அட்டை-மீண்டும் கவிக்கொண்டல், நவம்பர் 2011attai_meendumkavikondal_nov.2011

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்

என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.

  தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று தமிழ் விரிவுரை ஆற்றித் தமிழ் இலக்கியச் சிறப்புகளைப் பரப்பி உள்ளார்.

  திறனாய்வு முறையாலும் சொல்லாக்க நெறியாலும் இலக்கியக் கோட்பாட்டுவகையாலும் இவரின் படைப்புகள் சிறப்புற்று இவரின் பெருமையை உணர்த்தின. இலக்கியக் கொள்கை(1977), புதுக்கவிதை-முப்பெரும் உத்திகள்(1986), இலக்கியமும் சமூகவியலும்(1992), இலக்கியமும் உளவியலும்(1992), இலக்கியமும் மார்க்சியமும்(1992) ஆகிய இவரின் நூல்கள் இலக்கியக் கொள்கைகளை எளிமைப்படுத்திப் படிப்போரை நெறிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. எனவே மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆய்வாளர்களுக்கும் பிறருக்கும் பெரிதும் பயனுள்ள வழிகாட்டியாய் அமைவதாய் அறிஞர்கள் இந்நூலைப் பாராட்டி உள்ளனர்.

  இலக்கியத் திறனாய்வு-ஓர் அறிமுகம்(1979), புதுக்கவிதையின் தேக்க நிலை(1986),  சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை(1992), பெண்ணியத்திறனாய்வு(1995), அங்கதத்திற்கொரு தமிழன்பன்(2003), திறனாய்வுச் சுடர்(2004), வைரமுத்துவின் வைகறைமேகங்கள்(2011) ஆகியன திறனாய்வுத் துறையிலும் கவிதைத் துறையிலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. கவிதைத்திறனாய்வுடன் ‘தலைகீழ்’ என்னும் கவிதை நூலைப் படைத்துத் தாமும் கவிஞராகத் திகழ்கிறார்.

  ஆட்சிச்சொல்லாக்கம் குறித்து முனைவர் பட்டம் பெற்ற இவரின் நூலான சொல்லாக்கம்(2002) குறித்துக் குறிப்பிடுகையில், முதுமுனைவர் புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள் இவரைச் சொல்லாக்கவியல் பயன்பாட்டு முன்னோடி எனப் பாராட்டி உள்ளார்.

  தந்தையார், தமிழ்க்காப்புத் தலைவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வழியில் அவர் புகழ் நினைவுகளைப் போற்றும் வகையில் தமிழ்த்தாயின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் தன் முன்னேற்றம் எனக் கருதி அயராது உழைக்கும் பேராசிரியர் மறைமலை, தம் தந்தையார் வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதி உள்ளார். சாகித்ய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூலில் சி. இலக்குவனார் என்னும் பெயரில் வெளிவந்த இந்நூல் பல மறு வெளியீடுகளாக வருகின்றது.

  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும் இலக்கிய அமைப்பின் மூலம் வாழும் கவிஞர்களைப்பற்றிய திறனாய்வு உரை அரும் பெரும் முயற்சியாக அனைத்துத் தரப்பாராலும் பாராட்டு பெற்று வருகிறது. இதுவரை 100 பாவலர்களைப் பற்றி இவர் உரை ஆற்றி உள்ளார். வாழும் கவிஞர்களைத் தமிழ் நாட்டவர் மட்டும் அறிந்தால் போதாது என வாழும் கவிஞர்களின் பெயர்களில் இவரே வலைப்பூக்கள் தொடங்கி அவர்களின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இணையத்தில் அறிமுகப்டுத்தி வருகிறார். பிற பேராசிரியர்களுக்கும் வலைப்பூப் பயிற்சி அளித்து வருகிறார். அம் மொழிபெயர்ப்புப் பாடல்களின் ஒரு தொகுப்பாக A CLUSTER OF STARS(2006) என்னும் ஆங்கில நூலையும் வெளியிட்டுள்ளார்.

  மாணவப்பருவத்திலேயே இதழ் நடத்தியும் தந்தையார் நடத்திய ‘குறள்நெறி’ இதழின் பொறுப்பாசிரியராகவும் ஆசிரியராகவும் திகழ்ந்த பேராசிரியர் இப்பொழுது ‘செம்மொழிச்சுடர்’ என்னும் மின்னிதழின் ஆசிரியராகத் திகழ்கிறார். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், சப்பான், மோரீசியசு முதலான பல நாடுகளுக்கும் சென்று இலக்கியச்சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார்.

”உலகத்தமிழ்மாநாடுகள் உட்பட பல்வேறு கருத்தரங்கங்களில் கட்டுரையாளராகவும் அமர்வுத் தலைவராகவும் பங்கேற்றுத் தமிழ்நெறி சார்ந்த கருத்துகளை வலியுறுத்தி வருகிறார்.

  பேரா.மறைமலை கார்த்திகை 29, தி.பி. 1977 / 1946 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 14 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் பிறந்தார். பேராசிரியரின் மனைவி திருவாட்டி க.சுபத்ரா பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரே மகள் முனைவர் நீலமலர் செந்தில்குமார் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். மருமகன் முனைவர் ச.செந்தில்குமாரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

  தமிழன்னையைக் காக்கும் போர்வாளாகவும் கேடயமாகவும் திகழ்ந்து வாழ்க்கைப் போரில் பல விழுப்புண்களைப் பெற்ற செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனாரின் திரு உருவப் படத்தைத் தாங்கி நவம்பர் இதழ் வருவதுண்டு. இந் நவம்பரில் அவரது வழியில் அயராமல் அருந்தமிழ்த் தொண்டாற்றி வரும் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களின் திரு உருவம் அட்டையை அணி செய்வது மிகப் பொருத்தமே. பேராசிரியர் வழியல் பெருந்தொண்டாற்றும் வாழும் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நூறாண்டுகள் வாழ்ந்து தம் தொண்டினைத் தொடருவாராக!

– இளவல்

– மீண்டும் கவிக்கொண்டல், ஐப்பசி 2042 / நவம்பர் 2011

படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!

அட்டைப்படங்கள் : விக்கிபீடியா