(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தா வேலை – தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’

அத்தியாயம் 10. நான் எந்தக் கட்சியையும் சேராதது

சென்னையில் பல கட்சிகள் உண்டு என்பது எல்லாரும் அறிந்த விசயமே. முக்கியமாக காங்கிரசுக் கட்சி, நீதிக் கட்சி என்று இரண்டு பெரிய கட்சிகளைப் பற்றி அறியாதோர். கிடையாதல்லவா? இவைபற்றிய என் விருத்தாந்தங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.. நான் கல்லூியில் படித்தபோது காங்கிரசுக் கூட்டம் சென்னையில் கூடிய போது ஒரு தொண்டராக இருந்தேன். இது நேர்ந்தது 1894-ஆம் வருசம். அதற்குமுன் சென்னையில் காங்கிரசு கூடிய போது அதன் வேடிக்கையைப் பார்க்க என் தகப்பனார் என்னை அழைத்துக்கொண்டுபோனது ஞாபகமிருக்கிறது. 1894–ஆம் ஆண்டிற்குப்பின் ஒருமுறை சென்னையில் காங்கிரசு மகாசபை கூடியபோது நான் ஒரு வரவேற்பு அங்கத்தினனாக இருந்தேன். இவ்வளவதான் இதில் நான் சம்பந்தப்பட்டது.

இனி நீதிக் கட்சியைப்பற்றி எழுதுகிறேன். காலஞ் சென்ற சர். பிட்டி தியாகராச செட்டியார் இக்கட்சியை ஆரம்பிக்கு முன், எங்கள் குடும்பத்து சம்பந்தியாகிய திவான்பகதூர் ப. இராசரத்தின முதலியார் ஒருநாள் சாயங்காலம் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் அவர் வீட்டிற்குப் போனபோது அவரும் காலஞ்சென்ற எல். டி. சுவாமிக்கண்ணு அவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காங்கிரசுக்கட்சி பிராம்மணர்களுடைய அபிவிருத்தியையே கவனித்து வருகிறது. நாம் எல்லாரும் பிராம்மணர்கள் அல்லாதாரை உயர்த்தும் பொருட்டு ஒரு கட்சியை ஏற்படுத்தவேண்டும். அதில் நீ ஒரு முக்கிய பங்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் “இவ்விசயங்களிலெல்லாம் நான் தலையிட்டுக் கொள்ள எனக்கு இட்டமில்லை. என் வக்கீல் வேலையும் சுகுணவிலாச சபையுடைய வேலையுமே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. மற்ற விசயங்களில் புகுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அவகாசமுமில்லை” என்று மறுத்தேன். பிறகு நீதிக் கட்சியை பிட்டி தியாகராச செட்டியார் தாபித்த போது அதில் சேரும்படியாக என்னைப் பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் அக்கட்சியில் முக்கியத்தராயிருந்த பானகல் இராசாவும் அதில் சேரும்படிக் கேட்டனர். இந்த பானகல் இராசா அவர்கள் என்னுடன் 4 வருடம் மாகாணக் கல்லூரியில் படித்த என் அத்தியந்த சிநேகிதர் என்று நான் முன்பே கூறியுள்ளேன். இவர்களிருவருக்கும் நான் அக்கட்சியைச் சேராததற்கு கூறிய நியாயத்தை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன், “நம்முடைய தேசம் முன்னேறவேண்டுமென்றால் இக்கட்சிகளெல்லாம் ஒழிந்து ஐக்கியப்பட்டாலொழிய, இக்கட்சிகள் எல்லாம் இருக்கும் வரையில் நம்முடைய நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். ஆகவே நான் எந்தக் கட்சியிலும் சேரப் பிரியப்படவில்லை. அன்றியும் என் வாழ்நாட்களைத் தமிழ்க் கலையை அதிலும் நாடகக் கலையை அபிவிருத்தி செய்வதில் கழிக்கவேண்டுமென்பதே என் பேராசையாயிருக்கிறது. ஆகவே அரசாங்க விசயங்களிலும் கட்சி பேதங்களிலும் கைவிட்டுக்கொள்வேனாயின் என்னால் தமிழ்க் கலைக்குச் சரியாகத் தொண்டு செய்ய முடியாது” என்பதேயாம். இக்காரணம் பற்றியே நகராட்சி உறுப்பினராகவாவது இருங்கள். அதற்காக நீங்கள் ஒன்றும் கடினப்பட வேண்டியதில்லை. நாங்கள் எல்லாம் முயற்சிசெய்து உங்களை நகரசபை உறுப்பினராகச் செய்விக்கிறோம் என்று என்னைப் பல நண்பர்கள் கேட்டும் அதற்கு நான் இணங்கவில்லை. இதை ஏதோ பெருமையாக இங்கு எழுதியவனன்று. தமிழ் ஆசிரியனாகப் பெயர் எடுக்க வேண்டுமென்று ஒருவன் முற்படுவானாயின் அவன் வேறு விசயங்களில் தலை நுழைத்துக்கொள்ளாது, தமிழ்க்கலைக்கே உழைத்தாலொழிய அவன் எண்ணம் நிறைவேறாது என்பது என் உறுதியான அபிப்பிராயம்.

பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார்கள் எனும் இரண்டு கட்சி பேதங்களைப்பற்றி என் அபிப்ராயம் என்ன வென்றால் ஒரு கட்சி உயர்ந்தும் ஒரு கட்சி தாழ்ந்தும் இருந்தால் இந்த பேதத்தை நிவர்த்திப்பதற்கு இரண்டு மார்க்கங்கள் உள. ஒன்று உயர்ந்த கட்சியைத் தாழ்ந்த கட்சியார் தங்கள் நிலைக்கு இழுத்துக்கொள்ளல். இரண்டாவது மார்க்கம் தாழ்ந்த கட்சிக்காரர்கள் தங்களை உயர்த்திக்கொள்வது. இதில் சரியான மார்க்கம் என்னவென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். இந்த கட்சிப் பேதங்களெல்லாம் நீங்கி நமது தேசம் ஐக்கியப்படுவதற்குத் தற்காலம் உள்ள சாதி பேதங்களெல்லாம் அறவே ஒழிய வேண்டும்! முதலியார், நாயுடு, பிள்ளை என்கிற பிரிவுகளும் நீங்கவேண்டும். தீண்டாமை என்பது இருந்த இடம் தெரியாதபடி மறையவேண்டும். அப்பொழுதுதான் நமது நாடு தலையெடுக்கும் என்று என் மனத்தில் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இக்கொள்கை பற்றியே நான் என் பெயரின் பின்பாக ‘முதலியார்’ என்று எப்பொழுதும் கையெழுத்துப் போடுவதில்லை.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை