(மார்கழி 6, 2045 / திசம்பர் 21,2014 தொடர்ச்சி)

 mangani_attai kannadasan04

மனத்திலமர்ந்த மாங்கனி

நாட்டிய நங்கை மாங்கனியைச் சேரன் அவையில் நுழைவதைக் கூறி அறிமுகப்படுத்துகிறார். அப்பொழுது அனைவர் சிந்தையிலும் அவளே நிறைந்துள்ளாள் என்பதை,

மின்வெட்டுக் கண்கட்ட மேவி னாற்போல்

மென்பட்டுப் பூங்குழலி பூமி தொட்டுப்

பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்;

புத்தியெல்லாம் அவளானார் அவையி ருந்தோர்!

(மாங்கனி : 2. சேரன் அவையில் .. 4: 1-4)

என விளக்குகிறார்.

பெண்கள் தங்கள் பார்வையால் ஆண்களைத் தாக்கி வீழ்த்துவதால் அவர்களின் கூரிய விழிகளை வேல்விழி என்றும் வாள்விழி என்றும் புலவர்கள் கூறுகின்றனர். கவிஞர் கண்ணதாசன் ஒரு படி மேலே போகிறார்.வாளை மூடி இருப்பது உறைதானே! அதுபோல் பாவையரின் கண்களை மூடும் இமையை உறையாகக் கூறுகிறார்.

கொலைவாளுக் குறைபோல விழிவாளுக் கிமையும்

(மாங்கனி : 2.சேரன் அவையில் ..6:1)

விழிவாள் என்பது முன்னோர் கூற்று. வாளுறைபோல் விழி இமை என்பது கண்ணதாசனின் புது உவமை.

நாட்டியத்தின் சிறப்பு, விரைவான ஆட்டம். நாட்டியநங்கை மாங்கனியின் ஆட்ட விரைவை விளக்க அடுக்கு உவமைகளை அள்ளி வீசுகிறார் கவிஞர் கண்ணதாசன்.

காற்றுக்கு முருங்கைமரம் ஆடல் போலும்

கடலுக்குள் இயற்கைமடி அசைத்தல் போலும்

நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்

நல்லோர்தம் அவைக்கண்ணே நடன மிட்டாள்

(மாங்கனி : 2. சேரன் அவையில் .. 8:1-4)

அதே நேரம் சேரன் அவையில் உள்ளோர் நாட்டியத்தால் ஈர்க்கப்படுகின்றனரே தவிர, எண்ணத்தில் களங்கமில்லாதவர்கள் என்பதை உணர்த்த ‘நல்லோர் தம் அவை’ என்று குறிப்பிடுகிறார்.

மாங்கனி ஆடுகிறாள்; ஆடவாச் செய்கிறாள்? விழி அம்பெடுத்து எய்கிறாள்; மெய் மறந்த அவையோர் நாட்டியச்சிறப்பில் வீழ்ந்து அசைவற்றப் பிணம்போல் ஆகிறார்கள். காந்தள் விரல் என்ற சங்கக்கால உவமையுடன் செம்பருத்திப்பூப்போல உள்ளங்கை எனத் தன் உவமையையும் கலந்து கவிஞர் கண்ணதாசன் விளக்குகிறார். இதோ அப்பாடல் வரிகள்:-

செம்பருத்திப் பூப்போலும் உள்ளங் கையும்

செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி

அம்பெடுத்து வில்லேற்றித் தொடுத்து விட்டு

ஆடுகிறாள், பிணமாக அவையோ ரங்கே!

(மாங்கனி: 2.சேரன் அவையில் ..9:1-4)

 

  பரத்தையர் குடும்பத்தில் பிறந்தவள் மாங்கனி. எனினும் இல்லறத் தலைவியாகப் பண்புடன் வாழ எண்ணுகிறாள். இதுபோலவே அவள் தாய்

பார்ப்பார்க்கும் கேட்பார்க்கும் ராப்பெண்டாகப்

பணியேன்நான்

(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 7:3-4)

எனத், தானும் எண்ணியதாக நயத்துடன் நவில்கிறார் கவிஞர். பார்த்து ஆசைப்பட்டு அடைய எண்ணுபவர்களுக்கும் விலை கேட்டு வருவோர்க்கும் இரவு நேரப் பெண்ணாக இருக்க விரும்பாமல் ஒருவனின் வாழ்க்கை முழுவதும் நல்லறத் துணையாக இருக்கவே கணிகையர் விரும்புகிறார்கள் என்பதை எப்படி அழகாக உணர்த்துகிறார் பாருங்கள். நாட்டியப் பெண்களாகிய தேவதாசிகளை அடிமைப்படுத்தும் கோயில் பூசாரிகளின் செய்கையையும் இதே அடிகளில் உணர்த்துகிறார் என்றும் கொள்ளலாம்.

  தன்னைப் போலவே மாங்கனியும் இல்லற வாழ்க்கையை விரும்பினாலும் இயலாதெனக் கூற வரும் அவள்தாய், உவமை மூலம் குடும்பச் சூழலை உணர்த்துகிறாள். குளத்துநீர், பாசி படிந்து மாசுஅடைந்து உள்ளது. ஆனால் குளத்து நீர் மாசுஅடைந்துள்ளமை பற்றி எண்ணாமல் தூய பனித்துளியின் கூட்டம் என அறியாமையால் எண்ணுமாம்! தூய பனிநீரும் பாசி படிந்த குளத்தில் விழும்பொழுது தூய்மை கெட்டு மாசு அடைவதுபோல், பிறக்கும்பொழுது தூயவளாகப் பிறந்திருந்தாலும் பரத்தையர் குடும்பத்தில் பிறந்தமையால். தூய்மை இழந்தவளே! எனவே, பாசிநீரைக் குடிக்க யாரும் விரும்பாதது போல், நற்குடிமகன் யாரும் திருமணம் செய்ய முன்வரார் என்கிறாள்.

எனவே,

பாசிபடி நீரேனும் குளத்தின் சொந்தம்

பனித்துளியின் கூட்டென்று கருது மன்றோ?

(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 8:7-8)

எனக் கேட்கிறாள்.

(சுவைக்கும்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/08/ilakkuvanar_thiruvalluvan+10.png