(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 தொடர்ச்சி)

தலைப்பு- பெரியார் தமிழினப்பகைவரா?-வாலாசா வல்லவன் : thalaippu_periyaar_thamizhinathin_pakaivaraa_vaalaasavallavan02

3/3

  15-2-1953 சென்னை மாவட்டத் திராவிடர் கழகச் செயற்குழு 22-2-1953 அன்று சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது.(விடுதலை 16-2-1953). அன்றே திராவிடர் கழக நடுவண் செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்து சென்னைக்கு வரும் அன்றே ‘தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்’ தமிழகமெங்கும் கொண்டாடும்படித் தீர்மானம் நிறைவேற்றியது. (விடுதலை 16-2-1953).

  திட்டமிட்டபடி இராசேந்திரப் பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டினர். காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் சில தி.க தோழர்களுக்கு மண்டையும் உடைந்தது.

  22-2-1953 அன்று வாஞ்சு அறிக்கைக் கண்டன நாள் தி.க தோழர்களால் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

  தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 பேரும் கட்சி வேறுபாடு கருதாமல் புது தில்லியில் 1953 மார்ச்சு 23 அன்று தலைமையமைச்சர் நேருவைச் சந்தித்து, ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகரமோ, உயர்நீதிமன்றமோ சென்னையில் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். (விடுதலை 4-3-1953).

  இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகுதான் நேரு ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்றார்.

தெற்கெல்லைப் போராட்டத்தைப்பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்

  இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழிவழியாகப் பிரித்து அமைக்க நேருவின் தலைமையிலான இந்திய அரசு, நீதிபதி பசல் அலி தலைமையிலான குழுவை 29-12-1953இல் அமைத்தது. அக்குழுவில் கே.எம்.பணிக்கர் என்ற மலையாளியும் குன்சுரு என்ற உ.பி-காரரும் உறுப்பினர்களாக இருந்தார்கள். அக்குழு 30-9-1955இல் தங்கள் பரிந்துரையை இந்திய அரசுக்கு அளித்தது. 267 பக்க அறிக்கையில் பக்கம் 81 முதல் பக்கம் 89 வரை தமிழகத்தைப் பற்றியது.

  அக்குழுதான் தேவிகுளம், பீர்மேடு முதலான 4 மாவட்டங்களைக் கேரளாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மார்சல் நேசமணி தலைமையில் 1946 முதலே திருவாங்கூர், கொச்சி பகுதியில் உள்ள தமிழ்ப்பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். இந்த அறிக்கை வெளிவந்தவுடன் அவர்களுடைய போராட்டமும் மிகுதியானது. தமிழகமும் கொந்தளித்து எழுந்தது. 10-7-1954 முதலே விடுதலையில் திருவாங்கூர்த் தமிழர் கிளர்ச்சிக்கு ஆதரவான ஆசிரியவுரைகள் எழுதப்பட்டு வந்தன.

  21-11-1955 முதல் 24-11-1955 வரை தமிழகச் சட்டமன்றத்தில் இந்தக் குழுவின் அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மலையாளிகளும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினரும் (Indian Communist Party) தவிர எல்லோருமே தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைய வேண்டும் என்று பேசினர். தமிழக நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் தேவிகுளம், பீர்மேடு தமிழகத்திற்குச் சொந்தம் என்பதைச் சான்றுகளோடு விளக்கினார். இறுதி நாளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தேவிகுளம், பீர்மேடு தமிழகத்திற்குச் சேர வேண்டுமென்ற தீர்மானத்திற்கு ஏற்பாக (ஆதரவாக) 122 வாக்குகளும் அதற்கு எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருட்டிணய்யர் (CPI) உள்பட பலர் எதிர்த்து வாக்களித்தனர். தமிழகப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் ப.சீவானந்தம், ஞ.இராமமூர்த்தி, கல்யாண சுந்தரம் முதலான 13 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர். தீர்மானம் தமிழ்நாட்டுக்கு ஏதுவாக நிறைவேறியது.

  தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்துக்கு ஏற்பாக(ஆதரித்து) விடுதலையில் ஆசிரியவுரை எழுதினார் குத்தூசி குருசாமி(விடுதலை 25-11-1955). நேரு, பசல் அலி குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்தார். 16-12-1953 முதல் 23-12-1953 வரை விவாதம் நடைபெற்றது. நேசமணியும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் நேரு தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தைப் புறக்கணித்துத் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டார்.

  தமிழக முதல்வரையும், நிதியமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் தில்லிக்கு அழைத்துத் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்குச் சொந்தம் என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

  தமிழகச் சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று சட்ட வரைவு (மசோதா) கொண்டு வந்தார். 28-3-1956 முதல் 31-3-1956 வரை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் விவாதத்தில் பங்கேற்கக் கூடாது என்று குறடா (கொறடா) ஆணை பிறப்பித்து, இது மேலிட ஆணை, இதை மீற முடியாது என்று கூறித் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கும் விடாமலே நிறைவேற்றினார். அப்போதுதான் முதலமைச்சர் குளமாவது மேடாவது என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.

   தமிழர்களின் உண்மையான எதிரி நேருவே என்பதை உணர்ந்த பெரியார் மலையாளிகளைத் தமிழகத்தை விட்டு வெளியேறும்படியான கிளர்ச்சி செய்யாத வரையில் தில்லி பணியாது என்று மதுரைப் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். (விடுதலை 18-1-1956).

  ‘தில்லி – அநீதிக்கு மேல் அநீதி! தேவிகுளம் பீர்மேடு தாய்த் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்படுகின்றனஎன்று 17-1-1956 அன்று விடுதலையில் ஆசிரியவுரை எழுதப்பட்டது. 15-2-1956 அன்று மன்னார்குடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார் பார்ப்பான், வடநாட்டான், மலையாளி போன்ற அயலவனெவனும் வெளியேற்றப்பட வேண்டியவனே; மலையாளிகளைத் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாவா என்று கொந்தளித்தார். (விடுதலை 16-2-1956). ஆக, தமிழகம் தன் மண்ணை இழந்தது திராவிடம் பேசியதாலா அல்லது இந்தியம் பேசியதாலா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழரசுக் கழகம்என்ற பெயரில் போலிக் கட்சி வைத்துக் கொண்டு நேருதான் என் தலைவர், காந்திதான் என் தலைவர், சத்தியமூர்த்திதான் என் தலைவர், இராசாசிதான் என் தலைவர் என்று கூறி இந்திய தேசியத்திற்குக் காவடி தூக்கிய ம.பொ.சி-தான் தமிழின இரண்டகர்! தி.மு.க-வும் வடக்கு எல்லை தெற்கு எல்லைப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டது.

  ம.பொ.சி வட எல்லைப் போராட்டத்தில் பெரியாரின் மீது பொய்யையும், புளுகையும் அவிழ்த்துவிட்டதைப் போலவே தெற்கெல்லைப் போராட்டத்திலும் மிகப் பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார்.

 “பெரியார் ஈ.வெ.ரா எப்போதும் எதிலும் ஒரு தனிப்போக்கோடு நடந்து கொள்ளக்கூடியவரல்லவா? பசல் அலி ஆணையம்(கமிசன்) பரிந்துரையிலும் தமது வழக்கப்படித்தான் அவர் நடந்து கொண்டார். திருச்சியிலுள்ள தமது மாளிகையில் தினத்தந்தி’ (நாள் கொடுக்கப்படவில்லை) செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ‘தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை, கொச்சி, சித்தூர் ஆகிய பகுதிகள் பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத்துடன் அவற்றைச் சேர்க்க வேண்டியதுதான். சமீபத்தில் சர்தார் பணிக்கர் வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். தொழிலுக்காகத் தமிழர்கள் அங்கு (தேவிகுளம், பீர்மேடு) வந்தார்களே ஒழிய நிலம் மலையாளத்தைதான் சேர்ந்தது என்று பணிக்கர் சொன்னார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்” (எனது போராட்டம் பக்கம் 758). தினத்தந்திக்குக் குத்தூசி குருசாமி வைத்த பெயரே ‘டெய்லி டூப்’ என்பதாகும். ம.பொ.சி-யும், தினத்தந்தி ஆதித்தனும் வேண்டுமென்றே பெரியாரின் மீது அவதூறுகளைப் பரப்பி வந்தனர்.

   ஆதித்தனார் 1952-57 வரை குடிமக்கள் பொதுவுடைமைக் கட்சிச் (Praja Socialist Party) சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அக்கட்சியின் கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை தமிழர்கள் 11 பேரைச் சுட்டுக் கொன்றார். அக்கட்சி கொச்சி சட்டமன்றத்தில் தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்று கூறியபோதும் தினத்தந்தி ஆதித்தன் அக்கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்கவில்லை. ம.பொ.சி-யைப் போன்றே பெரியார் மீது ஏதாவது பொய் சொல்லிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். பெரியாருக்கென்று விடுதலை நாளேடு இருக்கிறது. எங்காவது தேவிகுளம், பீர்மேடு மலையாளிக்குச் சொந்தம் என்று இருக்கிறதா என்று யாராவது காட்ட முடியுமா?

  1956 முதல் பெரியார் மறையும் வரை ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி வந்தார். இவரா தமிழினப் பகைவர், தமிழின இரண்டகர்?

 

– வாலாசா வல்லவன்

  பெரியார் முழக்கம் 08-10-2015 இதழ்

தலைப்பு-பெரியார்முழக்கம்  :thalaippu_periyaarmuzhakkam 08-10-2015 இதழ்