(தோழர் தியாகு எழுதுகிறார் 74 தொடர்ச்சி)

அம்பேத்துகர் – பெரியார் – வெண்மணி நினைவாக

அண்ணல் அம்பேத்துகர் இந்திய நாடாளுமன்றம் முதல் கடைக்கோடிக் குப்பம் வரை சிலைகளாக நிற்கிறார். அவருடைய பிறந்த நாளும் நினைவு நாளும் நாடெங்கும் பெருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஒடுக்குண்ட மக்கள், உழைக்கும் மக்கள் அவரைத் தங்கள் காவல்தெய்வமாகப் போற்றுகின்றார்கள். ஆளும்வகுப்புக் கட்சிகள் அவரை அரசமைப்புச் சட்டச் சிற்பியாகப் புகழ்கின்றன. அவரது படத்தைக் காட்டித் தேர்தலில் வாக்கு வேட்டையாடும் கட்சிகளும் உண்டு.

நாட்டையாளும் இந்துத்துவக் கும்பல் அம்பேத்துகரைக் களவாடப் புதுப்புது மோடி வித்தைகள் காட்டி வருகிறது. இந்தக் களவாடலின் உச்சம்தான் அம்பேத்துகருக்குக் காவியுடுத்திக் கொட்டையும் பட்டையுமாகக் காட்டியுள்ள கொடுமை! இந்துவாகப் பிறந்தேன், இந்துவாகச் சாக மாட்டேன் என்று சூளுரைத்து நான்கு நூறாயிரம் மக்களோடு பௌத்தம் தழுவிய அண்ணலுக்கு இந்துவாக வேடம் கட்டுவதை எதிர்த்துக் கொதித்தெழ வேண்டும்.

சாதியடிமைத்தனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் அம்பேத்கர் ஒடுக்குண்ட மக்களின் ஒளிவிளக்கம்! அவரது நினைவைப் போற்றுவோம்!

+++

தந்தை பெரியார்! தள்ளாத வயதிலும் தமிழினத்தின் தன்மான மீட்சிக்காகத் தளராது உழைத்தவர். “தமிழ்நாடு தமிழர்க்கே!” என்ற முழக்கத்தால் நம் விடுதலைப் பாதையில் வெளிச்சம் ஏற்றியவர்.

சாதி ஒழிப்பு! பெண் விடுதலை! பார்ப்பன எதிர்ப்பு! தில்லியாதிக்க எதிர்ப்பு! இந்த முழக்கங்களை நம் உடலியக்கத்தின் உயிர் மூச்சாக்கியவர். தமிழ்நாட்டு உரிமைகளுக்கும் பார்ப்பன-பனியா சுரண்டல் ஒழிப்புக்குமான தொடர்பைச் சுட்டிக்காட்டி விடுதலைக் கோரிக்கையைப் பொருள் பொதிந்ததாக்க வழிகாட்டியவர்.

இந்தியத் துணைக் கண்டமெங்கும் வளைத்து வாரிச் சுருட்டி வரும் பார்ப்பன பாசிச நச்சுச் சுழல் தமிழ்நாட்டில் தடைபட்டு வீழ்வதன் முதன்மைக் காரணம் இது பெரியார் மண் என்பதே! பெரியாரின் பெரும் பரப்புரை இந்த மண்ணில் விதைத்த இனமானச் சிந்தை வீண்போகவில்லை என்பதே!

பெரியாரின் கொள்கைத் தடியைத் தமிழர்கள் இப்போதும் சுழற்ற வேண்டிய தேவை உள்ளது. தில்லியின் கொட்டம் அடங்கவில்லை. சாதியாணவக் கொலைகள் இன்றும் தொடர்ந்து நிகழ்கின்றன. தமிழ்நாட்டின் மீது வடவர் ஆக்கிரமிப்பு ஒரு நூறு வழிகளில் தொடர்கிறது.

பெரியாரைத் தமிழ் மக்கள் நினைவுகூர்தல் போதாது. அவரது போராட்டத்தை உறுதியாக முன்னெடுக்க வேண்டும். அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை ஈட்டும் வரை!

+++

அண்ணல் அம்பேத் துகரையும் தந்தை பெரியாரையும் நாம் நினைவேந்தும் இதே திசம்பர் மாதத்தில்தான் 1968ஆம் ஆண்டு இயேசு கிறித்து பிறந்த அதே 25ஆம் நாள் வெண்மணி என்றொரு தமிழ்ச் சிற்றூரில் உழைக்கும் குலத்தின் கண்மணிகள் பெண்களும் குழந்தைகளும் உட்பட 44 பேர் சேரிக் குடிசையில் உயிருடன் எரிக்கப்பட்ட தீக்கொடுமை நிகழ்ந்தது.

வெண்மணி வெறும் கூலிப் போராட்டமா? இல்லை, சாதிய அடிமைத்தனத்துக்கு எதிரான சமூக விடுதலைப் போராட்டம்! வெண்மணியை எரித்த நெருப்பு இன்றளவும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அந்த நெருப்பை நெஞ்சிலேந்தி சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் எரித்துச் சாம்பலாக்கத் தொடர்ந்து போராடுவோம்!

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  48