arunjetley-budjet01

 பெரும்பான்மையருக்கு உதவாத

மத்தியஅரசின் பாதீடு – நிதிநிலை அறிக்கை

 

  2015 – 2016 ஆம் நிதியாண்டிற்கான மத்தியில் ஆளும் பா.ச.க.வின் வரவுசெலவுத்திட்டமாகிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்(செட்லி) அளித்துள்ளார். செல்வர்கள் நலனில் கருத்து செலுத்தும் மத்திய அரசு ஏழை மக்களையும் நடுத்தரநிலை மக்களையும் கருத்தில் கொள்ள வில்லை. அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியும் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவவசதியும் அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறியுள்ளது. நாடெங்கிலும் ஏறத்தாழ 80,000 உயர்நிலை பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே! ஆனால், கல்வித்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். மத்திய அரசு மாநில அரசுகள் மூலமே இதில் தன் பங்களிப்பை ஆற்ற வேண்டும். இல்லா விட்டால் மாநில மக்களின் தேசிய மொழிகள் ஒடுக்கப்படவும் இந்தி, சமற்கிருதம் ஆகியன திணிக்கப்படவுமே வாய்ப்பாகும். கல்வித்திட்டம் அந்தந்த மாநில மக்களின் பண்பாட்டிற்கேற்ப அமைவதை மத்திய அரசின் குறுக்கீடு தடுக்கும். எனவே, கல்வித்துறை மாநில ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டு அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதையே மத்திய மாநில அரசுள் செயல்படுத்த வேண்டும்.

  கணிய நிறுவனங்கள் (மென்பொருள் நிறுனங்கள்) புதியதாய்த் தோற்றுவிக்க உரூ 1000 கோடிப் பொருளுதவி   அளித்து இத்துறையில் மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதும் பாராட்டிற்குரியதே! இவ்வாறு அங்கும் இங்குமாகச் சில நன்மைகள் இருக்கலாம்! இவற்றைக்கூடச் செய்யாமல் மத்திய அரசு என ஒன்று இருந்து என்ன பயன்?

   வரிவிதிப்பின் மூலம் உரூ.9.77 நூறாயிரம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதே! இதனைக் குறைத்துக் கொண்டு மக்கள் நலத்திட்டங்களில், புதிய தொழிற்சாலைகள் அமைப்பதில், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதில் எனக் கருத்து செலுத்தியிருக்கலாம். இது குறித்துக் காலங்காலமாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

  எனினும் நாம் வருமான வரி பற்றி மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.

 கடந்த ஆண்டு நரேந்திர(மோடி) அரசின் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் வருமானவரியில் மக்களுக்குச் சிறிதளவு நன்மை கிடைக்கும் அளவு சலுகைகள் சிலவற்றை அறிவித்து இருந்தது. ஆனால் இவ்வாண்டு எல்லார் நம்பிக்கையும் பொய்த்துப் போகும் வண்ணம் பாராமுகமாக இருந்துவிட்டது. பண மதிப்பு குறைவதால் ஆண்டுதோறும் குறைந்த அளவேனும் வருமான வரி வரம்பை உயர்த்துவதை ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆண்டிற்கு உருபாய் 12 நூறாயிரத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மட்டும் வரி செலுத்தினால் போதும் என அறிவித்திருந்தால் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் வரம்பினை உயர்த்துவதை அடியோடு நிறுத்தி பா.ச.க. அரசு ஏமாற்றிவிட்டது.

  வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உரூபாய் 4,44,200 என்பது கடந்த ஆண்டு வரம்பையும் உள்ளடக்கியதே! சான்றாக இந்த நிதிநிலை யறிக்கையில் பிரிவு ’80. ஈ (80.D.)’ மூலமாக ஆயுள் காப்பீடு, மருத்துவச் செலவுகளைத் திரும்பப் பெறும் தொகை உரூ.15,000-இல் இருந்து உரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு உரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சில சலுகை சில பிரிவினருக்குகே கிடைக்கும். ஒட்டுமொத்தமாகச் சலுகை அளித்துள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது. எனவே, மிகையான சலுகை அளித்துள்ளதுபோல் காட்டப்படுவதே உண்மை.

  செல்வந்தர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகச் செல்வ வரியை   அகற்றிய பா.ச.க. அரசு அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் வருமான வரியை நீக்கி விடலாம்.

  மாதச்சம்பளக்காரர்கள்தாம் ஒழுங்காக வருமான வரி கட்டி அல்லல் படுகின்றனர். பிறருக்கு இத் தொல்லை இல்லை. கொலைகாரர்களுக்கெல்லாம் விருதுதரப் பரிந்துரைக்கும் ஒருவர் தான் நிதியமைச்சரானால் வருமான வரியை நீக்குவேன் என்றார். அவர் மக்கள் நலனுக்கெல்லாம் அறிவுரை கூறமாட்டார் போலும்! தன் அறிவுரையைத் தமிழர்க்கு எதிராக மட்டும் சொன்னால் போதும் என எண்ணுகிறார் போலும்! எதிர்க்கட்சியினரையும் செல்வர்களையும் விரும்பாதவர்களையும் ஆளுங்கட்சி மிரட்டுவதற்குத்தான் வருமான வரித்துறை பயன்படுகிறது. இதற்காகச் சம்பளத்திற்கு எனவும் பிற எல்லாச் செலவினங்களுக்கெனவும் ஆண்டுதோறும் செலவிடும் தொகை இத்துறையை மூடினால் மிச்சமாகும்.

  வருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு – எடுத்துக்காட்டாக அனைவரும் 10 % சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். இதனைக் கூடுதல் செலவினம் இன்றிச் சம்பளம் வழங்கும் அலுவலர் மூலம் நிறைவேற்றலாம். கூலி வேலை பார்ப்பவர்கள், சிறு தொழில் நடத்துநர் முதலானோருக்கு இதன் இன்றியமையாமையை வலியுறுத்திச் சேமிப்புத் திட்டத்தில் ஈடுபடச் செய்யலாம்.

  தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டில் 10% அளவுத் தொகையை அருகில் உள்ள கல்விக்கூடங்கள், நலவாழ்வு நிலையங்கள், மருத்துவமனைகள், சிற்றூர்கள் முதலியவற்றின் நலனுக்குச்செலவிடவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம். அவர்கள் ஏய்த்துக் கட்டும் வரியைவிட இது இருக்கும் என்பதால் அறப்பணியாகக் கருதி மகிழ்ச்சியாகவே ஈடுபடுவர்.

   பதவிகளில் உள்ளோர் குறுக்கு வழிகளில் பணம் பெறுவதைத் தடுக்கும் வகையில் அவர்கள் ஆண்டுதோறும் வருமானம்-சொத்து விவரத்தை மட்டும் ஊழல் ஒழிப்புத்துறைக்கு அளிக்கவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தலாம்.

  மக்கள் தாங்களாகவே அரசிற்கு வரி செலுத்தும் வகையில் ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தலாம். இதில் வரம்போ கட்டாயமோ இருக்கக்கூடாது. இதனைக் கடமையாக எண்ணி மக்கள் செலுத்தும் மனப்பாங்கை உண்டாக்க வேண்டும்.

 எனவே, மத்திய அரசு வருமான வரிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வருமானவரித்துறையை மூடி மாற்றுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல். (திருக்குறள் 461)

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கின்படி அரசுகள் செயல்படுவதாக!

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரைfeat-default

அகரமுதல 68 நாள் மாசி 17, 2046 / மார்ச்சு 1, 2015