வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
வீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்
அண்மையில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 11 சட்டமன்ற்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இவற்றுள் மகாராட்டிர மாநிலம் பாலுசு கடேகான் தொகுதியில் பேராயக்கட்சியின்(காங்.) வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கே போட்டியிடுவதற்குக் கூடத் துணிவற்ற நிலையில்தான் தன்னை வலிமைவாய்ந்த கட்சியாகக் கதையளக்கும் பாசக உள்ளது. இதுவே பாசகவின் வீழ்ச்சியைத்தான் காட்டுகின்றது.
உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதியில் பாசக நாடாளுமன்ற உறுப்பினர் உக்கும் (சிங்கு) காலமானதால் இடைத்தேர்தல் நடை பெற்றது. அந்தத் தொகுதியில் உக்கும்(சிங்கின்) மகள் மிரிகங்கா(சிங்கு) பாசக சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கெளவினார். (உ)லோக்தள் சார்பில் போட்டியிட்ட தபசம் அசன் அவரைவிட 55,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தான் வெற்றி பெற்ற தொகுதியில் கூட மீண்டும் வெற்றி பெற முடியாத நிலையில்தான் பாசக இருக்கிறது. பாசக ஆளும் மாநிலத்திலேயே பாசக படு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதைவிட வெட்கக்கேடு அக்கட்சிக்கு வேறு இல்லை. முதல்வர் (இ)யோகி ஆதித்யநாத்து பற்றிய பிம்பத்தைப் பாசகப் பெரிதாகக்காட்டி வருகிறது. இங்கே தோற்றதற்கு அவர் விலகியிருக்க வேண்டும். இருப்பினும் முதல்வர் பதவியில் நாணமின்றி ஒட்டிக் கொண்டுள்ளார்.
மகாராட்டிராவில் தன்னிடமிருந்த பால்கர் மக்களவைத் தொகுதியில் மட்டும் பாசக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இங்கே 17,31,077 வாக்காளர்கள் இருப்பினும் 8,69,985 வாக்காளர்கள்தாம் வாக்களித்துள்ளனர். ஏறத்தாழ பாதிபேர் வாக்களிக்கவில்லை. இதுவும்கூடப் பாசகவின்மீதான எதிர்ப்பலை யைக் காட்டுவதுதான்.
மேலும் பாசக வேட்பாளர் காவிது இராசேந்திர தேதியா பெற்ற வாக்குகள் 2,72,782 மட்டுமே. 7 கட்சிகள் போட்டியிட்டதில், சிவசேனா 2,43,210; பகுசன் விகாசு அகாதி 2,22,838 வாக்குகள் பெற்றுள்ளன. இங்கே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டிருந்தால் பாசக காணாமல் போயிருந்திருக்கும்.
இந்தத் தேர்தலின்பொழுது இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றும் போக்கிரி(இரெளடி) பாணியில் தானும் அவர்களை(சிவசேனாவை) எதிர் கொள்வேன் என்றும் முதல்வர் பட்னாவிசு பேசியுள்ளார். எனவே இஃது உண்மையான வெற்றியாக இருக்காது என்றே மக்கள் கருதுகின்றனர்.
நாகாலாந்தின் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேசிய மக்கள்நாயக முன்னேற்றக் கட்சியின்(Nationalist Democratic Progressive Party) தலைவர் நிபியோ (இ)ரியோ இருந்தார். இவர், பாசக ஆதரவுடன் அம்மாநில முதல்வராகி விட்டதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. பாசக ஆதரவுடன் போட்டியிட்ட இக்கட்சி வேட்பாளர் தோகியோ (Tokheho) வெற்றி பெற்றுள்ளார். இதனை மாநிலக்கட்சியின் வெற்றியாகக் கருதலாமே தவிரப் பாசகவின் வெற்றியாகக் கருத முடியாது.
உத்தரகண்டு மாநிலம் தாரலி தொகுதியில் ஆளும் பாசக வெறும் 1981 வாக்குகள் வேறுபாட்டில்தான் வெற்றி பெற்றுள்ளது.
கருநாடகாவில் மறுதேர்தல் நடத்திக் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரலாம் எனக் கனவு கண்டது பாசக. 2014 இடைத் தேர்தலிலேயே தனது கோட்டை என்று சொல்லிக் கொண்ட பெல்லாரி தொகுதியில் தோல்விகண்டது பாசக. இப்பொழுது நடைபெற்ற இராசராசேசுவரி நகர் இடைத் தேர்தலில் பாசக தோல்வியுற்றது. வெற்றி பெற்ற பேராயக்(காங்.)கட்சி வேட்பாளரும் மசத வேட்பாளரும் பெற்ற வாக்குகளில் (1,08,064+60,360)பாதிக்கும் குறைவாகத்தான் பாசக (82,572) பெற்றுள்ளது. இதன் மூலம் பாசகவின் குறுக்குவழி ஆட்சிக் கனவைக் கலைத்த கருநாடக மக்களைப் பாராட்ட வேண்டும். அதேபோல் ஆட்சி யமைக்க வாய்ப்பு தந்த பேராயக்கட்சிக்கு எதிராகப் போட்டியிடாமல் மசத கட்சி, தேர்தலில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும். இக்கட்சி இங்கே வெற்றி பெற்றிருந்தால் குமாரசாமி ஆணவக் குன்றின் மேல் ஏறி யிருப்பார்; பேராயக் கட்சியை மிரட்டி ஆட்டிப் படைத்திருப்பார்; பேராயக்(காங்.)கட்சி பணியாவிடில் பாசகவுடன் கூட்டணிக்கு மாறவும் முயன்றிருப்பார். ஆனால், அதற்கு வாய்ப்பளிக்காத கருநாடக மக்கள்பாராட்டிற்குரியவர்களே
பாசக. தான் வெற்றி பெற்றிருந்த மாகராட்டிர மாநிலத்தின் பண்டாரா – கோண்டியா மக்களவைத் தொகுதியில் தேசியவாதக் காங்கிரசிடம் தன் வெற்றியைப் பறிகொடுத்தது.
பாசக, தனது கோட்டையாகக் கூறிககொள்ளும் பாசக ஆளும் உத்தரபிரதேசத்தில் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் தோல்வியையே பரிசாக அளித்துள்ளனர்.
சட்டமன்றத் தொகுதிகளான, பீகார் மாநிலம் இயோகிஃகட்டு (Jokihat), மேகாலயா மாநிலம் அம்பட்டி, கேரள மாநிலம் செங்கனூர், மேற்குவங்க மாநிலம் மகேசுதலா (Maheshtala), உத்தரகண்டு மாநிலம் தாரலி, பஞ்சாப்பு மாநிலம் சாக்கோட்டு (Shahkot), இயார்க்கண்டு மாநிலம் கோமியா, சில்லி, ஆகிய இடைத்தேர்தல் நடைபெற்ற பிற அனைத்து இடங்களிலும் பாசக மாபெரும் தோல்வியையே சந்தித்துள்ளது.
நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு வெற்றி பெற்றிருந்தால் கூடப் பாசக மாபெரும் வெற்றி என்று ஓலமிட்டிருக்கும். இப்பொழுது இடைத்தேர்தல் தோல்விகள் வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம் இல்லை என்றும் மத்திய அ்ரசின் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தவில்லை என்றும் கதறும் அமீதுசா முதலான பாசகவினர் நரேந்திர(மோடி)க்கு மக்கள் மாபெரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகக் கூறியிருப்பர்; இனி என்றும் பாசகவே ஆளவேண்டும் என்பதே மக்களின் பெரு விருப்பம் என்று தெரிவித்திருப்பர். வெட்கங்கெட்ட கட்சிக்காரர்கள் அப்படித்தான் கூறுவர். ஆனால் மக்களாட்சியில் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் உண்மையை உரைக்க வேண்டுமல்லவா?
வாக்கு எண்ணிக்கையில் பாசகவிற்குப் பின்னடைவு எனக் கூறிய இதழ்கள், பாசகவின்படு வீழ்ச்சிக்குப்பிறகு அதனைப் பற்றிக் கூற அஞ்சுகின்றன. பாசக வெற்றி பெற்றிருந்தால் நரேந்திர(மோடி)யின் பணமதிப்பிழப்பு, மக்கள் கருத்திற்கு மாறான பொது நிறுவனங்கள் அமைத்தல், பொது நுழைவுத் தேர்வு, சமற்கிருத இந்தித்திணிப்பு ஆகியவற்றை மக்கள் ஆதரிப்பதாகப் பக்கம் பக்கமாக எழுதியிருப்பர். சில இதழ்களில் தேர்தல் முடிந்தபிறகு தொடர்பான செய்திகளைத் தேடிப்பார்த்தால் எங்கோ ஒரு மூலையில் சிறிய அளவில் வெளியிட்டுள்ளன. ஏனிந்த அச்சம்? மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டியது ஊடகங்கள் கடமையல்லவா? அக்கடமையிலிருந்து தவறலாமா?
பாசகவின் மக்கள் நலன்களுக்கு எதிரான கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த பரிசே இடைத்தேர்தல் முடிவு என உணர்த்தியிருக்க வேண்டுமல்லவா? இந்தத் தோல்விப்பரிசே பொதுத்தேர்தலிலும் வழங்கப்படவேண்டும், வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டுமல்லவா? ஏன் வாய்மூடி அமைதி காக்கின்றன? ஆதாயத்திற்காக உண்மையைக் கூறாமல் பாசகவிற்கு வால்பிடிப்பது ஊடக அறத்திற்கு எதிரானது அல்லவா?
காணாக்கடி இயக்கம் (sting operation) மூலம் அண்மையில் மேற்கொண்ட கையுங்களவுமாகப் பிடிக்கும் நிகழ்ச்சியில் 19 ஊடகங்கள் பாசகவிற்கு விலைபோன உண்மையும் விலை போவதற்கு மடிதற்று முந்துறும் ஆர்வமும் வெளிப்பட்டதைக்கண்டோம்,(மடிதற்று முந்துறும் = உடையை வரிந்து கட்டிக்கொண்டு முன் நிற்றல்)
இத்தகைய ஊடகங்கள் தததம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை ஆள்வோருக்கு உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் கூடங்குளம், நெடுவாசல், தூத்துக்குடி முதலான நகர்களில் மக்களுக்கு ஏற்பட்டுவரும் துயரங்கள் நிற்கவும் பிற இடங்களில் இவை போல் ஏற்படாமல் இருக்கவும் ஆள்வோர் நடவடிக்கை எடுப்பர். எனவே, இனியேனும் மக்கள் நலன்நாடும் வகையில் ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுகிறோம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள் 448)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல வைகாசி 20-26, 2049 / சூன் 3 – சூன் 09, 2018
Leave a Reply