மேதகு மரு.தமிழிசை செளந்தரராசனுக்குப் பாராட்டும் வாழ்த்தும் வேண்டுகோளும்!

தம் திறமையாலும் உழைப்பாலும் பல படிநிலைகளில் முன்னேறி ஆளுநர் நிலைக்கு வந்துள்ளமைக்குத் தமிழிசைக்கு நம் பாராட்டுகள்! மேலும் பல சிறப்புகள் எய்தி முன்னேற வாழ்த்துகள்!

கட்சிச் சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பாரின் வாழ்த்துகளைப் பெற்ற ஒரே தலைவராக இவர்தான் இருப்பார் என்பதில் ஐயமில்லை. பா.ச.க.வை வேண்டாதாரும் இவர் ஆளுநர் பதவியில் அமர்ந்ததற்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.

தான் மக்கள் மன்றத்திற்குச் செலல வேண்டும் என நீண்ட காலமாக விரும்புவதாகவும் அந்த வாய்ப்பைத் தருமாறும் அண்மைய நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வாக்காளர்களிடம் கேட்டார். அவர்கள் அந்த வாய்ப்பைத் தரவில்லை. ஆனால் பா.ச.க. மக்கள் மன்றத்தைக் கூட்டவும்  தொடக்க உரையாற்றவுமான அதிகாரம் படைத்த ஆளுநர்பதவியை அளித்துள்ளது. இந்த வகையில் அவர் கனவு நனவாகியது.

தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபிற்கேற்ப இவருக்குப் பொறுப்பு வழங்க வேண்டியிருந்தோம். பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா போட்டியிலிருந்தார். அவர் தலைவராயிருந்தால் பா.ச.க. இருக்கும் இடம் தெரியாமல் எப்பொழுதோ போய் இருக்கும். இப்பொழுதும் எப்படியும் அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். பா.ச.க. தலைமை மரு.தமிழிசையை அமைச்சராக்குவதே  அதற்கு நல்லது. (29.05.2019) என்று நம் விழைவைத் தெரிவித்திருந்தோம்.தேர்தலில் தோற்றவர்களை அமைச்சராக்குவதில்லை என்ற முடிவில் உள்ள பா.ச.க.இவரை ஆளுநராக ஆக்கியுள்ளது. இதற்கு உண்மையிலேயே அக்கட்சியைப்பாராட்ட வேண்டும். கட்சியின் மாநிலத்தலைவர்கள் ஆளுநர்களாக முன்னரும் ஆக்கப்பட்டுள்ளார்கள்.  கேரளாவில் தோல்வியைத் தழுவிய  அம்மாநிலப் பா.ச.க. தலைவர் கும்மனம் இராசசேகரன் மிசோராம் ஆளுநராக ஆக்கப்பட்டார்(25.05.2018 – 08.03.2019). 2008 இலேயே இவரை மிசோராம் ஆளுநராக நியமித்தும் கட்சி வேலைகளுக்காகத் திரும்பி வந்தவர் இவர்.

ஆளுநர் மரு.தமிழிசை, மண்ணின் மக்களை மதித்து அவர்கள் மொழியான தெலுங்கைக் கற்று வருவது பாராட்டிற்குரியது. தெலுங்கானாவில் கல்வியறிவு பெற்றோர்  66.46% விழுக்காடுதான். எனவே, இதனை நூற்றுக்கு நூறு ஆக்க உங்கள் நிலையில் செய்யக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்!

எல்லாப் பள்ளிகளிலும் தெலுங்கு வழிக்கல்வி இருக்க ஏற்பாடு செய்யுங்கள்.

தெலுங்கு தமிழின் சேய்மொழிதான். எனினும் தமிழ்க்குடும்ப மொழி எனச் சொல்வதைப் பெரும்பாலோர் விரும்புவதில்லை.  அவர்கள் தெலுங்கிலிருந்து தமிழ் வந்ததாகக் கூறிக்கொண்டிருப்பவர்கள். உண்மையான மொழி வரலாற்றை அவர்கள் அறியவும் தமிழின் சிறப்பு உணரவும் தொண்டாற்றுங்கள்!

தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் பேசுவோர் எண்ணிக்கை உலகெங்கும் தவறாகவே குறைத்துக் காட்டப்படுகிறது. அங்குள்ள பலர் பிள்ளைகளுக்குத் தெலுங்கு கற்றுக்கொடுத்துத் தமிழைக் கற்பிக்காமல், தமிழர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. பிள்ளைகளுக்கும் தமிழ்பற்றித் தெரியாது. ஆதலின் தமிழர்கள் தமிழர்களாக வாழ வகை செய்யுங்கள்.

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற கனவை ஒத்தி வைத்துவிட்டுத் தெலுங்கானாவில் தெலுங்கும் தமிழும் வளரத் தொண்டாற்றுங்கள்.

ஆளுநரான பின்னர் மீண்டும் கட்சிப்பணிக்கு வந்தவர்கள் பிறர் உள்ளனர். எனவே, கட்சி குறித்து 5 ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள், குடியரசுத் துணைக்கோ, கோ(குடியரரசுத்தலைவர்) நிலைகளுக்கு உயர வேண்டும்!

இந்தியாவின் இளஅகவை ஆளுநராக உள்ள நீங்கள் – துடிப்புடனும் ஆர்வத்துடனும் செயலாற்றும் பண்பு கொண்ட நீங்கள் – எண்ணியன ஆற்ற முடியும். ஆளுநர் பதவி என்பது மத்திய ஆட்சி ஆட்டுவிக்கும் பொம்மைதான். என்றாலும் 5 ஆண்டுக் காலம் கட்சியை மறந்து நாட்டை எண்ணும் அளவிற்குச் செயல்படுங்கள்.

நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் திருமகள் என்பதே தனிச்சிறப்பு. அத்தகு சிறப்புடைய நீங்கள் புதிய பொறுப்பு – ஆளுநர் பதவி – ஏற்றமைக்கு மனமாரப் பாராட்டுகளையும் சிறப்பாகச்செயலாற்ற வாழ்த்துகளையும் அகரமுதல மின்னிதழ் சார்பாகவும்  தமிழ்க்காப்புக் கழகம்,இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்நாடு புதுவை தமிழ் அமைப்புகள் சார்பிலும் தெரிவிக்கின்றோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல  – 25.09.2050  / 11.09. 2019

 

 

தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆளுநர்கள்

இலக்குவனார் திருவள்ளுவன்

 

மரு.தமிழிசைக்கு முன்னரும் தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரானவர்கள் உள்ளனர். தெலுங்கானாவின் முதல் ஆளுநரும் இவருக்கு முந்தைய ஆளுநருமான இலட்சுமி நரசிம்மனும் தமிழ்நாட்டவர்தான்.

1.] மூதறிஞர் இராசாசி(மே.வ.ஆளுநர்: 1947-48)

2.] குமாரசாமி இராசா(ஒரிசா ஆளுநர்: 1954-56)

3.] ஒரிசாவில் பிறந்து தமிழ்நாட்டில் வாழ்ந்த தெலுங்கர் வி.வி.கிரி (உ.பி.ஆளுநர்: 1957-60, கேரளா ஆளுநர்: 1960-65 ,கருநாடகா ஆளுநர்: 1965-67)

 4.] பருமாவில் பிறந்த தமிழர் சோதி வெங்கடாசலம்(கேரள ஆளுநர்: 14.10.1977- 26.10.1982 )

5.] பா.இராமச்சந்திரன்(கேரளா ஆளுநர்: 27.10.1982 – 23.02.1988)

6.] சி. சுப்பிரமணியம்(மகாராட்டிர ஆளுநர்: 15.02.1990–09.01.1993)

7.] சண்முகநாதன் (மேகாலயா ஆளுநர்: 2015-2017;  மணிப்பூர் ஆளுநர் கூடுதல் பொறுப்பு:  1.10.2015 -17.08.2016 ; அருணாச்சல ஆளுநர் -கூடுதல் பொறுப்பு: 14.09.2016- 26.01.2017)

8.]  நீதிபதி சதாசிவம்(கேரள ஆளுநர்: 2014 -2019)

9.] ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்(சத்தீசுக்கர் ஆளுநர்: 2007 முதல் 2010 வரை; ஆந்திரப் பிரதேச ஆளுநர்:  : 27.12. 2009 முதல்  கூடுதல் பொறுப்பு ; 23.01.2010 -23.07.2019 முழுப் பொறுப்பு; தெலுங்கானா ஆளுநர்: 02.06.2014 – 07.09.2019.)

டி.கே.இராசு என்னும் இராசசேகரன் ஒருங்கிணைந்த வடகிழக்குப் பகுதியின் ஆளுநராகச் சிலகாலம் இருந்துள்ளதாக வழக்குரைஞர் கே.எசு. இராதா கிருட்டிணன் தெரிவிக்கின்றார். ஆனால், அத்தகைய விவரம் எதுவும் கிடைக்க வில்லை. கே.ஏ.ஏ.இராசா என்பவர்தான் வடகிழக்குப் பகுதியின்  தலைமை ஆட்சியாளராக 1972இல் இருந்துள்ளார். இவரைப்பற்றிய விவரமும் தெரியவில்லை.

இத்தனை பேர் தமிழ்நாட்டிலிருந்து ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்தாலும் இன்றைய விழிப்புணர்வும் ஊடகப் பரவலும் துணைக்கொண்டு பரவலான செய்தியாகப் புகழ் பெற்றவர் தமிழிசை மட்டுமே. இந்தச் சிறப்பைப் பெற்றவர் வேறு எவருமில்லை.

 

பெண் ஆளுநர்கள்

இந்தியாவின் முதல் பெண் ஆளுநராகக் கவிக்குயில் சரோசினி(நாயுடு) பணியாற்றியுள்ளார். (இவர் ஐதாராபாத்தில் பிறந்து சென்னையில் படித்த வங்காளி ஆவார்.) தொடர்ந்து ஆளுநர் இருபத்து நால்வர், துணை நிலை ஆளுநர் நால்வர் வரிசையில் 28 ஆவது பெண் ஆளுநராகத் தமிழிசை உள்ளார்.

இன்றைய நிலையில் மருத்துவராக இருக்கக்கூடிய ஒரே ஆளுநர் தமிழிசை மட்டும்தான்.

 

– இலக்குவனார் திருவள்ளுவன்