(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8 இன் தொடர்ச்சி)

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

9.  தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை.

வரும் 2023 ஆம் ஆண்டின் பொதுவிடுமுறை நாள்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் ஆங்கிலத்தில்தான் வெளியிட்டுள்ளது. நமக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. புத்தாண்டு நாள், பொங்கல், திருவள்ளுவர் நாள் முதலிய விவரங்களைத் தமிழில் தெரிவிக்க இயலவில்லையா? அல்லது கிழமைகளைத் தமிழில் குறிப்பிடத் தெரியவில்லையா? அல்லது தமிழில் கிழமைப்பெயர்கள் தெரியாதவர்கள்தான் செயலகத்தில் உள்ளனரா? அல்லது விடுமுறைப் பட்டியலில் தமிழில் கூற இயலாத அளவிற்கு அறிவியல் சொற்கள் உள்ளனவா? அல்லது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் ஆங்கிலேயர்கள்தான் பணியாற்றுகின்றனரா? ஏன் இந்த அவலம்? விடுமுறைநாள்களைக் கூடத் தெரிவிக்கத் தமிழுக்குத் தகுதி இல்லை என்று சொல்கிறார்களா? அல்லது அதற்கான வல்லமை தமிழுக்கு இல்லை என்கிறார்களா? ‘தமிழ்நாடு அரசு’ என்பது தமிழர்க்கான அரசுதானே! அல்லது ஆங்கிலேயர்க்கான அரசா? வெட்கம், மானம், சூடு, சுரணை என்றெல்லாம் சொல்கிறார்களே! இவையெல்லாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோர்க்கு இல்லையா? என்று மக்கள் எண்ணமாட்டார்களா? அல்லது இவற்றைத் தாங்கிக் கொள்ளும் மக்களுக்குத்தான் இல்லையா? என்று வருங்காலத்தவர் எண்ணமாட்டார்களா?

அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் குறித்து முன்பே குறிப்பிட்டு இருந்தோம். “அதிகாரிகளின் ஆங்கில மோகத்தை அகற்றுங்கள்! அல்லது அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அகற்றுங்கள்!” எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 7 நாள் 23.07.2022) இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கின்றது.

ஒருவேளை இரு மொழிகளில் வெளியிட்டு ஆங்கிலப் பட்டடியல் ஊடகத்திற்குத் தரப்பட்டது என்று சொல்வார்களோ எனப் பார்த்தால் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு இரு மொழிகளில் வந்திருந்தாலும் தவறுதான். ஏனெனில் இருமொழித்திட்டம் என்பது தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே! தமிழ்நாட்டிற்கு வெளியே ஆங்கிலமும் என்பதாகத்தான் பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறமொழி மாநில அலுவலகங்கள், அல்லது ஒன்றிய அரசு அலுவலகங்கள் அல்லது பன்னாட்டு அலுவலகங்கள் என எவை இருந்தாலும் அவற்றுடனான தொடர்புமொழி தமிழ் மட்டுமே என்று பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் ஆட்சிமொழித்திட்டம் என்பது முழுமையாகச் செயல்படுத்தப்படும். ஆதலின் இந்த நொண்டிச்சாக்கு ஏதும் இருப்பின் அது குறித்து நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

1962 இல் வெளியிட்ட ‘தமிழால் முடியும்’ என்ற நூலில் பேராயக் கட்சி ஆட்சியில் நிதி யமைச்சராகவும் கல்வியமைச்சராகவும் பின்னாளில் ஒன்றிய அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்த சி.சுப்பிரமணியம், “மற்றவர்களுடன் தொடர்பு இல்லாதபடி இதுவரை தமிழ் அன்னை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாள். இதுவரை தமிழர்களை மற்றவர்கள் சிறையில் அடைத்திருக்கலாம். ஆனால், நம்மை நாமே சிறையில் அடைத்துக் கொள்ளக்கூடாது. வெளியிலிருந்து மற்றொருவர் கதவைப்பூட்டினாலும்சரி ,அல்லது நாமே உள்ளே இருந்து கொண்டு கதவைப் பூட்டிச்சாவியைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டாலும்சரி இரண்டு விதத்திலும் நாம் இருக்குமிடம் சிறையாகத்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டிருப்பார்.

ஆனால், 60 ஆண்டுகள் கடந்தபின்னும் நாம் தமிழன்னையைப் பிறருடன் தொடர்புகொள்ள முடியாதபடிச் சிறையில்தான் அடைத்து வைத்திருக்கிறோம் என்பதற்கு விடுமுறைப் பட்டியல் ஒன்றே சான்று. ஆள்வோர்களின் சொல்லும் எழுத்தும் தமிழைப் போற்றினாலும் செயல் தமிழை ஒதுக்குவதாகத்தானே உள்ளது! திடீர் திடீரென்று நினைவிற்கு வரும் நோயாளிபோல் நாம் திடீர் திடீரென்று இந்தியை எதிர்க்கிறோம் என்று குரல் கொடுத்தால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா? அல்லது “வாழ்வும் வீழ்வும் தமிழுடன்தான்” என முழங்கினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா? இந்த உணர்வு உள்ளத்திலிருந்து வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழைத் தொடர்புச் சிறையிலிருந்து மீட்க இயலும்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு. ( திருக்குறள் 1077) என்கிறார் திருவள்ளுவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, “கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்” என உரை எழுதியிருப்பார். இதனையே சற்று மாற்றி  முரட்டுத்தனமாக அரசு நடந்து கொண்டாலன்றித் தமிழ்ப் பகைவர்கள் தமிழுக்காக ஒரு துளி மையையும்கூடச் செலவிடமாட்டார் எனலாம். கலைஞரின் வழி நடக்கும் அரசு இது குறித்துச் சிந்திக்க வேண்டும். போனது போகட்டும். இனிமேல், தமிழில் வெளியிடலாம் என்று வாளாவிருக்கக் கூடாது. உடனடியாக மற்றொரு விடுமுறைப் பட்டியலைத் தமிழில் வெளியிட்டுச் சுற்றுக்கு விட வேண்டும். அத்துடன் நின்று விடாது ஆங்கிலப் பட்டியல் வெளியீட்டில் தொடர்புடைய கீழ்நிலைப் பணியாளரிலிருந்து உயர் நிலை அதிகாரி வரைக்கும் ஏதேனும் சிறு தண்டனையாவது கொடுக்க வேண்டும். அவர்களை ஒரு நாள் இடைவிலக்கம் செய்யலாம். அல்லது ஒரு நாள் ஊதியத்தை ஒறுப்புத் தொகையாகப் பிடித்தம் செய்யலாம். அல்லது வேறுவகையில் தண்டனை விதிக்கலாம். அப்பொழுதுதான் தவறு செய்தவர்களுக்கும் இனித் தமிழைப் புறக்கணிக்க எண்ணினாலே அச்சம் வரும். பிறருக்கும் பாடமாக இருக்கும்.

அரசு தமிழ் ‘ஆட்சிமொழி நிதியம்’ என்ற ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும்.  தமிழ்ஆட்சிமொழித் திட்டத்தைச் செயல்படுத்தாதவர்களிடம் ஒறுப்புத் தொகை பெற்று இந்நிதியத்தில் சேர்க்க வேண்டும்.

பல்வேறு நிலைகளில் தமிழுக்கு எதிரான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கண்டும் காணாமல் இருக்கும் அரசு இனியும் அவ்வாறு இருக்கக் கூடாது. ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழ்நாட்டில் தமிழே எங்கும் என்னும் நிலையைத் தோற்றுவித்தால்தான் மக்களும் அரசிற்கு ஒத்துழைப்பர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சொல்லில் தமிழ், செயலில் ஆங்கிலம் என்பதற்கு முற்றப்புள்ளி வைக்க அரசை வேண்டுகிறோம்.

தமிழே என்றும் தொடர்பு மொழி! தமிழே என்றும் ஆட்சிமொழி!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல இதழுரை