mayaandi bharathi_thamizhaga arasiyal

‘‘ஏறினா இரயிலு… இறங்கினா செயிலு!’’

– மாயாண்டி பாரதி என்ற சரித்திரம்

மாயாண்டி பாரதி… மதுரை என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர்.

  இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி பிப்பிரவரி 24 ஆம் நாள் விடுதலை மண்ணில் மரணமடைந்தார்.

  மதுரை மேலமாசி வீதியில் 1917 ஆம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் மாயாண்டி. இவருக்கு 13 அகவை ஆகும்போது 1930ஆம் ஆண்டு திருமரைக்காடு என்னும் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் மாயாண்டியின் அண்ணன் கருப்பையா கலந்துகொண்டார். 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை மாயாண்டி தன் மாணவ நண்பர்களுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

  அந்த உந்துதலில், ‘இலசபதிராய் வாலிபர் சங்கம்’ என்கிற ஓர் அமைப்பை உருவாக்கி அதன் வழியாகப் போராட்டத்தை வீரியப்படுத்தினார். ‘ஏறுனா இரயிலு இறங்குனா செயிலு’ என்ற அளவுக்கு இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடத் தொடங்கினார். இந்திய விடுதலைக்காக 13 ஆண்டுகாலம் சிறையில் வாழ்க்கையைக் கழித்தவர் மாயாண்டி. மாயாண்டி கால் படாத ஊர்கள் கிடையா. அந்த அளவிற்கு மக்களிடம் விடுதலைப் போராட்ட விதையை விதைத்தவர் இவர்.

  மாயாண்டி எப்படி மாயாண்டி பாரதியானார்?

பாரதியார் மீது மிகுந்த பற்றுகொண்டிருந்தார் மாயாண்டி. இவர் நடத்தும் போராட்டங்களைக் கண்டு வியந்த நண்பர்கள் சிதம்பர பாரதி, தியாகராசசிவம் போன்றவர்கள்தான் மாயாண்டி என்கிற பெயரை மாயாண்டி பாரதி என்று மாற்றினார்கள்.

  1934ஆம் ஆண்டு காந்தியடிகள் மதுரைக்கு அரிசனங்களுக்காக நிதி திரட்டுவதற்காக வந்த போது மாயாண்டி பாரதியை நேரில் சந்தித்துப் பேசினார். 1935ஆம் ஆண்டு சூலை 9 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம் நடைபெற்றது. அதே நாளில் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள ஃகாசிமூசா துணிக்கடை முன்பு அயல் நாட்டுத் துணிகள் விலக்குப் போராட்டம் நடைபெற்றது அப்போது மாயாண்டி பாரதி மாணவனாக இருந்தார்.

  அந்த இடத்தில் ஆங்கிலேயக் காவல் துறையால் போராட்டக் குழுவினர் தாக்கப்பட்டார்கள். காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியை இலசபதிராய் வாலிபர் சங்கம் சார்பாகச் செய்தார் மாயாண்டி பாரதி.

  1938ஆம் ஆண்டு முதல் காங்கிரசுக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் மாயாண்டி பாரதி. இராசபாளையத்தில் தமிழ்மாகாணக் காங்கிரசு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ம.கி. திருவேங்கடம், சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோர் நட்பு கிடைத்தது. இந்த நட்பின் மூலமாக இதழியல் பணி சென்னையில் கிடைத்தது.

  1940ஆம் ஆண்டு சென்னையில் இருந்து சொந்த ஊரான மதுரைக்குச் சென்றார். அப்போது இந்திய முசுலிம்கள் பாகிசுதான் பிரிவினை கேட்ட சமயம். இதனால் இந்தியத் தேசிய காங்கிரசில் இருந்த முசுலிம்கள்   முதன்மை இழந்தார்கள். அப்போது பாகிசுதான் கோரிக்கையை எதிர்த்து இந்து மகாசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த சபையின் மதுரை இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்தார் மாயாண்டிபாரதி.

  இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் என்பதால் இளைஞர்கள் படையில் சேர்க்கப்பட்டார்கள். இளைஞர்கள் படையில் சேர்க்கப்படக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தித் திருவில்லிப்புத்தூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார். அதன் பிறகு பாதுகாப்புக் கைதியாக இருந்த மாயாண்டி பாரதி, 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது மீண்டும் பாதுகாப்புக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

  1943ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் கைது செய்யப்படுகிறார். அப்போது அந்த வண்டியின் பின்னால் ஓடி வந்த மாயாண்டி பாரதி தாயார் தில்லையம்மாள் மரணமடைந்தார். தாயாரின் இறுதிச் சடங்கில் கூடக் கலந்துகொள்ள முடியாத அடக்குமுறையை எதிர்கொண்டார்.

  இந்து மகாசபையினர், ‘இனிமேல் இரண்டாம் உலகப்போர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை’ என்று கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலை ஆகும்படிச் சொன்னார்கள். அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த மாயாண்டி பாரதி, இந்து மகாசபையில் இருந்து விலகினார்.

  1941ஆம் ஆண்டு கோயம்புத்தூர் சிறையில் இருந்தபோது பொதுவுடைமைத் தலைவர்கள் சமதக்கனி, வி.பி.சிந்தன், கே.ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டுப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். மதுரை ஆர்வி ஆலைத் தொழிலாளர்கள் சிக்கலில் கைது செய்யப்பட்டார். ஓராண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையானதும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மதுரை செயலாளரானார்.

  இந்திய விடுதலைக்குப் பின்னர் பொதுவுடமைக்கட்சி நடத்திய பல போராட்டங்களில் கைது செய்யப்பட்டார். விடுதலையானதும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

  1950ஆம் ஆண்டு பொதுவுடமைக் கட்சியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பலரும் கொல்லப்பட்டனர். அக்கொலைகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் தூத்துக்குடி அருகில் உள்ள மீளவிட்டான் தொடர்வண்டி நிலையத்தில் தண்டவாளத்தைப் பிரித்துச் சரக்குத் தொடர்வண்டியின் 25 பெட்டிகளைப் பொதுவுடமைக்கட்சியினர் கவிழ்த்தார்கள். அந்த வழக்கில் மாயாண்டி பாரதிக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

  அதன் பிறகு அவர் மதுரையில் இருந்தார். மருத்துவச் செலவுக்குக்கூடப் பண வசதியில்லாமல் மாயாண்டிபாரதி இன்னலுற்றார். இந்திய விடுதலைக்காகப் போராடிய மாவீரனுக்கு மத்திய அரசோ மாநில அரசோ உயர்ந்த மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை.

மாயாண்டி பாரதி ஒரு சரித்திரம்… தன்னைத் தானே எழுதிக் கொண்ட ஓர் புரட்சிச் சரித்திரம்!

 – தமிழக அரசியல் நாள் 04.03.2015: பக்கங்கள் 10-11