தொகுப்பாளர் குறிப்பு:

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் (குறள் 355)

மெய்ப்பொருள் காண்பதறிவு

 என மெய்ப்பொருள் காணும் வித்தகர்; ஆனித்தரமான வீரம் செறிந்த பேச்சு வல்லவர். கவிதை பொங்கும் மிடுக்கு நடை. அதுவே இவரது உரைநடை என்னும் வகையில் அழகாகத் தெளிவாகப் பேசும் சொல்லேருழவர். ஆட்சிததமிழிலும் அறிவியல் தமிழிலும் கலைச்சொல்லாக்கங்களிலும் வல்ல தமிழறிஞர். ‘அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியர். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்பவர். தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைப், பேராசிரியர் கு.மோகனராசு அவர்களின் வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் தொகுதி 6 நூலினை அறிமுகம் செய்ய அன்புடன் அழைக்கிறேன். – சுடர்மேரி

  • வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள்
  • – நூலறிமுகம் 1/4

  திருக்குறளுக்கு உரை நூல் எழுதியும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியும்  திருக்குறள் சொற்பொழிவுகள் ஆற்றியும், திருக்குறள் கதை நூல்கள் எழுதியும், திருக்குறள் பாடல்கள் எழுதியும் பாடியும், திருக்குறள் ஒப்பித்தல் முதலிய திருக்குறள் தொடர்பான போட்டிகள் நடத்தியும் பல வகைகளில் திருக்குறள் தொண்டாற்றுவோர் பலர் உள்ளனர். இத்தனைப் பணிகளுடன் திருக்குள் படைப்பாளர்களை உருவாக்கியும் ஊக்கப்படுத்தியும் திருக்குறள் சான்றோர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியும் திருக்குறள் தூதர்களை உருவாக்கியும் திருக்குறள் விருதுகளையும் திருவள்ளுவர் விருதுகளையும் வழங்கியும் அனைத்து வகைத் தொண்டுகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வருபவர் ஒருவரே! அவரே திருக்குறள் தூதர், உலகத் திருக்குறள் மைய நிறுவனர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு.

கடந்த 1000 ஆண்டுகளாகத் திருக்குறளுக்காக வாழ்ந்த சான்றோர்கள்பற்றியும் இப்போது திருக்குறள் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆன்றோர்களைப்பற்றியும்  ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கச் செய்து மேடையேற்றம் செய்து வருகிறார்.

பதிப்புரையில் குறிப்பிட்ட வண்ணம் ‘133 திருக்குறள் தொண்டர்கள் வரலாற்று மாநாட்டினை’ உலகத்திருக்குறள் மையம் மூலம் முனைவர் கு.மோகன்ராசு சிறப்பாக நடத்தியுள்ளார். அம்மாநாட்டில் வழங்கப்பட்ட ஆய்வுரைகளை ‘வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள்’ என்னும் தலைப்பில்  பல தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். நூற்பணிகளை மணிவாசகர் பதிப்பகம் செம்மையாகச் செய்து வருகிறது.

திருக்குறள் நெறிப்படி வாழ்ந்து மறைந்த சான்றோர்கள்பற்றிய கட்டுரைத் தொகுப்புகளாக இதுவரை 5 நூல்கள வந்துள்ளன. இன்று 6ஆவது நூல் வெளியாகிறது. ஆறாம் தொகுதியே அறிமுகத்திற்காக என் கைகளில் தவழ்கின்றது. இந்நூல்பற்றிய அறிமுக உரை யாற்றும் நல்வாய்ப்பினை எனக்கு நல்கியமைக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

வரலாறு படைத்த சான்றோர்கள் தலைப்பிலான ஆறவாது தொகுப்பு நூலில் 11 சான்றோர்களின் பெருமைகள் நமக்கு உணர்த்தப்படுகின்றன.

ஐயன்பெருமாள் (கோனார்) குறித்துக் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்துத் திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை,

கம்பர் குறித்து இ.ப.நடராசன்

அருட்செல்வர் கிருபானந்த வாரியார் குறித்து வா.வேங்கடராமன்,

மாக்கவி சி.சுப்பிரமணிய பாரதியார் குறித்துப் பேராசிரியர் கருவை பழனிசாமி

பேராசிரியர் பண்டித வா.சி.சுப்பிரமணியனார் குறித்து வே.ச.விசுவநாதம்

பேராசிரியர் கா.சு.(பிள்ளை) குறித்துப் பேராசிரியர் கருவை பழனிசாமி

தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்துப் பேராசிரியர் சே.சி.கண்ணப்பனார்

அ.க.நவநீத கிருட்டிணனார் குறித்து நல்லாசிரியர் வை.இராமசாமி

முனைவர் நவராசு செல்லையா குறித்து நல்லாசிரியர் க.பன்னீர்செல்வம்

சாமி.பழனிசாமி குறித்துக் கோட்டை சு.முத்து

எனப் பதினொன்மரைப்பற்றிப் பதின்மர் கட்டுரைகள் வாசித்தளித்துள்ளனர். பேரா.கருவை.பழனிசாமி இருகட்டுரைகள் அளித்துள்ளார்.

அறிஞர் ஐயன்பெருமாள்

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் மூலமும் தமிழ்ப்பணி மூலமும் உலக மாநாடுகள், எழுச்சிப்பயணங்கள் மூலம் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் வழியில் தமிழ்ப்பணி ஆற்றி வருபவர் வா.மு.சே. திருவள்ளுவர்.

அறிஞர் ஐயன்பெருமாள்(கோனார்) குறித்த அவரது கட்டுரை முதல் கட்டுரையாக இடம் பெற்றுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் முன்னாள் மாணாக்கர்களும் அறிஞர் ஐயன்பெருமாளை நன்கு அறிவர். ஆனால், தேர்வில் தாங்கள் எளிதில் வெற்றி பெறக் கோனார் உரை தந்த கோமகன் என்ற அளவில்தான் அறிவார்களே தவிர, அவரின் புலமைத்திறனையும் அறிவுச் செழுமையையும் அறிந்திலர்.

அவர்களும் பிறரும் அறியும் வகையில் அருமையான கட்டுரையை வா.மு.சே.திருவள்ளுவர் அளித்துள்ளார்.

தோற்றம், உயர்மதிப்பெண்களும் சிறப்பான தேர்ச்சியும் பெற்ற இளம்மாணவப் பருவம், பணிவுடைமையையும் இன்சொல்லையும் அணிகலன்களாகக் கொண்டு அனைவர் உள்ளத்தைக்கவர்ந்த பாங்கு என அவரைப்பற்றி விளக்கியுள்ளார்.

படிக்கும் பொழுது பாடங்களுக்கு ஏற்ற உரைக்குறிப்புகள் எழுதுவதையும் வினா-விடைகள் எழுதுவதையும் பழக்கமாகக் கொண்டிருந்த சான்றோர் பிறரும் அவற்றால் பயனடையக் கருதி வினா-விடை நூல்களையும் உரை நூல்களையும் எழுதியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். பள்ளி இறுதி மாணாக்கர்களுக்கு 15 ஆண்டுகள் உரைநூல்கள் எழுதியுள்ளார். இளங்கலை வகுப்பிற்கும் உரைநூல்கள் எழுதியுள்ளார் என உரைநூல்கள் வந்த வழியைக் கட்டுரையாளர் விளக்குகிறார்.

உரைநூல்களுடன் தமது பணியை அவர் முடித்துக் கொள்ளவில்லை. கோனார் தமிழ்க்கையகராதி என்னும் அகராதியையும் திருக்குறள் தெளிவுரை நூலையும் வெளியிட்டு நிலையான பணி யாற்றியுள்ளார்.

இந்நூல்களை வெளியிட்டது பழனியப்பா நிறுவனம். இதன் உரிமையாளர் தம் கட்டடத்திற்குக் குடும்பத்தினர் யார் பெயரையும் சூட்டாமல் கோனார் மாளிகை எனப் பெயரிட்டுள்ளார்; இதன் மூலம் பதிப்பகத்தார் மதிக்கும் வகையில் பாரினரால் போற்றப்பட்டுள்ளார் என்பதை நாம் அறிய முடிகிறது.

1942 முதல் 1968 வரை புனித சூசையப்பர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்; அறிவும் திருவும் புகழும் கற்போர் நெஞ்சம் காமுறப் பயிற்றும் திறன் கொண்டவர் எனக் கட்டுரையாளர் விளக்குகிறார்.

திருக்குறள் வழி நின்று தாம் சேர்த்த பொருளையெல்லாம் தம்மைச் சார்ந்தோர்க்கு வழங்கி அறிஞர்களைப்போற்றி ஆதரித்த செம்மல் என்பதைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

பெருமகனாரைத் திருக்குறள் சான்றோராக நிலைநிறுத்துவது அவர் எழுதிய ‘திருக்குறள் கோனார் பொன்னுரை’ என்னும் நூலே. இதனை 12 மக்கள் பதிப்புகளாகப் பழனியப்பா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் அதிகாரத்தலைப்புகள் விளக்கச் சிறப்பைக் கட்டுரையாளர் நன்கு விளக்கியுள்ளார். அவரது உரைத்திறம்பற்றி உணர 10 திருக்குறள்களின் பொன்னுரைகளை நமக்குத் தந்துள்ளார்.

திருச்செந்தூர் திருப்பாவை மாநாட்டில் பங்கேற்றுத் தொடரியில் திரும்பும் பொழுது நலக்குறைவுற்று மதுரையில் இறங்கி மருத்துவ மனையில் சேர்ந்தும் பயனின்றி 01.01.1969 அன்று மறைந்தார் பெருமகனார். அப்பொழுது பெருமகனாரைப்பற்றிப் புலவர் இலால்குடி இரங்கசாமி, வித்துவான் இராமசாமி(க் கேனார்), புலவர் த.கி.குப்புசாமி, முனைவர் வ.சுப.மாணிக்கனார், பம்பாய் இராமன், அறிஞர் கீ.இராமலிங்கனார், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா ஆகியோர் நினைவுரைகளாக நல்கிய கவிதைகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் மேற்கோள் வரிகளை நமக்கு அளித்து அவரின் சிறப்புகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

முத்தாய்ப்பாகத், தனக்குப் பாடல் எழுதப் பழகித் தந்து அன்போடு குறறம் குறைகளைத் திருத்திய ஆசான் எனத் தனக்கும் பெருமகனாருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்திக் கட்டுரையை முடித்துள்ளார்.

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் எளிமையாகவும் சிறப்பாகவும் திருக்குறள் சான்றோர் ஐயன்பெருமாள்(கோனார்)பற்றிய கட்டுரையைப் படைத்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்