(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராகவேலைபார்த்தது தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2


இப்படிச் சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வழக்குகளை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் வழக்கு என்று கண்டறிந்தால் நீதிமன்றத்தில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் தொகுப்புரை (Sum up) செய்ய வேண்டி வரும்போது நான் வேறொன்றும் சொல்லாமல் “இந்த வழக்கில் நீதிமன்றத்தார் காலத்தை இன்னும் எடுத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை” என்று முடித்திருக்கிறேன். இப்படி செய்ததினால் நீதிபதிகள் இதர கேசுகளில் நான் வற்புறுத்திப் பேசினால் அவற்றில் ஏதோ உண்மை இருக்கவேண்டுமென்று என்னைப் பொறுமையுடன் கேட்டிருக்கின்றனர். இதைப்பற்றி சில நீதிமன்ற வழக்குரைஞர்கள் நான் செய்தது தவறு “நிசமோ தப்போ கடைசிவரையில் மன்றாடித்தான் தீரவேண்டியது வழக்குரைஞர் கடமை” என்று என்னிடம் கூறியிருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மதிப்புமிகு நீதிபதி பாடம் முன்பாக நான் ஒருமுறை நடத்திய போது பிரதிவாதிக்காக வக்காலத்து வாங்கிக்கொண்ட நான் வாதியையும், வாதி சாட்சிகளையும் இரண்டு நாள் குறுக்கு கேள்விகள் (Cross Examination) கேட்டேன். அது முடிந்தவுடன் பிரதிவாதிக்காக சாட்சிகள் ஒருவரையும் நான் கூப்பிடவில்லை. அன்றியும் தொகுப்புரை (Sum up) செய்ய வேண்டி வந்த போது “வாதியின் சாட்சிகளை குறுக்குவிசாரணை (Cross) பண்ணவேண்டியதை என் கடமைப்படி செய்தேன். தொகுப்புரை செய்யவேண்டியது என் இச்சையில் இருக்கிறது. அதை செய்து நீதிமன்றத்தார் அவர்களுடைய காலத்தை வழக்கில் வீணாகப் போக்குவதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று கூறி உட்கார்ந்தேன். பாடம் துரை நான் செய்தது சரியானது என்று ஒப்புக்கொண்டு ஏதோ புகழ்ந்தனர். கட்சிக்காரர்கள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டு இந்த வழக்கை வெல்வது கடினம் என்று எனக்குத் தோன்றினால் கட்சிக்காரர்களிடம் உண்மையைக் கூறி “ஏன் எனக்குக் கட்டணம் கொடுக்கிறீர்கள் ? இந்த பணத்தை ஏதாவது தருமம் செய்யுங்கள்” என்று சொல்லியனுப்பி இருக்கிறேன் பல தடவைகளில்.

இப்படிச் செய்ததால் கட்சிக்காரர்களுடைய நட்பைப்பெற்று எனக்குச் சிறுவழக்கு நீதிமன்றத்தில் முக்கியமாக அதிக வழக்குகள் வந்தன. இதுதான் பிறகு மேல் அதிகாரிகள் என்னைச் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததற்கு அடித்தளமாக இருந்ததென நம்புகிறேன்.

குறுக்குக் கேள்விகள் கேட்பதில் கொஞ்சம் வல்லவன் என்ற பெயர் பெற்றபடியால் எனக்குச் சென்னையிலும், வெளியிலும் குற்ற வழக்குகள் கிடைத்தன. இந்த அனுபவம் பிறகு சிலகாலம் முதன்மை மாநக நடுவராக நியமிக்கப்பட்டபோது எனக்கு உபயோகமாயிருந்தது.

நான் முக்கியமாக வழக்கு நடத்திய சில நீதிபதிகளைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன். நான் வழக்குரைஞராக வேலை செய்ய ஆரம்பித்தபோது சிறுவழக்கு நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்தவர் டி. (இ)ரொசொரியோ (D. Rozorio) என்பவர். அவர் மிகுந்த பொறுமையான சுபாவமுடையவர். அவர் தினம் சரியாகப் பதினோரு மணிக்கு நிமிடம் தவறாமல் நீதிமன்றத்துக்கு வந்து உட்காருவார். அன்றியும் வழக்குகளைச் சீக்கிரம் தீர்மானிப்பார். இந்த இரண்டு குணங்களையும் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பிறகு அதே நீதிமன்றத்தில் அதே நாற்காலியில் சிறுவழக்கு நீதிபதியாக நான் சில வருசம் நடவடிக்கை நடத்திய போது இவ்விரண்டும் எனக்கு மிகவும் பயனளித்தன. ஆனால் அவருடைய பொறுமையை நான் கற்றுக் கொள்ளவில்லை!

சிறுவழக்கு நீதிமன்றத்தில் என்காலத்தில் மற்றொரு நீதிபதியாக இருந்தவர் மண்டயம் பார்த்தசாரதி ஐயங்கார். அவரிடம் நான் கற்றது வழக்கில் முடிவில் தொகுப்புரை (Sum.up) செய்யும்போது முக்கியமான அம்சங்களை எவ்வளவு சுருக்கமாய்ச் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது. இவருடன் பல்லினப் பொதுமன்றத்தில்(Cosmopolitan Club) சனிக்கிழமைகளில் சீட்டாடுவேன். அச்சமயம் நீதிமன்றத்தில் நடக்கும் பல வேடிக்கைகளைப்பற்றிய கதைகளை மேசையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கெல்லாம் சொல்லி சிரிப்புண்டாக்குவார். அவற்றுள் ஒன்றை இங்கு எழுதுகிறேன். ஒருநாள் “சம்பந்தம், நான் நீதிமன்றத்திற்கு வரும்போது மிகவும் தலைகுனிந்தபடி வருகிறேனே அதற்குக் காரணம் தெரியுமா?” என்று கேட்டார். “வணக்கமாய் வருவது நல்லது என்று நீங்கள் அப்படிச் செய்கிறீர்கள்” என்று பதில் சொன்னேன். அதற்கவர் “அது. ஒருபுறமிருக்கட்டும். நான் முதல் முதல் நீதிமன்றத்தில் என் ஆசனத்தில் உட்கார வரும்போது தலை நிமிர்ந்து கொண்டு வந்தேன். அப்போது கயிற்றிழுப்பு விசிறி(பங்கா) நீதிமன்றத்துக்குப் பின்புறமிருக்கும். வேலையாள் வேகமாய் விசிறியை இழுத்துவிட்டான். உடனே என் தலை குட்டை விசிறியால் தாக்கப்பட்டு எகிறிப் போய் விழுந்தது. அது முதல் நான் வரும்போதெல்லாம் மிகவும் தலை குனிந்து கொண்டுவர ஆரம்பித்தேன்” என்று பதில் சொன்னார். இது நடந்தபோது நீதிமன்றத்தில் இப்போதிருப்பது போல் மின்சார பங்கா (electric fan) கிடையாது.

இதன்பிறகு இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் சர் வி. சி. தேசிகாச்சாரியார். சாதாரணமாக இவர் நீதிமன்றத்தில் எனக்கு அதிக வழக்குகள் கிடைக்கும். இதற்குக் காரணம் நான் அவரது நன்மதிப்பைப் பெற்றதே என்று நினைக்கிறேன். இவர் ஒரு சிநேகிதரிடம் ஆங்கிலத்தில் சொன்னதாக அந்த சிநேகிதர் எனக்குத் தெரிவித்ததைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். “தங்கள் கட்சிக்காரர்களின் ஊழல்களை மறைத்து நீதிமன்றத்தார் கண்ணில் மண்ணைப் போட்டு வழக்குகளை வெல்ல விரும்பாத வழக்குரைஞர்கள் இரண்டு பெயர்கள்தான். ஒருவர் பி. எம். சிவஞான முதலியார், மற்றொருவர் சம்பந்த முதலியார்” என்றனராம்.

உரிமையியல் வழக்குகளில் கட்டணம் (Fees) தொடர்பில் நீதிமன்றத்தார் சட்டப்படி, ஒவ்வொரு வழக்கிற்கும் என்ன கட்டணம் உண்டோ அதற்குக் குறைவாக வாங்குவதில்லை என்று தீர்மானித்து அதன்படியே நடந்துவந்தேன்.

எனது ஆருயிர் நண்பரான சி. இரங்கவடிவேலு முதலியார் தானும் பி. எல். பரிட்சையில் தேறினவுடன் அவரை எனது இளையராக (Junior) வைத்துக்கொண்டு நீதிமன்ற வேலையைப் பார்த்துவந்தேன். அவர் 1923-ஆம் வருசம் எனது துரதிர்ட்டத்தால் காலவியோகமாக வழக்குரைஞர் வேலையில் முன்பே குறைந்திருந்த ஆர்வம் மிகவும் குன்றியது. ஆகவே சீமான் சர் சி. பி. இராமசாமி ஐயர் அவர்கள் 1924-ஆம் ஆண்டு என்னை அழைத்து சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதி வேலையை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன், இதனுடன் என் நடுப்பருவ அனுபவங்களை முடித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை