சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள்

தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!

மின்னம்பலம்

மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டால் போதுமானது. 3 ஆவது மொழி என்பது பிற மொழியினருக்கு மட்டுமே இருக்க வேண்டும். எனவே, கல்வி நிலையங்களில் எந்த வகையிலும் இந்தி, வடமொழி திணிப்பு இல்லாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும்

நவோதயா பள்ளிகளுக்குரிய முழுத் தொகையையும் தமிழக அரசே பெற்று முழுமையான தரமான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்” என்றும் நாம் முன்னர்க் கூறியதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம். கடந்த ஆட்சியில் கூறிய கருத்துகள்தாம் இவை. எனினும் எதையும் திட்டமிட்டு மக்கள் நலனில் கருத்து செலுத்தி ஆட்சி செய்யும் முதல்வர் மு..தாலின் தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்க மாதிரிப் பள்ளிகளை அடித்தளமாகக் கொண்டு கல்விப்பணியாற்ற வேண்டுகிறோம்.

மாதிரிப் பள்ளி என்பது கட்டமைப்பிலும் உயர்ந்து இருக்க வேண்டும்; கல்வி முறையிலும் சிறந்து இருக்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் – ஆங்கிலேயர் வெளியேறும் வரை – தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வி எவ்வாறு இருந்தது என்பதற்கு இரண்டு சான்று.

செக்கிழுத்த செம்மல், தமிழறிஞர் ..சிதம்பரம் அவர்கள் தன் வாழ்க்கை வரலாற்றில்,

அறிவரிச் சுவடி ஆத்தி சூடி

செறிவுறக் கேட்டுச் சிந்தையுட் கொண்டேன் ;

எண்ணின் சுவடி எழுதும் சட்டம்

கண்ணுறக் கொண்டு கருத்தொடு பழகினேன்

உலக நீதி ஒழுக்க இயல்பு

பலமுறை கேட்டுப் பண்பொடு பயின்றேன்

கொன்றை வேந்தன், குழியின் பெருக்கம்,,

வென்றி வேற்கை. வெண்பா மூதுரை

இயற்றிய ஆன்றோர் எண்ணிய பொருளுடன்

பயிற்றிய வண்ணம் பண்புறக் கேட்டேன்.

எனக் குறிப்பிடுகிறார்.

இவற்றுள், ‘குழியின் பெருக்கம்’ என்பது ‘குழிப்பெருக்கம்’ எனும் கணித நூல்; ‘வென்றிவேற்கை’ என்பது ‘வெற்றிவேற்கை; வெண்பா’ என்பது ‘நளவெண்பா’.

கல்வி என்பது விளையாட்டுக் கல்வியும் இணைந்ததே. தான் விளையாடிய விளையாட்டுகள் குறித்துப் பின்வருமாறு தமிழறிஞர் வ.உ.சிதம்பரம் (பிள்ளை) கூறுகிறார்.

சுவர்மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,

கவண் கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,

கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,

எண்ணினைச் சுவாசம் இழக்காதி யம்பல்,

குதிவட் டாடுதல், கோலி தெறித்தல்,

குதிரைமீ தூர்தல், கோலேறி நடத்தல்,

காற்றிரி எறிதல், கான்மாறி யோடுதல்,

மேற்றிரி பந்தின் விளையாட்டுப், பற்பல.

சடுகுடு, கிளியந் தட்டு, பல்லி,

தெடுகடு மோட்டம், நீர்விளை யாட்டம்,

கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,

தம்மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,

கசாத்து, பசுக்கி, கலப்புறு குசுத்தி,

நிசத்துச் சண்டையில் நீந்தும் முறைகள்,

தாயம், சோவி, சதுரங்கம், சொக்கட்டான்,

காயிதச் சீட்டுக் கரந்திருந் தாடுதல்,

வெடிகொடு சுடுதல், வில்கொடு தெறித்தல்,

அடிபிடி சண்டை அளவில புரிந்தேன்.

என்கிறார். இவற்றுள் தம்மினை அடக்குதல் என்றால் மூச்சினை அடக்குதல். இவையெல்லாம் வலிமையான உடல் வளத்திற்கும் அதன் வழி மன நலத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைவன.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தம்முடைய ‘என் வாழ்க்கைப்போர்’ தன்வரலாற்று நூலில், தம் 7 ஆம் அகவைக்குள்ளாகவே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிசாரம், கிருட்டிணன் தூது, நிகண்டுகள், கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என அனைத்தும் கற்றதைக் குறிப்பிட்டுள்ளார். மாலையில் விளையாட்டு, இரவில் நாடகப்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள், வழிபாட்டுப் பாடல் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டமையால் தம் அகவைக்குரிய முழுமையான கல்வியைப் பெற்றதையும் தெரிவிக்கிறார்.

இப்பொழுதெல்லாம் முதுகலையில் கூட முழு நூல் எதையும் படிப்பதில்லை. எல்லாம் அரைகுறைப்படிப்புதான். சிறப்பான கல்வியை அரைகுறைப்படிப்பு எவ்வாறு தரும்?

மாதிரிப்பள்ளிகள் முழுமையான நூற்கல்வியையும், விளையாட்டு, கலைக்கல்வியையும் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

பத்து அகவை வரை எழுத்துக்கல்விக்கு முதன்மை அளிக்காமல் கேள்வியறிவு மூலம் வாய்மொழிக் கல்விக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்பது பேரா.இலக்குவனார் கருத்து. கல்வி உளவியலாளர்களும் இவ்வாறுதான் வலியுறுத்துகின்றனர். எனவே, மாதிரிப்பள்ளிகளில் நாமும் மனப்பயிற்சியை வளர்த்தெடுக்கும் கல்வி முறையால் அறக்கருத்துகளைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதன் மூலம் நல்ல தலைமுறையினரை உருவாக்க இயலும். மனப்பயிற்சிக் கல்வி என்பது படைப்புத் திறனை வளர்க்கும் தற்சிந்தனைக் கல்வியாக மாறவேண்டும். அதற்கு மாதிரிப்பள்ளிகள் வாய்ப்பளிக்க வேண்டும்.

“தமிழ்மொழிக்கல்விக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் முத்தமிழ்ப்போர்வாள் பேரா.சி.இலக்குவனார் முழக்கத்திற்கு முதல்வர் மு.க.தாலின் செவி மடுக்க வேண்டும். முந்தைய ஆட்சியாளர்கள் வழியில் செல்லாமல், சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தமிழ்க்கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப அயல்மொழியினருக்கு மட்டும் அயல்மொழிக் கல்வியை அளித்தால் போதுமானது. அதுபோல் தமிழர்க்கு உயர்கல்வியில் அயல்மொழி கற்பதற்கான வாய்ப்பைத் தந்தால் போதுமானது ‘என்பதை நினைவூட்டித் தமிழ்வழிக்கல்வியைமட்டுமே மாதிரிப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்வழிக்கல்விக்காகப் பல போராட்டக்களங்களைக் கண்ட பேரா.சி.இலக்குவனார் சிறைவாழ்க்கையையும் மேற்கொண்டார். தமிழ் நாட்டில் உலகம் போற்றும் அறிவியல் அறிஞர்களோ பொருளியல் வல்லுநர்களோ தோன்றாமைக்குக் காரணம் என்ன என வினா தொடுக்கிறார்; அவர், நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே “பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ” [குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965]. என்று, எல்லா நிலையிலும் தமிழ்வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வலியுறுத்தும் பின்வரும் கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டரசு பின்பற்ற வேண்டும்.

  1. மழலை நிலையில் திருக்குறளையும் ஆத்திசூடி முதலான பிற அற நூல்களையும் கற்பிக்க வேண்டும்.
  2. மழலை நிலையிலேய தமிழர் விளையாட்டுகளிலும் தமிழ்க்கலைகளிலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
  3. தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளி வரை தமிழ் மட்டுமே மொழிப்பாடமாக இருத்தல் வேண்டும்.
  4. கல்வியகங்களின் எல்லா நிலைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  5. தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் தமிழ்வழிப்படித்தவர்களையே அமர்த்தல் வேண்டும்.
  6. பட்ட வகுப்புகளில் திருக்குறளுக்கெனத் தனித்தாள் இருத்தல் வேண்டும்.
  7. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறளை அனைவரும் அறியும் வகையில் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் மாதிரிப் பள்ளிகளைத் தமிழ்ப்பால் ஊட்டும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளாக அமைத்தல் வேண்டும். இப்போது நடந்துவரும் தாய்த் தமிழ்ப்பள்ளிகள் கட்டமைப்பில் சிறந்து விளங்க அரசு உதவி புரிதல் வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம், பங்குனி 23, 2053 / 06.04.2022