வெருளி நோய்கள் 1326 -1330 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1321 -1325 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1326 -1330
- துன்ப வெருளி – Tristophobia / Maestophobia
துன்பம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துன்ப வெருளி.
துன்பத்தினால் வரும் வருத்தத்தையும் இது குறிக்கும். எனினும் மன வருத்த வெருளி(Lypiphobia) எனத் தனியாக உள்ளதால், இதனைத் துன்ப வெருளி என்றே சொல்லலாம்.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!
எனப் புதிய பறவையில் கண்ணதாசன் பாடல் இடம்பெறும்.இது துன்ப வெருளியின் வெளிப்பாடே.
அதுபோல்
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லை
என மற்றொரு திரைப்பாடல் வரும்.
இதுவும் துன்பத்தால் அமைதியில்லை என்று கலங்கும் நிலை.
திருவள்ளுவர்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.(குறள் 623)
என்கிறார்.
அஃதாவது, துன்பம் வரும் போது, அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார் என்கிறார். இதுவே துன்பம் வெருளி வராமல் காக்கும் வழி.
tristis, maestus ஆகிய இலத்தீன் சொற்களுக்குத் துன்பம் எனப் பொருள்.
காண்க: துன்புறல் வெருளி(Dolorophobia)
00
- துன்பியல் பட வெருளி – Duismalophobia
துன்பியல் திரைப்படம்(disaster film) குறித்த வரம்பற்ற பேரச்சம் துன்பியல் பட வெருளி.
துன்பியல் படங்கள் குடும்பத்தில் நேரும் துயரக் காட்சிகளைக் காட்டுவதாகவும் இயற்கைப் பேரிடர் இழப்புகளைக் காட்டுவதாகவும் வேறு வகையாகவும் இருக்கலாம். எவ்வாறிருப்பினும் துன்பியல் படங்களால் நெகிழ்ச்சி அடைவதுடன் இல்லாமல் மேலும் துயரத்திற்கு ஆளாகலாம்.
Duismal என்னும் இலத்தீன் சொல்லிற்கு இருண்ட என்றும் துயரமான என்றும் பொருள்கள்.
++
- துன்புறல் வெருளி – Dolorophobia
துன்புறல்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் துன்புறல் வெருளி.
அவரவர் துன்பம் அவரவர்க்குப் பெரிது. ஆனால், ஒவ்வொருவருமே தனக்குமட்டுமே ஏன் பெருந்துன்பம் வருகிறது எனவும் இதுபோல் வேறு யாருக்கும் பெருந்துன்பம் வந்தால் தாங்கிக் கொள் ளமாட்டார்கள் என்றும் எண்ணுகிறார்கள்.
இராசபார்ட்டு இரங்கதுரை படத்தில் சிஞ்சினுக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி எனத் தொடங்கி
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்
சிரிப்பு வ(ர)ல்ல..
நான் அழுகிறேன் அழுகிறேன்
அழுக வ(ர)ல்ல
என்றெல்லாம் பாடல் வரிகள் வரும். இதுகூடத் துன்புறல் வெருளியின் வெளிப்பாடே. இங்கே உடல் துன்புறுவதை விட மனம் துன்புறுவதே மிகுதி.
Doloro என்னும் இலத்தீன் சொல்லிற்கு வேதனை எனப் பொருள்.
காண்க: துன்ப வெருளி(Tristophobia / Maestophobia)
00
- துன்னெலி வெருளி – Zemmiphobia
துன்னெலி (great mole rat) கண்டு பேரச்சம் கொள்வது துன்னெலி வெருளி.
துன்னெலி(great mole rat) என்பது முடிகளற்ற ஓர் எலி வகை. இதற்கு நீண்ட பற்கள் இருக்கும். முடித்தோல் இன்றி இருப்பதால் இதனைப்பார்ப்பதற்கே அஞ்சுபவர் உள்ளனர்.
naked mole-rat என்பதை அம்மணத் துன்னெலி என்று சொல்வது பொருந்தாது. எல்லா உயிரினங்களுமே அம்மணமாகத்தான் உள்ளன. என்றால் உறையற்ற என்றும் பொருள். உறைபோல் உடலை மூடியிருக்கும் முடியுள்ள மேல் தோல் இன்மையால் naked என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதனை முடியிலித் துன்னெலி என்பதே ஏற்றதாக இருக்கும்.
00
- தூக்கி ஊர்தி வெருளி – Forkliftophobia
தூக்கி ஊர்தி(forklift) குறித்த அளவு கடந்த பேரச்சம் தூக்கி ஊர்தி வெருளி.
பொருள் ஏற்றி ஊர்தியானது, சுமை ஏற்றி(lift truck), சிறு சுமையூர்தி(jitney), பளுவை ஊர்தி(fork truck), பார ஊர்தி(fork hoist), பார வண்டி(forklift truck) எனப் பலவகையாக அழைக்கப் பெறுகிறது. இதனைச் சுமைச் சிற்றூர்தி எனலாம். எனினும் பொருள்களைத் தூக்கிச்செல்லும் ஊர்தி என்னும் பொருளில் தூக்கி ஊர்தி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply