முதல்வர் மு.க.தாலின், புதிய உறுப்பினர்கள், வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

 

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

(திருவள்ளுவர், திருக்குறள் 462)

திருவள்ளுவர் திருவாய்மொழிக்கிணங்க தேர்தல் வழிமுறைகளை நன்கு தெரிந்த கூட்டத்தோடு ஆராய்ந்து, பலவகையாலும் தாமும் எண்ணி அருவினை ஆற்றி வெற்றியை அறுவடை செய்துள்ளார் தி.மு.க.தலைவர் மு.க.தாலின். தேர்தல் கணிப்புகள் பொய் எனக் கூறி தி.மு.க. வெல்லாது என்றவர்களுக்கு வலுத்த அடியைக் கொடுத்துள்ளது தேர்தல் முடிவுகள். 125 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுத்தனிப் பெருங்கட்சியாகத் திகழ்கிறது. கூட்டணிக்கட்சிகள் 34 இடங்களை வென்றுள்ளன.

தமிழக மக்கள் எப்பொழுதும் கூட்டணி ஆட்சியைத் தெரிவு செய்யாமல் தனித்த நிலையான ஆட்சிக்குத்தான் வாக்களிப்பர் என்னும் நிலைப்பாட்டில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி. தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்காமல் வெற்றி பெறப்போகும் கட்சிக்கு வாக்களிப்பதும் வாக்களார்கள் பழக்கம். இதன் காரணமாகத்தான் அ.ம.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காமல் நிலையான ஆட்சி வேண்டித் தி.மு.க.விற்கு வாக்களித்தனர்.

பா.ச.க. என்னும் பாம்பைக் காலில் சுற்றி வைத்துக் கொண்ட அ.தி.மு.க.வால் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை;. பொதுத்தேர்வு முதலான பல் வேறு சூழல்களில் பா.ச.க.வின் தாளத்திற்கு ஏற்ப ஆடியதால் ஆட்சியை இழந்து விட்டது. ஆட்சியை இழந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சியைக் காப்பாற்றிக் கொண்டார்; 92,868 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி அடைந்துள்ளார்; அ.இ.அ.தி.மு.க.வை 65 இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளார்; கூட்டணிக் கட்சிகளை 9 இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளார்; தான் உழைத்த கொங்கு மண்டலத்தில் மகிழ்ச்சியான வெற்றியைக் கட்சிக்கு வாங்கித் தந்துள்ளார். என்றாலும் அவர் கவனமாகச் செயல்படாவிட்டால் ஆட்சியை இழந்ததற்கு அவரின் பிடிவாதம்தான் காரணம் என அவருக்கு எதிராகக் கலகக் குரல்கள் எழுவதைத் தடுக்க இயலாது. இருப்பினும், தேர்தல் வரும் வரை ஆட்சியை நிலைக்கச் செய்து கட்சியிலும் பிடிப்பை ஏற்படுத்திக் கொண்ட அவருக்குப் பாராட்டுகள்!

கடம்பூர் இராசு எளிமையாக அனைவரிடமும் பழகும் பண்பினால் மக்களைக் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே, தினகரனின் சாதிக்கணக்கு வெற்றி பெறவில்லை. ஆனால், தினகரன் கட்சி இந்த அளவிற்குக் குறைவான வாக்குகள் பெறும் என எதிர்பார்க்கவில்லை. “தினகரன் தனிக் கட்சியில் இருப்பதைவிட, அதிமுகவில் இருந்தால் முதன்மைச் செல்வாக்கு பெறுவார்”  என முன்பு குறிப்பிட்டதுதான் உண்மை.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற

(திருவள்ளுவர், திருக்குறள் 495)

என்பதற்கு இலக்கணமானார்.

அ.தி.மு.க.வை மீட்க முயலும் தினகரனால் தன் கட்சியையே காக்க முடியவில்லை. இதற்குச் சசிகலாவும் ஒரு  காரணம். பா.ச.க.வின் மிரட்டலால் அரசியலிலிருந்து ஒதுங்கியவர் அ.தி.மு.க.ஆதரவுத் தொனியை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் அ.ம.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கும். ஆயிரத்திற்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றுள்ள இப்போதைய அவல நிலைக்கு வந்திருக்காது.

ஒரு தேர்தல் முடிந்ததுமே அடுத்த  தேர்தலுக்கான பணியைத் தொடங்குவது பா.ச.க.வின் திட்டமிடல் பழக்கம். எனினும் வாக்குகளிலேயே கருத்து செலுத்தும் அக்கட்சி வாக்காளர் நலன் குறித்துக் கருத்து செலுத்தாமைதான் தோல்விக்குக் காரணம். எம்.ஆர் காந்தி, நயினார் நாகேந்திரன், சி.கே.சரசுவதி ஆகியோர் முற்றிலும் தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வெற்றி பெற்றுள்ளனர். வானதி சீனிவாசனுக்குத் தன் தொகுதியில் உள்ள உள்ள பா.ச.க.வாக்கு வங்கியும் பிற மாநிலத்தவர்கள் வாக்குகளைப்பெற  அவர் மேற்கொண்ட தேர்தல் உத்திகளும் கை கொடுத்து வெற்றிக் கனியை அளித்துள்ளது. இனியேனும் பா.ச.க. தமிழக மக்கள் நலன்களுக்கு ஆதரவாகச்செயல்படட்டும்!

கலைஞர்களைப் போற்றும் தமிழக மக்கள் தேர்தல் களத்தில் திரை உலக மாயையில் வீழ்வதில்லை என்பதைக் கமல் புரிந்து கொண்டிருப்பார்.

நம் முதல் வாழ்த்து சீமானுக்குத்தான். ஏனெனில், தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து தேர்வு எழுதி எழுதித் தன் கட்சியை வளர்த்து வருகிறார். தமிழர் என்ற உணர்வு வெளிப்படுவதற்கு அவரின் நாம் தமிழர் கட்சி பாடுபடுகிறது. சம பங்கு பெண் வேட்பாளர்கள், வாக்குகளை விலைக்கு வாங்காமை போன்ற அவரின் பல செயல்கள், அவருக்கு வாக்காளிக்காதவர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. சீமான், திராவிடம் என்னும் சொல்லாட்சியைப் புரிந்து கொள்ளாமலும் திராவிடக்கட்சிகள் செய்யத் தவறியவற்றைக் கண்டிப்பதற்காகச் செய்த பணிகளைப் புறக்கணிப்பதும் தவறு என உணர வேண்டும்.

தே.மு.தி.க அதன் தலைவர் விசயகாந்தின் தனிப்பட்ட செல்வாக்கு மீது மட்டும் பயணம் செய்வதால் அவர் நலிவுற்ற சூழலில் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லவில்லை.

தி.மு.க.கூட்டணியால்தான் பேராயக்கட்சி(காங்கிரசு) 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஈழத்தமிழர் படுகொலைதொடர்பாக அதன் மீதுள்ள சினம் நீறுபூத்த நெருப்பாகத்தான் உள்ளது. சமற்கிருத, இந்தித் திணிப்புகளுக்குக் கால்கோளிட்டு வளரச்செய்தது அக்கட்சிதான். பா.ச.க. இன்றைக்குச் சொல்லும் தட்சிணப்பிரதேசம் உட்பட கூட்டாட்சிக்கும் தேசிய மொழி இன உரிமைகளுக்கும் எதிான எல்லாச் செயல்பாடுகளுக்கும் வழி அமைத்தது பேராயக்கட்சிதான். இனியேனும்  தன் போக்கை அது மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஊடக விளம்பரத்தில் மயங்கி, மக்கள்மனத்தைப் புரிந்து கொள்ளாமல் சகாயம் (இ.ஆ.ப.) தேர்தலில் இறங்கியதைக் குறிப்பிட்டிருந்தோம். இந்தத் தேர்தல் முடிவுகள் அவருக்கு நாட்டு மக்கள் நிலையைப் புரிய வைத்திருக்கும். இந்தப் புரிதல் அடிப்படையில் அவர் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

தேர்தலில் வாகை சூடிய அனைவருக்கும் வாழ்த்துகள்! கட்சிச் சார்பின்றிப்  பணியாற்றுவதன் மூலம் கட்சிக்குப் பெருமை சேர்க்கட்டும்! மக்கள் நலப்பணிகளில் கருத்து செலுத்தட்டும்! தமிழர், தமிழ் நலன்களுக்குக் குரல் கொடுக்கட்டும்! அமைச்சரவை முடிவானதும் அமைச்சர் பொறுப்பேற்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! மக்கள் பகைப்போக்கிற்கு இடம் தராமல் நிலைத்த பணியாற்றுங்கள்!

ஆட்சியில் அமருவதற்கு முன்னரே ஆட்சிப்பொறுப்பேற்றதும் செய்ய வேண்டிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளார் மு.க.தாலின். அவற்றைத் திறம்படச் செய்து மக்கள் உள்ளங்களில் நிலைத்த இடம் பெறட்டும்!  இயன்றால் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் இடம் தரட்டும்! இல்லையேல் அமைச்சுப்பதவிக்கு இணையான பதவிகளை நல்கி ஆட்சியில் அவர்களையும் இணைத்துக் கொள்ளட்டும்!

பொறுப்பேற்க உள்ள புதிய பேரவையினருக்கும் அமைச்சரவையினருக்கும் வாழ்த்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல