பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர்
போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள் 1031)
மத்திய அரசு பொங்கல் விடுமுறையை நீக்கியது என்று கட்சித்தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் தமிழக முதல்வரும் பொங்கி எழுந்தனர். பொதுவாக எதற்காவது ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்தினால், எதையாவது குறிப்பிட்டு அதற்குப் போராடாதவர்கள் இதற்குமட்டும் போராடுவது ஏன் என்பர். அவ்வாறில்லாமல், பொங்கல் விடுமுறைக்காகப் பொங்கியோர் போகி விடுமுறை வேண்டியும் பொங்க வேண்டுகிறோம்.
முன்பு, போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் விடுமுறை முறை இருந்தது.( பல ஆண்டுகளில் இவை சனி ஞாயிறு விடுமுறைநாள்களில் வரும்.) தமிழர் விழாவிற்கு நான்கு நாள் விடுமுறையா என யார் கண்ணையோ உறுத்த, எம்ஞ்சியார் போகி விடுமுறையை நீக்கினார். ஆனால், கேரளாவில் முதல் ஓனம், திருவோனம், மூன்றாம் ஓனம் நாள், நான்காம் ஓனம் நாள் என நான்கு விடுமுறைகள் வரிசையாக அளிக்கப்படுகின்றன. ஆந்திராவில்கூடப் போகிக்கு விடுமுறை உள்ளது. ஆனால், வெட்கக்கேடு, தமிழ்நாட்டில் விடுமுறை எண்ணிக்கையைக் காரணம்காட்டிப் போகிக்கான விடுமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம்கூவும் நம்மவர்களுக்குத் தமிழ்நாட்டில் போகிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்கும் எண்ணம் வரவில்லை.
போகி என்பது போக்கி என்பதன் (இடைக்குறை) மறுவடிவம். வீட்டில் பொங்கலை முன்னிட்டுப் பழைய குப்பைகளைப் போக்கித் தூய்மை செய்யும் தூய்மை நாள்; புதியன புகுவதற்காகப் பழையனவற்றைக் கழிக்கும் நாள். மனக்குப்பைகளையும் அகற்றிக் கசப்புணர்வுகளைப் போக்கி உறவைப் புதுப்பிக்கும் உறவு நாள். துன்பத்தைப் போக்கும் நாள். சுற்றுப்புறத் தூய்மைக்குப் பழந்தமிழர் அளித்து வந்த முதன்மையைப் போகி நாள் உணர்த்துகிறது.
பொங்கல் கொண்டாட்டத்தில் போகியும் அடக்கம். போகிக்கு விடுமுறை இல்லாததால், வெளியூர்களிலுள்ள பலர் பொங்கலன்று காலம் கடந்துதுதான் வீடுகளுக்கு வருகின்றனர். ஒரு முறை நான், சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்ட பொழுது பொங்கலன்று நண்பகல் 12.00 மணிக்குத்தான் மதுரை சென்று சேர்ந்தேன். மிகப்பலர் ஆண்டுதோறும் அடையும் துயரம் இது. போகிக்கு விடுமுறை விட்டால் முதல்நாள் காலங்கடந்து சென்றாலும் பொங்கலைக் காலையிலேயே கொண்டாட இயலும்.
நல்ல நேரம் என்று முற்பகல் நேரங்களைச் சொல்லி ஊடகங்கள் மக்களைக் குழப்பினாலும் ஞாயிற்றுத் தோற்றத்தின்பொழுது பொங்கல் வைப்பதுதான் சிறப்பு. அதற்கு முதல்நாளே குடும்பத்தினர் ஒன்றாக இருப்பதுதானே சிறப்பு.
தை ஒன்றுதான் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் எனக் கணக்கிட்டாலும் பொங்கலின் சிறப்பு குறையக்கூடாது எனத் தை இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுகிறோம். இதனை மாற்றம் செய்து, பின்வருமாறு பொங்கல் விழாவிற்கென 6 நாள் விடுமுறைகள் அளிக்க வேண்டும்.
மார்கழி 29 (இறுதி நாள்) – போகி
தை 1 – பொங்கல்
தை 2 – மாட்டுப் பொங்கல்
தை 3 – காணும் பொங்கல்
தை 4 – திருவள்ளுவர் நாள்
தை 6 – தமிழ்நாடு மீள்பெயர் சூட்டல் நாள் / தமிழ் எழுச்சி நாள்
தேவையற்ற மூடநம்பிக்கையிலான விடுமுறையை நீக்கியேனும் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக அரசு 6 நாள் விடுமுறை அளிக்கட்டும்! நீதிமன்றங்களும் கிறித்துப் பிறப்பு விடுமுறையாக நெடுநாள் அளிப்பதை நிறுத்திப் பொங்கல் விடுமுறைகளை அளிக்க அரசு அறிவுறுத்தட்டும்!
நாம் அடுத்த போகி வரை காத்திராது இப்பொழுதே அரசை வலியுறுத்தி போகிக்கு விடுமுறை அளிக்கவும் மேற்குறித்தவாறு பொங்கல் கொண்டாட்டங்களுக்கென 6 நாள் விடுமுறை அளிக்கவும் வலியுறுத்த வேண்டும். பொங்கல் விடுமுறை தொடர்பில் மத்திய அரசை வலியுறுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர், தன் அதிகார ஆணைக்குட்பட்ட விடுமுறை அறிவிப்பில் தானாகவே முன்வந்து, இனிமேல், போகி விடுமுறை அளிப்பதாகத் தெரிவிக்க வேண்டும்.
பொங்கலை வரவேற்கும் போகி நாள் வாழ்த்துகள்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply