மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! 

மக்களும் கொல்லப்பட்டனர்!

தொடங்கியது நரேந்திர(மோடி) அரசு!

முடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு!

 

  வேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும்.

  இதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries)  என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி, கந்தக அமிலம், எரிம அமிலம்(phosphoric acid ) ஆகியன உற்பத்தி யாகின்றன.

  இத் தொழிலகத்தால் நிலத்தடி நீர், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுவதாலும் நச்சுக்காற்றுக் கசிவால் சுற்றுப்புற மக்களுக்குக் கேடு விளைவதாலும் மக்கள் இதனை எதிர்க்கின்றனர்.

  இத் தொழிலகத்தால் மண் கருமை கண்டது; நீர்  செந்நீரானது;  காற்று அனலாய் மாறியது; நிலம் மலடானது; நிலத்தடி நீர் நஞ்சானது; காற்றும் நஞ்சாய் மாறியது என்று மக்கள் நல அமைப்பினரும் எதிர்க்கின்றனர்.

அது மட்டுமல்ல!

  30.08.1997 இல் ஏற்பட்ட வெடிநேர்ச்சியால் பலர் கொல்லப்பட்டனர். மீண்டும் இவ்வாறு நேரிட்டால் இறப்போர் எண்ணிக்கை கூடலாம் என்ற அச்சம் மக்களிடையே வந்தது.

  5.7.1997 அன்று இத்தொழிலகத்தின்  நச்சுக் கசிவால் அண்மையில் உள்ள நிறுவனப் பெண் தொழிலாளர்கள் நூற்றுவருக்கு மேல் மயங்கி விழுந்தனர். அவர்களில் பலருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. 2.3.1999 இல் ஏற்பட்ட நச்சுக் கசிவால் அருகிலுள்ள வானொலி நிலையப் பணியளார்கள் பதினொருவர் மயங்கி விழுந்தனர்.

 82 முறை நச்சுக்காற்று கசிந்ததாகக் கூறித் தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் 2013இல் இத்தொழிலகம் இயங்கத் தடை விதித்தது. இத்தொழிலகத்தின் தொடக்கத்திலிருந்தே இதனை எதிர்த்து வரும் மதிமுக தலைவர் வைகோ இதற்காக அப்போதைய முதல்வர் செயலலிதாவிற்கு நன்றியும் தெரிவித்தார். இத்தடையால் அதிமுக தன்மீதிருந்த பழியையும் துடைத்துக் கொண்டது. ஆனால் பேராயக்கட்சியான காங்கிரசு அவ்வாறு இல்லை. ஏனெனில். 23.03.2013 இல் நிறுத்தப்பட்ட இவ்வாலையின் இயக்கத்தினை நிறுத்துவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது.

  தங்கள் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும்  சுடெருலைட்டு தொழிலகத்தை மூட வேண்டும் என்ற மக்களின் அறவழிப் போராட்டங்களுக்குச் செவி சாய்க்காமல் விரிவாக்கப்பணியில் இத்  தொழிலகம் ஈடுபட்டது.

  எனவே மக்கள் மேலும் முனைப்பாகப் போராடுகின்றனர். 05.02.2018 அன்று தூத்துக்குடி மக்கள், உயிர்வாழத் தகுதியற்ற நிலையை ஏற்படுத்தும் இத் தொழிலகத்தை மூடுமாறு வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு அளித்தனர். அதன்பின் விரிவாக்கத்திற்கு உள்ளாக்கப்படும் குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து 40 நாள் போராடினர்.  25.03.2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமையும்  கடையடைப்புப்  போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே 20,000-இற்கும் மிகுதியான மக்கள் திரண்டு போராடினர்.

  நரேந்திர(மோடி)யின் சொந்த மாநிலமான  பாசக ஆளும் குசராத்து, பாசக ஆளும் கோவா, பாசக ஆளும் மகாராட்டிரம் ஆகியன   ‘சுடெருலைட்டு’ அமையக்கூடாது எனப் போராடி வெற்றி கண்டவை. தங்கள் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் மக்கள் விருப்பங்களுக்கேற்ப முடிவெடுக்கும்  மத்திய பாசக அரசு தன் அடிமை அரசான தமிழக அரசை ஆட்டிவைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்குத் தீங்கு இழைத்து வருகிறது.

  போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று மக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது என்பது கமுக்கச் செய்தி அல்ல. ஆனால் மீனவர்களும் இணைந்து பெருந்திரளாக வந்த மக்கள், காவல்துறையால் குண்டடி பட்டு மருத்துவமனையில் உள்ளனர். பதின்மூன்று பேருக்குக் குறையாதவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்; மேலும்பலர் மரண வாயிலில் உள்ளனர்.

 மக்களுக்காக நடைபெறுவதுதான் மக்களாட்சி. ஆனால், மக்களாட்சி முறையில் மாவட்டத்தலைவரைச் சந்திக்க மக்கள் திரண்டுவரும்பொழுது காவல்துறையின் தாக்குதல் ஏன்? முன்பே  தெரிந்த நிகழ்வைக் காவல் துறையால் கட்டுப்படுத்த இயலவில்லையா?

 கலகக்காரர்கள் ஊடுருவலால் ஊர்தி எரிப்புகள் போன்றவற்றால்  துப்பாக்கிச் சூடு நடந்ததென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அவர் சொல்வது சரிதான். பெரும் துயரங்கள் வராமல் தடுக்க சூழலுக்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் முறை.  ஆனால், தூத்துக்குடியில் திட்டமிடட சதியால் மக்கள் தாக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்;  என்கின்றனர் மக்கள். ஊடகங்களும் அவ்வாறுதான்  தெரிவிக்கின்றன.

மக்கள் எழுப்பும் வினாக்கள் வருமாறு:

  பெரும்பாலும் காவலர்கள் கையில் குறுந்தடியுடன்தான் மக்களை விரட்டி ஓடுகின்றனர். எப்படி துப்பாக்கிச்சூடு நடந்தது?

  ஊர்தியின் மேல் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் சிலரைக் குறிவைத்துச் சுடும்படங்கள் வந்துள்ளன. யார் இவர்கள்? இந்திய-திபேத்து எல்லைப்படையினர் என்கின்றனர். யாராக இருந்தாலும்  அவர்கள் (தமிழர்கள்தான், ஆனால்) தமிழகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களை வரவழைத்தது யார்?

  இவர்கள் முதல்நாள் மாவட்ட ஆட்சியருடன் பேசிய படங்கள் வந்துள்ளன.  அப்படியானால் திட்டமிட்டுத்தான் மக்கள் கொல்லப்பட்டனர் என்றுதானே கருத வேண்டும்?

  “ஒருத்தனாவது சாகணும்” என்னும் காவலர் குரல்  மக்களைக் கொல்வதன் மூலம் அவர்கள் எழுச்சியை ஒடுக்கிச் சுடெருலைட்டு ஆலையை இயக்க வேண்டும்  என்ற முடிவிற்காகத்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதுதானே உண்மை?

 படங்களின்படி முதலில் காவலர்கள்தான் மக்கள்மேல் கல்லெறிந்துள்ளனர்.

  மக்கள் தாங்கள் வரும் முன்னரே மாவட்ட ஆட்சியகத்தில் வண்டிகள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

 காவலர் வழக்கம்போல் நடத்தும் வன்முறைத் தொடக்கத்தை இங்கும்  தொடங்கியுள்ளார்கள் என்றுதானே பொருள்?

 மக்கள் எதிர்ப்பின் நூறாவது நாளுக்கு முன்னதாகச் சுடெருலைட்டு.  மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் ஒரு முறையீடு  அளித்துத்  தக்க ஆணை வேண்டியுள்ளது. அதில் போராட்டக்காரர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட உள்ளதாகவும் தொழிலகத்தைக் கொளுத்த இருப்பதாகவும் 144 தடை யாணை பிறப்பிக்க  வேண்டும் என்றும் கோரியிருந்தது.  நூறாவது நாளை நெருங்கியும் அமைதியாக மக்கள் எதிர்ப்பைத்  தெரிவித்து வருகையில் வன்முறை நிகழும் என்று எப்படிக் கூறினார்கள். மக்கள் எழுச்சியை வன்முறையாகக் காட்டுவதற்காகத் தீ எரிப்பு முதலான செயல்களுக்கு நிறுவனமே திட்டமிட்டிருக்க வேண்டும் என் மக்கள் கருதுவது சரிதானே!

 தொடக்கத்தில் மஞ்சள் ஆடையினரின் துப்பாக்கிச் சூடு தமிழக அரசிற்குத் தெரியாமல் நடந்துள்ளது. அதற்குப் பதினான்கு நிமையம் கழித்துத் தமிழகக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது எனக் கூறித் தமிழக அரசைக் கலைப்பதற்காக மேற்கொண்ட சதியா?

பத்தாம் வகுப்பு மாணவி சுனோலின் முந்தைய போராட்டங்ளில் தீவிரமாக முழங்கியதாலும் ஒரு முறை காவல்துறையினருக்கு எதிராக நடந்து கொண்டதாலும்  தடுதல் வேட்டை என்று வீடு தேடிச் சென்று வாயில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இவ்வாறு எல்லா உயிரிழப்பும் குறி வைத்துப் பறித்தமையாக உள்ளதால் திட்டமிட்ட கொலைகள் என மக்கள் எண்ணுவது சரிதானே!

  மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பற்ற வகையில் மக்கள் நாயகம் கொல்லப்படுவதால் மக்களும் கொல்லப்படுகின்றனர். மக்களே கொல்லப்படும் பொழுது மக்கள் நாயகம் கொல்லப்படததானே  செய்யும் என்றும் சொல்லலாம்.

  மஞ்சள் ஆடை அணிந்து சுட்டவர் வைத்திருந்த துப்பாக்கி, தமிழ்நாட்டுக்காவல் துறையினர்  கையாள்வது இல்லை. எனவே திட்டமிட்டக் கொலை பின்னணியில் மத்திய பாசக இருப்பதாக மக்கள் கருதுவது சரிதானே!

 குண்டடிபட்ட உடல்களில் இருந்து எடுக்கப்படும் குண்டுகள் சுட்டவர் யார் கட்டுப்பாட்டிலுள்ள துறையினர் என்பதை வெளிப்படுத்திவிடும். எனவேதான் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இறந்தவர்கள் உடல்களைப் பாதுகாப்பாகப் பதப்படுத்தி  வைத்திருக்குமாறு கூறியுள்ளது. உயர்நீதிமன்றத்திற்குப் பாராட்டுகள்! அதே நேரம் இந்த உண்மையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது  பாசகவிற்கு அஞ்சி அமைதி காக்குமா?

 எடப்பாடி பழனிச்சாமி என்றேனும் உண்மையைச் சொல்லத்தான் போகிறார். காலங்கடந்து சொல்வதால்  அவருக்குப் பயன் எதுவும் விளையாது. வழக்குகள் கண்டு அஞ்சியோ பதவி ஆசையிலோ அமைதி காப்பது அவருக்குத்தான் பெருந் தொல்லையாக முடியும்.  அவர் உண்மையைக் கூறின் அவருக்குத் துணையாக மக்களும் இருப்பர். எனவே பாசகவன் அரசரும் குருவும் இணைந்து செய்த சதியின் விளைவுதான் அப்பாவி மக்களின் உயிர் பறிப்புகளா? முதல்வருக்கே  தெரியாமல் திடடமிட்டு நிறைவேற்றியது யார் எனப் பின்னராவது   தெரிந்திருக்குமே அந்த உண்மை என்ன?

 கருநாடகாவில் குறுக்கு வழியிலேனும் ஆட்சியைப் பிடித்திருந்தால் தமிழக நாற்காலிக் கனவில் பாசக மிதந்திருக்கும். அதற்கான வாய்ப்பு இல்லாததால்  ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத்  தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஆட்சி நடத்தி  வரும் தேர்தலில் அறுவடை செய்யும் முயற்சியா? மத்திய அரசு உதவிப்படை அனுப்புவதாகக் கூறியது கூடத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டதாகக் கூறி ஆட்சியைக் கலைக்கும்முயற்சிகளில் ஒன்றே என்றுதானே மக்கள் கருதுகின்றனர். எனவே பொறுத்தது போதும் என்று பாசக அரசின் எல்லைமீறல்களையும் மிரட்டல்களையும் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவிக்க வேண்டும்.

  மக்களின் படுகொலைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமானவர்கள் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும்

 பாராட்டிற்குரிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்து அமர்வு செம்பு உருட்டாலையின் விரிவாக்கத்திற்குத் தடை விதித்திருந்தாலும் “சுடெருலைட்டு தொழிலகம் தொடர்ந்து இயங்கும்” என உறுதியாக அதன் உரிமையாளர்  தெரிவிக்கின்றார். எனவே அரசு அத்  தொழிலகத்தை அரசுடைமையாக்கி வேறு பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு முற்றுப்புள்ளி  இட்டதாக அமையும்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 551).

 அதுதான்  உயிர் பறிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியாகும்!

  அவர்களின் குடும்பத்தினருக்கு நாம் தெரிவிக்கும் ஆறுதலாக அமையும்!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை,  அகரமுதல வைகாசி 6 -12, 2049  /  மே 20-26, 2018