தலைப்பு -செப்பேடு -பொன்குமார்-திறனாய்வு-கருலலைத்தமிழாழன் : thalaippu_ponkumar_karumalaithamizhaazhan_cheppeadu_thiranaayvu

 

செப்பேடு ( மரபுக் கவிதை நூல் )

ஆசிரியர் – பாவலர்  கருமலைத்தமிழாழன்

திறனாய்வு – பொன் குமார்

 

     தமிழ்க் கவிதையின்  தொடக்கம்   மரபுக்  கவிதையே.  பத்தொன்பதாம்  நூற்றாண்டு  வரை  மரபின்  ஆதிக்கம் தொடர்ந்தது.  பாரதிக்குப்  பின்  மாற்றம்  ஏற்பட்டது.  மரபைப்  பின்  தள்ளி  புதுக்கவிதை  முன்  சென்றது.  மரபுக்  கவிதை  என்றாலே  ஒரு  சிலர்  மட்டுமே  எழுதி ஒரு சிலர்  மட்டுமே  வாசிக்கும்  நிலையில்  மரபுக்  கவிதை  இருந்ததை  மாற்றி  அனைவரும்  வாசிக்கும்  வண்ணம்  மரபுக்  கவிதையை  எழுதி  வருபவர்  பாவலர்  கருமலைத்தமிழாழன்.  மற்றும்  ஒருவர்  கவிவேந்தர் கா. வேழவேந்தன்.  ‘நெஞ்சின் நிழல்கள்’  தொடங்கி,  ‘கல்லெழுத்து’  வரை  21  கவிதை  நூல்களை  வெளியிட்டவர்  22  ஆம்  கவிதை நூலாகச்  செப்பேடு  தந்துள்ளார்.

            மரபுக்கும்  தமிழுக்கும்  எப்போதும்  ஒரு தொடர்புண்டு.  பாவலரும்  தமிழ்ப்  பற்று  மிக்கவர். அவர்  கவிதையின்  பாடுபொருள்கள்  எதுவாக  இருந்தாலும்  தமிழ்  மொழியின்  சிறப்பு  வெளிப்படும். தமிழ் மொழியின்  சிறப்பைக்  கவிதைகள்  மூலம்  உணர்த்தியுள்ளார். எல்லாம்  கொடுக்கும்  தமிழ்,  உவமை  இல்லாத்  தமிழ் என்னும்  இரண்டு  கவிதைகளில்  கவிஞர்  தமிழ்ப்பற்றையும்  தமிழ் மொழியின்  பெருமையையும்  எடுத்துரைத்துள்ளார். இரண்டாவதில்  “தெள்ளு  தமிழ்க்குறளைத்  தேசிய  நூல்  ஆக்கியே  வள்ளுவரைப்  போற்றிடுவோம்  வா”  எனத்  திருக்குறளைத்  தேசிய  நூலாக்க  வேண்டுமென்று  அழைப்பு  விடுத்துள்ளார். உலகப் பொதுமறை  என்று  காலம்  காலமாகப்  போற்றப்பட்டு  வரும்  திருக்குறளைத்  தேசிய  நூலாக்கப்  பலரும்  கோரிக்கை  விடுத்து  வரும்  வேளையில்  பாவலரும்  குரல்  கொடுத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.  ‘சுட்டு  விரல்’  கவிதையில்  தமிழைத்  தவிர்த்து  ஆங்கிலத்தை  நாடும்  தமிழர்களைச்  சாடியுள்ளார்.  நம்மொழியை  நாமறிவோம்  என்றதுடன்  வீழ்ந்ததேன்  தமிழன்  என்றும்  ஒரு  கவிதையில்  விளக்கம்  தந்துள்ளார்.

            முடமாகித்   தமிழரின்று  வீழ்ந்த   தெல்லாம்

          முத்தமிழில்   கல்விகல்லாக்  கீழ்மை  யாலே

என்று தமிழில்  கல்வி  கற்காததே  காரணம்  என்று  உறுதிபடக்  கூறுகிறார்.

இன்றைய  தமிழன்   நிலையை  ஒரு  கவிதையிலே  இவ்வாறு  காட்டியுள்ளார்.

பக்கத்து  நாட்டினிலே   தொப்புள்    கொடிகள்

                   படுகொலையில்   சாவதினைப்   பார்த்த  வாறு

          திக்கெல்லாம்   தூற்றிடவே   மொழியி  னத்தின்

                   திகழ்வீர   உணர்வின்றி   உள்ளார்   இங்கே

  இலங்கையில்  தமிழர்களை  இரக்கமின்றிக்  கொன்று  குவித்ததைக்  கண்டும்   கொதிக்காமல்   இருக்கும்   தமிழர்களைக்  குற்றம்   சாட்டியுள்ளார்.  சக  தமிழர்   என்றால்   அன்பு  காட்ட  வேண்டும்  என்கிறார்.  அக்கறை   காட்ட  வேண்டும்  என்கிறார். தமிழர்  என்று  கூறிக்  கொண்டாலும்  மொழி  வாரியாக,  சாதி  வாரியாகப்  பிரிந்து  கிடக்கின்றார்.  ஒரே  இனம்  என்றாலும்   இன  உணர்வு  ஒரே மாதரி  இருப்பதில்லை.  இன உணர்வில்  வேறு  வேறாய்  தமிழர்கள்  இருப்பதால்   சொந்த   மண்ணில்   அயலவனானாய்   என்று  எச்சரித்துள்ளார்.

         நாட்டில்  கல்வி  என்பது  அரசின்  பிடியிலிருந்து  கை  நழுவி  போய்  விட்டது.  அரசுப்  பள்ளிகள்  பெயரளவில்  மட்டுமே  இயங்கி  வருகின்றன.  தனியார்  நிறுவனங்களோ  கல்வியை  முதலீடாக்கிப்  பணம்  ஈட்டி  வருகின்றன.  கல்வியை  அரசே  நடத்த  வேண்டும்  என்பது  அறிஞர்கள், கவிஞர்கள்  பலரின்  கோரிக்கை. கல்வி  அனைவருக்கும்  பொதுவாக  இருக்க வேண்டும்,  ஏழைகளும்  கற்க  வேண்டும்  என்னும்  நோக்கத்தில்!

            சிற்றிதழ்கள்  இலக்கியத்தின்  ஒரு  வகைமை  எனினும்  இலக்கியத்தை  வளர்த்து  எடுப்பது  சிற்றிதழ்களே  ஆகும். சிற்றிதழ்கள்  இல்லையெனில்  இலக்கியம்  செம்மையுறாது  என்றே  சொல்லலாம்.  பாவலர் கருமலைத்தமிழாழன்  அவர்களும்  சிற்றிதழ்களில்  எழுதி  வருபவர்  ஆவார்.  அவரின்  படைப்புகள்  பல  சிற்றிதழ்களில்  வெளிவந்தவை  இன்றும்  வெளியாகி  வருகின்றன.  கவிஞரும்  சீரிதழ்களே  சிற்றிதழ்கள்  என்று  போற்றியுள்ளார்.   சிற்றிதழ்களைப்  பெருமைப்  படுத்தியுள்ளார்.   சிற்றிதழ்களையும்  பட்டியலிட்டுள்ளார்.

            மனிதர்கள்  கூட்டாகக்  குடும்பமாக  வாழ்ந்த  காலம்  மாறி  இன்று  தனித்தனியே  வாழவே  விரும்புகின்றனர்; வாழும் சூழலே  ஏற்பட்டுள்ளது.  அடுக்ககங்கள்  என்றாலும்  அடுத்தவர்  முகம்  பார்ப்பதே  அரிது.  பேசுவது  அரிதிலும் அரிது.  முன்பெல்லாம்  வீட்டில்  தொலைபேசி  இருக்கும்  போது  அனைவரும் ஓரிடத்தில்  கூடி  நின்று  பேசினர். அலைபேசி  வந்த  பிறகு தனித்தனியே  பேசுகின்றனர். மக்கள்  தனிமையானார்  என்று  அத்தகையோர்களைச்  சாடியுள்ளார்.  ‘அகநூலைக் கெடுக்கும் முகநூல்’ என்றும்  ஒரு  கவிதையில்  விமரிசித்துள்ளார்.

            ஒவ்வொரு  மனிதருக்கும்  ஒவ்வொரு  போதை இருக்கும்.  அதிகார  போதை, மத போதை, சாதி போதை,  புகழ்  போதை, பண போதை  எனப் பல  போதைகள்.  அரசியல்  போதையும்  உண்டு.  எல்லா  போதைகளிலும்  அழிவுண்டு. இவை  எல்லாவற்றையும்  விட  அழிவு தரும்  போதை  மது போதை.  மது  போதையால்  நாடே  அழிந்து  கொண்டிருக்கிறது.  நாட்டின்  பாதையே  மாறிக்  கொண்டிருக்கிறது.  போதை  நாடு  ஆகி  விட்டது  என்று  வருந்தியுள்ளார்.

            நித்தமிங்கே  அழிக்கின்ற  மதுவின்  போதை

          நிறைந்திருக்கும்   போதைநாடாய்  ஆன  தின்று

எனப்  பாவலர்  ஆதங்கத்தை  வெளிபடுத்தியுள்ளார்.   தலைமுறையைச்  சீரழித்தார்  என்றும்  ஒன்றில்  குற்றம்  சாட்டியுள்ளார்.

            இன்னுமிந்த  விடமதுவை  ஒழிக்கா  விட்டால்

          இந்தநாடு  சுடுகாடாய்   மாறிப்  போகும்

என்று  சாபமிட்டு  மது  ஒழிப்பு இன்றியமையாமையை  வலியுறுத்தியுள்ளார்.

            ஊருக்கு  ஒரு  கோயில்  இருந்தது  ஒரு  காலம்.  பெரியார்  அதையும்  மறுத்தார்  வேண்டாம்  என்றார்.  இன்று  தெருவுக்குப்  பல  கோயில்கள்  என்றாகி  விட்டது.  ‘கட்சித்  தலைவரானார்  கடவுள்’  என்னும்  கவிதையில்  குட்டிக்  கோயில்கள்  பல  பெருகியதைக்  குட்டிக்  காட்டியுள்ளார்.  பெரியாரின்  சொற்களிலேயே  எல்லோராலும்  குறிப்பிடுவது  வெங்காயம்.  வெங்காயம்  உரிக்க  உரிக்க  ஒன்றுமில்லாமல்  போய்விடும்.  ஆனால்  அந்த  வெங்காயத்தை  வரிக்கு  வரி  கவிதையாக்கியுள்ளார்.

            தமிழின்  முதல்  புதுக்கவிஞன்  பாரதி,  நிலம்  பார்த்த  பெண்ணை  நிலா  பார்க்கச்  செய்தான்.  அவரின்  தாசனும்  பெண்  விடுதலையைப்  பேசினான்.  பெரியாரும்  பெண்ணியத்தை  முன்  வைத்தார்.  பெண்ணியம்  பேசுவதைக்  கவிஞர்கள்  பெருமையாகக்  கருதினர்.  பாவலரும்  பெண்ணின்  பெருமை  பேசித்  தன்னைப்  பெருமைப்படுத்திக்  கொண்டார்.  எனினும்  பெண்ணுக்கு  அறிவுரையும்  கூறியுள்ளார்.

       மரபுக்  கவிதை  எழுதுவோருக்குப்  பொறுப்புகள் மிக  அதிகம்.  இலக்கணம்  மீறாமல்  இருக்க  வேண்டும்; இலக்கியமாகவும்  இருக்க  வேண்டும்;  இன்றைய  நிலைக்கு  ஏற்பவும்  இருக்க  வேண்டும்;  புரியும் படியும்  இருக்க வேண்டும்;  பொருள்  செறிந்ததாகவும்  இருக்க வேண்டும்.  பாவலர்  கருமலைத்தமிழாழன்  கவிதையில்  அத்தனையும்  இருக்கின்றன.  பாடல்கள்  அனைத்துமே  அக்கறையுடன்  எழுதப்பட்டுள்ளன.  சமூக  வளர்ச்சியை  முன்வைக்கின்றன.  மனித  முன்னேற்றத்தை  நோக்கிப்  பயணிக்கின்றன.  சமூக  முன்னேற்றத்திற்குத்  தடையாக  இருப்பவற்றைத்  தகர்க்க  முயன்றுள்ளன.  அவர்  கவிதைகளில்  சொல்லாததுதும்  இல்லை.  பொல்லாததும்  இல்லை.  இல்லாததும்  இல்லை.  மக்கள்  முன்னேற்றம்  மட்டும்  இல்லாமல்  மொழி  மேம்பாட்டிற்கும்  வழியமைத்துள்ளார்.

            ஆக்கத்தை   இனத்திற்கும்   தமிழ்மொ   ழிக்கும்

                        அளிக்கின்ற   செயல்களினை   நாளு   மாற்றி

            சாக்காட்டை   வென்றிட்ட  சான்றோர்   போன்று

                        சாதித்து  வரலாற்றில்  நிலைத்து  நிற்போம்

என்று  பாவலர்  எழுதியுள்ள  வரிகள்  பொதுவானவை. எனினும்  அவருக்கும்  பொருத்தமாக  உள்ளன.  அவரும்  வரலாற்றில்  நிலைத்து  நிற்பார்  என்பதற்கு  அடிப்படையாக,  ஆதாரமாக  விளங்குகிறது  ‘செப்பேடு’.

   மரபு  பழமையானது. பாவலர்  கருமலைத்தமிழாழன்   மரபின்  புதுமையாளராக – புரட்சியாளராக  விளங்குகிறார்.

 

செப்பேடு ( மரபுக் கவிதை நூல் )

ஆசிரியர் – பாவலர்  கருமலைத்தமிழாழன்

பக்கம் – 176   விலை – உருபா. 150-00

வெளியீடு- வசந்தா பதிப்பகம், 2-16. ஆர்.கே. இல்லம்,முதல் தெரு,

 புதிய வசந்த நகர், ஒசூர் – 635 109

பேசி- 04344 245350 , – 9443458550

– பொன் குமார்

இனிய உதயம், சூலை, 2016 பக்கங்கள் 46-47

அட்டை -இனிய உதயம் :attai_suulai_july2016_iniyauthayamஅட்டை-செப்பேடு-கருமலைத்தமிழாழன் :attai_seppeadu