தலைப்பு- முற்றுப்புள்ளி, தொடர்புள்ளி, இலக்குவனார் திருவள்ளுவன் ;thalaippu_mutruppulli-thodarpulli-thiru

முற்றுப்புள்ளி இடவேண்டிய இடங்களில் மீண்டும் புள்ளிகள் வைக்காதீர்!

 

  “இதற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைப்போம். இனி வேறு பேசுவோம்” என்றால் இதுவரை பேசிய செய்தி்யை இனித் தொடர வேண்டா எனப் பொருள். இவ்வாறு நாம் பேச்சு வழக்கில் ஒன்றை முடிக்கக் கருதும் பொழுது முற்றுப்புள்ளி என்பதைக் கையாள்வோம். ஆனால், இப்பொழுது கூறப்போவது இதுபற்றியல்ல.

  செய்தி எழுதுநர், அழைப்பிதழ் எழுதுநர், கட்டுரையாளர், கவிஞர் என யாவரும் அழகு என்று தவறாக எண்ணியோ, இதுதான் சரி என்று பிழைபட எண்ணியோ முற்றுப்புள்ளி இட வேண்டிய இடங்களில் மேலும் இரு  புள்ளிகள் அல்லது மிகுதியான புள்ளிகள் இடுவதை வழக்கமாக வைத்துக் கொள்கின்றனர்..  (இவற்றைத் திருத்தும்பொழுது எரிச்சல் ஏற்பட்டு இரத்தக் கொதிப்பே வந்துவிடுகிறது.)

சான்றாக

அன்புடையீர்

வணக்கம்

வரும் சனிக்கிழமை

என்பதுபோல் எழுதுகின்றனர்.

  உரை நடையை மடக்கி எழுதினால் கவிதை என எண்ணும் ‘படைப்பாளிகள்’ உள்ளனர். அதுபோல்,  உரை நடையை மடக்கி ஒவ்வொரு வரியிலும் புள்ளிகள் இட்டால் கவிதை என எண்ணும் ‘படைப்பாளிகள்’ பெருகிவிட்டனர். ஒவ்வொரு வரியிலும் புள்ளிகள் இடும் பழக்கம் இப்பொழுது ஒவ்வொரு சொல்லிலும் புள்ளிகள் இடும் பழக்கத்தில் விட்டுள்ளது.

  இந்தஅவலத்திற்கு முற்றுப்புள்ளி இடுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

போக்குவரவுக்குச் சாலையில் உள்ள குறியீடுகள்போலக், கற்பார்க்கு நல்ல வழிகாட்டியாக அமைவன நிறுத்தக்குறிகள் ஆகும்.

உலகுக்கெல்லாம் பொதுவாக விளங்கும் கைச்செய்கை, முகக்குறிப்பு என்பவைபோல, மொழியுணர்வுக்கு வாய்த்த அருமையன நிறுத்தற்குறிகள் என்கிறார் புலவர்மணி இரா. இளங்குமரன் (நிறுத்தற்குறி்களும் பயிற்சியும்-முன்னுரை).

  நிறுத்தற்குறிகள் குறித்த நூலையோ இணையத்தளங்களில் காணப்படும் பக்கங்களையோ படித்து இவை குறித்துத் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். இங்கே நாம் முற்றுப்புள்ளி மட்டும் பார்ப்போம்.

முற்றுப்புள்ளியை,

ஒவ்வொரு சொற்றொடர் இறுதியிலும் குறிக்க வேண்டும். மேலும்,

‘17.11.1909.’ என்பதுபோல் நாளைக் குறிப்பிடுகையில் நாளின் இறுதி்யில்

 திருவள்ளுவருக்குப் பின் என்பதை நாம் ‘தி.பி’ .என்பதுபோல் குறுக்கி எழுதும்பொழுது

 ‘சி.இலக்குவனார்’ என்பதுபோல் தலைப்பெழுத்தை எழுதும் பொழுது

மு.வரதராசனார் என்பதை ‘மு.வ.’  எனப் பெயர்க்குறுக்கமாக எழுதுவது போன்ற நேர்வுகளில்

தொல்காப்பியம் என்பதை நாம் ‘தொல்.’ எனக் குறுக்கி எழுதுவதுபோல் சொற்குறுக்கத்தின் பொழுது

‘திருநகர், மதுரை மாவட்டம். என்பதுபோல் முகவரியின் இறுதியில்

‘இப்பொழுது மணி காலை 8.30’ என்பதுபோல் நேரத்தைக் குறிப்பிடுகையில் முற்றுப்புள்ளியைப் பயன்படுத்த வேண்டும்.

 முற்றுப்புள்ளி அருகே மீண்டும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால், சொல்ல வருவது முற்றுப்பெறவில்லை, தொடர்கிறது என்பதைக் குறிக்கும்.

முற்றுபுள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்

முடிவுகள் என்றும் ஆரம்பமே”

என  ஒரு திரைப்பாடலில் வரும். (படம்: ‘சத்தம்போடாதே’. தொடர்பான தேடல்களில் வரும் பக்கங்களில் இசையமைப்பாளர் பெயர் உள்ளதே தவிரப் பாடலாசிரியர் பெயர் குறிக்கப்பெறவில்லை.)

  எனவே, முற்றுப்புள்ளி என்பது ஒரு புள்ளிதான் என்பதையும் மீண்டும் புள்ளி வைக்கும் பொழுது தொடராவதையும் புரிந்து கொள்ளலாம்.

  தொடர்ச்சியாகப் புள்ளிகள் இட்டால் அவை விடுபாட்டுக் குறிகள் ஆகும். அஃதாவது  இடையில் சொல்லோ தொடரோ விடுபட்டுள்ளதைக் குறிக்கும். முழுமையாக எழுதிவிட்டு, ஏதோ விடுபட்டதுபோலத்  தொடர்புள்ளிகள் குறிக்கத் தேவையில்லை யல்லவா?

  முற்றுப்புள்ளி அருகில் மீண்டும் புள்ளி வைக்கும்பொழுது அது முற்றுப்பெறாமல் தொடர்வதைக் குறிப்பதை உணர்ந்து இனிமேலும் முற்றுப்புள்ளியை முற்றுப்புள்ளியாகவே கையாள்க! பல புள்ளிகள் இட்டுத் தொடர்புள்ளிகளாக்கும் சிதைவுச் செயல் வேண்டா!

ilakkuvanar_thiruvalluvan+10

– இலக்குவனார் திருவள்ளுவன்