மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 இதழின் தொடர்ச்சி)
முதல் காப்பியம்
இத்தகைய மாறுபட்ட எண்ண ஓட்டங்களிடையே கல்லூரிக்கால விடுமுறையில் நூலகத்தில் படித்த ‘மாங்கனி’ எப்பொழுதும் நினைவில் மணக்கிறது; கருத்தில் சுவைக்கிறது. அதனைப்பற்றிய எண்ணத்தைப் பகிர விரும்புகின்றேன். கண்ணதாசன்எழுத்துலகில் இடம் பெற்ற 10 ஆண்டுகள் கழித்து எழுதிய இலக்கியமான ‘மாங்கனி’யே அவரது முதல் காப்பியம். 1954இல் கல்லக்குடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்று திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் இருந்த பொழுது உருவானது இக்காப்பியம். தம் காவிய ஆசையைத் தீர்க்கும் வகையில் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் என ஆறு நாளில் முடிக்கப்பெற்றது இக்காப்பியம்.விடுதலைக்குப்பின் தாம் நடத்திய ‘தென்றல்’ இதழில் சில பகுதிகளை வெளியிட்டுள்ளார். பின்னர் எவ்வகை மாற்றமுமின்றி நூலாக வெளியிட்டுள்ளார். பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், “கவிஞர் கண்ணதாசன் எழிற்கலைக்குத் தலைசிறந்த முதிர்ச்சி உண்டு” எனப் பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளார்.
மாங்கனி வரலாற்றுக் காப்பியமல்ல. ஆனால், வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பை எடுத்துக் கொண்டு, கற்பனை வளத்தைச் சேர்த்து இதனைப் படைத்துள்ளார்.
உருவாகிய கரு
அறுகை என்னும் மன்னன் உழிஞைப்போரில் ஈடுபட்டு மோகூர் மன்னன் பழையனை வென்றான். அறுகை வெற்றி பெற்றாலும், பழையனால் பிடிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டான். அறுகையின் நண்பனான செங்குட்டுவன் மோகூரைத் தாக்கி, நண்பனை மீட்டான். இந்த வரலாற்றுக் குறிப்பு சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகிறது. இதனை மையமாகக் கொண்டு, அமைச்சர் அழும்பில்வேளுக்கு மகன் இருப்பதாகவும் அவன் தலைமையில் படையெடுப்பு நடந்ததாகவும் கற்பனை செய்து கொண்டு இக்காவியத்தைப்படைத்துள்ளார். அழும்பில்வேள் மகன் அடலேறு என்னும் நல்லிளைஞனுக்கும்நாட்டிய நங்கை மாங்கனிக்கும் ஏற்பட்ட காதலையும், மோகூர் வெற்றியின் பொழுது பகைவன் கடத்தலால் மாங்கனி பிரிய நேரிட்டு, அவள் இறந்ததாய் எண்ணி வருந்திய பொழுது மன்னன் பழையனின் மகள் தென்னரசியை மணக்க நேர்ந்ததையும், பின்னர் அடலேறு மாங்கனியைக் கண்டு அவளைப் பின்தொடர்ந்து சென்ற பொழுது, அவள் ஆற்றில் குதிக்க, இவனும் குதிக்க, இவன் பின் ஓடி வந்த இளவரசி தென்னரசியும் ஆற்றில் குதிக்க மூவரும் ஆற்றில் மறைந்ததையும் இதனால் தென்னரசியின் தங்கை பொன்னரசி புத்தர் வழியில் சேர்ந்ததையும் கூறும் காப்பியம் இது. தென்னரசி, பொன்னரசி முதலானோரும் கற்பனை மாந்தர்களே! இருப்பினும் உண்மை வரலாற்றைக் காண்பதுபோல் சுவைபட இக்காப்பியத்தைப் படைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
சுவைமிகு கனி
கதைமாந்தர் அறிமுகச் சிறப்பு, தமிழர் பண்புநலன், உவமை நயம், இலக்கியச் சுவை முதலானவறறை இக்காப்பியம் வெளிப்படுத்துகின்றது. அவற்றுள் சிலவற்றை நாம் காணலாம்.எளிய தொடர்களாய் அமைந்தனவே இக்காவியம். எனவே, விளக்கம் தேவையில்லை. உவமை வரிகளைப்படித்தாலே . கவிஞர் கண்ணதாசனின் உவமைச்சிறப்பை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
செந்தமிழ்ப்பண்பாளன் சேரன் செங்குட்டுவனும் மக்களும்
சேரன் செங்குட்டுவனை அறிமுகப்படுத்தும்பொழுதே வீரத்திருமகன் என்பதை உணர்த்தும் வகையில் அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். சேரன் மார்பு வலிமையைக் கூறுவதற்கு அவன் மார்பில் வாள் பட்டால் அது மார்பைத் துளைக்காதாம்! வாள்முனைதான் கூர் மழுங்கிப் போகுமாம்! அதுபோல், பகையை வெல்வதை உணர்த்தும் வீரப்பார்வையுள்ள கண்கள் எதிர்நிற்கும் பகைவர் பாழ்பட்டார் எனக் கூறுமாம்!
வாள்பட்டால் கூர்மழுங்கும் வலிமை மிக்க
மார்பகத்திற் பொன்மணிகள் தொட்டி லாட
பாழ்பட்டார் பகைவர் எனக்கூறும் கண்கள்
பளபளக்க வீற்றிருந்தான் சேரர் கோமான்!
(மாங்கனி : 2. சேரன்அவையில்…1:1-4)
என்கிறார் கவிஞர்.
சேரன் செங்குட்டுவன் கனக விசயரை வென்று கண்ணகிப்படிமத்திற்குக் கல்லெடுத்து சுமந்துவர வைத்ததை யாரும் அறிவர். அந்நாளை விழாவாகச் சேர மன்னன் கொண்டாடுகின்றான்.
பழியுரைத்த ஆரியரை வென்றி கண்டு
பத்தினியின் சிலைசமைக்கக் கல்லெ டுத்து
இழிகுணத்தார் தலையேற்றிக் கொணர்ந்த நாளை
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 1:1-3)
அனைவரும் மகிழக் கொண்டாடியதாகக் கூறுகிறார் கவிஞர் கண்ணதாசன்.
கவிஞர் கண்ணதாசனின் இந்த எண்ணமே இப்படித்தான் ஆண்டுதோறும் வெற்றி விழா எடுத்திருப்பார்கள் என்று நம்மையும் சிந்திக்க வைக்கின்றது.
விழாவில் குவியும் ஆடவர் நடையையும் பெண்கள் நடையையும் கூறும் பொழுது,
நடையினிலே ஆடவர்கள் சிம்மம் போலும்
நங்கையர்கள் அளந்துவைக்கும் அன்னம் போலும்!
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 5: 3-4)
என்று இயல்பான உவமையையும் அழகாகப் பதிய வைக்கின்றார்.ஆனால், அடுத்துஒய்யார நடை நடக்கும் மகளிர் அன்றலர்ந்த மலர்மாலையன்ன உருவம் எனப் புது உவமை தருகிறார்
மலர்ந்த பூவில்
பக்குவமாய்க் கட்டிய மென்மாலை யன்ன
உருவத்தில் ஒளிசிதறி அங்கு மிங்கும்
ஒய்யார நடைநடந்தார் மாத ரெல்லாம்
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 6:1-4)
வெற்றிநாள்விழாதொடர்பாக மாங்கனியின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.நாட்டிய நிகழ்ச்சிக்குப் பின்னர், சேரன் வெள்ளிமாடத்தில் தனி இருக்கையில் இருக்கின்றான். அருகே மனைவி வேண்மாள். மங்கையரே மயங்கும் அழகுகொண்டவள் அல்லவா மாங்கனி. அவள்அழகில் மாமன்னன் மனைவி மயங்கியதில் வியப்பில்லை. எனவே, அவள், மாங்கனியின்அழகைப்பற்றி மாமன்னனிடம் கூறத் தொடங்குகிறாள்.
மாங்கனி அழகைப் பற்றி
மடக்கொடி வேண்மாள் சொல்ல,
“ஈங்கது வேண்டாம் கண்ணே!
(மாங்கனி : 3. வெள்ளிமாடத்தில் 2:1-3)
என மன்னன் தடுத்து நிறுத்துகிறான். கலையழகு கலைமன்றத்துடன் போகட்டும்! இங்கெதற்கு என எண்ணுகிறான். எனவே, தன் மங்கை நல்லாளிடம்,
இன்னொரு பெண்ணிற் சிந்தை
தீங்குதான், அழகைப் பற்றிச்
சிந்தனை போதும்” என்றான்!
(மாங்கனி : 3. வெள்ளிமாடத்தில் 2:4-6)
இதுகேட்டு அரசி வேண்மாள்பெருமிதம் கொண்டு பெருக்கின்றாள். அவள் அரசி என்றாலும் மனைவிதானே! தன் கணவன் தன்னைத்தவிர பிற பெண்ணின் அழகை நோக்குபவள் அல்லன் என்னும் பொழுது,
ஒழுக்க ந்தானே பெருமையாம்
(மாங்கனி : 3. வெள்ளிமாடத்தில் :6-7)
என மகிழத்தானே செய்வாள்.
வடக்கே இசுலாமிய அரசர்கள், தெற்கே நாயக்கமன்னர்கள் போன்று, பிற்கால அயலக அரசர்கள் பல மனைவி கொண்டு வாழ்ந்துள்ளனர். இதனால் சங்கக் காலத்தில் அந்தப்புரங்களில் இன்பம் தரும் ஆரணங்குகள் நிறைந்திருந்தமை போல் சிலர் தவறாக எழுதுகின்றனர். பிறன்மனை விழையா தமிழ்நெறி ஆடவர் கற்பை உணர்த்துவதன்றோ! அதற்கிணங்க மூவேந்தர்களும் வாழ்ந்திருந்தனர் எனப் பாங்குடன்அவர்கள் பண்பினைக் கவிஞர் கண்ணதாசன் பதிய வைக்கின்றார்.
(தொடரும்)
Leave a Reply