மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து
விரட்டப்பட வேண்டும்!
நம் நாடு சமயச் சார்பற்ற நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்தியா பலசமயச்சார்பு நாடாக விளங்குகின்றது. இதுதான் கேடுகள் யாவினும் பெருங்கேடு விளைவிக்கின்றது. சமயச் சார்பு விடுமுறைகளை நீக்கிவிட்டு எந்தச் சமயச் சார்பு நிகழ்வாயினும் ஆட்சியில் உள்ளோர் பங்கேற்காத நிலை வர வேண்டும்; குடியரசுத்தலைவர், தலைமை அமைச்சர், முதல்வர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், என உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சமயத் தலைவர்களைச் சந்திக்கக்கூடாது; எதிர்பாராமல் சந்திக்கும் நேர்வு நிகழ்ந்தாலும் அதனை வெளிப்படுத்தி விளம்பரப்படுத்தக்கூடாது. அவ்வாறில்லாமல் வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இப்போதைய நிலையே நீடித்தால் மனித நேயம் மறைந்து சமய வெறியே பெருகும். சமய மாற்றம் பண்பாட்டுச் சீரழிவிற்கும் வழி வகுப்பதை நாம் உணரவில்லை. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டு இந்த உண்மையைப் பார்ப்போம்.
இறை ஏற்பாளர்களும் இறை மறுப்பாளர்களும் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில்தான் மூன்றாம் வகையினர் உள்ளனர்; தன்மானத்தாலும் பகுத்தறிவாலும் இறை நம்பிக்கை இருப்பினும் இறை வழிபாட்டிற்கு எதிரானவர்களாக உள்ளனர். ஏன் இந்த நிலை உள்ளது? தமிழகச் சமயத்தில் சடங்குகள் புகுந்தன. தமிழர்கள் தமிழர்களுக்காகக் கட்டிய தமிழ்க் கடவுள்களுக்கான தமிழ்க் கோயில்களில் ஆரியம் புகுந்ததால் தமிழர்கள் வழிபாடு நடத்தும் உரிமையை இழந்தனர்; ஓரங்கட்டப்பட்டனர்; ஒதுக்கி வைக்கப்பட்டனர்; வெளியேற்றப்பட்டனர். தன்னைத் தமிழால் வழிபடவே இறைவன் விரும்புகிறான் எனச் சமயத் தலைவர்கள் தெளிவுறுத்திய தமிழ்நாட்டில், கோயில்களில் நுழையும் உரிமை தமிழுக்கு இல்லை என்றாகி விட்டது.
இந்துக்களாக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையர், பல கடவுள் வணக்க ஈடுபாட்டால், தேவாலயம், பள்ளிவாசல் முதலான பிற சமய வழிபாட்டிடங்களுக்குச் செல்லத் தயங்குவதில்லை. அதே நேரம், இந்துச்சமயக் கோயில்களில், பிற சமயத்தவர் நுழையக்கூடாது என்ற அறிவிப்புப் பலகை பிற சமயத்தவர் நுழைவதைத் தடுக்கிறது. நுழைவுரிமை இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்தாம் இங்கு வருவர்.
சமயம் மாறுபவர்கள் தமிழ் மரபில் இருந்தும் மாறுகின்ற அவலம்தானே உள்ளது. பொங்கல் வாழ்த்து தெரிவித்தால், நாங்கள் இசுலாமியர்கள் என்கிறார்கள். ‘இசுலாம் எங்கள் வழி! தமிழ் எங்கள் மொழி’ என்ற உணர்வு மிக்கவர்களின் வழி வந்த இன்றைய தலைமுறையினர்தாம் அவ்வாறு தெரிவிக்கின்றார்கள். “எங்கள் வீட்டுப் பொங்கல்’’ என்று உண்ணக் கொடுத்தால் “நீங்கள் உங்கள் கடவுளுக்குப் படைத்து இருப்பீர்கள் வேண்டா” என்கின்றனர் கிறித்துவர்கள். கடவுளுக்குப் படைக்காமல் தருவதாகக் கூறினாலும், நம்முடன் நன்கு பழகும் கிறித்துவர்கள் நாம் தருவன பழங்களாக இருந்தாலும் வாங்க மறுத்துவிடுகின்றனர். இசுலாமியர்கள் வாங்கிக் கொண்டு உண்ணாமல் இருந்து விடுகின்றனர். அதே நேரம் கிறித்துவர்கள், “எங்கள் வீட்டில் குழந்தை இயேசு படம் வைத்து வணங்குகின்றோம்;வாருங்கள்.” அல்லது “தேரில் மாதா வரும்பொழுது எங்கள் வீட்டில் நாளை வழிபாடு இருக்கும்; வாருங்கள். துன்பங்கள் தீரும்”; “உங்கள் மகன் அல்லது மகள் சிறப்பாகத் தேர்ச்சி பெற தேவாலயத்தில் வழிபாடு வைத்துள்ளோம்; வாருங்கள்” என்பார்கள். எல்லாக் கடவுளும் ஒன்றுதானே! போவதால் என்ன என்று நாமும் செல்வோம். மெல்ல மெல்ல மூளைச் சலவை செய்வர். இதனால், சலுகை பெறுவதற்கு இந்துவாகக் காட்டிக்கொண்டு கிறித்துவர்களாக மாறி வாழ்பவர் பல்லாயிரம் உள்ளனர்.
சமய நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். இதில் என்ன தவறு என்று எண்ணலாம். தமிழர்களின் தேசிய மொழியை ஆரியச்சமயத்தவர் சமசுகிருதமாகவும் இசுலாமியர்கள் அரபியாகவும் கிறித்துவர்கள் ஆங்கிலமாகவும் மாற்றும் நிலை நிலவுகிறது. இக்காலத்தில், புத்தச் சமயத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் சிலர், பெயர்களிலும் சடங்குகளிலும் பாலி மொழியைப் புகுத்தி வருகின்றனர். எனவே, அயல் சமய ஏற்பு என்பது அயல்மொழித்திணிப்பு, அயல் நாகரிகத் திணிப்பு, அயல்பண்பாட்டுத் திணிப்பு என மாறித், தமிழ் மக்கள் அயலவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழர் என்ற இன வுணர்வும் அற்றுப் போகின்றது. எடுத்துக்காட்டிற்கு ஒன்று கூற வேண்டுமானால் இலங்கையில் ‘தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் போராட்டம்’ என்று வரும் செய்திகளைக் கூறலாம். சமயத்தையும் இனத்தையும் ஒன்றாகக் காட்டுவதன் மூலம் இசுலாமியர் தமிழரல்லர் என்று சொல்லப்படுகின்றது அல்லவா? இசுலாமியருக்கும் இந்துக்களுக்கும் என்று ஏன் கூறவில்லை?
சமயச் சார்பில் பள்ளிகளுக்கு ஏற்பு வழங்குவதால், சமயத்திணிப்பிற்குத்தான் வழி வகுப்பதாக அமைகிறது. பிள்ளையைக் கிறித்துவப்பள்ளியில் சேர்த்து விட்டு வந்தால் ‘முதல் பாடமே இயேசு நல்லவர்’ என்றுதான் சொல்லிக் கொடுக்கின்றனர். இயேசு நல்லவர்தான். ஆனால், பொதுவான அறநெறியை முதலில் கற்பிக்கலாம் அல்லவா? கிறித்துவப் பள்ளிகளில் கிறித்துவர் அல்லாத மாணவ மாணவியர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆசிரியர் வாக்களித்துக் கிறித்துவ மாணவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர். ‘நீ ஓர் இசுலாமியன்’ என்று சொல்லியே இசுலாமியப் பள்ளிகளில் மனிதர்களாக மாணவர்களை உருவாக்கத் தவறி விடுகின்றனர். தத்தம் சமயத்திற்கு மாறினால் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறியும் பலியிடுவதற்கு முன் ஆடுகளை அழகு படுத்துவதுபோல், உதவிகள் புரிந்தும் சமயமாற்றம் நடைபெறுவது அனைவரும் அறிந்த ஒன்றே!
சில வேளைகளில் பிறநாடுகளில் இருந்து பொருளுதவி புரிவதற்காக மாற்றுச்சமயத்து மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்கு உதவி இருக்கலாமே தவிர, சமயப்பள்ளிகள் தத்தம் சமயத்தை வளர்க்கவே பாடுபடுகின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன். நான் மதுரையில் இருந்த பொழுது சவகர் சிறுவர்மன்றம் மூலம் பல்வகைக் கலைப்பயிற்சிகளை அளித்து வந்தேன். அவற்றுள் ஓவியப்பயிற்சியில் பார்வையற்ற (இந்துச்) சிறுவன் பங்கேற்றுச் சிறப்பாக ஓவியங்கள் வரைந்தான். சிறுவர் மன்றத்தில் பகுதி நேரம் பணியாற்றிய ஓவிய ஆசிரியர் திரு சண்முகசுந்தரம் பணியாற்றிய இசுலாமியப்பள்ளியில்தான் அம் மாணாக்கனும் படித்து வந்தான். அப்பள்ளி நடத்துவோர் சிறுவனின் சிறப்பை அறிந்து விவரங்கள் பெற்றனர். அச்சிறுவனுக்கு உதவுவதற்கோ, அவ்வாசிரியரைப் பாராட்டுவதற்கோ அவற்றைப்பெறவில்லை. மாறாகத் தாங்கள் சமயச்சார்பின்றி நடந்து கொள்வதாகப் பொய்யாகக் காட்டிப் பொருளுதவி பெறவே அவ் விவரங்களைப் பயன்படுத்தினர். இவ்வாறுதான் சமய நிறுவனத்தினர் பள்ளிகளில் பிற சமய மாணாக்கர்களுக்கு ஏதேனும்உதவி கிட்டலாம். சமயப் பொறையுடைமை என்பது எச்சமய நிறுவனத்திற்கும் இல்லை.
ஊடகங்களிலும் சமயச் சடங்காளர்களை நன்னெறிக் காவலர்கள் போல் தொடர்ந்து காட்டுகின்றனர். சான்றாகத், திரைப்படங்களில் காதல் திருமணங்களை நடத்துபவர்களாகவும் அடைக்கலம் தருபவர்களாகவும் ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்துபவர்களாகவும் கிறித்துவர்களையே காட்டுகின்றனர். சமயச்சார்பற்ற அறவாணர் இவற்றை நடத்துவதாகக் காட்டக் கூடாதா? சமயவாதிகள்தாம் நல்லவர்கள் என்பதுபோல் காட்டவேண்டிய தேவை என்ன? முதன் முதலில் ஏதோ ஒரு திரைப்படத்தில் வந்ததைப் பின்பற்றி இவ்வாறு தொடருவதே உண்மை. என்றாலும் சமயச் சார்பு உள்ளவர்கள்தாம் நல்லவர்கள் என்பதுபோல் காட்ட வேண்டியதேவை இல்லை. ஊர்ஊராகச் சென்று படிக்க வேண்டிய பருவத்தில் படிப்பை இழந்து திரிவோரை அழைத்துச் சென்று கற்பிக்கும் நற்பணியை இந்நிறுவனங்கள் ஆற்றுகின்றன. ஆனால், மாணாக்கர்களுக்குக் கிறித்துவப் பெயர் சூட்டிப் பள்ளிகளைப் பொருத்தவரை கிறித்துவராக ஆக்கிவிடுகின்றனர். புள்ளிவிவரங்களில் கிறித்துவராக இல்லாமல் உண்மையில் கிறித்துவராக்கப்பட்டவர் ஏராளாமாக உள்ளனர். எனவே, கல்விப்பணியின் நோக்கம் சமயப் பரப்புரை என்று ஆகும் பொழுது, அதன் பணித்தூய்மை பாழ்படுகிறது. பகுத்தறிவுச் செய்திகளும் மனித நேயமும் பாடங்களில் இடம் பெற வேண்டும். சமயத்திற்கு எனப் பக்கங்களையும் நேரங்களையும் ஒதுக்கும் ஊடகத்தினர் பகுத்தறிவிற்கென ஒரு பகுதியையேனும் ஒதுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்நிலை மாறும். ஆனால், சிறுபான்மையர் என்ற தகுதி வழங்கப்படும் பொழுது அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது.
அரசு தரும் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளி வரை மொத்தம் 51,807 பள்ளிக்கூடங்கள் உள்ளன. சிறுபான்மையர் பள்ளிச்சங்கத்தினர் தரும் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 12,000 சிறுபான்மையர் பள்ளிகள் உள்ளன. எனவே, 23.16 விழுக்காடு அளவில் சிறுபான்மையர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை 60 விழுக்காட்டிற்கு மேல் உள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிறித்துவர்கள் 6.1 விழுக்காடும் இசுலாமியர்கள் 5.6 விழுக்காடும் உள்ளனர். ஆக 11.7 அல்லது 12 விழுக்காடு என்னும் அளவிற்கு மேல் சிறுபான்மையர் பள்ளிக்கு இசைவு தந்திருக்கக்கூடாது.
மொழிச்சிறுபான்மையர் என்று பார்த்தால் தெலுங்கு 5.65 விழுக்காடும் கன்னடம் 1.68 விழுக்காடும் உருது 1.51 விழுக்காடும் தமிழ்நாட்டில் பேசும் மொழியாக உள்ள பொழுது 8.84 விழுக்காடுதான் வருகின்றது. ஆனால், மொழிச்சிறுபான்மையர் கல்விக்கூடங்கள் எண்ணிக்கை மிகுதியாகவே உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் மிகுதியானவை தெலுங்குச் சிறுபான்மையரால் நடத்தப்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிறுபான்மையர் போர்வையில் அரசேற்பு வாங்குபவர்கள், தாங்கள் சார்ந்த சிறுபான்மையர் நலனுக்கு ஒன்றும் செய்வதில்லை. வணிகக் கொள்ளைக்கு வாய்ப்பாகவே பயன்படுத்துகின்றனர்.
சிறுபான்மையர் எண்ணிக்கை விகிதத்தைவிட மிகுதியாகச் சிறுபான்மையர் கல்விக்கூடங்கள் பெருகக்கூடாது. சிறுபான்மையர் நலனுக்கு எதிரான கருத்து அல்ல இது. மண்ணின் மொழியான, பெரும்பான்மையர் தாய்மொழியான தமிழ், தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் புறக்கணிக்கப்படவும் தமிழ்நாட்டில் தமிழ் மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டிக்கப்படவும் தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான நாகரிகம் ஊன்றப்படவும் இவையே காரணமாக உள்ளமையால் வேதனையில் தெரிவிக்கும் உரைகளாகும்.
வருவாயை மட்டும் நோக்கமாகக் கொண்டு கல்வி வணிகம் நடத்துவோரால் எவ்வாறு தாய்மண்ணின் மானம் காப்பாற்றப்படும்? எளியோருக்கும் ஏற்ற உயர்ந்த கல்வி தர இயலும்? பெற்றோர்களையும் மாணவர்களையும் வதைக்காமல் கல்விக்கூடங்கள் நடத்தும் செல்வ வளம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்விக்கூடங்கள் தொடங்குவதற்கு இசைவு வழங்க வேண்டும். கல்விக்கூடங்கள் நடத்துவோருக்குப் போதிய பொருள் வளம் இல்லையேல், கட்டணம் வாங்கித்தான் கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பின், அவர்களின் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழுவில் பள்ளியை நடத்தியவர்களுக்கு இடம் தரலாம். சாதி சமய வேறுபாடின்றி அனைவருக்கும் அனைத்துநிலைக் கல்வியும் கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டும். விலையில்லாப் பொருள்களைவிட விலையில்லாக் கல்வியே உடனடித் தேவை என்பதை உணர வேண்டும். தமிழ் வழிப்பள்ளிகள் நடத்துவோருக்கு அனைத்துக் கட்டமைப்பு வசதிக்கும் சம்பளச் செலவிற்கும் அரசே முழுப் பொருள் உதவி அளிக்க வேண்டும். சமய ஈடுபாடு என்பது தனிப்பட்ட விருப்பமாகவும் உரிமையாகவும் இருந்தால் போதும். சமயப் பரப்புரைக்குக் கல்விக்கூடங்கள் தளமாக மாற்றப்படக்கூடாது. சமய நிறுவனங்கள் கல்வித்துறையில் இருந்து விலக்கப்படுவதே நாட்டு நலனுக்கு ஏற்றது.
இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றால் வள்ளலார் சொல்லியவாறு மதமான பேய், நம்மைக் – குறிப்பாக ஆள்வோரை, அவர்கள் வழி அரசைப் – பிடிக்காதிருக்க வேண்டும்.
[பின் குறிப்பு : சில ஆண்டுகளுக்கு முன்பு, கிழமை இருமுறை இதழ் ஒன்றிலிருந்து கல்விபற்றிய கட்டுரை கேட்டார்கள். “கருத்தையும் தமிழ் நடையையும் சிதைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் சரி” என்று சொல்லி இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பினேன். “கல்விக்கூடம்பற்றி எழுதாமல் மதம்பற்றி எழுதியுள்ளீர்களே! இன்றைய கல்வி முறைபற்றி எழுதித்தாருங்கள்” என்றனர். சமயம் சார்ந்த கல்விகூடாது என்பதுதான் சரியான கல்விமுறை. எனவே, இதுதான் என் கருத்து” என்று வேறு எழுதித்தர மறுத்துவிட்டேன். அவர்களும் இதனை வெளியிடவில்லை. இப்பொழுது இதைக் கண்ணுற நேர்ந்தது. வெளியிட்டு விட்டேன். மாறுபாடான கருத்து இருப்பின் தெரிவியுங்கள்.]
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply