மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி

பேராசிரியர் சி.இலக்குவனார்

                என் மனம் கவர்ந்த ஆன்றோர்களில் முதன்மையானவர் செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார். அவரை நான் முதலில் சந்தித்த பொழுதே அவரது உருவம் என் உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. அவரது கருத்துகளும் செயல்களும் எனக்கு உந்து சக்தியாய் விளங்கி என் முயற்சிகளில் நான் வெற்றி பெறச் செய்து விட்டது. என் முன்னோடி அறிஞர் ஆன்றோர் முனைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைப் பற்றிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

                இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள், நான் திருச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, ஒருவர் பேராசிரியர் வானொலி நிலையத்திற்கு வந்திருக்கிறார் என்று சொன்னார். தமிழ்கூறும் நல்லுலகில் அன்றைக்குப் பேராசிரியர் என்றால் அது தமிழ்மலை செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் மட்டும்தான். “நம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; தமிழ் உலகிற்கேச் சொந்தக்காரர் ஆனவர். தமிழ்ப்பணிக்காகப் பதவிகளையே தூக்கி எறிந்த புரட்சியாளர். தமிழ் நலன் ஒன்றையே தன் நலனாகக் கருதியவர். இத் தமிழ்ச் சான்றோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டுமா?” என ஏங்கியவன் நான். படிக்கும் பொழுதே படைப்பாளியாகத் திகழ்ந்த அவரைப்பற்றிய எண்ணமே பின்னர் என்னை ஆயிரக்கணக்கான படைப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆக்கியது எனில் மிகையாகாது. அத்தகைய பெருந்தகையாளர் வந்திருக்கிறார் என்றால் அவரை எப்படிச் சந்திக்காமல் இருக்க முடியும்?

          ஆட்சி மாற்றத்திற்கே நெம்புகோலாய்த் திகழ்ந்த புரட்சிப் பேராசிரியரைத் தயக்கத்துடனும் ஆர்வத்துடனும் சந்திக்கச் சென்றேன். ஆனால், சந்தித்த பின்பு ஏதோ மிக நெருங்கிய உறவினரைப் போன்றும் நீண்டகால நண்பரைப் போலவும் இனிமையாகப் பழகிய அவரது பண்பு என்னை இன்பத்தில் ஆழ்த்தி விட்டது.

                “உண்டாலம்ம இவ்வுலகம்” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து தனக்கென வாழாத் தகைமையாளராகப் பிறர்க்கென வாழும் பெருந்தகையாளராகத் திகழ்ந்தவர்; எண்ணம், எழுத்து, பேச்சு, மூச்சு என யாவுமே தமிழாகக் கொண்டவர்.

                “தோன்றிற் புகழொடு தோன்றுக”என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கிணங்கத் தாம் தொடங்கிய செயல் யாவினும் புகழுற விளங்கியவர்.

                “சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

             தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”

என்னும் பாரதி வாக்கைச் செயல்படுத்தி, மாணவர்களைக் கொண்டும் தமிழ் ஆர்வலர்களைக் கொண்டும் தாம் பணியாற்றிய நகர்களில் எல்லாம், ‘தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயிலுக!’ எனத் தமிழ்முழக்க ஊர்வலங்களை நடத்தி மக்களிடையே தமிழ் ஆர்வத்தை வித்திட்டவர். பிற இயக்கங்கள் இவ்வாறு தமிழ்முழக்க ஊர்வலம் நடத்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

                “தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில்தமிழ்தான் இல்லை” என வருந்திக்

              “கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம்

                  தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”

என்னும் பாரதிதாசனின் தமிழியக்கக் கனவுகளைச் செயற்படுத்தும் தலைவராகத் தமிழ்க் காப்புக்கழகம் நிறுவியவர் பேராசிரியர். அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முடியாததைச் செய்து காட்டிய செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்.

          தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், ஒளவையார் முதலிய தமிழ்ப் பெரும்புலவர்கள் பெயரால் மக்கள் விழாக்களை நடத்தித் தமிழ் எழுச்சியை ஏற்படுத்தியவர். ஆசிரியப்பணி என்பது கல்விக்கூடங்களில் மட்டும் அல்லாமல் மக்களிடையேயும் ஆற்றுவது என்பதை எடுத்துக்காட்டிய ஏந்தலே பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்.

            பிற ஆசிரியர்களுக்குக் கீழாக நடத்தப்பட்ட தமிழாசிரியர்களுக்குத் தம் வாதத் திறமையாலும் போராட்டச் செயல்களாலும், பிற ஆசிரியர்களுக்கு இணையான உரிமைகளைப் பெற்றுத் தந்த போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்.

          மாணவர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்ய “உள்ளேன் ஐயா” எனத் தமிழ் மணக்கக் கூறச்செய்தவர்; மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை ஊட்டிய முதல் போராட்ட அறிஞராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் மட்டுமே. எனவேதான் இந்தி எதிர்ப்பு உணர்வு மாணவர்களிடையே பற்றி எரிந்தத் 1965இல் இந்தி எதிர்ப்புப் பேராட்டமாக வெடித்தத் காங்கிரசு ஆட்சி அகன்றது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்த மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று அன்றைய காவல்துறையினர் அறிஞர் அண்ணா அவர்களிடம் வேண்டியபொழுது, “இதற்கான விசை மதுரையில் உள்ளது. மாணவர்கள் பேராசிரியர் இலக்குவனார் கட்டுப்பாட்டில் உள்ளனர்” எனக் கூறிப் பேராசிரியரின் தமிழ்க்காப்புப் புரட்சியை வெளிப்படச் செய்தார்.

                கலைஞர் முதலானோர் இன்று சங்கத் தமிழைப் பரப்புவதற்கு முன்னோடி வழிகாட்டியாக அன்று சங்கத் தமிழை மக்கள் தமிழாக மலரச் செய்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். கம்பரின் புகழைப்பாடிக் கன்னித் தமிழை வளர்ப்பவர்களாகக் காட்டிக் கொண்டு சங்கத் தமிழை அழிக்க எண்ணியவர்களுக்கு எரிமலையாகக் காட்சியளித்து அன்றைக்குப் பேராசிரியர் கிளர்ந்தெழுந்து போராடி இராவிட்டால், உ.வே.சா. போன்ற அறிஞர்கள் ஓலைச் சுவடியிலிருந்து அச்சுக்குக் கொணர்ந்து உயிர்ப்பித்த சங்கத் தமிழ் மறைந்தே போயிருந்திருக்கும்.

                வையாபுரிக் கூட்டங்கள், தமிழ் இலக்கியங்களின் தொன்மையை மறைத்து ஆரியத்திற்குப் பூசை செய்த பொழுது வரலாற்று நோக்கிலும் அறிவியல் பூர்வமாகவும் தமிழ் இலக்கியங்களின் தொன்மையை உணரச் செய்தவர்களில் முதன்மையானவரும் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களே ஆவார்.

           தொல்காப்பியத்தின் சிறப்பையும் அது வெளிப்படுத்தும் தமிழ் வரலாற்றுப் பண்பாட்டுச் சிறப்பையும் தான் புலவர் படிப்பு பயிலும் பொழுதே உலகிற்கு உணர்த்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் அதனை எளிமையாக மாணவர்களுக்கும் மக்களுக்கும் விளக்கிப் பெருந் தொண்டாற்றியதுடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உயர்தனிச் செம்மொழியின் பெருமையை உலகுணரச் செய்துள்ளார்.

                இலக்கிய இலக்கண வகுப்புகளைப் பொதுமக்களுக்காக நடத்தித் தமிழ் இலக்கியங்களை எளிமையாகப் புரியச் செய்ததுடன் எண்ணற்றோர் புலவர் பட்டமும் தமிழ் முதுகலைப் பட்டங்களும் பெற்று இதன் தொடர்ச்சியாகப் பல உயர் பதவிகளில் அமரக் காரணமாக இருந்த மக்கள் பேராசிரியர் தமிழ்மலை இலக்கணச் செம்மல் சி.இலக்குவனார் அவர்கள் மட்டுமே!

                மறைமலைஅடிகளின் தனித்தமிழ்ப் பணிகளை உரைநடையில் பலர் பின்பற்றிய பொழுது, படிக்கும் காலத்திலேயே ‘எழிலரசி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தை முதலில் படைத்தவர் தமிழ்க்காப்புத் தலைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களே ஆவார். பாவேந்தர் பாரதிதாசனின் தனித்தமிழ்ப் படைப்புகளுக்கு முன்னோடியாக முதலில் தனித்தமிழ்ப் பாவியம் படைத்த சிறப்பிற்குரியவர் பேராசிரியர் சி.இலக்குவனார் என்பதைத் தமிழுலகம் இன்னும் உணரவில்லை. எழுத்துலகில் தொடர்ந்து இருந்தால் எண்ணற்ற பரிசுகள் அவரைத் தேடி வந்திருக்கும். ஆனால், மக்களுக்காக எழுதி, மக்களுக்காகப் பேசி, மக்களுக்காகத் தொண்டாற்றி மறைந்த மக்கள் அறிஞராக அவர் வாழ்ந்ததால் படைப்புலகம் அவரைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டது.

         தமிழறிஞர்களின் படைப்புகள் உலக அறிஞர்களின் பார்வைக்குச் செல்லுமேல், பல தமிழறிஞர்கள் நோபள் பரிசு பெற்றிருப்பர். அத்தகைய நோபள் பரிசிற்குரிய தகுதியாளர்தாம் முத்தமிழ்க் காவலர் தமிழ்ப் படைத் தளபதி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ஆவார்.

            பேராசிரியரின் சங்கத் தமிழ்க்காப்புப்பணிக்காக, திருக்குறள் ஆராய்;ச்சிப் பணிக்காக, தொல்காப்பியப் புலமைக்காக, மொழிப்போர் பணிக்காக, இதழ்வழித் தமிழ்ப்பரப்புப் பணிக்காக என எத்தனையோ உலகப் பரிசுகள் அவரைத் தேடிவந்திருக்க வேண்டும்.

               தமிழ்க்காப்புத் தளபதியாகத் திகழ்ந்ததாலும், தமிழ் உரிமைப்பெருநடைப் பயணத்திற்கு ஆயத்தமானதாலும் வெங்கொடுமைச் சிறையில் தள்ளப்பட்டார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். அப்பொழுது, ‘தமிழ்த்தாய் சிறையில்’ உள்ளதாகக் கூறித் தமிழ்  நெஞ்சங்கள் கவலைப்பட்டன.  உலகில் மொழிக்காகச்சிறை சென்ற  முதல் பேராசிரியர் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவாக மணிமண்டபம் அமைத்தல், பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அவர் பெயரைச் சூட்டல், பேராசிரியர் இலக்குவனார் பெயரில் உலகளாவிய விருதுகளை வழங்குதல், நடுவணரசு சார்பில் வழங்க உள்ள தொல்காப்பிய விருதைப் பேராசிரியர் சி.இலக்குவனாருக்கு இறப்பிற்குப் பின்னதாக வழங்கி அவர் நினைவைப் போற்றுதல் முதலியனவற்றைத் தமிழக அரசும் இந்திய அரசும் ஆற்ற வேண்டும்.

– நாடகச் செம்மல் பட்டுக்கோட்டை குமாரவேல்

(2006)

pattukkottaikumaravel