சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை-ஆளுநர் இரவி;பெண்களைப் பரத்தையர் என்று திருவமாவளவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ – சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி – தொடர்ச்சி)
- ? 29. சனாதன தருமத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் இரவி கூறுகிறாரே!
- ?. சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது என்றும் வேர் இல்லாமல் மரம் வளர முடியாது, சனாதன தருமம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றும் ஆளுநர் இரவி கூறுகிறாரே!
- பெயர் சூட்டுதலிலும் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் சனாதனத்தின் கொடுமையை உணராமல் அதைப் போற்றுகிறார்கள்.
சூத்திரனுக்குத் தாழ்வான பெயர் சூட்டுக; பிராமணனுக்கு மங்களத்தையும்; சத்திரியனுக்கு வலிமையையும் வைசியனுக்குப் பொருளையும்; சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டும். – (மனு 2 . 31, 32)
அப்படிப் பெயர் சூட்டுவதற்காக உயர்வு தாழ்வுப் பெயர் முடிவுகளையும் மனு கூறுகிறது. “பிராமணனுக்குச் சருமாவென்பதையும்; சத்திரியனுக்கு வருமம் என்பதையும்; வைசியனுக்குப் பூதி யென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்பேராக இடவேண்டியது.- (மனு 2.32) வருண வேறுபாட்டை வரையறுத்து ஒரு பிரிவினரை மிக உயர்வாகக் கூறி அப்பிரிவினருக்கு உயர்வான பெயரிடவேண்டும் என்பதும் மற்றொரு பிரிவினரை மிகவும் தாழ்வாகக்கூறி அதற்கேற்ப இழிந்த பெயரையே இட வேண்டும் என்பதும் பிற வகுப்பினருக்கும் அவரவர் தன்மைக்கேற்ப இடைப்பெட்ட பெயர்களைவைக்க வேண்டும் என்பதும் எக்காரணம் கொண்டும் பிராமணருக்கு மட்டுமே உயர்வான பெயரைச் சூட்ட வேண்டும் என்பதும் உயர்வான பெயருக்குரிய தகுதி வேறு வருணத்தாருக்கு இல்லை என்பதும்தான் சனாதனத்தின் உயர்வா?
பெயரிடுவதிலும் உயர்வு வரக்கூடாது. இழிவுபடுத்தும் வகையில்தான் பெயரிட வேண்டும் என்னும் கொடுந்தன்மை உடைய சனாதனத்தை அழித்தொழிப்பதுதானே முறை. இதனைக் கூறுவோரைப் பாராட்டாவிடடாலும் பரவாயில்லை. தலைக்கு விலை பேசுவதும் போட்டுத் தாக்குவதும் சரிதானா?
- ? 30. பெண்களைப் பரத்தையர் என்று திருமாவளவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறாரே குட்பூ.
- ?. “மனுசாத்திரத்தில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை. ஒரு கட்சித் தலைவர் அதைப் புரிந்துகொண்டு பேசியிருக்க வேண்டும். . … பெண்கள் குறித்துத் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, அவர்களது கூட்டணிக் கட்சியான தி.மு.க. ஏன் பதில் சொல்லவில்லை? காங்கிரசு ஏன் பதில் சொல்லவில்லை? பெண்களைப் பரத்தையர்(விபச்சாரிகள்) என்று சொல்வதுதான் உங்கள் கொள்கையா? .. திருவமாவளவன் இவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.” – நடிகை குட்பூ இவ்வாறு பேசியுள்ளாரே!
- திருமாவளவன் தமது சுட்டுரை(துவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில், மனு நூலைத் தடை செய்ய வலியுறுத்துவதற்கான காரணங்களைச் சரியாகவே வெளியிட்டிருக்கிறார். மனு நூல், பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாகச் சித்திரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வருணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது எனத் தெளிவாகவே கூறுகிறார். மூலக்கருத்துகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழாமல் அவற்றை எடுத்துச் சொன்ன திருமாவளவன் மீது பாய்வது ஏன்?
மனுவைப் படிக்காமலேயே குரல் கொடுக்கும் குட்பூ போன்றவர்கள் பின்வரும் மனு நூற்கருத்துகளுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?
பெண்கள் பெரும்பாலும் பரத்தையர்கள்(விபச்சாரிகள்) என்று அநேக சாத்திரங்கள் கூறுகின்றன. (மனு 9. 19)
பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். (மனு 11. 66)
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள். (மனு 2. 213)
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக் குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர். (மனு 2. 214)
எந்த ஒரு பெண்ணுடனும் அவர் தாய், தங்கையாக இருந்தாலும் அவர்களுடன் தனியாக ஆண்கள் ஒன்றாக உட்காரக் கூடாது. (மனு 2. ம் 215)
இப்படி தங்கை, தாயையே சந்தேகிக்கச் சொல்லும் மனு சாத்திரம், ஒருவனின் மனைவி, வேறு ஒருவரிடமும் உடலுறவு கொள்ளலாம் என்று கூறுகிறது.
“ஒருவனின் மனைவியிடத்தில் மனைவி இல்லாத ஒருவன் உறவுகொண்டு குழந்தையை உண்டு பண்ணலாம்.” (மனு 9. 52)
“ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளிகளுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ள வேண்டும்.” (மனு.9; 59)
பெரும்பாலும் மாதர் கற்பில்லாதவர் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக.(மனு 9.19)
கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனா யிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லை யென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும். (மனு 9.78)
பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனு 11. 65)
இப்படிப் பெண்ணை, பிள்ளைகளைப் பெற்றுத் தருவதற்கு வாரிசுகளை உற்பத்தி செய்வதற்கானஓர் எந்திரம் என்ற தகுதியை மட்டுமே மனு சாத்திரம் வழங்குகிறது. அது மட்டுமல்ல, பரத்தமையையும் (விபச்சாரத்தையும்) அந்தப் பெண் விரும்பாமலே மனு சாத்திரம் அவள் மீது திணிக்கிறது.
இவ்வாறு பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனு சித்தரிக்கிறது. பாலுறவு தொடர்பில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்குப் பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதிப் பெண்களை மனு இழிவுபடுத்துகிறது. இவையெல்லாம் குட்பூ போன்றவர்களுக்குப் பெண்களை இழிவுபடுத்துவதாகத் தெரியவில்லையா?
(தொடரும்)
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.54-58
Leave a Reply