(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என்சுயசரிதை’ 13 : வழக்குரைஞராகவேலைபார்த்தது 2/2 – தொடர்ச்சி)

என் சுயசரிதை

7. முதிர் பருவம்

நான் எனது 51-ஆவது வயதில் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் முதன்மை மாநில நடுவராக(C.P.M.) வேலை பார்த்தேன். மேற்கண்டபடி நீதிபதியாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன்.

நான் நீதிபதியாக முதல் நாள் உட்கார்ந்தபோது வழக்குரைஞர்களின் தரப்பாக காலஞ்சென்ற சீமான் சேசாச்சாரியார் அவர்கள் என்னை வரவேற்றுச் சில வார்த்தைகள் பேசியபோது அதற்கு நான் பதில் சொன்னபோது “நான் நீதிபதி வேலை நடத்துங்கால் மனிதர் எவருக்கும் பயப்படாது தெய்வம் ஒன்றிற்கே பயந்து நடப்பேன்” என்று உரைத்தது ஞாபகமிருக்கிறது. அதன்படி தினம் நான் நிதிமன்றத்திற்குப் போய் என் நாற்காலியில் உட்காரு முன் நியாயப்படி விசாரித்துத் தீர்மானம் கொடுக்க எனக்குப் புத்தியையும் மன உறுதியையும் கொடுக்கும்படியாக ஈசனைத் தொழுத பிறகே உட்காருவேன். சாதாரணமாக 25 வருடங்களுக்கு மேல் சிறுவழக்கு நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வியவகாரங்கள் நடத்திய படியால் இந் நீதிமன்றத்தில் நீதிபதி வேலை பார்ப்பது எனக்குச் சுலபமாக இருந்தது.

சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகளைப் பற்றிச் சில விசயங்கள் எழுத விரும்புகிறேன். என் தமையனார் 1894-ஆம் வருசம் வக்கீலாக வழக்கு நடத்திய போது இந்தச் சின்ன நீதிமன்றத்தில் மாத்திரம் 32 ஆயிரம் வழக்குகளுக்குக் குறையாமலிருந்தன! அது குறைந்து கொண்டே வந்து. நான் 1898-ஆம் வருசம் வழக்குரைஞரானபோது ஏறத்தாழ 25 ஆயிரம் வழக்குகள் வருடத்திற்குத் தீர்மானிக்கப்பட்டன. நான் நீதிபதியான போது ஏறத்தாழ 20 ஆயிரம் வழக்குகள் இருந்தன. வருடம் ஒன்றிற்குத், தற்காலம் 5 அல்லது 6 ஆயிரம் வழக்குகளுக்கு மேல் இல்லை.

நீதிபதியான ஒரு வாரத்திற்கெல்லாம் வழக்குகளை, சீக்கிரம் முடிக்கும் வழியைக் கற்றுக் கொண்டேன். இதற்கு இரண்டு மூன்று குணங்கள் அநுகுணமாய் இருந்தன. அதாவது அக் காலத்தில் சாதாரணமாக மாறுபாடிகள் வழக்குகள் தான் அதிக மாயிருந்தன. வழக்குரைஞராயிருந்த போது ஏறக்குறைய எல்லா மாறுபாடிகளும் என்னிடம் தங்கள் வழக்குகளை ஒப்புவிப்பார்கள். இதனால் அவர்கள் கணக்கு ஊழல்களெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆகவே அவர்களுடைய வழக்குகள் நான் நீதிபதியாக இருக்கும் போது என் முன் வந்தால் அவர்கள் கணக்குகளின் மருமங்களையெல்லாம் அறிந்திருந்தபடியால், அவர்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றுவது அசாத்தியமாயிருந்தது. இதைக் கண்ட மாறுபாடிகள் தங்கள் வழக்குகள் என் நீதிமன்றத்திற்கு முன்பு வராதபடி செய்ய முயன்றனர். இதையறிந்த அக்கால முதன்மை நீதிபதியாக இருந்த திவான் பகதூர் சி.ஆர். திருவேங்கடாச்சாரியார் இதைத் தடுத்து வந்தனர். மாறுபாடிகள் என் நீதிமன்றத்திற்கு முன்பாக வருவதற்கே அஞ்சுவார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் என்னை எப்போதாவது சந்தித்தால் “என்னாங்க சாமி, வக்கீலாக எங்ககிட்டே கட்டணம் (Fees) வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இப்போ எங்க வாயிலே மண்ணை போடுகிறீர்களே” என்று கேட்பார்கள். இரண்டாவது, வழக்குரைஞர்கள் தங்கள் – வழக்குகளைத் தள்ளி வைக்க வேண்டுமென்று அடிக்கடி கேட்காம லிருக்க ஓர் உத்தி செய்தேன். வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்று கேட்கும் வழக்குரைஞர்களை யெல்லாம் மறு வழக்குநாட்கள்(வாய்தாக்கள்) எதிர்ப்பட்சத்திற்கு தினம் படி (Day fees) கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடுவேன். இதனால் இரண்டு நன்மைகள் உண்டாயின. ஒன்று கட்டாயமாக ஒத்திவைப்பு வேண்டியவர்கள் தான் இதற்கு உடன்பட்டு கேட்பார்கள், இரண்டாவது இதனால் வழக்குரைஞர்களுக்கு மாத வரும் படி அதிகமாகியது. நான் நீதிமன்றத்தை விட்டு விலகியபின் எனது சிநேகிதர்களான பல வழக்குரைஞர்கள் என்னைச் சந்திக்கும் போது “உங்களுடன் எங்களுக்கு நாட்செலவு வரும்படி அற்றுப் போச்சுது” என்று முறையிட்டிருக்கின்றனர்.

மேற்கண்ட மார்க்கங்களின் மூலமாக வழக்குகளைத் துரிதமாகத் தீர்மானிக்கும் வழிகண்டபின் தினம் என் நீதிமன்ற வழக்குகளை முடித்துவிட்டு முதல் நீதிமன்றத்திலிருந்து வழக்குகளை அனுப்பும்படி தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் அனுப்புவேன். ஒரு சமயம் முதல் நீதிபதியும் மூன்றாவது நீதிபதியும் ஏதோ அவசர நிமித்தமாய் நீதிமன்றத்திற்கு வராமவிருந்தபோது மூன்று நீதிமன்ற வழக்குகளையும் நான் கவனித்தது ஞாபகமிருக்கிறது

சாதாரணமாக 4 மணிக்குள் நீதிமன்ற வேலையை முடித்துக் கொண்டு சபைக்குப் போய் விடுவேன். சாயங்காலம் ஐந்து மணியானவுடன் எந்த வழக்கானாலும் நடத்தாது ஒத்திவைத்து விடுவேன். ஐந்து மணிக்குமேல் நீதிமன்றம் நடப்பது தவறு என்பது என் அபிப்பிராயம். நான் வழக்குரைஞராக இருந்தபோது ஐந்து மணிக்கு மேல் வழக்குகளை நடத்துவதை ஆட்சேபித்திருக்கிறேன். 1926-ஆம் வருசம் நான் நீதிபதியாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். முன்னாள் இரவு மரித்த என் மனைவியின் தேகத்தை இடுகாட்டிற்குக் கொண்டு போய் சம்சுகாரம் செய்தவுடன் வீட்டிற்கு வந்து குளித்துவிட்டுப் பூசையை வழக்கம் போல் முடித்துவிட்டு உணவு கொண்டு நீதிமன்றத்திற்கு வழக்கம் போல் போனேன். அப்பொழுது. சுமார் 11 மணியிருக்கும். இதற்குள் எனக்கு துக்ககரமான சம்பவத்தைக் கேள்விப்பட்டு முதல் நீதிபதியாக இருந்த சிரீமான் திருவேங்கடாச்சாரியார் நான் அன்று நீதிமன்றத்திற்கு வரமாட்டேனென்று என் நீதிமன்ற வழக்குகளை யெல்லாம் ஒத்திவைப்பதற்காகத் தன் நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டார். நான் நீதிமன்றத்திற்கு வந்ததாகக் கேள்விப்பட்டவுடனே என் அறைக்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு “திரு. சம்பந்தம் இன்றைக்கு ஏன் நீதிமன்றத்திற்கு வந்தாய்” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டார். அதற்கு நான் “என்னை மன்னிக்க வேண்டும். என் மனைவி நோயாயிருந்தபோது என்னால் இயன்ற அளவு சிகிச்சை செய்து பார்த்தேன். இறந்த பின் துக்கப்பட்டு என்ன பயன். என் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னுடைய துக்கம் என்னுடனிருக்க வேண்டும். என்னால் மற்றவர்களுக்குக் கட்டம் கொடுப்பதில் என்ன பலன்? இன்றைக்கு என் நீதிமன்றத்தில் வாதிப் பிரதிவாதிகளும் சாட்சிகளும் சேர்த்து சுமார் 100 பெயர்களிருக்கலாம். இத்தனை பெயர்களும் மற்றொரு நாள் வரும்படியான கட்டத்திற்கு நான் அவர்களை உள்ளாக்கக் கூடாதென்று தீர்மானித்து வந்தேன் இங்கு; அன்றியும் நீதிமன்றத்திற்க வந்து வேலை பார்த்தால் என் துக்கத்தைக் கொஞ்சம்மறந்திருப்பேன்” என்று சொல்லி அவரை என் நீதிமன்ற வழக்குகளையெல்லாம் என் நீதிமன்றத்திற்கே அனுப்பிவிடும்படி கேட்டுக்கொண்டேன். இச் சந்தர்ப்பங்களில் நான் தலைமைநீதிபதியாகச் சிலகாலம் பொறுப்பு வகித்தபோது நடந்த ஒரு வியவகாரத்தை இங்கு எழுதுகிறேன். ஒரு நாள் ஐந்தடித்தவுடன் கீழே சிறுவழக்கு நீதிமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்து ஐந்து மணிக்குமேல் வேலை செய்து கொண்டிருந்த குமாசுக்களையெல்லாம் அழைத்து “அரசார் உங்களுக்கெல்லாம் ஐந்து மணி வரையில் வேலை செய்யச் சம்பளம் கொடுக்கிறார்களே யொழிய வேறில்லை. ஆகவே நீங்கள் ஐந்தடித்தவுடன் கட்டுக்களைக் கட்டிவிட்டு வீட்டிற்குப் போங்கள். மறு நாள் சரியாக பத்தரை மணிக்கு வந்து விடுங்கள்” என்று சொல்லி எல்லாரையும் வீட்டிற்கனுப்பினேன்.

சின்ன நீதிமன்றப் பிணையாட்கள் (Bailiff) சாதாரணமாக இலஞ்சம் வாங்குகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே இதைத் தடுக்க ஒரு சிறிது நான் முயன்றேன் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை ஒரு வழக்குரைஞர் ஒரு பிணையாளர் இலஞ்சம் வாங்கிக்கொண்டு பிரதிவாதியைப் பிடிக்காமலிருக்கிறான் என்று என்னிடம் வந்து முறையிட்டார். நான் மத்தியான போசனத்திற்காக 2 மணிக்கு என் அறைக்குப் போனவுடன் அந்தப் பிணையாளை அழைத்து அந்தப் பிரதிவாதியை சாயங்காலத்திற்குள் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று கண்டிப்பாய்க் கூறினேன். இதன் பலனாக நான் 3 மணிக்கு நீதிமன்றத்திற்குப் போகுமுன் அந்தக் கட்சிக்காரனைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டான். இம்மாதிரியாக நான் கொஞ்சம் கண்டிப்பாயிருந்ததினால் என் காலத்தில் பிணையாளிகள் லஞ்சம் வாங்குவதே நின்றுவிட்டது என்று நான் சொல்லவில்லை. ஆயினும் மேல் அதிகாரிகள் கவனித்தால் இவ்வழக்கம் மிகவும் குறையும் என்பது என் அபிப்பிராயம்.

இவ்வாறு நான் கண்டிப்பாய் இருந்தபடியால் வழக்குரைஞர்கள் பெரும்பாலர்களுடைய அன்பினைப் பெற்றேன் என்று நினைக்கிறேன். நான் எனது 55-ஆவது வயதில் இவ்வேலையினின்றும் விலகியபோது அவர்கள் எனக்கு ஒரு தேநீர் விருந்து கொடுத்தனர். அன்றியும் நீதிமன்றச் சிப்பந்திகளும் தனியாக வேறொரு தேநீர் விருந்து கொடுத்தனர்.

இதற்கிடையில் சில மாதங்கள் சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட்டாக வேலை பார்க்கும்படி நேரிட்டது. அக்காலமெல்லாம் நீதிமன்ற வேலையெல்லாம் மத்தியானத்திற்குள் முடித்துக்கொண்டு என் நீதிமன்ற வீடுபோய் சேர்வேன், ஒரு நாளாவது சாயங்காலத்தில் நீதிமன்ற வேலை பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. அதுசமயம் இப்போதிருப்பதுபோல், அத்தனை மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் கிடையா. தற்காலம் இந்த மதிப்புநிலை நடுவர் மன்றங்கள் பல ஏற்படுத்தப்பட்டும் ஐந்து உதவித்தொகை (Stipendiary) நீதிமன்றங்களுக்கு என்ன வேலையிருக்கிறதென ஆச்சரியப்படுகிறேன்.

சுமார் 4 வருசங்கள் நான் நீதிபதியாயிருந்தபோது ஒரே ஒரு வழக்கில்தான் என் தீர்மானம் உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது என்று எழுத விரும்புகிறேன்.

மேற்கண்டபடி உரிமை வழக்கு நீதிமன்றத்திலும் குற்ற வழக்கு நீதிமன்றத்திலும் நான் நியாயாதிபதியாக இருந்திருக்கிறேன். இவ்விரண்டில் உரிமை மன்ற நீதிபதியாக யிருந்ததுதான் என் மனதிற்குப் பிடித்தது. ஏனென்றால் சிறுவழக்கு நீதிமன்ற வழக்குகுளில் என்னையுமறியாதபடித் தவறாகத் தீர்மானித்தாலும் வழக்கி் தோற்றக் கட்சிக்காரனுக்கு சொல்ப நட்டத்துடன் போகிறது. நடுவராக நான் தவறாக ஒருவனைத் தண்டித்தால் அவனுடைய வாழ்க்கையே அழிந்தாலும் அழியுமல்லவா?

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை