மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் – இலக்குவனார் திருவள்ளுவன்
மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன்
எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தால்மியாபுரம் பெயர் மாற்ற எதிர்ப்பான கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் அமர்ந்தவர்; கோடை விடுமுறைகளில் கலைஞர் கருணாநிதியின் நச்சுக் கோப்பை, தூக்கு மேடை போன்ற சீர்திருத்த நாடகங்களை இயக்கியும், கதைத்தலைவன் வேடங்களில் நடித்தும், விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டவர்; பள்ளி இறுதி வகுப்பு பயிலும் பொழுது தேவிகுளம், பீர்மேடு கேரளத்தோடு இணைக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்தத்தில் பள்ளி மாணாக்கர்களையும் பங்கேற்கச் செய்தவர்; மாணவப் பருவத்திலேயே தமிழ்க்காப்புப் பாதையில் நடைபோட்ட அவர்தாம் புலவர் இளஞ்செழியன்.
இளைமையில் முளைத்த தமிழார்வம்
இளமையில் ‘நாம் தமிழர்’ உணர்வூட்டும் தினத்தந்தி, திராவிட நாடு, திராவிடன், மன்றம், முரசொலி, விடுதலை, முதலான திராவிட இயக்க இதழ்கள், தமிழரசுக் கழக இதழ் செங்கோல் முதலானவற்றைப் படித்த ஆர்வம், இவரைத் தமிழுணர்வு கொள்ளச் செய்தது; பின்னாளில் இவர் இதழாசிரியராக விளங்க அடிப்படையாய் அமைந்தது. இலால்குடி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகளைக் கேட்கும் ஆர்வம் இவரின் பேச்சத் திறமையையும் எழுத்துத்திறமையையும் வளர்த்தது.
திருச்சிராப்பள்ளியில் தமிழ்ப்பணி
1960 முதல் 1970 வரை திருச்சிராப்பள்ளியில் இருந்தார். இக்காலக்கட்டத்தில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற திருமணங்கள், ஆசிரியர் சங்கக் கூட்டங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், அரசியல் மேடைகள், கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள் எனப் பலப்பல நிகழ்ச்சிகளில் கலந்து உரையாற்றியுள்ளார். பல திருமணங்களுக்குத் தலைமை தாங்கியும், திருமணங்களை நடத்தி வைத்தும் தமிழ் மரபு திருமணமுறையைப் பரப்பினார்.
1963இல் திருச்சியில் மதுரம் திடலில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழக ஏற்பாட்டில், இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. இம் மாநாட்டின் நான்கு செயலாளர்களுள் ஒருவராக இருந்து மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார். மாநாட்டின் இரண்டாவது நாளில், “போர் மறவனே, புறப்படு” என்ற தலைப்பில் வீர முழக்க உரையாற்றினார். பேச்சின் இடையே “அண்ணாவுக்கு நரைத்துவிட்டது மீசை, அவருடைய கையிலே திராவிடத்தை வாங்கி நாம் ஒப்படைக்க வேண்டும். இது நமது இதய ஆசை” என்று முழங்கினார். முன்னிலை வகித்திருந்த பேரறிஞர் அண்ணா மீசையில் கை வைத்து, “அப்படியா” என்று உரத்த குரலிலே சொல்ல, மதுரம் திடல் அதிர்ந்ததைப் பசுமையாக நினைவாகக் கொண்டுள்ளார்.
தமிழாசிரியப் பணி
1966 முதல் 1973 வரை சமயபுரம் அ/மி மாரியம்மன் உயர்நிலைப் பள்ளி, திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, திருச்சி ஃகீபர் பாதிரியார் உயர்நிலைப் பள்ளி, சென்னை எட்டியப்பர் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழாசிரியராகப் பணியாற்றி, மாணாக்கர்களுக்குத் தமிழார்வத்தை ஊட்டினார்.
இதழார்வம்
இவரின் எழுத்தார்வம், கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று 1960இல் புலவர் பட்டம் பெற்றாலும் தமிழாசிரியப் பணிக்குச் செல்லாமல் தடுத்தது. இதழியல் துறையில் ஈடுபடச் செய்தது. எனவே, திருச்சிராப்பள்ளியில் ‘போர்க்குரல்’ என்னும் வார ஏட்டை 1960 முதல் 1967 வரை நடத்தினார். 1968இல் ‘முகில்’ என்கிற இலக்கிய மாத இதழை நடத்தினார். இதன் தொடக்கவிதழைப் பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட்டார்.சென்னையிலிருந்து முகில் இதழை1974 முதல் 1987 வரை நடத்தினார். சாந்தா பதிப்பக வெளியீடான ’கண்டுபிடி’ கல்வி மாத இதழின் சிறப்பு ஆசிரியர் பொறுப்பில் 10 ஆண்டுகள் செயல்பட்டார். உலகத் தமிழர் மாமன்ற வெளியீடான ‘உலகத் தமிழர் குரல்’ இதழை ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்தினார். 2000 ஆம் ஆண்டில் ( எதுவரை?)“விண்முகில்” பல்சுவை காலாண்டு இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.
உலக அமைப்புகள் உருவாக்கம்
உலகத் தமிழர்களுக்கோர் உறவுப்பாலங்கள் அமைக்க 1991இல், ‘இந்திய – மலேசியப் பண்பாட்டுக் கழகம்’ அமைத்தார் 1999இல் ‘உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை’ அமைத்தார். இரண்டு அமைப்புகளையும் நாவலர் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் தொடங்கினார். இவற்றின் சார்பாக இவர் திறம்பட நடத்திய நிகழ்ச்சிகள் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளன.
1993இல் இந்திய – மலேசியப் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சென்னையில் “வையத்தமிழர் வாழ்விலே” என்ற தலைப்பில் ஒருநாள் மாநாடு நடத்தினார். மலேசியாவில் இருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் 200 பேராளர்கள் கலந்து கொண்டனர்
1996இல் மேற்கூறிய இரண்டு அமைப்புகளின் ஏற்பாட்டில், , “உலகத் தமிழ் ஒப்புரவாளர் மாநாட்டை நடத்தினார். மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, சப்பான் நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளார்கள் வருகை தந்து சிறப்பித்தனர். புலவர் இளஞ்செழியன் ஆற்றியுள்ள பணிகளில் இந்த மாநாடு ஒரு மகுடமாய் அமைந்தது.
மலர்மாமணி
1967 முதல் கருத்தரங்க மலர்கள், இலக்கிய மலர்கள், நினைவு மலர்கள் முதலானவற்றைச் சிறப்பாகத் தொகுத்து வெளியிடும் பொறுப்பில் ஈடுபட்டார். நாடகப்பேராசியர் இராம. நடராசனார் மலர்(1967), முகில் கலைஞர் மலர்(1970), முகில் அண்ணா மலர்(1974), முகில் என்.வி. நடராசன் மலர்(1974), முகில் அன்பில் தருமலிங்கம் மலர்(1975), முகில் மன்னை ப. நாராயணசாமி மலர்(1975), முகில் பேராசிரியர் க. அன்பழகன் மலர் (1975), ‘கண்டுபிடி’ கல்வி இதழ் வைரவிழா மலர் (1978),கவிஞர் சுரதா மணிவிழா மலர்(1982) என்று இதழ் மலர்களை வெளியிட்டு வந்தார். கோலாலம்பூரில் 1987இல் நடந்த ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டின் மலர்க்குழுத் தலைவராக இருந்தார். மாநாட்டுமலரின் ஆசிரியராக இருந்து 650 பக்கங்கள் கொண்ட மலரைச் சிறப்பாக உருவாக்கினார். இதனால், ‘மலர்மாமணி’ என்று இவர் அழைக்கப்பெற்றார்
இந்த மலர்ச்சிறப்பைப் பார்த்தவர்கள், 1989இல் மொரீசியசுத் தீவில் நடந்த ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரை இவர் உருவாக்கினால் நன்றாக இருக்கும் என மொரிசியசு தமிழன்பர்கள் எண்ணினர். ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரைத் தன் சொந்தச் செலவில் உருவாக்கித் தந்தார். இவர் கை பட்டால் விழா மலர் மணக்கிறது என உணர்ந்தவர்கள் 1990இல் கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழர் மாநாட்டு மலரையும் இவர் பொறுப்பில் விட்டனர்.
தொடர்ந்து, “மலர் வெளியீடா?-புலவர் இளஞ்செழியனை அழையுங்கள்” எனப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை மலர்(1991), இலங்கை அமைச்சர் சௌமிய தொன்டமான் முத்துவிழா மலர்(1992), திருக்குறளார் முத்துவிழா மலர்(1992), சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லபாண்டியன் சிலை திறப்புவிழா சிறப்பு மலர்(1995), நாவலர் பவளவிழா மலர்(1995), உலகத்தமிழ் ஒப்புரவாளர் மாநாட்டு மலர்(1996), மலர்மாமணி இளஞ்செழியன் இலக்கியப் பொன்விழா மலர்(2001), தாய்லாந்து மலேசியா சிங்கப்பூர் இலக்கியப் பன்பாட்டுச் சுற்றுலா மலர்(2005), சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக 30ஆம் ஆண்டு நிறைவு முத்துவிழா மலர்(2006), இளம்பாரி உ. கருணாகரன் மணிவிழா மலர்(2007), பகுத்தறிவுச் செம்மல் சோ. ஞானசுந்தரம் முதல் ஆண்டு நினைவு வண்ண மலர்(2008) எனப் பல மலர்களை உருவாக்கினார்.
திருக்குறள் நெறி மாநாடு
திருக்குறளார் வி. முனிசாமி இயக்குநராக இருந்த திருக்குறள் நெறி பரப்பு மையத்தின் சென்னை, திருச்சிராப்பள்ளி மாநாடுகளில் தொடர்பாளனாக இருந்து பலரும் பாராட்டும் வண்ணம் நற்பணியாற்றியுள்ளார்.
நூலாக மலர்ந்த மாநாட்டுரை
மதுரையில் 1992இல் நடந்த அ.இ.அ.தி.மு.க.வின் ‘வீர வரலாறு கூறும் வெற்றி மாநாட்டில்’, ‘வெள்ளுடை வேந்தர் முதல் வெற்றி வீராங்கனை வரை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தமையால், இந்தத் தலைப்பையொட்டி ‘புரட்சித்தலைவி ஒரு புறநானூறு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.
உலகத்தமிழ் மாநாடுகளில் பங்கேற்பு
சென்னையில் நடந்த இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு (1968) மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு (1982) மலேசியாவில் நடந்த ஆறாம் உலகத் தமிழ் மாநாடு (1987), மொரீசியசுத் தீவில் நடந்த ஏழாம் உலகத் தமிழ் மாநாடு (1989), தஞ்சையில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாடு (1995) ஆகியவற்றில் கவியரங்குகளில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார்.
2010இல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மனைவி திருவாட்டி விசயலட்சுமி யுடன் பேராளராகக் கலந்து கொண்டார். மாநாட்டு ஆய்வரங்கம் ஒன்றில், “ஒளவையார் முதல் அழ. வள்ளியப்பா வரை சிறுவர் இலக்கியம்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார்.
மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, தாய்லாந்து, அமெரிக்கா முதலான அயல் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். அங்கெல்லாம் தமிழின் சிறப்பு, தமிழர் பண்பாடுகளை இலக்கியக்கூட்டங்கள் வழிப் பரப்பினார்.
கவியரங்கங்களில் பங்கேற்பு
1990இல் கோலாலம்பூரில் உலகத் தமிழர் மாமன்றம் நடத்திய முதல் உலகத் தமிழர் மாநாட்டுக் கவியரங்கத்திற்கும், 2006இல் சிங்கப்பூரில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 30ஆம் ஆண்டு நிறைவு முத்தமிழ் விழாக் கவியரங்கத்திற்கும் தலைமை தாங்கியுள்ளார்.
நூல்கள்
தம் கவிதைகளைத் தொகுத்து இளஞ்செழியன் கவிதைகள் (முதல் தொகுதி) என வெளியிட்டார். இதற்குத் தமிழக அரசின் இரண்டாம் பரிசு கிடைத்தது(1991). இதற்கு வரவேற்பு இருந்தமையால் இளஞ்செழியன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)-ஐயும் வெளியிட்டார். இவரது கவியரங்க நூல், ஒரு நன்பாட்டுப் புலவனாய்க் கவியரங்கேறி….! என்பதாகும். பாவேந்தரின் சொல்லும் சுவையும் சிறார் இலக்கியத்திலும் தடம் பதித்து, மழலை மலர்கள்(குழந்தைப் பாடல்கள்), சங்கர் தமிழ் 1, 2(மழலையர் பாடநூல்கள்),சிறுவர் சிந்தனைக் கதைகள், பள்ளி மாணவர் பரிசுப் பேச்சுக்கள் (தொகுப்பு) என்னும் நூல்களை வெளியிட்டார். நாடக ஆசிரியரான இவர், சந்திப்பு என்னும் வானொலி நாடகத்தையும் நூலாக வெளியிட்டார். மூப்பனாரைப் பாடுகின்றேன், அண்ணாவின் சிந்தனைகள் (தொகுப்பு), விழித்தெழுவோம் தொகுப்பு), பாரதியார் வாழ்க்கைச் சுருக்கம், கட்டுரைகளும் கடிதங்களும், நெஞ்சை அள்ளும் சிலம்பில் நினைவை அள்ளும் மாதவி. இலக்கியத்தில் நாம், பாலும் தெளிதேனும்(அகமும் புறமும் சார்ந்த நூல்), பதிப்பகச்செம்மல் க. கணபதி (வாழ்க்கை வரலாறு) என்பன இவரின் பிற நூல்களாகும். முன்னரே குறிப்பிட்டு்ளள ‘புரட்சித் தலைவி ஒரு புறநானூறு’ நூலுக்கு 2011இல் தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது.
2018 இல் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ‘தமிழவேள் கோ.சாரங்கபாணி பிள்ளைத் தமிழ்‘ நூலை வெளியிட்டார். இந்நூலில் காப்புப்பருவத்தில் கடவுளர்களைப் பாடாமல், தமிழ்த்தாய், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன்,கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார், இலீகுவான் கியூ, பெரியார், காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஞ்சியார் ஆகியோரை முன்னிறுத்திப் பாடினார்.
விருதுகள்
சாந்தா பதிப்பகத்தின் ‘மலர்மாமணி’ விருது(1987), வி.சி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளையின் கவிதை இலக்கிய விருது(1991), திருக்குறள் நெறிபரப்பு மையத்தின் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருது(1992), தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது(1993), பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் ஐந்தாம் மாநாட்டில் வழங்கிய ‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருது(2002),சென்னைத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ‘இன எழுச்சிக் கவிஞர் விருது’(2009), சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் ‘மாதவி இலக்கிய விருது’(2009). 2018இல் மலேசிய பன்னாட்டுத் தமிழுறவு மன்றச் சார்பில் ‘புலவரேறு விருது’ முதலான விருதுகள் இவரை அணி செய்வன.
இவையல்லாமல், பல்வேறு அமைப்புகள் இவருக்கு இனமானச் செம்மல், இனமானப் புலவர், எழுச்சி நடைக்கவிஞர், மலர் மாமன்னன், கவிக்குன்றம், புலவர்மாமணி போன்ற விருதுகளை வழங்கியுள்ளன.
குடும்பம்
அருணாசலம் – வெள்ளையம்மாள் இணையரின் திருமகனாக வைகாசி 28, 1969 / 10.06.1938 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், பெருவளப்பூரில் பிறந்தார். தந்தை கோனேரி அருணாசலம் நெடிது உயர்ந்த தோற்றத்தால் நாடகத் துறையில் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்தார். அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை நாடகத்தில் இராமனாக நடித்துப் போற்றப்பட்டார். தமக்கை முத்துப்பேச்சி, தங்கை செல்லம்மாள்
மனைவி விசயலட்சுமி. இவர்களது திருமணம் சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு தலைமையில் 1963இல் நடந்தது. மனைமாமணி விசயலக்குமி என்று போற்ற வாழ்ந்து மறைந்தவர். மூத்த மகன் மாமுடிச்சோழனுக்கு 1996இல் நாவலர் இரா. நெடுசெழியன் தலைமையிலும், 2001இல் இளைய மகன் மணிமுடிச்சோழனுக்கு மதிப்புமிகு எசு.டி சோமசுந்தரம் அவர்கள் தலைமையிலும் ‘சாதி மறுப்புத் திருமணங்கள்’ செய்து வைத்தார். மூத்த மருமகள் முனைவர் மணிமேகலை; பேத்தி பொறி.சோழமாதேவி’ இளையமருமகள் தீபா’ பேரன் கவின், பேத்தி காவியா.
“எனக்கு நான் வாழ்வதிலோர் இன்பம் இல்லை, இருந்துநான் வாழ்வதெல்லாம் தமிழுக்காக” என்பதைக் கொள்கையாகக் கொண்டு மூச்சு பேச்சு முழக்கம் யாவும் தமிழ் என வாழ்ந்து வருகிறார்.
பள்ளி வாழ்க்கையில் ஏற்பட்ட பொதுநல வேட்கை நாளும் வளர்ந்ததே தவிரத் தளரவில்லை. பள்ளிப்பருவத்தில் உள்வாங்கிய தமிழ்உணர்வு, இவரைச் சொற்பொழிவாளராக, கவிஞராக, இதழாளராக, அமைப்பாளுநராக. மாநாடுகளின் ஏற்பாட்டாளராக, மலரச் செய்து மலர் மாமணியாக. புலவரேறாக உயரச் செய்துள்ளது.
[தொடர்பிற்கு:
மலர்மாமணி புலவர் இளஞ்செழியன்
புலவர் குடில், 22-23, ஐந்தாம் தெரு, பெரியார் நகர்,
மடிப்பாக்கம், சென்னை – 600 091.
பேசி : 98404 15909 \ 9790721560
மலர் மாமணி புலவர் இளஞ்செழியன்
தமிழ் மணம் கமழ நீடு வாழ்க!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply