மதநல்லிணக்கக் கட்டடங்கள் – வைகை அனீசு
மதநல்லிணக்கக் கட்டடங்கள்
இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள், தர்ஃகாக்கள், அகழாய்வுகள் மூலம் கண்டறிந்தவை, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வரலாற்று உருவாக்கத்திற்கு அடிப்படைச்சான்றுகளாய் அமைகின்றன. பண்டைய காலத்தில் சமயவேறுபாடு இன்றி, சாதி வேறுபாடின்றி நம்முன்னோர்கள் பிணைந்திருந்தனர். இந்துக்கோயில்களுக்கு முசுலிம்களும், முசுலிம் பள்ளிவாசலுக்கு இந்துக்களும் நன்கொடைகள் ஏராளமாகக் கொடுத்துத் தங்கள் கட்டடக் கலையையும் இணைத்து அவற்றைக் கட்டியுள்ளார்கள். இந்துக்கோயில்களில் உணவு எடுக்கும் புறாக்கள் முசுலிம் மசூதியில் ஓய்வெடுத்துக்கொள்ளும் என்றார் கபீர்தாசர்.
இந்து-முசுலிம் கட்டடக்கலை
சீக்கியப் பொற்கோயிலான அமிர்தசரசு இசுலாமியக் கட்டடக்கலையின் அங்கமான குப்பாவுடன் காட்சியளிக்கிறது. இதே போல ஃகவா ம1கால், செய்ய்ப்பூர்அரண்மனை இந்திய முகலாய கட்டடக்கலையின் சான்றாக உள்ளது. பஞ்சாபின் பொற்கோயிலில் உள்ள அருர்மந்தருக்கு அடிக்கல் நாட்டியவர் சூபிகளில்; ஒருவரான மிர்மியான் என்பவர். பஞ்சாபில் வசித்த பாபர் மீது பாடல்களை இவர் பஞ்சாபி மொழியில் எழுதியுள்ளார். அவரது பல பாடல்களைக் குருநானக்கு அவர்கள் குருகிரகத்தில் இணைத்துள்ளார் என்று நாம்புனியானி என்ற வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார்.
தாசுமகாலும் இந்து-முசுலீம் கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டதாகும். இசுலாமியக் கட்டடக் கலையில் சிகப்புக்கற்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால் தாசுமகால் வெள்ளைச் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
மினார்
தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்குப் பள்ளிவாசலை அடையாளம் காட்டும் சின்னமாக மினார் அல்லது மினாரத்து(minaret) எனப்படும் கோபுரங்கள் உள்ளன. எகிப்து நாட்டில் உள்ள பசுதாத்து என்ற நகரில் அசுரத்து அமர்பின்ஆசு அவர்களால் கோபுரங்கள் இல்லாமல் கட்டப்பட்ட பள்ளிவாசலில் அசுரத்து முஆவியா (உமைய்யா மரபின் முதல் கலீபா) வின் ஆளுநர் நான்கு கோபுரங்களை(மினாரத்துகளை)க் கட்டினார். இப்பள்ளியில் தான் இசுலாமிய வரலாற்றில் முதன்முதலாகக் கோபுரம் கட்டப்பட்டது. உமைய்யா மரபு கலீபாக்களே பள்ளிவாசல்களில் கோபுரங்களை அறிமுகப்படுத்;தினார்கள். நான்கு கோபுரங்கள் கட்டும் முறை எகிப்து நாட்டிலிருந்தும், ஒற்றைக் கோபுரம் கட்டும் முறை ஈராக்கு நாட்டிலிருந்தும் வந்தவை. இராவுத்தர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்ட பள்ளிகளில் குதிரைக் குளம்பு வடிவத்தில் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். மனோரா என்று அழைக்கப்படும் இக்கால வழக்கில் உள்ள பெயர், அக்கட்டடத்தின் பெயரால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மனோரா என்ற சொல் வழக்கும் பிற்காலத்தில் வந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனோரா என்ற பெயர் மராட்டிய மன்னர்களின் மோடி ஆவணங்களில் குறிப்பிடவில்லை. எனவே மனோரா என்ற பெயர் மராட்டிய மக்களின் சொல் வழக்கில் இடம் பெற்றிருக்கலாம். மினாராடு என்ற சொல்லிற்கு நிலைமாடம் என்ற பொருளும் உண்டு. மனோகரமான என்ற வழக்கும் உண்டு. இதற்கு மனதைக்கவர்ந்த மனோரா என்ற பொருளும் அமைகிறது. பல நிலைகளைக் கொண்ட உயர்ந்த கட்டடமாக இருப்பதால் இதற்கு மராட்டியர்கள் மனோரா என்று அழைத்துள்ளனர். நாகூரில் கட்டப்பட்ட புறாக்கூடு வடிவமைப்புடைய கட்டடம் மனோரா என்று குறிப்பிடப்படுகிறது. எனவே மராட்டிய மன்னன் பிரதாபு சிங்கு இக்கட்டட வடிவமைப்பு முறைக்கு வழிவகுத்தவர் என்றும் மினாராடு என்ற சொல்லின் திரிபாக மனோரா என்று பெயர்பெற்றது என்றும் கூறலாம்.
மனோரா கட்டக்கலையின் தோற்றம் இந்துக் கலையும், இசுலாமிய கலையும் இணைந்து சராசானிக்குக் கலைப்பாணியாக திகழ்கிறது.
மாடம்
மராட்டியர் தங்களின் அரண்மனைக் கட்டடங்களில் புறாக்கூடுகளைக் கட்டியுள்ளனர்; ஆனால் எங்கும் இப்பகுதியில் காணமுடியவில்லை. எனவே புறாக்கூடு கட்டடக்கலை வடிவமைப்பை முதன்முதலில் தஞ்சைப் பகுதியில் மராட்டியர் காலக்கட்டங்களில்தான் காணமுடிகிறது. இத்தகைய மாடங்களில் தங்குகின்ற புறாக்களை மாடப்புறாக்கள் என்று அழைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. இம்மாடங்களில் விழாக்காலங்களில் அகல்விளக்குகளை ஏற்றி வைத்து தீபதம்பமாக போற்றும் மரபும் இருந்துள்ளது. புறாக்கள் தங்குவற்குரிய கபோத அமைப்பே திருவையாறு திவான்வாடா என்று அழைக்கப்படும். திருவையாறு திவான்வாடாக் கட்டடத்திலுள்ள புறாக்கூடுகளின் வடிவமைப்பும் நாகூர் தர்காவின் புறாக்கூடு வடிவமைப்புத் தோற்றமும் காணும்பொழுது தர்க்காவின் புறாக்கூடு வடிவமைப்புத் தோற்றமும் காணும்போது இவ்விரண்டும் மனோரா கட்டடம் கட்டபட்ட காலத்திற்கு முன்பே உள்ளவை எனக் கருதப்படுகிறது. இத்தகைய மாடங்களில் தங்குகின்ற புறாக்களை மாடப்புறாக்கள் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது. புறாக்களை வளர்க்க தனி இடமும் அதற்கு மானியமாக மன்னர்கள் பணமும் கொடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் புறாக்கிராமம் என்ற ஊர் இன்றளவும் உள்ளது.
பள்ளிவாசல் கட்டமைப்பு
இந்தியாவில் முதல் பள்ளிவாசல் கேரளாவில் உள்ள கொடுங்கல்லூர் பள்ளிவாசல் ஆகும். பள்ளிவாசலின் உள்ளே மரத்தினால் ஆன படிமேடையும்(மிம்பர் படியும்), குத்துவிளக்கு, வாள் போன்றவையும் உள்ளன. இந்தியப் பண்பாட்டின் மங்கலச்சின்னங்களில் ஒன்றான குத்துவிளக்கு ஒன்று பள்ளிவாசலினுள் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. இக்குத்துவிளக்கு கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இக்குத்துவிளக்கில் இரண்டு அடுக்கிலும் மலையாள மொழியில் எழுதப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் இடதுபுறம் பெண்கள் தொழுவதற்கும் வசதியுள்ளது. பள்ளிவாசலின் உட்புறம் கீழ்த்தளம் மெக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. முசுலிம்களின் முதல் பள்ளிவாசலான மெக்காவிற்கு அபுல் குபைசு என்ற மலையிலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளைக்கல் மூலம் கட்டப்பட்டது. அதனை மனிதர்கள் தொடுவது வழக்கம். தற்பொழுது அசுருல் அசுவத்து என அக்கல் அழைக்கப்படுகிறது.தற்பொழுது அக்கல் கருப்பு நிறமாக மாறியுள்ளது என்கிறார்கள் மெக்கா சென்ற பயணிகள். பள்ளிவாசலின் வெளிப்புறம் இந்துக்கள் கோயில் உள்ளதைப்போன்று குளம் ஒன்றும் உள்ளது. மற்ற பள்ளிவாசல்கள் அனைத்தும் கிழக்கு பக்கம் அமைந்திருக்கும். இந்தப்பள்ளிவாசல் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.
முசுலிம்களும் நடுகல் வழிபாடும்
கேரள மாநில வழிபாடு நாட்டியம், இசை, நாட்டுப்புறக் கலையுடன் கலந்ததாகும். நடுகல் வழிபாட்டுடன் தொடர்புடையதாகத் தெய்யாட்டத்தைக் குறிப்பிடுவர். பல நடுகற்கள் சைவ, வைணவச் சார்புடையன; சானா என்றும் நாட்டுப்புறத் தெய்வங்கள் என்றும் போற்றப்படுகின்றன. இவை சமயத்தொடர்புவையாக உள்ளன. அவ்வகையில் சேரமான் சும்மா பள்ளிவாசல் இடப்புறம் முசுலிம்கள் மையவாடி அமைந்துள்ளது. அங்கு இறந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு உடலின் தலைப்பகுதியில் ஒரு கல்லும், கால்பகுதியில் ஒரு கல்லும் வைத்துள்ளார்கள். தலைப்பகுதியில் வைக்கப்பட்ட கல்லின் மேல் பிறப்பு, இறப்பு, பெயர் பற்றிய விபரம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கற்கள் வைப்பவர்கள் தங்கள் இடத்திற்குக் குறிப்பிட்ட தொகையைப் பள்ளிவாசலுக்குச் செலுத்தவேண்டும். அதன்மேல் கால் மற்றும் தலைப்பகுதியில் நடுகல் அமைக்கும் முறை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அக்கல்லை வீசான் கல் என அழைக்கிறார்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையை முடித்துவிட்டு வீசான் கல்லை வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் இந்துசமயச்சாயலில் வீசான் கல்லின் மீது மஞ்சள், மல்லிகைப்பூ போன்றவற்றை வைத்து வணங்கிவிட்டுப் பள்ளிவாசலில் இறந்தவர்களின் பெயரால் எண்ணெய், நெய், மேலும் சில பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கின்றனர். அந்தப்பொருளை வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின்பு பள்ளிவாசல் நிதிவசதிக்காக ஏலம் விடுகிறார்கள். நாம் அதனைப் பார்வையிட்டபோது 10.00 உரூபாய் மதிப்புள்ள எண்ணெய்க்குப்பியை 15,000 உரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்து வியப்பில் ஆழ்த்தினார்.
புறாக்களுக்குத் தீனி
பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான புறாக்களை வளர்த்து வருகின்றனர். இந்துசமய வழக்கப்படி கோயில்களில் உள்ள புறாக்களுக்கு நெல் மற்றும் உணவுக் கூலங்களைக் கொடுப்பது போல இங்கு அனைத்துச் சமயத்தினரும் இப்பள்ளிவாசலைக் கண்டு களித்துப் புறாக்களுக்குத் தீனி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இனத்தாலும் மொழியாலும் தமிழர்களாக வாழ்ந்து உலக அரங்கில் நாட்டு மக்களின் வேற்றுமையைக் களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக இந்தியாவை முன்னேற்ற அனைவரும் அரும்பாடு படுவோம்.
Leave a Reply