(கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி)

இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை

இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்!  ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர்.

இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது இலங்கையரசு. இந்த முடிவு இந்திய அரசுக்குப் பெருந்தலைவலியாகிவிடும் என்ற அச்சத்தால் இராசீவு காந்தி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசின் தலைவர் செயவர்த்தனாவுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி இந்திய அரசு ஒரு பெரும்படையை இலங்கையில் வைத்து, தமிழர்க்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டத் தமிழ்ப்போராளிகளின் போர்க்கருவிகளை அகற்றி இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதென்றும் வெளிப்படையான அறிவிப்பு. ஆனால், கமுக்கமான உடன்பாடு தமிழ்ப்போராளிகளை ஒழித்துக்கட்டுவதே!

வீடு வீடாகச் சென்று தமிழ் மக்களிடம் இருந்த படைக்கலங்களைப் பிடுங்கினார்களே தவிரச் சிங்களப் போராளிகளிடமிருந்த   படைக்கலங்களைப்   பிடுங்கவில்லை. இது ஈழத்தமிழ்ப் போராளிகட்கு மனநிறைவளிக்கவில்லை, எனவே, எதிர்த்தனர். மேலும், ஏழைத்தமிழர்க்கு இன்னலும் இழைத்தனர். இந்த அமைதிப்படைக்காக இந்திய அரசுக்கு ஒருநாளைக்கு ஒரு கோடி உருபாவுக்குமேல் செலவாயிற்று. இது ஈழத்தமிழர்க்கு உதவவா? இந்தியாவை அயல்நாட்டுத் தாக்குதலினின்றும் பாதுகாக்கவா? என்பது ஆய்வுக்குரியது.

ராசீவு காந்தி படுகொலையும் ‘தடாவும்’

21.5.1991-இல் இராசீவு கொலைக்குப் பிறகு காவல்துறையும், புலனாய்வுத்துறையும் கொலைக்கு யார்காரணம் என்று புரியாமல் திண்டாடி, இறுதியில் விடுதலைப்புலிகள்தாம் என்று உறுதி செய்து, அதற்கு வேண்டிய சான்றுகளை அணியஞ்செய்தன.

இந்தியாவின் பிற பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் விடுதலைப்புலிகள் நடமாட்டத்தைத் தடைசெய்து ஒடுக்க இந்திய அரசும் தமிழக அரசும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.

வடநாட்டார்க்கு வால்பிடிக்கும் இந்திரா பேராயத்ததினர், விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய அரசையும், தமிழ் மாநில அடிமை அரசையும், அடிக்கடி தூண்டுதல் செய்து கொண்டேயிருக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் செயலலிதா விடுதலைப்புலிகளை அறவே  வெருட்டி  விட்டதாகப்  பெருமையடித்துக் கொள்ளும் இந்த நேரத்திலும் இந்திய நாடாளுமன்றில் ஒரு தமிழக நாடாளுமன்ற இ.கா. உறுப்பினர் இந்தியாவில் இன்னும் புலிகள் நடமாட்டம் உளது என்று எச்சரித்துளார்.

“இத்தடாபுடா” சட்டத்தைக் கொண்டு வேண்டாதவர்களை, விடுதலைப்புலிகட்கு ஏதோ ஒருவகையில் உதவினர் என்று குற்றம் சுமத்தி, தமிழர் பலரையும் சிறையிலிடுகின்றனர்.

இப்பொழுது (10.03.1992) எவராவது விடுதலைப்புலிகட்குச் சார்பாகப் பேசினால் கூடப் பிடித்துக் காவல் கூடத்திடுகின்றனர். இத்தடைச்சட்டம் எல்லார்க்கும் அச்சமூட்டுவதாகிவிட்டது.

இந்தியாவும் இலங்கையும்

இந்தியா மொழிவழி மாநிலம் பிரித்து எல்லா மாநிலங்களையும் அடிமை நிலையிலேயே வைத்துள்ளது. இலங்கையும் மாவட்டங்களாகப் பகுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களை அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. 1983 இல் தமிழர்களைக் கோரக் கொலை செய்து நூழிலாட்டு ஆடினர். இலங்கைத் தமிழர்கள் உயிர்பிழைக்க இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் ஏதிலிகளாகப் போய் அடைக்கலம் புகுந்தனர்.

1983 ஆம் ஆண்டு சிங்களவர் செய்த கொடுமைகளைக் கண்டு தமிழீழ இளைஞர்கள் வாழ்வு அல்லது சாவு என முடிவெடுத்து   வேலுப்பிள்ளை   பிரபாகரன்   தலைமையில் “விடுதலைப்புலிகள்”  என ஒருபடை அமைத்து, சிங்கள அரசுடன் போராடுகின்றனர்.

இந்திய அரசு போராளித் தமிழர்களை அடக்கி இலங்கை அரசுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் படைக் கலன்களைப் பிடுங்கியது. திரு. இராசீவு காந்தியை விடுதலைப்புலிகள் தாம் கொன்றனர் எனக் குற்றம் சுமத்தி அவர்களுக்குத் தடைவிதித்து  விட்டது. தமிழ்நாட்டிலிருந்த இலங்கை ஏதிலித் தமிழர்களை வலிந்து வெளியேற்றுகிறது. 

இந்தியாவில் விடுதலை வேண்டிப் போராடும் இந்திய மக்களை, இந்திய  அரசு   பாதுகாப்புப்  படைகளைக் கொண்டு கொன்று குவிக்கிறது. அவர்களைப் பயங்கரவாதி, தீவிரவாதி எனப் பட்டஞ் சூட்டியுளது. இலங்கையரசும் பாதுகாப்புப் படைகளையமைத்து இலங்கைத் தமிழர்களை நாள்தோறும் கொன்று குவிக்கிறது. தமிழர்களை அழிப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழர்தாம் வடவர்க்கு அடிமையாயிற்றே!

இந்தியா நேர்மையானதா?

தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டிக்கிற இந்தியா, இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களைத் தீண்டப்படாதவர் என்று ஒதுக்கிவைத்துள்ளதை எவர் கேட்கிறார்? அரசு அவர்கட்கு வீடுகள், ஏனையோர் வாழும் இடங்களில் கட்டிக்கொடாமல், ஒதுக்கமான காடு, கரைகளில் கட்டிக்கொடுக்கிறது. எப்படிப்பட்ட வீடுகள்? கோழிக்கூடுகள் போன்றவை!

அன்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்களில் பூசை செய்யத்தகாதவர்  என்று  இந்திய  மீயுயர் முறைமன்றம் (ளுரிசநஅந ஊழரசவ) தீர்ப்பளித்துள்ளதே! அஃது இன ஒதுக்கல் அல்லவா?

பீமராவு அம்பேத்துகர்க்கு விழா நடத்திப் பாராட்டும் இந்திய அரசு எல்லாவகையிலும் சமவுரிமை அளிக்கிறதா? உயர்சாதியென்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனர் தாழ்த்தப்பட்டவர்களைச் சமமாக மதித்து நடத்துகிறார்களா?

அவர்கள் வீடுகளில் நடக்கும் நன்மை தின்மைச் சடங்குகட்குச் செல்கிறார்களா?

தென்னாப்பிரிக்காவில் கறுப்பர், வெள்ளையர் என்கிற வேறுபாடே தவிர, இந்தியாவில் இருப்பது போன்ற இன ஒதுக்கலன்று.

நமீபியாவுக்கு விடுதலை வழங்க வேண்டுமென்று வாதாடிய இந்தியா தனக்கு அடிமையாக வைத்துள்ள மாநிலங்கட்கு விடுதலையளிக்க மறுப்பது ஏன்? மேலும், காவிரி நீர்ச்சிக்கலைத் தீர்க்கவியலாமல் நடுவர் மன்றத்திடம் விட்டதே! நடுவர் மன்றம் செய்த தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்தியதா?

பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறது இப்பொழுது. முன்னரே அந்த அறிவு எங்கே போயிற்று? சட்டத்தை மதிக்காத அரசை ஏன் கலைக்கவில்லை?

கருநாடகத்தார் தமிழர் பலரைப் பலியிட்டு, பல்லாயிரம் கருநாடகத் தமிழர்களை ஏதிலிகளாகத் தமிழகத்திற்கு வெருட்டியடித்த பிறகுதான் இந்த முடிவு! எல்லாரும் ஓரினம், எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதன்  பொருள் யாது?

இனப்பற்று தமிழகத் தமிழர்க்கிருப்பது தவறா?

தமிழர் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர். அங்கு கூலிகளாகவும், அடிமைகளாகவும், வாழ்கின்றனர். அயல்நாடுகளிலும் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர்களும் ஏதிலிகளாக இந்தியாவிற்கும் ஏனை அயல்நாடுகளுக்கும் சென்று வதிகின்றனர்.  தமிழினம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அதனிடம் இரக்கங்காட்டுவது குற்றமா? இன்னல்படும்போது உதவக்கூடாதா?

(தொடரும்)