மே இரண்டு, செந்தமிழ் அரிமா இலக்குவனார் சிறைமை நாள் – மறைமலை இலக்குவனார்
மே இரண்டு, செந்தமிழ் அரிமா இலக்குவனார் சிறைமை நாள்
02.05.1965 செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் வேலூர்க் கொட்டடியில் தளைப்படுத்தப்பட்ட நாள்.
நேற்று நடந்தது போன்று நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.
எங்கள் வீட்டு வாசலில் ஒரு வாடகை மகிழ்வுந்து வந்து நின்றது.
வண்டியிலிருந்து இறங்கிய நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் “ஐயா,மாடியில்தானே இருக்கிறார்கள்?” என்னும் வினாவை எழுப்பியவாறே எங்கள் விடைக்குக் காத்திராமல் மாடிக்கு ஏறிவிட்டார்.
சற்றுப் பொறுத்து, வந்தவருக்குக் காப்பிக் குவளையுடன் நான் மாடிக்குச் சென்றேன்.
“ஐயா,ஒன்றுமில்லை.கொஞ்சம் கலந்துரையாடல். அப்புறம் உங்களை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிடுவோம்.”என்கிறார் அவர்.
“ஐயா, தயங்காதீர். நான் பெட்டி படுக்கை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்.” எந்தத் தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் அப்பா கூறுகிறார்.
எனக்கு மின்னலடித்தது. “ஓ!அப்பாவைத் தளைப்படுத்தப் போகிறார்கள்”
இவரை எனக்கு நினைவிருக்கிறது. அழுத்தமும் தெளிவும் நிறைந்த குரலில் ஒரு சொற்பொழிவாளருக்குரிய தோரணையில் பேசுவார்.
நடராசன் எனப் பெயர்.
சிறைப்படுத்த வருபவர்கள் ஏன் வாடகை மகிழ்வுந்து கொண்டுவரவேண்டும?. கீழே கறுப்பு வண்ணமும் மேலே மஞ்சள் வண்ணமும் கொண்ட அந்த அம்பாசடர் வண்டி ஒரு கறுப்பு சிவப்புக் கொடியைத் தாங்கியிருந்தது வியப்பிலும் வியப்பு.
ஏதோ தி.மு.க.கூட்டத்துக்குப் பேராசிரியர் இலக்குவனார் பேசப் போகிறார் என்று மக்கள் எண்ணவேண்டுமாம். என்ன புத்திசாலித்தனம்!
“ஐயா,அரை மணி நேரத்தில் திரும்பிவிடலாம்.” என்கிறார் ஆய்வாளர் நடராசன்.
“என்னய்யா சொல்கிறீர்? திருநகரிலிருந்து மதுரை செல்லவே நாற்பது நிமிடம் ஆகுமே?” என்னும் பேராசிரியரின் வினா வந்தவர் பொய்யுரைப்பதை எள்ளலுடன் புலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
வண்டி கிளம்பிவிட்டது.சற்றுமுன் தனக்கன்குளம் மொட்டைமலையில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த நண்பர்கள் சாந்தமூர்த்தியும் தினமணியும் வீட்டுக்கு வெளியே நின்றவாறு “யார் வந்து போகிறார்கள்?” என வினவியவர்கள் என் விடைக்குக் காத்திராமல் “ஏன் மீண்டும் கைது செய்கிறார்கள்?” எனக் கேட்டார்கள்.
எங்கள் வீட்டுக்குமுன் வந்துநின்ற வாடகைவண்டியை மட்டுமே நான் பார்த்திருந்தேன். ஆனால் தெருக்கோடியில் நின்றிருந்த காவல்துறையின் மூடுந்து அவர்களுக்குக் காட்சியளித்துள்ளது. எனவே வந்துசென்றவர் காவல்துறை அதிகாரி என்பதிலும் இலக்குவனார் சிறைக்குத்தான் அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதிலும் அவர்களுக்கு எள்ளளவும் ஐயமிருக்கவில்லை.
“அப்புறம் ஏன் பெட்டி படுக்கை எடுத்துச்செல்ல இசைவளிக்கவில்லை?” என்னும் வினா என் பேதையுள்ளத்தில் எதிரொலித்தவாறிருந்தது.
மாலையில் என் தமையனார் பொறியாளர் திருவேலன் வந்துசேர்ந்த சற்றுநேரத்தில் தொலைபேசியில் காவல்துறையின் அழைப்பு. அப்பா வெளியூர் செல்லப் போவதாகவும் ஒருவாரத்துக்குரிய துணிமணிகளை எடுத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டது.
அப்பா வழக்கமாக வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்லும் பொருள்நிறைக்கும் மெத்தை(Hold-all) துணிகளுடனும் பற்பசை, வழலை முதலான வழமையான தேவைப்பொருள்களுடனும் ஆயத்தமானது.
அதுவரை எந்தக் கலக்கமும் இன்றி இயங்கிக்கொண்டிருந்த எனக்கு அப்போது கவலையும் குழப்பமும் மனத்தை நிறைத்தது.
அண்ணன் எந்த வண்டியில் எப்படிச் சென்றார் என நான் அப்போதும் பார்க்கவில்லை, இப்போதும் நினைவில் இல்லை. ஆனால் ஒருமணி நேரத்தில் திரும்பிவிட்டார்.அப்போது மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தாமரை என நினைவு; மண்டலத் துணைத்தலைவர் டயசு. “பேராசிரியரது துணிமணிகளுடன் அழைத்து வந்திருக்கலாமே? அவருக்கு ஏன் வீண்தொல்லையளித்தீர்கள்?” என ஆய்வாளர் நடராசனைக் கடிந்துகொண்டார்களாம். ஏனெனில் தமையனார் திருவேலன் துணிமணிகளைக் கொண்டுசென்றவுடன் அப்பாவை அழைத்துச் செல்ல வண்டி ஆயத்தமானது. அவரது அகவையையும் முதன்மையையும் கருத்தில்கொண்டு அவரை மூடுந்து ஒன்றில் அழைத்துச் செல்வதனைத் தவிர்த்து வாடகை மகிழ்வுந்துவண்டியிலே அழைத்துச் சென்றார்களாம். செல்லுமிடம் இருநூற்றைம்பது கல் தொலைவில் உள்ள வேலூர் ஆயிற்றே!
மறுநாள் செய்தித்தாள்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஒரு பேராசிரியர் தளைப் படுத்தப்பட்டார் என்பதனால் ஊரிலுள்ள பேராசிரியர்களனைவரும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? எல்லாரும் வாய்புதைத்து வாளாவிருந்தார்கள் என்பதுதான் வரலாறு. சிலம்புச்செல்வர் ம.பொ.சி., பொதுவுடைமைத் தலைவர் கே.டி.கே.தங்கமணி இருவரும் பேராசிரியர் சிறைப்படுத்தப்பட்டதனை வன்மையாகக் கண்டித்திருந்தார்கள்.
மே முதல்நாள் மதுரையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு வரவேற்பு. அவர் பாளையங்கோட்டையிலிருந்து விடுதலைபெற்று வந்திருந்தார். பெப்பிரவரி இறுதியில் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளியில் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் விடுதலை பெற்று வந்ததனை முன்னிட்டு மதுரை மாவட்ட தி.மு.க. அவருக்கு வழங்கிய வரவேற்புவிழா. பேராசிரியர் சி.இலக்குவனாரும் கலந்துகொண்டார்.கலைஞர் தமது உரையில் இலக்குவனாரைக் குறிப்பிடும்போதெல்லாம் தமிழ்ச்சிங்கம் என்றுதான் குறிப்பிட்டார். சிறை விடுதலை பெற்ற மகிழ்ச்சியை விட- திரளான கூட்டம் தமக்கு வரவேற்பு வழங்கியதை விட- எதிர்பாரா வகையில் தம ஆசான் இலக்குவனார் கலந்துகொண்டு வாழ்த்தியது அவருக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது.
அதற்கு அடுத்த நாளே (2/5/65) தம் ஆசானும் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையாகிய பாதுகாப்புச்சட்டத்தில் சிறை என்பது அவருக்குப் பேரதிர்ச்சி. ஏனெனில் பதுகாப்புச் சட்டம் மிகக் கொடுமையானது. இச் சட்டப்படி கைது செய்யப்பட்டவர்கள் எந்த நீதிமன்றத்திலும் முன்னிறுத்தப்படவேண்டிய தேவையில்லை. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைத்துவைக்கலாம். முதல்நாள் தமக்கு வரவேற்பும் பாராட்டும் வழங்கிய ஆசான் அடுத்த நாளே கொடுஞ்சிறையில் அடைத்து வைக்கப்படுவதைக் கலைஞர் எதிர்பார்க்கவில்லை. கடுமையாக அரசுக்குத் தமது கண்டனத்தைத் தெரிவித்தார். ஏனைய தி.மு.க.தலைவர்கள் அமைதி காத்தனர். ஏனெனில் இலக்குவனார்க்கு நேர்ந்த கதி அவர்களுக்கும் வந்துவிடலாமே. மேலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிஞர் அண்ணா மார்ச்சுத் திங்களில் அறிக்கை விடுத்திருந்தார்.அப்படியே அந்தச் சொற்றொடரைக் கூறுவதாயின் “மாணவர்கள் நடத்தும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும் தி.மு.க.வுக்கும் ஒட்டும் இல்லை;உறவும் இல்லை” என்பதுதான் அண்ணா வழங்கிய செய்தி.
இந்த அறிக்கையை ஏன் வெளியிட்டார்? சனவரி 25-ஆம் நாள் தொடங்கி இரண்டு மாதங்களான பின்னும் இந்தி எதிர்ப்புப் போராட்டப் பெருநெருப்பு தணியவில்லை முதலமைச்சர் பக்தவத்சலம் அண்ணாவைத் தொடர்புகொண்டு இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொணருமாறும் சட்டம்-ஒழுங்கு சீர்பெறவும் மக்கள்நலத் திட்டங்கள் தொடர்பு செயற்படவும் அமைதியான சூழல் தேவையெனவும் கேட்டுக்கொண்டார். அதற்கு விடையளித்த அறிஞர் அண்ணா இந்தப் போராட்டம் தி.மு.க.நடத்தும் போராட்டம் அல்ல எனவும் 25-ஆம் நாள் கறுப்புக்கொடியேற்றவும் ஒரு சிலர் சட்டப்பிரிவின் நகலை எரிப்பதும் மட்டுமே அவர்களின் செயல்திட்டம் எனவும் அதன்பின் நடந்த போராட்டத்தைத் தி.மு..க.நடத்தவில்லை எனவும் விடையளித்திருந்தார். இது முற்றும் முழுமையும் மாணவர் போராட்டம் எனவும் இதனை முடிவுக்குக் கொணரும் ஆற்றல் பேராசிரியர் சி.இலக்குவனார்க்கே உரியது எனவும் அண்ணா அரசுக்குத் தெரிவித்திருந்தார். மார்ச்சுத் திங்கள் நிறைவு வாரத்தில் உயர்மட்ட அலுவலர்கள் பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தொடர்பு கொண்டு இந்தச் செய்தியைத் தெரிவித்தனர்.
மெல்லிதாகப் புன்னகைத்தவாறே செந்தமிழ் அரிமா கூறினார். “இந்தப் போராட்டம் நான் சொல்லி எழுந்ததல்ல. மாணவர்கள் தங்கள் வருங்காலம் குறித்த அச்சத்தாலும் மொழி உரிமை பறிபோவதைத் தடுக்கவும் நன்கு சிந்தித்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். உங்கள் வேண்டுகோளைக் கேட்டு நான் போராட்டத்தை நிறுத்துமாறு அறிவுரை கூறினால் நான் ஒரு நல்ல ஆசிரியன் அல்லன்; அப்படியே நான் சொல்லி மாணவர்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டால் அவர்கள் என் மாணவர்களும் அல்லர்.” காவல்துறை கையைப் பிசைந்தது.
இந்த முன்னிகழ்வுகளை மனத்துள் கொண்டு நோக்கினால் தி.மு.க. அமைதி காத்ததற்குக் காரணம் தெரியும். ஆனால் கலைஞர் பாளையங்கோட்டையிலிருந்து வந்த சூடு தணியாமல் இருந்ததும் முதல் நாள் மாலை தமக்கு இனிய வரவேற்பு வழங்கிய இலக்குவனார் அடுத்தநாள் மாலை கடுஞ்சிறையேகும் கொடுமையைப் பொறுத்துக்கொள்ளமுடியாததும் கலைஞர் கடும் கண்டனம் தெரிவிக்கக் காரணமாயமைந்தன.
வேலூர்ச் சிறையில் அவர் அடைந்த இன்னல்களும் மதுரையில் அவரது குடும்பம் பட்டறிந்த துன்பங்களும் அவர் சிறைக்குச் சென்று சில வாரங்களிலேயே தியாகராசர் கல்லூரி நிருவாகம் அவரது பணிநீக்க ஆணையைச் சிறைக்கு அனுப்பிய செய்தியும் விரித்துத் தனியே ஒரு காப்பியம் படைக்க வேண்டும்.ஆற்றல் எனக்கு உள்ளதா எனத் தெரியவில்லை.
வேலூர்ச் சிறையில் அரசியல் கைதிகள் தளைப்பட்டிருந்த நிகழ்வைக் கல்வெட்டுகளால் தி.மு.க. ஆட்சி பதித்துவைத்தது.ஒரு மூத்த தமிழறிஞர் பதவியைத் துச்சமெனக் கருதி வாழ்வெல்லாம் போராடி, மொழிஉரிமைப் போராளி என்பதற்காக இங்கே தளைப்பட்டிருந்தார் என்னும் செய்தியை -தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ– எந்த அரசுமே கல்வெட்டாகப் பதிக்கவில்லை. எனினும் மொழிஉரிமைக்காக ஒரு பேராசிரியர் காலமெல்லாம் போராடிக் கொடுமையான இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வரலாறு காலத்தால் அழியாது. அந்தத் தியாகத்தைக் கல்வெட்டால் பதிக்காமல் புறக்கணித்தாலும் அந்த வரலாற்றை மறைக்கவோ மறக்கவோ இயலாது. அதனை அறியும் வாய்ப்பைப் பெற்ற நாளைய தலைமுறையினர் நெஞ்சில் தமிழியக்க வீறுணர்ச்சி வழிவழி போற்றப்படும் என்பது திண்ணம்.
– மறைமலை இலக்குவனார்
Leave a Reply