தலைப்பு-வாகைச்செல்விக்கு வாழ்த்துகள்- அகரமுதல-திரு :thalaippu_vaakaichelvikku_vaahzhthugal_akaramuthala

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில!

 இப்போதைய – தி.பி.2047 / கி.பி. 2016 ஆம்  ஆண்டுச் – சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் புரட்சித்தலைவி  செயலலிதாவிற்கு வாழ்த்துகள்!

  ‘பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்பர். அதுபோல் புள்ளிவிவரங்களை அடுக்கி, உண்மையான வெற்றியல்ல இது எனச் சில தரப்பால் கூறப்பட்டாலும் நம் அரசியலமைப்பின்படி இதுதான் வெற்றி.

  ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் மக்களாட்சியில் இதுதான் வெற்றி.

  மொத்தத்தில் மிகுதியான வாக்குகள் பெற்றுச் சில இடங்களில் வெற்றி பெற்ற கட்சியைவிட மொத்தத்தில் குறைவான வாக்குகள் பெற்று, ஆனால் மிகுதியான இடங்களில் வென்றவரே ஆட்சியமைப்பிற்குரிய தகுதியுடையவர் என்பதே நம் அரசியல் யாப்பு வரையறை. எனவே, முறையான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்  முதல்வர் செயலலிதாவிற்கு வாழ்த்துகள் வரையில.

  “செய்தித்தாள்களைப் படிக்க மாட்டேன்” என ஒருமுறை  சலிப்பில் கூறியிருந்தாலும் அவர் ஊடகங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பது அவரது உரைகளாலும் செயல் மாற்றங்களாலும் நன்கு தெரிகின்றது. எனவே, இந்த வெற்றி தந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் நன்கு புரிந்திருப்பார். இவர் கூறியவற்றையே பிறரும் கூறியிருந்தாலும் இவர்மீதுதான் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். எனவே,  தான் தேர்தலில் அறிவித்த திட்டங்களை எல்லாம் காலவரையறை வகுத்து விரைவில்செயல்படுத்துவார் என எதிர்பார்க்கின்றோம்.

  உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழ்ஈழம் தொடர்பான இவரது நடவடிக்கைகளால் இவரது வெற்றியைப் பெரிதும் வரவேற்றுள்ளதை அறிந்திருப்பார். எனவே, தமிழ்ஈழப் பொதுவாக்கெடுப்பு, இனப் படுகொலையாளர்களைக்  குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டனை வாங்கித்தருதல் போன்றவற்றில் மாற்று அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து இவை விரைவில் நிறைவேற ஆவன செய்ய வேண்டும்.

   இது தொடர்பிலான சில குழுக்களை அமைத்து, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் உள்ள அரசுகள், மக்கள் சார்பாளர்கள் ஆகியவர்களிடையே இவற்றுக்கான பொது வரவேற்பைப் பெற வேண்டும்.

   தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் குறிப்பிட்ட ஒரே நாளில் சட்டமன்றத்தில் தமிழீழம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.

  உலகத் தமிழர்கள் உளநிறைவுடன் வாழ்த்த இங்குள்ள  ஈழத்தமிழர்க்கான முகாம்களைச் சிறந்த இல்லங்களாக மாற்றியமைத்துஅவர்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வழிவகை  செய்ய வேண்டும்.

  மதுவிலக்கிற்கெனத் தனி  அமைச்சுத்துறையை அமைத்துள்ளதால், மது விலக்கை விரைவில் நடைமுறைப்படுத்துவதே இலக்கு  என்பதை உணர்த்தியுள்ள முதல்வர், மதுப்பழக்கங்களைக் கட்டுப்படுத்துவதை முதல் படியாகக் கொண்டு இதில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

  தமிழ்த்தாய்க்கான மிகப்பெரும் சிலையை அமைக்க உள்ள முதல்வர் எல்லாக் கல்விக்கூடங்களிலும் தமிழ்த்தாய் அகம் மகிழ் வீற்றிருக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

  “என்னைச் சொற்றமிழால் பாடு,” என்னும் ஆண்டவன் கட்டளையை ஆள்பவரான நீங்கள், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே,” என்பதை உணர்ந்து தமிழ்நாட்டுக்  கோயில்களில் தமிழே ஒலிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றோம்.

  முதன்மைப் பதவிகளில் தமிழறிந்த தமிழரையே அமர்த்தித் தமிழர்சார் திட்டங்களை நிறைவேற்ற  வேண்டுகின்றோம்.

  பேரறிவாளன் முதலான அப்பாவித்தமிழர்கள் எழுவரையும் முறையான விடுதலை  செய்யும் வரையில்  காப்பு விடுப்பில் ஆட்சிப்பொறுப்பேற்பதன்கான பரிசாக வழங்க வேண்டுகின்றோம். நீண்டகாலம் சிறையில் வாடும் வாணாள் சிறைவாசிகளையும் ஆட்சிப் பொறுப்புப் பரிசாக விடுவிக்க  வேண்டுகின்றோம்.

  மக்களின் உணர்வுகளை நாடிப்பிடித்து அறியும் வல்லவரான உங்களுக்கு இவ்வாறு விரித்துச் சொல்லத் தேவையில்லை.

  எனவே, அதிமுக செல்வாக்கு சரியவில்லை என முன்னர்க் குறிப்பிட்டதற்கேற்ப வெற்றியை ஈட்டியுள்ளமைக்கு வாழ்த்துகிறோம்.

அஞ்சாமை யீகையறி வூக்க மிந்நான்கு

மெஞ்சாமை வேந்தற் கியல்பு. (திருவள்ளுவர், திருக்குறள் 382)

 என ஆளும் தலைவரின் இயல்புகளைத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வரையறுத்துள்ளார். அதற்கேற்ப இப்பண்புகளைக்கொண்டு, ஆளும் தகுதியை இழக்காமல் நிலைநிறுத்திக்கொண்ட  வாகைச்செல்விக்கு வரையற்ற வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்!

அன்புடன்  இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 135, வைகாசி 09, 2047 மே 22 , 2016

Akaramuthala-Logo