வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.
வரிவடிவப் பொருண்மையை நீக்கக்
கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில் தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல் தலைப்பே, ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி என உள்ளது.
அடிப்படை வரிவடிவம்பற்றிக்கூற வேண்டிய தேவையும் இல்லை. கணிணியர்கள் இதற்குத் தக்கவர்களும் அல்லர்.
எழுத்து தொடர்பான அடிப்படையை நாம் புரிந்து கொண்டு சரியான சொல்லாட்சியைக் கையாண்டால் இச்சிக்கல் வராது என எண்ணுகிறேன். நெடுங்கணக்கில் உள்ளவைதாம் எழுத்துகள். அச்சு எழுத்து வந்த காலத்தில் எழுத்துகளுக்கான அச்சுருக்கள் உருவாக்கப்பட்டன. எனவே, இவை எழுத்துரு என்று சொல்லப்பட்டன. வணிக நோக்கிலும் வடிவமைப்பு நோக்கிலும் வெவ்வேறு எழுத்துரு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்தன. இப்பொழுது கணிணியூழியில் வாழ்கிறோம். கணிணியில் பயன்படுத்தப்பெறும் எழுத்து வகைகளை எழுத்துருக்கள் என்பது பொருந்தாது. எழுத்துத் தோரணைகள் என வேண்டும்.
எழுத்து(letter)வேறு; எழுத்துத் தோரணை (font-style of letter) வேறு. ஆங்கிலத்தில் எத்தனைத் தோரணைகள் உருவாக்கப்பட்டாலும் அடிப்படையான 26 எழுத்துகளில் மாற்றமில்லை. (A font is a style of lettering. There are hundreds of different fonts, but (at least in English) there are only 26 letters- Mamie; Letters: A,B,C etc. The font is the style the letters are written in. – Harmonic : Yahoo answers). பிற மொழிகளிலும் அவ்வாறுதான். ஆனால், தமிழில் மட்டும், வரிவடிவ வளர்ச்சி என்ற பெயரில் வடிவடிவச்சிதைவு முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்பது ஏன என்றுதான் புரியவில்லை.
வரிவடிவ முயற்சிகளுக்குத் தமிழறிஞர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவத்து வருகின்றனர். தந்தை பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தாலும் பேராசிரியர் சி.இலக்குவனார், வரிவடிவ முயற்சிகளுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்பொழுது தோன்றிய சிதைவுகளைத் தடுத்து வந்துள்ளார். (இலக்குவனார் திருவள்ளுவன் ஆகிய) நானும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கருத்தரங்கங்கள், இதழ்கள், தொலைக்காட்சிகள் ஊடாக வரரிவடிவச்சிதைவு முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றேன். தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பிலும் வரிவடிவச்சிதைவு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபொழுது தமிழ்க்காப்புக் கழகத்தின் முயற்சியால், கருத்தரங்கத் தலைப்புகளில் இருந்து வரிவடிவச் சீர்திருத்தம் அகற்றப்பட்டது. மேலும், வரிவடிவச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைவு முயற்சிக்கு அரசேற்பு வழங்கப்பெற்று அறிவிப்பு வரும் என்ற சூழல் இருந்தது. வெவ்வேறு தளத்தில் இருந்து குரல் கொடுத்து வந்த பலரும் ஒன்றிணைந்து தமிழ் எழுத்துப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் இணைந்து எதிர்ப்பை வலுவாக்கினோம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, மலேசியா, சிங்கப்பூர் முதலான பகுதிகளில் வரிவடிவச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகக் கூட்டங்களும் கருத்தரங்கங்களும் நடைபெற்றன. முதுமுனைவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ம.இல.தங்கப்பா, மறைந்த அறிஞர் வெ.கோவலங்கண்ணன், அறிஞர் ஔவை நடராசன், பேராசிரியர் இ.மறைமலை, பேராசிரியர் பா.இறையரசன், கணிஞர் மு. மணிவண்ணன், பொறிஞர் இராமகிருட்டிணன், முனைவர் நாக. இளங்கோவன், அறிஞர் க.சி.அறிவுடைநம்பி, மறைந்த அறிஞர் சீனிநைனா மொகமது, பேராசிரியர் செல்வகுமார், அறிஞர் சுப.நற்குணன், அறிஞர் பெரியண்ணன் சந்திரசேகரன் அன்றில் இறையெழிலன், புதுவை சுகுமாறன் முதலிய பலரும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் வரிவடிவச் சிதைவு முயற்சிகளில் இருந்து தமிழைக் காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர்; இப்பொழுதும் தமிழ் வரிவடிவம் காக்கக் குரல் கொடுப்பவர்களே இவர்கள். இவர்களில் பெரும்பான்மையரைக் கொண்டு அமைக்கப்பட்டதே தமிழ் எழுத்துப்பாதுகாப்பு இயக்கம்.
மாநாட்டமர்வு அரங்குகளில் பொதுவாகக் குறைவான கூட்டம் இருந்தாலும், எழுத்துச் சிதைவு எதிர்ப்பு முழங்கிய அரங்கில் நிற்கக்கூட இடமில்லாமல் அரங்கு நிறைந்து வழிந்தது.
தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம் சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தினோம். அது குறித்துக் கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர் கலைஞர், சிதைவு முயற்சிக்கு அரசு துணைபோகாது, அவ்வாறு வருவதாகச் சொல்லப்படும் அறிவிப்பு வராது ஆதலின் கையெழுத்து இயக்கம் தேவையில்லை என்பதைக் கூறச்செய்தபின் கையெழுத்தியக்கம் நிறுத்தப்பட்டது. உறுதி சொன்னவாறே தமிழ் நெடுங்கணக்கும் காப்பாற்றப்பட்டது.
அரசின் நிறுவனமான தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் தமிழ்ச்சிதைவை ஊக்கப்படுத்தும் காணொளியுரை தொடர்ந்து இடம் பெற்று வந்தது. தமிழ்க்காப்புக்கழகத்தில் தொடர் வேண்டுகோளுக்கிணங்கப் புரட்சித் தலைவியின் தலைமையிலான இப்போதைய அரசும் அதனை நீக்கி விட்டது.
என்றாலும் வெற்றி பெற்று விட்டோம் என்று நாம் வாளாவிருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவ்வப்பொழுது எழுத்துச் சிதைவைச் சிலர் தூண்டி விட்டுக் கொண்டுள்ளார்கள்.
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (திருவள்ளுவர், திருக்குறள் 531)
என்பதை நமக்கு நினைவூட்டிக் கொண்டுள்ளார்கள்.
இத்தகைய தவறான முயற்சிகளுக்குக் கணித்தமிழ்ச்சங்கம் துணை நிற்கக்கூடாது என அன்புடன் வேண்டுகிறோம். எனவே, கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ‘தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி’ என்பது தொடர்பான தலைப்பை நீக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
தேவைப்பட்டால் கருத்தரங்கத்தின் பெயரை ‘எழுத்துத் தோரணைக் கருத்தரங்கம் 2015’ எனத் திருத்திக் கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.
தமிழில் கணிணி அறிவியல் சிறப்பாக வளரவேண்டும் என்னும் தளரா ஆர்வம் கொண்ட கணித்தமிழ்ச்சங்கம் நம் வேண்டுகோளை ஏற்றுத் தலைப்பை நீக்கவும் இயலுமெனில் கருத்தரங்கப் பெயரை மாற்றவும் வேண்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015: இதழுரை
Leave a Reply