துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4:

பேராசிரியர் வெ.அரங்கராசன்

               துன்பம் துரத்தட்டும் துணிந்து நில்;

                இன்பம் கிட்டும்வரை தொடர்ந்து செல்!

அகச்சான்று:

 

துன்பம் உறவரினும் செய்க, துணி[வு]ஆற்றி,

      இன்பம் பயக்கும் வினை.                                                   [குறள்.669]

 

பொருள்கோள் விரிவாக்கம்:

                துன்பம் உற வரினும், துணிவினை ஆற்றி,

                இன்பத்தைப் பயக்கும் வினையைச் செய்க.

 

பொருள் உரை விரிவாக்கம்:

                ஆராய்ந்து மேற்கொண்ட அறம் சார்ந்த ஒரு செயலினைச் செய்ய முயலும்போது எதிர்பார்த்தனவும் எதிர்பாராதனவுமான  பல்வேறு வகைப்பாட்டு நடைமுறைச் சிக்கல்கள் குறுக்கிடும்;    துன்பங்கள் துரத்தும்; இடையூறுகள் இடைமறிக்கும்; இடர்ப்பாடுகள் படாதபாடு படுத்தும். அவை எல்லாம் வலிமையுடன்  முன் வந்து நிற்கும்; பின்னுக்குத் தள்ளும்; கடுமையாக எதிர்க்கும்.

                 அத்தகைய நடைமுறைச் சிக்கல்கள், துன்பங்கள் இடையூறுகள், இடர்ப்பாடுகள்  மிகுதியாக முன்வந்து எதிர்த்து நின்றாலும், அவற்றை எல்லாம் கண்டு, சற்றும் அஞ்சக் கூடாது; மனம் கலங்கக் கூடாது; மலைக்கக் கூடாது; மாறக் கூடாது.

 அஞ்சாது, மனம் கலங்காது, மலைக்காது உள்ளத்தில் ஊக்கத்தையும் உடலில் ஆள்வினை ஆக்கத்தையும் உடைமைகளாகக் கொள்ள வேண்டும்.   

 முழுமையான துணிவினை ஒருங்கே வரவழைத்துக்கொள்ள வேண்டும். இடைவிடாத மனஉறுதியோடும் முயல வேண்டும். இறுதியில் இன்பத்தை உண்டாக்கும் அறம் சார்ந்த அந்தச் செயலை வெற்றியுடன் செய்து முடித்தல் வேண்டும்.

 மறுபக்கக் குறட் பா:

இன்று இப்படியும் சிலர்:

 இன்பம் நிரம்பவரின் செய்கமன், எஞ்ஞான்றும்

துன்பம் பயக்கும் வினை.

 

இன்பம் வரின்செய்க தள்ளாஅது யார்மாட்டும்

இன்பம் பயக்கும் வினை.

 

துன்பம் வந்தாஅல் செய்யற்க, யார்மாட்டும்

இன்பம் பயக்கும் வினை.

 

இன்பம் உறவரினும் செய்யற்க, யார்மாட்டும்

இன்பம் யக்கும் வினை.

 

               –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

விளக்க  உரை விரிவாக்கம்:               

                இன்பம் தரும் வினைகளை 6 வகைப்பாட்டுகளுக்குள் அடக்கலாம். .

அவை:

  1. 1. தனிமனிதன் சார்ந்தவை
  2. குடும்பம் சார்ந்தவை
  3. குடி சார்ந்தவை
  4. சமுதாயம் சார்ந்தவை
  5. நாடு சார்ந்தவை
  6. உலகம் சார்ந்தவை

 

1.தனிமனிதன் சார்ந்தது:      

அறம் சார்ந்த செயல்களைச் செய்யும்போது தனக்குத் துன்பம் வரினும், இன்பம் தரும் அச்செயல்களைத் துணிவோடும்  மன உறுதியோடும் இறுதிவரை முயன்று வெற்றியுடன் செய்து முடிக்க  வேண்டும். அகச்சான்றாக ஒரு குறள் மட்டும்.

 

அகச்சான்று:

                சாதலின் இன்னாத[து] இல்லை; இனி[து]தூஉம்

                ஈதல் இயையாக் கடை.                                                             [குறள்.230]

பொருள் உரை:

                துன்பம்தான் சாதல் என்பது; அதுவும்

                இன்பம்தான் ஈதல் இயலாத பொழுது.

புறச்சான்று:

   நல்லேரிப்புதூரில் காப்பான் ஏரி என்னும் பெயரில்  பெரிய ஏரி ஒன்று இருந்தது. அஃது, அருகில் இருந்த 4 சிற்றூர்களின் வேண்மைத் தொழிலுக்கு நீர் வழங்கிப் பெரிதும்  உதவியது.

                 அந்த ஏரிக்குக் காவலரசன் என்பவன் மடையனாக இருந்தான்.  மடையன் என்றால் அந்த ஏரியில் இருந்த 5 மடைகளைக் காவல் காப்பவன் என்றும் தேவையான நேரத்தில் மடைகளைத் திறந்துவிடுபவன் என்றும் பொருள். அதுதான் அவனது வேலை. அதனால், அவன் மடையன் என அழைக்கப்பட்டான். மடையன் என்பதற்கு இங்கு முட்டாள் என்னும் பொருள் இல்லை.

 இரவில் கைவிளக்குடன் ஏரியைச் சுற்றிச் சுற்றி வருவான். அப்போது ஏரியில் முழுக்கொள்ளவுவரை நீர் நிறைந்திருந்தது. கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா / கரையில் நீர் கசிகின்றதா எனச் சற்றும் உறங்காமல் மிகுந்த விழிப்புணர்வோடு பரிசோதித்துக்கொண்டே இருப்பான்.

 ஒரு நள்ளிரவில் கரைச் சோதனையின்போது கரையின் ஓர் இடத்தில் மெல்லிதாக நீர் கசிந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.   அதிர்ச்சி அடைந்தான் காவலரசன். மறுபக்கம் ஏரிக்குள் எத்து ணை அளவிற்கு துளை விழுந்திருக்கின்றது என ஆராய வேண் டும் என நினைத்தான்.

 கரைக்கு வெளியே மேலிருந்து 4 அடிக்குக் கீழே கசிவு இருந் தது. அதே ஆழத்தில் ஏரிக்குள் சென்று பார்த்தால், துளையின் அளவைக் கணக்கிட்டுவிடலாம் என நினைத்தான். உடனே ஏரிக்குள் இறங்கினான்; மூழ்கித் துளையைக் கண்டுபிடித்தான். 

 ஓர் ஆள் கடினப்பட்டு உள்நுழைகின்ற அளவு அந்தத் துளை இருந்தது. வெளியே வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். எவருமே தென்படவில்லை. துளையை அடைக்க அங்கு மணல் மூட்டைகளும் இல்லை. 

 ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்துவர வேண்டும் என்றால், அதற்குள் துளை பெரிதாகிக் கரை உடைந்துவிட்டால், ஏரி நீர் எல்லாம் வெளிப்பாய்ந்துவிடும். நான்கு சிற்றூர்களுக்குள் புகுந்துவிடும். அவை நீரிக்குள் மூழ்கிவிடும். நெல் வயல்கள், கரும்புத் தோட்டங்கள், வாழைத் தோப்புக்கள் என எல்லாவற்றை யும் அழித்து நாசமாக்கிவிடும். 

 இந்த நேரம் மக்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருப்பார்கள். என்ன நடக்கின்றது என அவர்கள் அறியும் முன்னர் நீருக்குள் மூழ்கிக் குழந்தைகள் முதல் பலர் இறந்துவிடக்கூடும்.

  என்ன செய்யலாம் எனச் சிந்தித்தான். “சரி..! வேறு வழி இல்லை. நானே ஏரிக்குள் மூழ்கி, அந்தத் துளைக்குள் புகுந்து துளையை அடைத்துவிட வேண்டியதுதான். இப்படிச் செய்தால், என் உயிர்மட்டும்தான் போகும்.

 ஆனால், நான் பிறந்த இந்த ஊர் மக்களது பல உயிர்கள் காப்பற்றப்படும். நெல் வயல்கள், கரும்புத் தோட்டங்கள், வாழைத் தோப்புக்கள் காப்பாற்றப்படும்” என நினைத்தான். காவலரசன் நினைத்ததை நிறைவேற்றினான்.

துளை அடைக்கப்பட்டது; நீர்க் கசிவு நின்றது; அவன் திட்டம் வென்றது. ஆனால், அவனது உயிர் அவனைவிட்டுச் சென்றது.

 துன்பம் மறைந்தது; இன்பம் பிறந்தது.  

 மறுநாள் காலையில் 6 மணிக்குப் பகல் நேரக் காவல் காக்க வேண்டிய மடையன் மாண்பன் அங்கு வந்தான். இவன் வந்து தும் காவலரசன் விடுவிக்கப்பட்டு, வீட்டிற்குப் புறப்பட்டுவிடுவான்.  இதுதான் நடைமுறை.   

 காவலரசனை அங்குக் காணோம். மாண்பன் அங்கும் இங்குமாகத் தேடினான். அவன் தென்படவில்லை. மாற்றாள் வராமல், அவன் வீட்டிற்குப் போகமாட்டான். மாண்பன் அதிர்ச்சியுற்றான்.

 உடனே ஊருக்குள் வந்தான்; அவனது வீட்டிற்குப் போய்ப் பார்த்தான். அங்கும் அவன் வரவில்லை எனத் தெரிந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. காவலரசனைக் காணவில்லை என்பதைக் கண்ணில்பட்ட சிலரிடம் சொன்னான்.

 அவர்களுடன் சேர்ந்து ஊரெல்லாம் அவனும் தேடினான். எங்கும் காவலரசனைக் காணவில்லை. அவர்களோடு இன்னும் சிலர் சேர்ந்துகொண்டனர். எல்லோரும் ஏரிக்கு வந்தனர். எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து முற்றும் தேடினர். எங்கும் காண வில்லை. அனைவரது மனத்திலும் குழப்பமே முற்றியது.  

 அவர்களுள் ஒருவர் கரையில் ஓர் இடத்தில் நீர் கசிந்து, நின்றிருந்த அடையாளத்தைக் கண்டார். அதை எல்லோரிடமும் காட்டினார்.

 “இதைப் பார்த்தால், எனக்கு ஒன்று தோன்றுகின்றது.  ஏரிக் கரையின் உள்பக்கம் இருக்கும் ஓட்டையை அடிக்கக் காவலரசன், தன்னையே அந்த ஓட்டைக்குள் நுழைத்துக்கொண்டு ஓட்டையை அடைத்துவிட்டானா  என்னவோ..!” என்றார்.

 உடனே ஏரிக்குள் அந்தத் துளையை அடையும்படி கணக்காக இரண்டு பேர் குதித்தனர். துளையைத் தடவிப் பார்ந்தனர். அந்தத் துளையைக் காவலரசன் அடைத்தபடி இறந்த நிலையில் இருந்தை உணர்ந்து அதிர்ந்துபோயினர்.

 வெளியே வந்து எல்லாவற்றையும் எல்லோரிடமும் விளக்கினர். எல்லோரும் ஓவென அழத் தொடங்கிவிட்டனர். உடனே ஒரு வண்டி நிறைய மணல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.

 இரண்டு பேர் ஏரிக்குள் மூழ்கிக் காவலரசனின் உடலை வெளியே கொண்டுவந்து கரையில் கிடத்தினர். அவனது உடலைக் கண்டு, அனைவரும் கதறி அழுதனர். நான்கு பேர் மணல் மூட்டைகளுடன் ஏரிக்குள் இறங்கினர். அவற்றால் துளையை அடைத்துவிட்டு, வெளியே வந்தனர்.

 அதற்குள் எல்லோரும் உடலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். துளையை அடைத்தவர்களும் ஊருக்குப் புறப்பட்டனர். ஊரின் நடுப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் திண்ணையில்   அவனது உடல் கிடத்தப்பட்டது.

 அதற்குள் ஊர் மக்கள் எல்லோரும் திரண்டுவந்து கூடினர். எல்லோரும் அவனது உடலைக் கண்டனர்; அழுதுபுண்டனர். சிலர் மனத்திற்குள் அழுதனர், தங்கள் தங்கள் பிள்ளைகளை இழந்தவர்கள் போலத் துயரம் தாங்காமல் கதறிக் கதறி அழுதனர்.

 ஊர் மக்கள் எல்லோரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மாலையில் சுடுகாட்டில் அவனது உடலுக்குத் தந்தை நல்லரசன் எரியூட்டினார்.

 ஊர் மக்கள் அனைவரும் காவலரனுக்குத் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என விரும்பினர். என்ன செய்யலாம் எனச்  சிந்தித்தனர். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்.

 அதன்படி ஊருக்கு நடுவில் காவலரசனுக்கு முழுவுருவ வெண்கலச்  சிலை அமைக்கப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சர் திருவள்ளுவனால் திறந்துவைக்கப்பட்டது. காப்பான் ஏரி என்ற பெயரை மாற்றினர்; காவலரசன் ஏரி எனப் பெயரிட்டுப் போற்றினர். .

காவலரசன் அந்த ஊர் மக்களுக்குக் குலத்தெய்வமாகக் கொண்டாடப்படுகின்றான். ஆண்டுதோறும் அவன் பிறந்த நாளில் பொங்கல் வைத்து விழா எடுத்துவருகின்றனர். அவனது இறந்த நாளில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் தவறாமல்  நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

 குறிப்பு:

இதை எங்கோ எப்போதோ படித்திருக்கின்றேன். நினைவில் நின்ற அதை என் நடையில் இங்கு நல்கியிருக்கின்றேன்.

(தொடரும்) 

கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்