒரு பிரிவாக வகுத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். மக்களாட்சியில் அதற்கான இடம் எங்கே இருக்கிறது?
இப்பாடல் மூலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழ்நாட்டில் வரிவிதிப்புக் கொள்கைகளும் அவற்றுக்கான நூல்களும் இருந்துள்ளன எனப் புரிந்துகொள்ளலாம். இச்சிறப்பை நாடாளுமன்றம் மூலம் உலகிற்கு உணர்த்திய அமைச்சர் நிருமலா சீதாராமனுக்கு மீண்டும் பாராட்டுகள்!
ஐயா, தங்களது இக்கட்டுரையை மின்னம்பலத்திலும் படித்தேன். ஆனால் அங்கு கருத்திட இயலவில்லை. பொதுவாகவே மின்னம்பலம் படைப்புகளை வெளியிட மட்டும்தான் செய்கிறதே தவிர, கருத்துக்களை ஏற்பதில்லை.
புறநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டி நிதியமைச்சர் உரையாற்றியதும் இணைய ஏடுகள் பலவும் அவரைப் பாராட்டி இந்தப் பாடலின் விளக்கத்தையும் வெளியிட்டுள்ளன. ஆனால் தாங்கள் பாடலின் விளக்கம் பற்றி மட்டுமில்லாது அதில் கூறப்பட்டுள்ள பண்டைய தமிழர் அளவீட்டு முறைகள் குறித்த நுட்பத் தகவல்களையும் அளித்திருக்கிறீர்கள். இதுதான் ஒரு செய்தியை ஊடகங்கள் சொல்வதற்கும் தங்களைப் போன்ற தமிழறிஞர் சொல்வதற்கும் இடையிலான வேறுபாடு எனக் கருதுகிறேன். தவிர, செய் எனும் அளவு பற்றி நிலவும் தவறான கருத்தையும் தாங்கள் மறுத்துரைத்திருப்பது இப்பதிவை இன்றியமையா முக்கியத்தனம் வாய்ந்ததாக்குகிறது. மிக்க நன்றி ஐயா!
அதே நேரம், நிருமலா சீதாராமனுக்குத் திடீரென இப்படித் தமிழ்ப் பற்று பொத்துக் கொள்ளக் காரணம் என்ன என்பது நம் அனைவரும் நன்கறிந்ததே! அது பற்றி நானும் ஒரு பதிவை எழுதியுள்ளேன். சுட்டி இதோ: https://agasivapputhamizh.blogspot.com/2019/07/instant-Tamil-passion-of-Nirmala-Seetharaman.html
அன்புள்ள ஞானம்
கருத்திற்கு நன்றி.
அகச்சிவப்புக் கட்டுரையைத் தோழமையில் முன்பே படித்து விட்டேன்.
விவரம் உள்ளவர்கள் காரணம் அறிவார்கள். அதே நேரம், தமிழைப்பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் பழிக்கும் நாம் சொல்லும் பொழுது வரவேற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சொல்வதால் இந்திய அளவில் செய்தி பரவுகிறது. நிதிநிலையறிக்கையில் சொல்லியுள்ளதால் உலகம் முழுவதும் தமிழர் வரி நெறி பரவுகிறது. எனவே, காரணத்தை ஆராயாமல் பாராட்டுங்கள். இதற்காக அவர்களுக்கு வாக்களிக்கக் கூறவில்லை.
இந்த நேரத்தில் குறை கூற வேண்டா என்றுதான் கூறுகின்றேன். அமைச்சர் நிருமலா சீதாராமன் கருத்தைச் சொல்லிய முறையும சிறப்பாக இருந்தது. ஆகவே பாராட்டலாம்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!