Eezhakathir10 Eezhakathir20

பொறி. தி.ஈழக்கதிர் நூறு நூறு ஆண்டுகள் வாழ்கவே!

   ஆடி 27, 2046 / ஆக12, 2015 அன்று பிறந்தநாள் பெருமங்கலம் காணும் எங்கள் மகன் தி.ஈழக்கதிர் நல்ல மனைவிமக்கள் பெற்று இல்லறத்தை நல்லறமாக்கி, நலம், வளம் நிறைந்து, தமிழ்நலம் பேணி நூறாண்டிற்கும் மேல்வாழ உள்ளன்புடன் வாழ்த்துகிறோம்!

  ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பிள்ளைகள் பற்றிய நினைவு மிகுதியாக இருக்கும். அத்தகைய நினைவுகளில் சிலவற்றை அன்பு மகனின் பிறந்தநாளில் பகிர விரும்புகின்றேன்.

  அப்பொழுது சென்னை அண்ணா நகரில் திருவேணி குடியிருப்பில் குடியிருந்தோம். மிக அருகிலுள்ள மனிதநேய மருத்துவமனையில்தான் மருத்துவரைச் சந்தித்து வந்தோம். அருகில் உள்ளோர், “மிகுதியாகப் பணம் வாங்குவார்கள், வேறு எங்காவது செல்லுங்கள்” எனக் கூறினாலும் அவ்வாறு மிகுதியாகக் கட்டணம் விதிக்காததுடன் கனிவாகத்தான் நோயர்களையும் சூல் பெண்டிரையும் கவனித்தனர்; எனவே, அங்கேயே தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்துவந்தோம்.

  7 ஆம் திங்கள் பிறக்கையில் குழந்தை அசைவில்லாமல் இருந்தது. பனிக்குடத்தில் போதிய நீர் இல்லாமல் இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. பின் மருத்துவர் ஆய்விற்குப்பின் குழந்தையின் தலை, கொடி சுற்றி உள்ளது. எனவே, வேறு எதற்கும் கவலைப்பட வேண்டா. ஆனால், எப்பொழுது வலி வந்தாலும் உடனே வந்து விட வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி ஒரு நாள் பின்னிரவு – ஆக.12 வைகறையில் தாய்க்கு வலி வந்ததால் உடன் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவர் அறுவை மருத்துவத்திற்கான எல்லா ஏற்படுகளையும் செய்து ஆயத்தமாக உள்ளதாகக்கூறி எனினும் ஒரு வேளை குழந்தை அசைந்து தலை முன்பக்கம் வந்திருந்தால் இயல்பான மகப்பேற்றாகப் பார்க்கலாம் என்றார். அவர் எண்ணியபடியே இருந்தமையால் அறுவை மருத்துவம் தேவைப்படவில்லை. (பணத்தாசை மருத்துவராக இருந்தால் அறுவைப்பண்டுவம்தான் தேவை எனப் பணம் பிடுங்கியிருப்பார்.)

  குழந்தை பிறந்ததும் மருத்துவரின் விரலைப் பிடித்துக் கொண்டது மருத்துவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அவன் முதலில் ‘அம்மா’ என்று சொல்லாமல் ‘அக்கா’ என்றுதான் கூறினான். அவன் வயிற்றில் இருக்கும் பொழுது அவனுடன் அக்கா அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததன் பயனிது. மகள் பிறந்த பொழுது் ‘ஈழமலர் பிறந்தாள்’ எனத் தொலை வரி கொடுத்ததுபோல், மகன் பிறந்த பொழுது ‘ஈழக்கதிர் பிறந்தான்’ எனத் தொலை வரி கொடுத்தோம். (முன்னரே முடிவெடுத்த பெயர்கள்.)

  பேசத் தொடங்கியவுடனே ஆத்திசூடி முதலானவை சொல்லச் சொல்லச் சொன்னதால், 3 அகவையில் திருக்குறள் சொல்லத் தொடங்கியிருந்தான்.   எனவே, வீட்டிற்கு யார் வந்தாலும் திருக்குறள் சொல்லக் கேட்டு மகிழ்வார்கள்.

  அக்கா பள்ளிக்குச் செல்லும்பொழுது வீட்டிற்குப் பின்புறம்தான் பள்ளிப் பேருந்து நிற்கும்.இவனையும் அழைத்துக்கொண்டுதான் அக்காவை ஏற்றிவிடுவது வழக்கம். அப்பொழுது அவன் கண்களில் தெரியும் ஆர்வத்தைப் பார்த்து, இரண்டு ஆண்டுகளில் நீயும் இப்படிப் பேருந்தில் பள்ளி சென்று வருவாய் எனக் கூறுவோம். எனினும் அதற்கான வாய்ப்பு வரவில்லை. பொறியியல் கல்லூரி செல்லும் பொழுதுதான் பேருந்தில்சென்றான். ஆனால், இந்தப் பருவத்தில் இந்த எண்ணமெல்லாம் இல்லை.

  குழந்தையிலிருந்தே எதற்கும் அடம் பிடித்து அழுததில்லை. ‘முன் ஏர் சென்ற வழி பின் ஏர் செல்வதுதானே நடைமுறை. அடம் பிடிக்காத சொன்னதைக் கேட்கும் பிள்ளையாக அக்காவைப்போல் வளர்ந்துள்ளான். இப்பொழுதுகூட என்ன வேண்டுமென்று கேட்டாலும் தேவைக்கு மீறிய எதையும் கேட்க மாட்டான். என்ன வேண்டும் என்பதில் மட்டுமல்ல, சட்டையின் நிறம் அல்லது தோற்றம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கேட்டாலும் உங்கள் விருப்பம் என்று சொல்லி விடுவான். அவன் அக்கா, “உனக்கெனத் தனி ஆசை இல்லையா” என்றால், “எனக்கு ஏற்றதைத்தானே வாங்கித்தருவீர்கள்? நான் ஏன் தனியாக ஆசைப்பட வேண்டும்” என்பான்.

  மதுரையில் 3   ஆம் வகுப்பு வரை பயிலும் பொழுதே கலைப்பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டான். சென்னையிலும் இது தொடர்ந்தது.

  முழவிசையும், விசை இசையும் (key board music), தன் அகவைக்குரிய நிலையில் கற்றுக்கொண்டான். எனவே, புதுதில்லித்தமிழ்சசங்கத்தில் முழவில் (மிருதங்கத்தில்) பாடலிசைத்தான். இதனை யறிந்து எங்களைவிட அவன் பள்ளி ஆசிரியர்கள்தாம் மிகவும் மகிழ்ந்தனர். இதனை எழுதித்தரச் சொல்லிப்பள்ளி ஆண்டு மலரிலும் வெளியிட்டனர். பள்ளியிலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றான்.

  இங்கு சாந்தோமில் ஆறாம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பித்தபொழுது 50இற்கும் மேற்பட்ட பரிசுச்சான்றிதழ்கள், பங்கேற்புஇதழ்கள் முதலானவற்றை இணைத்திருந்தோம். பொதுவாகத் தேர்வு வைத்துத்தான் பிறரை எடுத்தனர் எனினும் தேர்வு இல்லாமலே இவனைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர்.

  பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் மட்டுமல்லாமல் கோலப் போட்டியிலும் பங்கேற்றுப் பரிசு பெற்றுள்ளான். கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஆசிரியர்களின்அன்பிற்கு – அவர்களுள்ளும் குறிப்பாகத் தமிழாசிரியர், துணை முதல்வர் ஆகியோரின் முழு அன்பிற்கு உரியவனாக விளங்கினான். துணை முதல்வர் இப்பொழுது முதல்வராக வேறு பள்ளியில் பணியாற்றினாலும் பிறந்தநாளன்று இவனை வாழ்த்தத் தவறுவதில்லை. கல்லூரிப் பேராசிரியர்களும் வேறு கல்லூரிக்கு மாறிச் சென்றாலும், வெளிநாட்டிற்கு மாறிச் சென்றாலும் இவனுடைய தொடர்பில் மாறா உறவு கொண்டுள்ளனர். இவனது ஆசிரியர் – மாணாக்கர் உறவு போற்றும்படி உள்ளதும் இவனது பண்பிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  பத்தாம் வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துத் தமிழ்வழிப்பிரிவில் முதல் மாணாக்கனாக வந்தாலும் அங்கே 11,12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழிக்கல்வி இல்லை. எனவே, முத்தையா அரசர் பள்ளியில் சேர்ந்து படித்தான். இங்கும் சிறந்து விளங்கினான். குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் சென்னை நாளில் இவன்தான் முதல் பரிசு பெற்று வாகை சூடினான்.

  இவை எல்லாம் பொதுவாகப் பலரும் படிப்பு சார்ந்தும் சாராமலும் சிறந்துவிளங்குவது இயற்கைதான். ஆனால், இவன் அருமையைக் குறிப்பதற்கு இரு நிகழ்வுகளை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.

  நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. வெடி வகைகள் வாங்கினாலும் பெரும்பகுதியைக் கார்த்திகை, பொங்கல் நாள்களில் வெடிப்பது வழக்கம். இவன் ஆறாவது படிக்கும் பொழுது கூடுதலாகவே வெடி வாங்கி விட்டோம். முதலில் ஒரு முறை வெடி வாங்கிய பின்னர், குறைவான விலையில் புதிய வகை வெடிகள்விற்ற கடையில்வாங்க வேண்டி வந்ததால் கூடுதலாக வாங்கி விட்டோம்.

  ஆனால், அப்பொழுது எங்கள் மகள் தி.ஈழமலர் இனி், வெடிவெடிக்கப்போவதில்லை என்றது. அச்சமா என்றால், அதுவல்ல காரணம் வெடி உருவாக்கத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பங்கேற்பதால் வெடிகளை வாங்கக்கூடாது எனப் பட்டிமன்றத்தில் ஓர் அணியின் தலைவராகப் பங்கேற்றுப்பேசிப் பரிசு பெற்றதால், அதற்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது என்று சொல்லி விட்டது. இந்த முறை மட்டும் வெடித்து விடு அல்லது மத்தாப்பு வகைகளைக் கொளுத்து என்றதற்குச் “சொல்லும்படிதானே செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லியுள்ளதால் நான் பேசியதற்கு எதிராக நானே எப்படி நடந்துகொள்வேன்” என மறுத்து விட்டது. உடனே இவனும் தானும் வெடிக்க வில்லை என்றான்.

  திட்டமிடாமல் மிகுதியான பணத்தை வெடிவகைகைளில் செலவழித்து விட்டோமே என எண்ணி இம்முறை மட்டும் வெடிக்கச்சொன்னதற்கும் மறுத்துவிட்டான்.பின், அருகிலுள்ள சிறுவர், சிறுமியருக்குப்பகிர்ந்து கொடுத்து விட்டு, இம்முறை மட்டும் உடனிருந்து வெடிக்குமாறு சொன்னதைக் கேட்டுக்கொண்டான்.

  அதன் பின்னர் இதுவரை வெடி வாங்க வேண்டும் என்று சொன்னதில்லை. ஒவ்வோர் ஆண்டும் உள்ளத்திற்குள் ஆசை இருக்குமோ என எண்ணிக் கேட்டாலும் ஆசை எதுவும் இல்லை என மறுத்துவிடுவான். இப்படி உறுதிப்பாடு உள்ள மகன் நமக்கு மகிழ்ச்சிதானே தருவான்!

  தொலைக்காட்சியில் கேலிச்சித்திரப் படங்களும் மருத்துவம் தொடர்பானதொடர்களும் மட்டும் பார்க்கும் பழக்கம் இருவருக்கும் உண்டு. அக்கா தி. ஈழமலர் பத்தாம் வகுப்பு படிக்கையில் தொலைக்காட்சியைப் பார்ப்பதில்லை என்ற முடிவிற்கு வந்தது. உடன் இவன்தானும் தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை என்று சொல்லி விட்டான். இருவரும் பார்க்காத பொழுது நாம் மட்டும் எப்படிப் பார்ப்பது என நாங்களும் தொலைக்காட்சியைப் பார்க்கவில்லை. படித்துமுடித்த பின்னர் பயன்படுத்தாத தொலைக்காட்சி பயனிழந்து போயுள்ளதை உணர்ந்தோம். அதை நெடுமனைபோல் பயன்படுத்திக்கொண்டுள்ளோம். இந்நாள் வரை எங்கள் வீ்ட்டில் தொலைக்காட்சி இல்லை. அரசு தந்த கட்டணமில்லாத் தொலைக்காட்சி எங்களுக்கு மட்டும் வழங்கப்பெறவில்லை. நாங்களும் கேட்கவில்லை. பள்ளிப் பருத்திலேயே இத்தகைய மன உறுதி பெறுவோரைக்காண்பது அரிதல்லவா? எனவே, இத்தகைய செயல்பாடுகள் மகிழ்ச்சி தரத்தானே செய்யும்!

 மேனிலைப்பள்ளி (+2)இறுதித் தேர்வு முடிந்ததும் சிஎசுசி என்னும் கணிணி நிலையத்தில் பயிற்றுநராகச் சேர்ந்தான். விடுமுறையில் எதையாவது படிக்கட்டும் என்றுதான் அனுப்பி வைத்தோம். ஆனால், அந்நிறுவனம் அவனை ஆசிரியராகச்சேர்த்துக் கொண்டது.

 பின்னர், ஃபோம்ரா பொறியியல்நுட்பக்கல்லூரியில் சேர்ந்தான். கணிணியைத் தனிப்பட்ட முற‌ையில் படித்துக்கொள்ளலாம் என்று சொல்லி அக்கா வழியில் மின்-மின்னியல் பொறியியல் வகுப்பில் சேர்ந்தான். தனிப்பட்ட முறையில் நூறாயிரக்கணக்கி்ல் பணம் கட்டிக் கணிணிசார்படிப்பைப் படிப்பவர்களும் இவனிடம் கணிணி தொடர்பான ஐயங்களைக்கேட்டுத் தெளிவு பெறுவர். கல்லூரியிலும் பதாகை, வடிவமைப்பு முதலானவற்றில் இவன் பங்களிப்பே இருந்தது. கணிணித்துறைத் தலைவர் தன் துறை மாணாக்கர்களிடம் இவனைக் குறிப்பிட்டு “வேறு துறை மாணவர் கணிணியில் சிறந்திருக்க நீங்கள் யாரும் அவ்வாறில்லையே” எனப் பலமுறை வருத்தப்பட்டுள்ளார்.

   இவன் திறமையை உணர்ந்த முதல்வர் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும்இவனிடம் நம்பிக்கையுடன் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.

  அஃதாவது கல்லூரியில் உள்ள சாலை விளக்குகளையும் விடுதி, சமையலறை முதலானவற்றில் உள்ள அனைத்து விளக்குகளையும் கதிரொளி (சோலார்) முறையில்அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மூன்று நண்பர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு வெற்றிகரமாக முடித்துக்கொடுத்துள்ளான்.

  இவன்மீது ஆட்சிக்குழுவினருக்கும் நல்லெண்ணம் இருப்பதால், கல்லூரியை விட்டு வந்த பின்னரும் இவன்கேட்போருக்கு இடம்அளிக்கின்றனர்.

   படித்து முடித்ததும் இன்ஃபோசிசு நிறுவனத்தில் சேர்ந்தான்.

  சந்திப்பின் பொழுது ‘வணக்கம்’ எனத்தமிழில் சொல்வதை நண்பர்களிடம் உருவாக்கியுள்ளான்.

 மாநில விழாவாகப் பதினிரவு(தசரா) கொண்டாடுபவர்கள் ஓணம் விழாவும் கொண்டாடினர். “பொங்கல் விழாவும் கொண்டாட வேண்டும்” என்றான். “முன்பே முடிவெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு விட்டன. இனிமேல் இயலாது” என்றனர். எனவே, பயிற்சி முடிந்து சென்னை மகேந்திர நகரில் சேர்ந்த பின்னர் இங்கே பொங்கல் விழா கொண்டாடச்செய்து கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான். இதனைப் பின்பற்றிக் கேளம்பாக்கம் அலுவலகத்திலும் கொண்டாடக் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தந்துள்ளான். சித்திரைக்கலை விழாவும் நடத்தச் செய்துள்ளான். எனவே, இனி ஆண்டுதோறும் இவ்விரு இடங்களிலும் தமிழ் விழாக்கள் இனித் தட்டுத்தடங்கலின்றி நடக்கும்.

   பணியாளர்களிடையே வேட்டி நாள் கொண்டாடச் செய்தான்.

 ஒவ்வொரு நாளும் பிறந்தநாள்காணும் பணித்தோழர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பதைக் கடமையாகக்கொண்டுள்ளான்.

  நண்பர்களின் ஒவ்வொரு திருமணத்தின் பொழுதும் வாழ்த்துத் தளம் ஒன்றை உருவாக்கி அன்பளிப்பாக அளித்து வருகின்றான்.

  நண்பர்களை இணைத்துக் கொண்டு மாதம்தோறும் ஆதரவற்றோர் இல்லம் முதியோர் இல்லம், ஏப்பு(எயிட்சு)நோயர் இல்லம் முதலான இல்லங்களுக்குச் சென்று ஏறத்தாழ உரூபாய் ஐயாயிரம் மதிப்பில் அங்குள்ளவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் தருவதையும் மனம்உவந்துசெய்து வருகின்றான்

  பள்ளிப் பருவத்திலிருந்தே நான் நடத்தும் விழாக்களுக்குப் பதாகைகள் முதலானவற்றை உருவாக்கித் தருவதுடன் விழா நாளன்று உடனிருந்து எல்லா உதவிகளும் செய்து வருகின்றான்.

   பிறருக்கும் உதவும் தொண்டள்ளமும் கட்டுப்பாட்டு உணர்வும் தமிழ்உணர்வும் யாரும்ஊட்டி இவனுக்கு வரவில்லை. இயல்பாகவே அமைந்துள்ளது.

   உறவு வட்டத்திலும் நட்பு வட்டத்திலும்அனைவரின் அன்பிற்கும் உரியவனாக நடந்து கொள்வது மட்டில்லா மகிழ்ச்சியைத் தருவதில் வியப்பில்லை அல்லவா? இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

 எளிமையும் தோழமையும் தொண்டுணர்வும் கொள்கைப்பிடிப்பும் ஆர்வ முயற்சியும் இவனைச்சிறக்கச் செய்வதைப் பிறந்த நாளில் எண்ணி மகிழ்கிறோம்.

  எண்ணிய எய்தி, வாழ்வில் உயர்ந்து, புகழில் சிறந்து,   நோயற்ற செல்வமும் தமிழ்ச்செல்வமும் பெற்று எங்கள் மகன் பொறி. தி.ஈழக்கதிர் மேலும் நூறாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. (திருவள்ளுவர், திருக்குறள் 61)

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (திருவள்ளுவர், திருக்குறள  68)

அப்பா இலக்குவனார் திருவள்ளுவன்,

அம்மா அன்புச்செல்வி

 தமிழே விழி! தமிழா விழி!

எழுத்தைக் காப்போம்! மொழியைக்காப்போம்! இனத்தைக் காப்போம்!

பெரிதாகக் காணச் சொடுக்கவும்