தலைப்பு-செவாலியர்விருது. முதலில் யார்? - திரு ; thalaippu_chevalier_muthal viruthaalar_thiru

முதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்?

  கடலை முதலில் பார்க்கும் குழந்தை என் பொம்மையைப்போலவே கடல் நீல நிறமாக உள்ளது எனக் கூறுவதுபோல்தான் நாம்அனைவரும் அவரவர் நிலையிலேயே அனைத்தையும் பார்க்கிறோம். எனவேதான்  ஒரு நிகழ்வோ அருவினையோ நடக்கும் பொழுது முந்தைய வரலாற்றை அறியும் ஆர்வமற்றவர்களாக, ஏதும் முன் நிகழ்வு உள்ளதா எனப் பார்க்கும் தேடுதல் உணர்வு இல்லாதவராக நடந்து கொள்கிறோம். அதுபோன்ற விளைவுதான் சான்றோன்(செவாலியர்) பாராட்டிதழ் பற்றியது. செவாலியர்  பாராட்டிதழ் வழங்குவது என்பது நெப்போலியனால்(Napoléon Bonaparte) 1802ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாக வீரர்களுக்கு அளிக்கப்படும்  பாராட்டிதழாகத்தான் முதலில் அமைத்தனர். எனவேதான் வீரன் என்னும் பொருளில் செவாலியர் என்றனர். விருது என்று குறிக்காமல் பாராட்டிதழ் என்று சொல்வதன் காரணம்  செவாலியர் எனப் பாராட்டித்தரும் சான்றிதழாகத்தான் விருதிதழ் உள்ளது.

  பெருந்தகை விருதணி என்பது ஐ வகைப்படும்.  1. சான்றோர் (Chevalier (Knight] 2.  உயர்துறைவர் [Officier (Officer)]  3. கட்டளையர்  [Commandeur (Commander)] 4. பெருந்துறைவர் 5. பெருங்குறுக்கர் [Grand Croix (Grand Cross)]

  செவாலியர் விருதினைத் திருத்தகை விருது என்றுகூடக் கூறலாம். ஆனால், சான்றோர் என்பது கல்வி, ஒழுக்கங்களில் சிறந்தவரைக் குறிப்பதுபோல் சிறந்த வீரரையும் குறிக்கும் சொல். எனவே, படை மக்களுக்குக் கொடுக்கப்படும் விருது பின்னர், பிற குடிமக்களுக்கும் கொடுக்கும் பொதுவான விருதாக மாறியுள்ளதால், இரு தரப்பாரையும் குறிக்கும் சான்றோன் என்பது பொருத்தமாக இருக்கும்.  நாம் என்ன சொன்னாலும் அயல்மொழி மோகத்திலுள்ள நம் மக்களுக்கு அயற்சொல்தான் பிடிக்கும் என்பது அறிந்ததே! தமிழில் சொன்னால்மதிப்பு குறைந்ததாக எண்ணிக் கொள்வா்கள்.

 இருப்பினும் பிரான்சின் சான்றோர் விருது என்னும் பொழுது அவர்கள் விருப்பம் நிறைவேறலாம்.

  சான்றோர் விருது, பிரான்சு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல்  பிரான்சு நாட்டில் வசிக்கும் அயல்நாட்டவருக்கும் அவர்கள் கலை, இலக்கியம் முதலான துறைகளில் ஆற்றும் பணிகளைப் பாராட்டி வழங்கப்பெறுகிறது. அதுபோல் பிரான்சு நாட்டின் மொழி, கலை முதலானவற்றுடன் தொடர்புடைய அயல்நாட்டிலுள்ளவர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப் பெறுகின்றன. 25 ஆண்டுகள் பணிச்சிறப்பு உள்ளவர்களுக்கே இவ்விருது வழங்கப்பெறுகிறது.

 இதுவரை பன்னாட்டளவில் விருது பெற்றோர் ஏறத்தாழ நூறாயிரவர் ஆவர். ஆண்டுதோறும் நானூற்றுவர்களுக்குச் ‘செவாலியர் விருது’ வழங்கிப் பிரான்சு அரசு சிறப்பிக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது இந்திய அளவில் விருது பெற்றவர் எண்ணிக்கை மிகக் குறைவே. எனினும் இவற்றில் தமிழர்கள்  மிகுதியானவர்கள் இருப்பது மகி்ழ்ச்சியே.

  இம்முறைப் பல்துறைக் கலைஞராக உள்ள நடிகர் கமல்ஃகாசன் சான்றோர் (செவாலியர்) விருது(2016) பெற்றுள்ளார். விடாமுயற்சி, ஊக்கம்,  தேடுதல் வேட்கை, எனப் பலவகையிலும் தன் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி உயர் நிலைகளை அடைந்து வரும் கமல்  இந்த விருதிற்குத் தகுதியானவரே! மேலும், பல உயரிய விருதுகைளப் பெற அகரமுதல மின்னிதழ்  பாராட்டுகிறது. சென்னைத் தமிழ் என்ற போர்வையில் மொழிக்கொலை புரிதல் போன்றவற்றை நீக்கித் தமிழ்க்லைக்குத் தொண்டாற்றுமாறும் அகரமுதல மின்னிதழ் வாழ்த்துகிறது.

  இவ்விருது இவருக்கும் முன்னர்ப் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன. எனினும் நடிகர் திலகம் சிவாசிகணேசனுக்கு சான்றோர் (செவாலியர்) விருது வழங்கப்பெற்ற பின்னர்தான் மக்களிடையே பெரு வழக்காகத் தெரியவலாயிற்று.  நடிப்புத்துறையில், நடிகர் திலகத்திற்குக் கிடைத்த விருது அவருக்குப் பின்னர்த் தனக்குக் கிடைத்துள்ளது என்ற அளவில் கமலுக்கு மகிழ்ச்சியே.  அவர் மகிழ்ந்து துள்ளும் அளவிற்குப்பெரிய விருதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அயல் நாட்டரசு ஒருவர் உழைப்பை அறிந்து சிறப்பிக்கின்றது என்றால் அது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதுதானே!  எனினும் முகநூல் முதலான  இணையத் தளங்களில் கமலுக்கும் முன்னர்,  ஏன்,  இவ்விருது வாங்கியவர் உள்ளனர் என்ற பதிவுகள் உள்ளமையைக் காணலாம். அவ்வப்பொழுது  சான்றோர் விருது வழங்கப்பட்ட நேர்வுகளில் அவரவர்களைப்பற்றிச் செய்தி யிதழ்களில் குறிப்புரைகள் வரத்தான் செய்துள்ளன. இப்பொழுது ஊடக ஒளி மிகுதியாகப் பாய்ச்சப்படுவதால், கமலைமட்டும் பாராட்டுவதுபோல் தோன்றுகின்றது. கலைஞர்களைப் பற்றியும் பாடத்திட்டங்கள் அமைந்திருப்பின், நாம் சான்றோர் விருது போன்ற விருதுகளையும்  விருதாளர்களையும் அறிந்திருப்போம். அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதால் கடந்த  காலச் சிறப்பிற்குரியவர்களை அறியாமல் பேசுகின்றோம்.

 கமலுக்கு முன்னர்  – சிவாசி கணேசனுக்கும் முன்னர் –  ‘செவாலியர் விருது’ பெற்றவர்கள் எனக் குறிக்கப்படுவன யாவும் சரியான தகவலல்ல. விக்கிபீடியா முதலான தகவல்தளங்களில்கூடச் சரியான தகவலின்மையால் தேடிப்பார்த்துச் சரியான தகவலை அளிப்பது கூட இயலாததாக உள்ளது. சான்றோர்(செவாலியர்) விருதுபற்றிய பிரான்சு நாட்டுத்தளத்திலும்கூட நாம் தேடும் ஆண்டுகளின்   விருதாளர் விவரம் கிடைப்பதில்லை.  எனினும் சான்றோர்(செவாலியர்) விருது பெற்ற முதல் தமிழர் யார் என்பதுபற்றி நாம் பார்ப்போம்.

  இந்தியாவில் இணைவதற்கு முன்னர்ப் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த  பகுதியைச் சேர்ந்தவர்களே முதலில் சான்றோர் விருதுகள் பெற்றவர்கள் ஆவர். மேற்கு வங்காளத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்இருந்த சந்தன் நகரைச்  சேர்ந்த துர்காசரன் இரக்சித்து (Durga Charan Rakshit) என்பவரே இந்தியாவில் முதலில் 1896) இல் செவாலியர் விருது பெற்றவர் ஆவார். எனினும் 1987இல் வங்காள இயக்குநர் சத்யசித்துரே செவாலியர் விருது பெற்றபின்னர்தான் இது குறித்துக் கலை உலகம் அறியத் தொடங்கியது. இதுபோல் நடிகர்திலகம் சிவாசி கணேசன், 1995 இல் செவாலியர்விருது பெற்ற பின்னர்தான் தமிழ்த்திரை உலகம் பரவலாக அறியத் தொடங்கியது. செவாலியர் சிவாசி கணேசன் சாலை எனச் சாலைக்குப் பெயர் சூட்டும்பொழுதும் சான்றோர் விருதைக் கைவிடவில்லை. இந்த விருதிற்கு மிகுந்த சிறப்பை அளிக்கும் நாம், இவர்களுக்கும் முன்னர் சான்றோர்(செவாலியர்) விருது பெற்றவர்களைப்பற்றி அறிய வேண்டுமல்லவா?

  இப்போது திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தா நல்லூர் ஊரைச் சேர்ந்தவர்  அப்துல் அசீசு (JM Abdul Aziz).  பெரு வணிகரான இவர் வியத்துநாம் சென்று வணிக வல்லமையாளர் ஆனார்.  1932 இல் சான்றோர் விருது பெற்ற இவரே   முதல் சான்றோர் (செவாலியர்) தமிழ் விருதாளர்பேராசிரியர்  மொகமது (1934), மொகம்மது அனீபு (1937), வீரப்பன் வரதராசு (1954), மரு.நல்லாம் வைத்தியநாதன், எம்.எம். உசேன்(1999), பேராசிரியர் மதன கல்யாணி(2011) எனப் புதுவையைச் சேர்ந்த பலரும் செவாலியர் விருதுபெற்றுள்ளனர்.

   மாயவித்தையாளரும் நடிகருமான அலெக்சு (2010), என்.எசு.இராமானுச (தத்தாச்சார்யா)(2012), தமிழ்த் தந்தைக்கும் சீக்கியத்தாய்க்கும்  பிறந்த அஞ்சலி  கோபாலன்(2013) முதலானோர் தமிழ்நாட்டில் கமலுக்கும்  முன்னரே சான்றோர் (செவாலியர்) விருது பெற்றுள்ளனர். தி்ரையுலகினருக்கே நாம் முதன்மை அளிப்பதால் ஊடகங்களும் அவர்களை முதன்மைப்படுத்துகின்றன. இதற்குப் பொறுப்பு ஊடகத்தினரோ கமலோ அல்லர். நாம்தான்.

 திருமதி சிவயோகநாயகி இராமநாதன் (2009), நாகநாதன் வேலுப்பிள்ளை(2011), திருமதி செரீன் சேவியர்(2013)  முதலான ஈழத்தமிழர்களும் சான்றோர்(செவாலியர்)  விருதாளர்கள்தாம்.

  இவர்களைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், சான்றோர் (செவாலியர்) விருது பெற்ற முதல் தமிழ்நாட்டுத் தமிழரான கலைமாமணி நட்டுவனார், திரைநாட்டிய இயக்குநர் வை.சே.முத்துசாமி(ப்பிள்ளை)பற்றி யாரும் குறிப்பிடவில்லை.

 பிரான்சில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டிய விழாவில் முதன்மை அளிக்கப்பெற்று அதில்  சான்றோர் (செவாலியர்) விருது பெற்ற முதல் தமிழகத் தமிழர்; நாட்டியக்கலைகளில் புதுமைகள்   அறிமுகப்படுத்தியவர்; 60 திரைப்படங்களுக்கு மேல் நாட்டிய இயக்குநராகவும் திகழ்ந்து புகழ் பெற்றவர் இப்பெருந்தகையே!. அவர்பற்றிய கட்டுரையை அடுத்த இதழில் காணலாம்.

;

இலக்குவனார் திருவள்ளுவன்