முடியவில்லை மொழிப்போர்! முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை! – இலக்குவனார் திருவள்ளுவன்
முடியவில்லை மொழிப்போர்!
முடித்து வைக்க வேண்டாவா மொழித்திணிப்புகளை!
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும் (திருவள்ளுவர், திருக்குறள் 674).
மொழிப்போர் என்றால் நாம் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போரைத்தான் குறிப்பிடுகிறோம். வரலாறு எழுதுவோர் அதற்கு முன் 1937 இல் கட்டாய இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைக் குறிப்பிடுவர். ஆனால், சமற்கிருதம் எப்பொழுது தன்னைத் தேவ மொழியாகக் கற்பித்துக்கொண்டும் தமிழை நீச மொழியாகப் பழித்துக் கொண்டும் தமிழ்நாட்டில் வரத் தொடங்கியதோ, அப்பொழுதே மொழிப்போர் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சமற்கிருதத்திற்கு முன்னர் பாலி, பிராகிருதம முதலான மொழிகளுடனான தொடர்பு ஏற்பட்டிருப்பினும் அப்போது அந்தச் சூழல் எழவில்லை. ஆனால் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கிய சமற்கிருதத்திற்கு எதிரான மொழிப்போர் இன்றும் முடியவில்லை. மொழிப்போர் என்பது இந்தித்திணிப்பிற்கு எதிரானது மட்டுமல்ல! சமற்கிருத்திற்கும் எதிரானது. தமிழர்களின் அன்றாட வாழ்வில் திணிக்கப்படும் ஆங்கிலம் முதலானவற்றிற்கும் எதிரானது என்பதை நாம் உணரவேண்டும்.
தமிழகக்கட்சிகள் ஆண்டிற்கொருமுறை வீரவணக்க நாள் கொண்டாடுகின்றனர். எப்பொழுதாவது மத்திய அரசின் இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்புபற்றிச் பேசுகின்றனர். மற்ற நேரங்களில் சமற்கிருத்திணிப்பு, இந்தித்திணிப்புபற்றி நினைத்துப்பார்ப்பதில்லை.
மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சமற்கிருதத்திணிப்பும் இந்தித்திணிப்பும் முனைப்பாகச் செயல்படுத்தப்படும். பா.ச.க ஆட்சியிலிருக்கும் பொழுது மொழித்திணிப்புகள் வெளிப்படையாக நடைபெறும். ஆனால், மத்தியில் மாறி மாறி ஆட்சியில் பங்கு பெற்ற தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கு இவைபற்றிக் கவலையில்லை. இந்தியை எப்படியெலலாம் திணிக்கலாம் என வெளிநாடுகளுக்குச் செல்லும் குழுக்களுடன் இணைந்து மகிழ்ச்சிப் பயணம சென்று வருவர். ‘இந்தி ஒழிக!’ என்று சொல்லத் தெரிந்தவர்களுக்கு எந்த வகையிலெல்லாம் இந்தித் திணிக்கப்படுகிறது என்ற விவரம்கூடத் தெரியாது.
‘தமிழ்’ என்று வாய் பேசினாலும் தமிழக ஆளுங்கட்சிகள் கல்வியில் இருந்து தமிழை அகற்றுவதன் மூலம் அயல்மொழிகளுக்கு வாயிலைத் திறந்து விடுவதையே கடமையாகக்கொண்டு செயல்படுகின்றனர். கல்வியிலும் தாய்மொழியாம் தமிழ் தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பட்டால் எந்த எதிர்ப்புமின்றிச் சமற்கிருதத்தையும் இந்தியையும் எளிதில் திணிக்கலாம் அல்லவா? அப்புறம் ஆங்கிலத்தினிடத்தில் தமிழை அமர்த்தாமல் இந்தியை அமர்த்தலாம் அல்லவா? எனவே, மத்திய ஆட்சியாள்களின் மொழித்திணிப்பு வேலையை எளிதில் முடிப்பதற்கு உதவுவனவே தமிழக ஆட்சியாளர்களின் பணிகளாகின்றன.
உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்றால் இந்தியில் தான் கையெழுத்து போடவேண்டும். அவரவர் தாய்மொழியில் கையொப்பமிட முடியாது. இந்தியில் கையொப்பம் இடப்பயிற்சி பெறுவதே உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அளிக்கும் முதல் பயிற்சியாகும்.
வாணாள் காப்புறுதிக்கழகம்(எல்.ஐ.சி.) முதலான மத்திய நிறுவனங்களில் பண எடுப்பு முதலான பதிவுகளில் இந்தியில் அல்லது ஆங்கிலத்தில்தான் கையொப்பமிடவேண்டும். இவை அல்லாத நம் தாய்மொழியில் கையொப்பமிட்டால், இந்தி அல்லது ஆங்கிலத்தில் கையொப்பமிடத் தெரிந்தவரின் சான்றொப்பம் தேவை. இப்படி மத்திய அரசு தொடர்பானவற்றில் நம் தாய்மொழியாம் தமிழில் கையொப்பமிட உரிமையில்லாதவர்களாகத்தான் நாம் இருக்கிறோம்.
பதவிப்பெயர்கள் முதலானவை சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தியில் உள்ளன. அதுபோல் பல்வேறு துறைகளின் முழக்கங்கள் அல்லது குறிக்கோள் தொடர்கள் சமற்கிருதமே. சான்றுக்குப்படம் 1 ஐயும் 2 ஐயும் காண்க. ஆனால், இதுபற்றிக்கேட்க நமக்கு உரிமையில்லை. படம் 3 ஐப் பாருங்கள். சென்னை உயர்நீதி மன்ற முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத் தமிழ்நாட்டரசின் முழக்கமில்லை; இந்தி முழக்கம்!
சென்னைக் காவல்துறையில் ஆங்கில முழக்கம். ஊர்க்காவல்படையில் இந்தி முழக்கம்.
“உப்பு போட்டுத்தான் தின்கிறாயா? வெட்கம், மானம் சூடு, சொரணை இருக்கிறதா?” – இவ்வாறு நாம் அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால், நாம் அனைவருமே மான உணர்வற்றுத்தான் இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தமிழகத் துறைகளில் தமிழ் அல்லா இலக்குத் தொடர்களே சான்றுகளாகும். சென்னை அல்லது தமிழ்நாடு உயர்நீதி மன்றம் தங்களைத் தமிழக அரசிலிருந்து வேறுபடுத்தித் தனித்துக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்ளும். அந்தப் பெருமை என்பது தமிழக நலன்சார்ந்துதான் அமைய வேண்டும். தமிழ் முழக்கத்தைப் புறக்கணிப்பதிலா இருக்க வேண்டும்.
கல்விமொழி, பாடமொழி, இந்தித்தட்டச்சு தெரிந்தால்தான் மத்தியஅரசிலும் மத்திய நிறுவனங்களிலும் வேலை என்பதுபோன்று வேலைவாய்ப்பு மொழி என ”எங்கும் இந்தி எதிலும் இந்தி” என்பதே நீக்கமற உள்ள நடைமுறையாகும். இதனைத் தடுக்கத் தமிழகக் கட்சிகள் ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா?
ஊடகங்களில் இந்திக்காரர்களை அழைத்தல், இந்தி விளம்பரங்கள், பெயர்களை நட்ஃசு, பொன்ஃசு எனச் சமற்கிருதப் பெயர்போல் எழுதுதல், தொகுப்புரையாக இருந்தாலும் தீர்ப்புரையாக இருந்தாலும், கலந்துரையாக இருந்தாலும் ஒன்றிரண்டு தமிழ்ச்சொற்கள் மட்டும் தெரியாமல் வந்துவிடும். ஊடக மொழி என்பது தமிழை இல்லாமல் ஆக்குவதாகத்தானே உள்ள்து.
இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் இல்லாத நிலையையும் பிற மொழித்திணிப்புகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம். ஏறுதழுவலுக்கு ஒன்று கூடிய இளைஞர்கள், மாணவ மாணவியர், நாட்டு நலன் கருதியும் தங்கள் எதிர்கால நல்வாழ்வு கருதியும் தமிழின நிலைப்பு கருதியும் மொழித்திணிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்து வெற்றி காண வேண்டும். மொழிப்போர் என்பது தொடர்ந்துகொண்டே போவதில் பொருளில்லை. எனவே, சமற்கிருத, இந்தி,மொழகளின் திணி்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி இட வைப்போம்! தமிழைப் பயன்பாட்டுமொழியாகச் சிறக்கச் செய்வோம்!
தமிழ் எங்கள் உயிர் என்பதாலே — வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் – இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே நாளும் பாடு!
– பாவேந்தர் பாரதிதாசன்
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply