வேலைநிறுத்தக் காலத்தில்

புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக!

ஆசிரிய அமைப்புகள்-அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில்  04.12.2018 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அரசுடன் நடந்த பேச்சில் முடிவு எட்டாததால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடுமையான புயல் சேதத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையால், எவ்வித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடாமல், மக்கள்பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என வேண்டியுள்ளார்.

நாம் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் சரியா, தவறா என்று எதுவும் கூறவில்லை. ஆனால், ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்பதுபோல் நடந்து கொள்வது சரியல்ல எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தங்கள் நலனுக்காக அவர்கள் போராட உரிமையுண்டு. ஆனால் இக்கட்டான சூழலில் அரசை வழிக்குக்கொண்டுவருவதாக எண்ணி மக்களுக்கு எதிராகச் செயல்பட்டால் மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லாமல் போகும். எனவே, வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்து இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னர் போராடினால் மக்கள் ஆதரவும் கிட்டும்.

அலை எப்பொழுது ஓய்வது கடலில் எப்பொழுது குதிப்பது என எண்ணிப் போராட்டத்தில் உறுதியுடன் இருந்தால் மாற்று வழி ஒன்றைக் கூற விரும்புகிறோம்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள். அதே நேரம் புயல் பாதிப்புப் பகுதிகளுக்குச் சென்று அக்காலத்தில் தொண்டாற்றுங்கள். புயல் பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் மாற்றுப் பகுதிகளுக்குச் சென்று தொண்டாற்றுங்கள். வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடாமல் தத்தம் பகுதிகளிலும் பணியாற்றலாம். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுபோலும் இருக்கும். மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படாமல் உதவி புரிந்ததாகவும் இருக்கும்.

சப்பானில் வேலை நிறுத்தக்காலத்தில் உள்ளிருந்து உற்பத்தியைப் பெருக்கும் முறையில் ஈடுபடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. அதுபோல் தமிழ்நாட்டில்  ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தம் என்றால் இயல்பான பணியை நிறுத்திவிட்டு மாற்றுப்பணியில் ஈடுபட்டுத் தொண்டாற்றுவதன் மூலம் தங்கள் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கலாம்.

இப்பொழுதே புயல் பாதிப்புப் பகுதிகளில் எல்லா இடங்களுக்கும் அதிகாரிகள் செல்ல இயலாமல் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அப்பகுதிகளுக்குச் செல்வதன் மூலம் மறுவாழ்வுப்பணிகளை விரைவில் ஆற்ற முடியும். மக்களின் துன்பத்தை விரைவில் தணிக்க இயலும்.

தமிழக அரசும் அரசிற்கு அடிப்படைத் தூண்களாக விளங்கும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை மதித்துக் குறைகளைக் கனிவுடன் கேட்டு விரைவில் நீக்க வேண்டும். அரசு முன்மாதிரியான முதலாளியாகத் திகழ வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப இவர்களின் குறைகளைப் போக்க வேண்டும்.

எனவே, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும்.

அல்லது

வேலைநிறுத்தக்காலத்தில் புயல் பாதித்த இடங்களுக்குச்சென்று தொண்டாற்ற வேண்டும்

என அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல