(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 2. தொடர்ச்சி)

என் சுயசரிதை’   3. ஏழைக் குடும்பம் தொடர்ச்சி

அவர் சென்னைக்கு வந்த பிறகு பெரிய காஞ்சிபுரம் சிரீ ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்து நாய்க்கன் பேட்டையிலிருக்கும் சிரீ ஏகாம்பரேசுவரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீசுவரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தருமகர்த்துவாக இருந்தார்.

அவர் சீவித காலத்தில் வருடா வருடம் காஞ்சிபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த வழக்கத்தினால் சிவாலயங்களையும் அவற்றின் சில்பங்களையும் பார்க்கவேண்டுமென்னும் ஆசை எனக்கு சிறுவயதிலேயே உண்டாயிற்று என்பதைக் குறிப்பதற்கேயாம் (இதைப்பற்றி பிறகு நான் எழுதவேண்டி வரும்)

என் தந்தையார் மிகவும் கண்டிப்பான மனுசர் என்று நான் கூறவேண்டும். இக்குணம் அவருக்கு வந்தது அவர் பள்ளிக்கூடத்துப் பரீட்சகராக (Inspector of schools) பல வருடங்கள் வேலை பார்த்ததினாலோ அவரது தாய் தந்தையர்களின் போதனையினாலோ நான் சொல்வதற்கில்லை. இக்குணத்தை ஆங்கிலத்தில் Discipline என்று சொல்வார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதானால் எல்லா விசயங்களிலும் கண்டிதமாயிருக்கும் சுபாவம் என்று தான் சொல்லக்கூடும். இதற்கு ஓர் உதாரணமாக அவர் தாயார் (அதாவது என் பாட்டியார்) அவரது சகோதரரையும் அவரையும் கண்டித்ததை எனக்கு அவர் கூறியிருக்கிறார். ஒரு முறை இவர்களிருவரும் சிறுவர்களாய் இருந்தபோது ‘ஏதோ’ குழந்தைகள் சண்டையில் எதிர் வீட்டுச் சிறுவன் ஒருவனை இவர்கள் அடித்துவிட்டார்களாம். இதைக் கேள்விப்பட்ட என் பாட்டியார் இவர்களிருவரையும் இழுத்துக்கொண்டு போய் ‘எதிர்வீட்டு அடிபட்ட பையனுடைய தாயாரிடம் விட்டு அதற்காக ‘இவர்களிருவரையும் நீங்களே தக்கபடி தண்டியுங்கள்’ என்று விட்டார்களாம்.

என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரைப்பற்றி. எனக்கு ஒன்றும் நேராக தெரியாது. அவர் நான் பிறக்குமுன் காலமாகிவிட்டார். என் பாட்டியைப்பற்றி எனக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் 1890-ஆம் வருடம் ஏறத்தாழ 86 வயதில் காலமானார்கள். அவர்களை நாங்கள் ஒருவரும் ஆயா என்று அழைக்கலாகாது என்று எங்களுக்கு ஆக்கினை! ஆயா என்னும் சொல் பரங்கிக்காரர்களால் தங்கள் வேலைக்காரிகளை கூப்பிடும் பதம், ஆதலால் அவர்களை “நாயினா-அம்மா” (தகப்பனாருக்குத் தாயார்) என்று சொல்லவேண்டும் என்று எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள்.

இனி என் தாயாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர்கள் சிவப்பாயிருப்பார்கள், தமிழ் கொஞ்சம் படிக்கத் தெரியும், அவர்கள் எப்பொழுதும் மத சம்பந்தமான புத்தகங்களைத்தான் படிப்பார்கள், அல்லது மற்றவர்களை படிக்கச்சொல்லி கேட்பார்கள். தினம் காலையில் துளசி பூசையும் மாலையில் விக்னேசுவரர் முதலிய தெய்வங்கள் பூசையும் செய்யாமல் போசனம் கொள்ளமாட்டார்கள். வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் இவ்விரண்டு பூசையையும் விசேடமாகச் செய்வார்கள், அத்தினங்களில் பூசை முடிந்தவுடன் எங்களுக்கெல்லாம் பூசை செய்த புட்பங்களைக் கொடுப்பார்கள். நாங்கள் அவர்கள் பாதத்தைச் சேவித்து புட்பங்களை வாங்கிக்கொள்வோம். அவர்கள் தான் எனக்கு, எனது ஒன்பதாவது வயதிலோ பத்தாவது வயதிலோ, பூசை செய்யக் கற்பித்தார்கள். அவர்கள் எனக்கு கற்பித்தமுறையில் தினந்தோறும் காலை மாலைகளில் சாதாரண பூசையும் வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசையும் அக்காலம் முதல் இக்காலம் வரை செய்து வருகிறேன், காலை மாலை பூசை முடிந்தவுடன் என் மாதா பிதாக்களையே என் தெய்வங்களாகக்கொண்டு அவர்களுடைய படங்களுக்குப் பூசைசெய்து வருகிறேன்.

என் தாயார் (அவர்கள் பெயர் மாணிக்கவேலு அம்மாள்) மிகவும் இளகிய மனதுடையவர்கள், 1875 ஆம் வருடம் தன் மூத்த குமாரி வாந்தி பேதியினால் இறந்தது முதல் நீர் வியாதியால் பிடிக்கப்பட்டார்கள். பிறகு 1885 ஆம் வருடம் என் மற்றொரு தமக்கையாகிய பருவதம்மாள் இறந்த போது உலகை வெறுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அது முதல் தினம் ‘கைவல்ய நவநீதம்’ முதலிய வேதாந்த புத்தகங்களைப் படிக்கச் சொல்லி, கேட்டுக் கொண்டிருப்பார்கள், கடைசிக் காலத்தில் அவர்கள் வைராக்கிய மனதுடையவர்களானார்கள் என்றே சொல்ல வேண்டும். அதைப் பற்றிய சிறுகதை ஒன்றை எழுதுகிறேன்.

1891 ஆம் வருட ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் நாங்கள் எழுந்திருந்த போது எங்கள் வீட்டில் எங்கள் தாய் தந்தையர்களில்லாதிருப்பதைக் கண்டு என்னவென்று வேலைக்காரர்களை விசாரிக்க அவர்கள் எங்கள் தந்தை தாயார் இருவரும் அதிகாலையில் வண்டியிலேறி சமசானத்திற்குப் போயிருப்பதாக சொன்னார்கள். இது என்ன விந்தை என்று ஆச்சரியம் கொண்டவர்களாய் அவர்களிருவரும் திரும்பி வந்தவுடன் விசாரிக்கப் பின் வருமாறு எங்கள் தந்தையார் எங்களுக்குத் தெரிவித்தார். “நேற்றிரவு உங்கள் தாயார் இனி தான் அதிக காலம் பூமியிலிருப்பதாகத் தோற்ற வில்லை. ஆகவே தன் ஆயுள் முடிந்தவுடன் தனக்குசங சமாதி வைக்க வேண்டு மென்று தெரிவித்து, அதற்குத் தக்க இடம் ஈம பூமியில் ஏற்படுத்த வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்கள். உடனே புறப்பட்டுப் போனோம். அங்கு இடம் ஒன்றைக் காட்டினார்கள்”, என்று சொன்னார். பிறது அன்றைத் தினமே நகராட்சியாருக்கு அவ்விடத்தை வாங்குவதாக ஏற்பாடு செய்து கொண்டார். இது நேர்ந்த காலத்தில் என் தாயாருக்கு உடம்பில் முக்கியமாக நீர் வியாதியைத் தவிர வேறெரு நோயுமில்லை. பிறகு அவ்வருடமே அட்டோபர் மாதம் மரணமடைந்தார்கள். மரணத்திற்குக் காரணம் வாந்தி பேதி. அதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாக வாந்தி பேதியில்தான் சாக வேண்டியிருக்கும் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்குக் காரணம் ஒன்றுமில்லை.

அவர்கள் மரணமடைந்தவுடன், அவர்கள் வேண்டுகோளின்படியே முன்பே வாங்கி வைத்திருந்த இடத்தில் சமாதியில் அவர்களது உடலை அடக்கம் செய்தோம். அங்கு ஒரு சமாதி கட்டப்பட்டது. இந்த சமாதிக்கு வருடா வருடம் அவர்கள் திதியன்று நான் பூசை செய்து வருகிறேன்.

பிறகு 1895-ஆம் வருடம் எங்கள எழும்பூர் பங்களாவில் காலமான என் தகப்பனாருக்கு தகனக்கிரியை ஆன பிறகு அவர்களுடைய அசுத்தியைச் சேமித்து இந்தச் சமாதியில் புதைத்திருக்கிறோம். இவர்கள் திதியன்றும் சமாதி பூசை செய்து வருகிறேன் இன்றளவும்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை