பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்
பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும்
கமலின் இயலாமையும்
[பெருந்தலை(Bigg Boss) நிகழ்ச்சி என்பது நேர்நிகழ் காணாட்ட நிகழ்ச்சியாகும். இப்பொழுது இந்தியாவில் ஏழு மொழிகளில் நடைபெறுகிறது. தமிழும் அவற்றில் ஒன்று. பல்லாயிரக்கணக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கியும் வழங்கியும் வரும் எண்டமோல் நிறுவனத்தின் சார் நிறுவனமே எண்டெமோல் சைன் இந்தியா (Endemol Shine India) என்னும் நிறுவனம். இது வியாகாம் 18(Viacom 18), இசுடார் இந்தியா ஆகியவற்றின் மூலம், இதனை வெளியிடுகிறது. ஊட்டு(Voot), திசுனி + ஆட்டுசுடார் மூலமே காட்சிப்படுத்துகிறது. கேட்பிற்கிணங்கக் கட்டணக் காணொளி மூலமே(Subscription video on-demand) இவை நிகழ்ச்சியை ஒளி பரப்புகின்றன. நெதருலாந்து-பிரித்தானியப் பெரிய அண்ணா(Big Brother) நிகழ்ச்சியின் பதிப்பே இது. ]
பெருந்தலையின்(Bigg Boss) தமிழ் நிகழ்ச்சியின் நான்காம் தொடர் இப்பொழுது நடைபெற்று வருகிறது. நாளை (தை 4 / 17.01.2021 அன்று) நிறைவுபெற உள்ளது. இதன் முடிவாக வாகையாளரை அறிவிக்கும் பொழுது விசய் தொலைக்காட்சி நடுநிலை பிறழ்ந்து நடந்து கொள்ளும் என்பதே பலரின் வருத்தமான நம்பிக்கையாக உள்ளது. அந்த அளவிற்கு அந்நிறுவனத்தின் செயல்பாடு மக்கள் மனத்தில் பதிந்து உள்ளது. எனினும் இணையத் தளங்களில் இவ்வாறு முறைகேடு நடக்கக்கூடாது எனப் பலரும் எழுதி வருவதால் நடுவுநிலையுடன் நடந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் நேர்கிறது. விசய் தொலைக்காட்சி நிறுவனம் நடுவுநிலையுடன் நடந்து கொண்டால் ஆரிதான் வெற்றி நாயகராக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், தன் நிறுவனக் கலைஞர் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது.
ஆரி ஒவ்வொருவருக்குமே வெவ்வேறு சூழல்களில் தன்னம்பிக்கை உரை வழங்கியுள்ளார் என்பது அவ்வப்பொழுது ஒவ்வொருவரும் கூறும் கருத்துகளில் இருந்து தெரிகிறது. அவற்றை ஒளிபரப்புவதில் பெரும்பான்மையை மறைத்துவிட்டார்கள். ஆரிக்கு நல்ல பெயர் வரக்கூடாது என மறைத்திருக்கிறார்கள். அவ்வாறு ஒளி பரப்புவது பார்க்கும் மக்களுக்குத்தான் நல்லது என உணர்ந்தாவது ஒளிபரப்பியிருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. போட்டியாளர்களை நடுவுநிலையுடன் நடத்தாமல் தன் விருப்பு வெறுப்பிற்கேற்பவே நடத்துகிறது. சான்றாகக், கடந்த முறை ஒலிவாங்கியை அணியாமல் இருந்ததற்காகப் போட்டியை விட்டு நீக்கிய பெருந்தலை இம்முறை ஒலிவாங்கியை எறிவது, தலையணையை எறிவது, செருப்பால் அடித்துக் கொள்வது, ஏச்சுச் சொற்களைச் சினத்துடன் சொல்வது எனப் பலமுறை விதி மீறிய பாலாமீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவரே, அவரைத் துணைத் தலைவராக அறிவித்த பொழுது தான் விதிமுறைகளை மீறுபவன் என ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் செவ்வட்டை(Red Card) கொடுத்து வெளியேற்ற வேண்டியவரைச் சீராட்டி வைத்துக் கொள்கிறது.
அதே நேரம் மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ள ஆரிக்கு வெற்றிப்பட்டத்தைத் தரக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. சிலர் குழுவாக அமைத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் அவரை வெளியேற்றப் பட்டியலில் சேர்க்கின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே வருபவர்கள், வெற்றி வாய்ப்புள்ளவரை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகக் கூட்டணி அமைத்துச் செயல்படுவதைத் தடுக்கவில்லை. அன்பு அணி என்பது விசய் தொலைக்காட்சியின் மீதான அன்பு அணியாகவே உள்ளது. ஆனால், உண்மையில் பெருந்தலை யாரை முன்னிறுத்துகிறதோ அவரைப் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்குகின்றனர். எடுத்துக்காட்டிற்கு இரண்டைப் பார்ப்போம். தொலைக்காட்சித் தொகுப்புத் திறமையால் மக்களிடம் வரவேற்பு பெற்றிருந்த அருச்சனா பெருந்தலைவர் சார்பாளர்போல் ஆரவாரமாக உள்ளே நுழைந்தார். அவரை அமைதியாக வெளியேற்றிவிட்டனர் பொது மக்கள். (இ)ரியோ மீது சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தமையால் எண்ணற்ற அன்பர்கள் இருந்தனர். தொடக்கத்தில் அவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால், வெருந்தலையால் முன்னிறுத்தப் படுகிறார் என்றதும் அவர் ஆதரவாளர்களே அவரைப் புறக்கணித்து ஆரிக்கு வாக்களிக்கின்றனர்.
அனிதாவைத் தடுப்பறைக்கு(ஓய்வறைக்கு) அனுப்பியதைத் தவறென ஏற்றுக்கொண்டு திரும்பப்பெற்ற கமல், (இ)ரியோ, ஆரியைக் குறித்து வேண்டுமென்றே தவறாகக் குறித்துத் தடுப்பறைக்கு அனுப்ப முன்மொழிந்ததற்கு எதிராக ஆரி முறையிட்டதும் கண்டு கொள்ள வில்லை. (இ)ரியோவிற்கு எதிராகப் பேசுவதற்குப் பெருந்தலை ஒப்புதல் தரவில்லை போலும்! இல்லத் தோழர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது பாராட்டிற்குரியதுதான். ஆனால் அவர்கள், காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளும் பொழுது தலையிட்டு உண்மையான நீதியை வழங்க வேண்டும். பெருந்தலை இனியேனும் அதைப் பின்பற்றட்டும்!
அருச்சனாவின் நாடகங்களில் ஒன்று தன் தந்தையின் மரணம்பற்றிப் பேசப்பட்டது தொடர்பானது. குடும்பத்தவர்பற்றித் தவறாகப் பேசக்கூடாதுதான். ஆனால், துயரத்தை வெளிக்கொணர்வதற்காக அருச்சனாவின் தந்தை மரணத்தைக் குறித்துக் கூறுவது பெருங்குற்றமல்ல. அஃது ஒன்றும் குற்றச் சூழலில் நேர்ந்த மரணம் அல்ல. அவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், ஊடகத்தினர் அறிந்த இயல்பான செய்திதான். எனவே, அதைச் சொல்வதை விரும்பவில்லை எனில், அப்படிச் சொல்லும் பொழுது அது குறித்துப் பேச வேண்டா என அமைதியாகத் தெரிவித்தாலே போதும். ஆனால், பெருங்கூச்சல்போட்டு நாடகமாடினார் அருச்சனா. இது குறித்துக் கமல்,
“தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்றாரா?
என்னைத் தோற்றபின் தன்னைத் தோற்றாரா?”
என்ற பாஞ்சாலியாக எண்ணிக் கொண்டு, நிசாவிடம் அருச்சனாவின் அப்பா மரணம் இங்கு வருவதற்கு முன்பேதெரியுமா? இங்கு வந்தபின் அருச்சனாசொல்லித் தெரியுமா எனக் கேட்டார்.
மாறாக, இவ்வாறு கூச்சல் போட்ட நாடகக்காட்சியைத் தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தால், அனிதா தன் கணவரைப்பற்றிச் சொல்வதாக மற்றொரு நாடகத்தை அரங்கேற்றியது நிகழ்ந்திருக்காது. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் கண்டிப்பதும் செயல்களுக்கேற்ப இல்லாமல், ஆளுக் கேற்றவாறுதான் நிகழ்கிறது.
ஆரி ‘டா’ போட்டுப் பாலாவிடம் பேசியது குற்றமாகச் சொல்லப்பட்டது. எல்லாரும் ‘டா’, ‘டி’ என்றுதான் விளிக்கின்றனர். அஃதாவது பெண்களும் ஆ்ண்களை ‘டா’ என்று சேர்த்துத்தான் பேசுகின்றனர். ஆரியும் இதற்கு மு்ன்னர்ப் பாலாவை ‘டா’ என்று விளித்துப் பேசியுள்ளார். எனவே, அதனைக் குற்றமாகச் சொல்வது பொருத்தமில்லை.
துப்புரவுப்பணியைச் செய்யாத அல்லது செய்விக்காத தன்னிடம் ஆரி இனிமையாகக் கேட்கவில்லை என்று ஆசித்து கூறுவது ஏற்கும்படி இல்லை. அதுவும் ஆரியே அந்தப்பணியைச் செய்திருக்கலாமாம். தலைவன் என்ற முறையில் கேட்க வேண்டிய முறையில்தான் ஆரி கேட்டார். ஆசித்து, பெரியவர் சுரேசிடமே அவர் வேலை சொன்னதற்காகப் பொங்கி எழுந்த பொழுதே கண்டித்திருந்தால் தன்னைப் பண்படுத்திக் கொண்டிருப்பார். மாறாகச் சுட்டிக்காட்டும் தவற்றைத் திருத்திக் கொள்ளாமல் ஆரியிடம் இனிமையாகக் கூறி வேலைவாங்கச் சொல்வது தவறான ஆசித்தைத் திருத்தாது.
பிற போட்டியாளர்களின் குடும்பத்தினரே ஆரியை நம்பிக்கை நாயகனாகக் கருதுகின்றனர். முன்னரே மக்கள் பணிகளிலும் தொண்டுகளிலும் அருவினை (சாதனை)ச் செயல்களிலும் ஈடுபாடு கொண்டுள்ளவர் ஆரி; பெருந்தலை இல்லத்தில், நேர்மையாகவும் நடுவுநிலைமையுடனும் நடந்து கொள்வதாலும் பிறரால் ஓரங்கட்டப்படுவதாலும் இவரின் வெற்றியை நேர்மையின் வெற்றியாகக் கருதி ஆதரிக்கின்றனர். பெருந்தலை நிகழ்ச்சியைப்பற்றிக் கருத்து தெரிவிக்கும் இணையத் தளங்கள் யாவற்றிலும் ஆரிக்கே பெரும் செல்வாக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பெருந்தலையின் எண்ணத்திற்கு மாறாக இப்போக்கு உள்ளதால் ஆரியை மட்டந்தட்டுவோரை ஊக்கப்படுத்தி வருகிறது.
தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் வாக்கெடு்ப்புகளில் பிற போட்டியாளர்கள் பெற்றுவரும் மொத்த வாக்குகளைவிட மிகுதியாக ஆரிக்குதான் வாக்குகள் குவிந்து வருகின்றன. இதுவே ஆரிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைக் காட்டுகிறது. இதேதான் பெருந்தலையின் வாக்கெடுப்பிலும் நிகழ்ந்து வருகிறது. எனினும் இம் முடிவை விரும்பாத பெருந்தலை மாறாகச் செயல்படுவதாக மக்கள் அஞ்சுகின்றனர்.
அண்மையில் மறைந்த நடிகையை மிரட்டியதாகக் கூறப்படும் தொகுப்பாளரைக் கொண்டு ஆரிக்கு எதிராகப் பேச வைத்துள்ளார்கள். தனியார் தளங்கள் எல்லாவற்றிலும் வாக்களிப்பில் பிற போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் மொத்தத்தைவிட ஆரி பெறும் வாக்குகள் மிகுதியாக உள்ளன. ஆரியைப் புறக்கணித்து விட்டுத் தாங்கள் கருதியவருக்கு வெற்றிப்பட்டம் வழங்கினால் மக்கள் எதிர்ப்பிற்கு ஆளாகலாம் என உணர்ந்து அவையெல்லாம் ஆரியின் மக்கள் தொடர்பு அலுவலர் உருவாக்கும் வாக்குப்பதிவு எனப் பரப்புகிறார்கள். வலைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் போலி மறுப்பு ஒன்றையும் வெளியிடச் செய்துள்ளார்கள்.
தொடக்கத்தில் கூறியது போல், விதிகளை வகுத்துவிட்டு அவற்றைப் பின்பற்றாதவர்க் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிவிட்டுத் தங்கள் செல்லப்பிள்ளைகள் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாகப் பாராட்டு கிடைக்கும். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து பலவற்றைக் கூற இயலும் என்றாலும் இறுதியை நெருங்கும் பொழுது நேர்ந்த விதி மீறலைப் பார்ப்போம். பணப்பெட்டியை வைத்துவிட்டு, இடையிலேயே போக விரும்புவர்கள், அதனை எடுத்துக் காெண்டுபோகலாம் எனவும் பிறர் யாரும் அவர்களுக்குத் தூண்டதலாகச் செயல்படவோ அறிவுரை கூறவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கேபி ஐந்து நூறாயிரம் பணம் உள்ள பெட்டியை எடுத்து வெளியேறும் முடிவை வெளிப்படுத்தினார். அவர் ஆழ்ந்து சிந்தித்துத் தெளிவாக முடிவெடுத்துள்ளார் என்பது அவரது செயல்களிலேயே தெரிந்தது. ஆனால்,(இ)ரியோ அவரைப் பணப்பெட்டியை வைக்குமாறும் மறுமுறை சிந்திக்குமாறும் மன்றாடினார். தான் போகவிரும்புவதால் விட்டுக்கொடுக்குமாறும் கெஞ்சினார். (இ)ரியோ இவ்வாறு மன்றாடுவதைப் பார்த்த பிற போட்டியாளர்கள் சிலரும் ஒவ்வொருவராக மறுமுறை சிந்தித்து முடிவெடுக்குமாறு கேபியை வலியுறுத்தினர். (இ)ரியோ பேசத் தொடங்கியதுமே நிறுத்தியிருந்தால் அவரும் தொடர்ந்திருக்க மாட்டார். பிறரும் அவ்வாறு கேபியிடம் வலியுறுத்தியிருக்க மாட்டார்கள். எனினும் கேபி உறுதியான முடிவு மூலம் அவர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெருந்தலை ஒருங்கிணைப்பாளருக்குப் பெண் போட்டியாளர்களைச் செல்லப்பெயரில் அழைப்பதில் கவனம் இருந்ததால் தொடக்கம் முதலே எவ்விதிமீறல் குறித்தும் கவலைப்படவில்லை. செல்லப்பிள்ளைகள் பிறர் மீது பொய்யான குற்றம் சுமத்தினாலும் அது குறித்தும் கவலைப்படுவதில்லை.
தவறவிடும் தொலைபேசி அழைப்புகள் மூலம், கடந்த வாரத்திலிருந்தே ஆரிக்கு வாக்களிக்க இயலவில்லை. பலமுறை முயன்றால் ஓரிரு முறையே வாக்கு, கணக்கில் சேருகிறது. இணையத் தளங்களில் இது குறித்துச் சொன்னாலும் தக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதுவும் ஆரிக்கு எதிரான திட்டமிட்ட சதியாகப் பொதுமக்கள் கருதுகின்றனர்.
கமல் பெருந்தலையின் ஊழியர்தான். பெருந்தலை நிறுவன முதலாளியிடம் வேலைபார்க்கும் தொழிலாளி. எனவே, தன் மனச்சான்றுக்காகத் தவறுகளுக்கு எதிராகப் பொங்குவதுபோல் நடிக்கிறாரே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதற்கான உரிமை இருந்தால்தானே நடவடிக்கை எடுக்க இயலும்! எனவே, மேடையில் தவறு கண்டு பொங்குவதாக நடிக்கிறார். அவ்வளவுதான்!
ஆரியின் செம்மையான பங்கேற்பையும் எதிரியாக எண்ணிச்செயல்படுவோரின் தவறுகளையும் பொதுமக்களே அறிந்திருப்பதாலும் பல தளங்களிலும் சுட்டிக் காட்டியிருப்பதாலும் இங்கே விவரிக்கவில்லை. மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஆரிக்கு வெற்றிப் பட்டம் சூட்டாவிட்டால் நடுநிலை அன்பர்களும் ஆரி நேயர்களும் வழக்கு மன்றத்தை நாட வேண்டும். இதுபோன்ற பிற நிகழ்ச்சிகளை விசய் தொலைக்காட்சி ஒளிபரப்பவோ நடத்தவோ தடை பெற வேண்டும்.
வாகை சூடும் ஆரிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தனித்திறமையால் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றவர்களுக்கும பாராட்டுகள்!
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 118)
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
இந்தக் கட்டுரையை விட இப்படி ஒரு கட்டுரை உங்களிடமிருந்து என்பதே வியப்பு ஐயா! உங்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறது என மலைக்கிறேன். தமிழாராய்ச்சியும் செய்கிறீர்கள், அரசியல் கண்டனமும் பதிவு செய்கிறீர்கள், கட்டுரைப் போட்டியும் நடத்துகிறீர்கள், பெருந்தலை நிகழ்ச்சியும் பார்க்கிறீர்கள்! உங்களுக்கு மட்டும் இயற்கை ஒரு நாளுக்கு 48 மணி நேரம் வழங்குகிறதா!!