gnalathamizhthaay01

வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!

  ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான் வல்லினம் மிகுதலும் மிகாமையும். எனவே, இதன் இன்றியமையாமையை உணரலாம்.

சான்றாகச் சில பார்ப்போம்.

  ‘கீரை கடை’, ‘தயிர் கடை’ என்னும் பொழுது ‘கீரையைக் கடை’, ‘தயிரைக் கடை’ என நாம் வேற்றுமை உருபு மறைந்து வருவதைப் புரிந்து கொள்கிறோம். அதே நேரம், ‘கீரைக் கடை’, ‘தயிர்க்கடை’ என்னும் பொழுது முறையே, ‘கீரை விற்கும் கடை’, ‘தயிர் விற்கும் கடை’ என்பது புலனாகின்றது. எனவே, சொற்களின் இடையே உரிய வல்லின எழுத்தைச் சேர்ப்பதாலும், சேர்க்காமல் இயல்பாக அமைப்பதாலும் பொருள் மாற்றத்தை உணர்கிறோம்.

  சொற்களைப் பிரித்து எழுதும் பொழுதும் சேர்த்து எழுதும் பொழுதும் பொருள் மாறுபடுவதை உணரலாம். ‘முதல் அமைச்சர்’ வந்தார் என்றால் முதலாவது அமைச்சர் வந்தார் எனப் பொருளாகிறது. ‘முதலமைச்சர்’ வந்தார் என்றால் அமைச்சர்களின் தலைவரான முதலமைச்சர் வந்தார் எனப் பொருளாகிறது.

  இவ்வாறான இலக்கணக் கூறுகள் தமிழுக்கு வளம் சேர்ப்பன. எனவே, தமிழ் மொழிப் பாடங்களில் மட்டுமல்லாமல் பிற துறைப் பாடங்களைத் தமிழில் எழுதும் பொழுதும் இலக்கண நெறிமுறைகளைப் பின்பற்றுவதை நம் கடமையாகக் கொள்ள வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar thiruvalluvan08