(தோழர் தியாகு எழுதுகிறார் 93 : இறையூர் இழிவு – தொடர்ச்சி)

பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 1

உங்களில் தோழர் யமுனா இராசேந்திரனைப் பற்றி அறியாதவர்கள் இருத்தல் அரிதே.2000ஆம் ஆண்டு நான் இலண்டன் சென்றிருந்த போது அவர்தாம் என்னை ஐகேட்டு கல்லறைக்கு(Highgate Cemetery) அழைத்துச் சென்று “இதோ உங்களவர், போய்க் கொஞ்சுங்கள்”என்று காரல் மார்க்குசிடம் கொண்டுபோய் விட்டு சுட்டுத் தள்ளியவர்.

2003ஆம் ஆண்டு யமுனா சென்னை வந்திருந்த போது என்னிடம் ஒரு நீண்ட செவ்வி கண்டார். இனிய நண்பர் விசுவும் துணைக் கேள்விகளோடு கலந்து கொண்டார். அந்தப் பேட்டியின் மைய வினா: மார்க்குசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் என்ன தொடர்பு?  என்பதே. இப்போதும் கூட என்னைப் பார்த்து “நீங்கள் மார்க்குசியத்திலிருந்து தமிழ்த் தேசியத்துக்கு மாறி விட்டீர்களா?” என்று கேட்கும் நண்பர்கள் உண்டு. இந்த செவ்விக்குப் பின் சற்றொப்ப 20 ஆண்டு கழிந்து விட்டாலும் ஒருசில சொல்லாட்சிகள் தவிர எதையும் மாற்றிக் கொள்ளும் தேவை எழ வில்லை. சற்றே நீண்ட பேட்டி என்பதால் பகுதிகளாக உங்கள் பார்வைக்கு. ஆர்வமுள்ளவர்கள் அலுப்புறாமல் படித்தால் பயன் பெறலாம்:

யமுனா ராசேந்திரன் எழுதுகிறார்:

[தமிழ்த் தேசியம் குறித்து மார்க்சியர் தியாகுவுடன் யமுனா ராசேந்திரன், விசுவநாதன் உரையாடல்]

 (பதிவுகளில் அன்று; மே 2003; இதழ் 41.)

யமுனா:

ரொம்பவும் நேரடியாகவும் முரட்டுத்தனமாகவுமே (brutal) தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இன்றைய இந்திய சூழலில் தமிழ்த்   தேசியத்தின் தேவை  என்னவென்று கருதுகிறீர்கள்?

தியாகு: 

தமிழ்த் தேசியம் என்கிற போது அது ஒன்றுதான் உண்மையான நேர்நிறையான தேசியம். ஏதோ பல்வேறு தேசியங்கள் இருக்கிற மாதிரி அதில் தமிழ்த் தேசியம் ஒன்றாக இருந்தது, அதன் இடம் என்ன அல்லது இந்தியத் தேசியம் என்பது என்ன என்று பேசுவதற்கான இடம் இதுவல்ல. ஒரு காலத்தில் இந்தியத் தேசியத்திற்கான தேவை இருந்தது. அது எதிர்மறைத் தேசியமாக இருந்தது. தமிழ்த் தேசியம் என்பதுதான் மொழி – மொழி பேசுகிற இனம் – அதனுடைய நிலப்பரப்பு – அதனுடைய பண்பாடு- அதனுடைய உளவியல் உருவாக்கம் – அதனுடைய பொருளியல் பிணைப்பு என்று எல்லா அடிப்படைகளிலும் தேசம் என்பதற்குரிய வரலாற்றுவழிப்பட்ட இலக்கணங்களின் அடிப்படையில் உண்மையான நேர்வகையான தேசம்..

தமிழ்த் தேசம் என்கிற போது – அப்படி இருப்பது அங்கீகரிக்கப்படாமல் மறுக்கப்பட்டும் பிறிதொரு அரசமைப்புக்குட்பட்டும்  இருக்கிற போது இயல்பாகவே அஃது ஓர் ஒடுக்குண்ட தேசத்தின் தேசியமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட தேசத்தின் தேசியம் என்ற வகையில் தமிழ்த் தேசியம் இன்று பொருத்தப்பாடுடையது. அந்த வகையில்தான் எல்லா அடிப்படைகளிலும் இங்கு மாற்றத்திற்கான அரசியல் பேசுகிறோம்.

யமுனா: 

ஒடுக்கப்பட்ட தேசியம் ஒடுக்குகிற ஓர் அமைப்பு எனும் அளவிலாயினும் அல்லது ஒடுக்கப்படுகிற இனமாயினும் ஒடுக்குமுறை பாலியல் முறைமையிலானதாயினும் மொழி முறைமையிலானதாயினும் சரி ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட வேண்டிய தேவை ஒன்று இருக்கிறது. ஆனால் தேசியம் ஒன்றை முன்வைத்து நாம் ஒரு அரசியல் இயக்கம் அல்லது தேசிய விடுதலை இயக்கம் நடத்தும் பொதுக் கருத்தியல் வடிவில் அதை உருவாக்குகிறோம். தேசியம் என்கிற கருத்தியலுக்கும் தேசியம் என்கிற கருத்தாக்கத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. தேசியம் தொடர்பாக நிறைய எழுதப்பட்டிருக்கிறது.

ஜரோப்பியத் தேசிய உருவாக்கம் என்கிற அனுபவத்திலிருந்துதான் நான் பேசுகிறேன். பெனடிக்கு அண்டர்சன்(Benedict Anderson),  எரிக்கு ஆபுசுபாம்(Eric Hobsbawm), தாம் நேயரன்(Tom Nairn) போன்றவர்கள் தேசியம் தொடர்பாக நிறைய எழுதியிருக்கிறார்கள். நவீனத் தேசியத்தின் வரலாறு என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்கிறார் மார்க்குசியரான பிளாக்குபரன்(Blackburn), எரிக்கு ஆபுசுபாம் ஜரோப்பியப் பட்டறிவுகளை அடியொற்றி தேசியம் தொடர்பான விவாதங்களை இட்டிலரின்(Hitler) தேசியக் குமுகவியம்( சோசலிசம்), கொடுங்குழுவியம்(பாசிசம்) போன்றவற்றோடு வைத்துப் பாரக்கிறார்.  பல்வேறு மார்க்குசியர்களும் தாராளவாதிகளும் கருத்தியல் எனும் அளவில் தேசியம் கொடுங்குழுவியத்தை நோக்கித்தான் செல்லும் என்கிறார்கள். பெனடிக்கு அண்டர்சன் அச்சுக் கலையின் வளரச்சி, தொழில்மயமாதல், தகவல் தொழில்நுட்ப ஊடகத்தின் பரவலாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் தேசியம் கட்டமைக்கப்படுவதையும் அவ்வகையில் அது கற்பிதமானது என்றும் கூறுகிறார். தாம் நேயரன் அடிப்படையில் ஏகாதிபத்திய வளர்ச்சியோடு வளர்ந்து வரும் பொருளியல் அசமத்துவம் போன்றவற்றை தேசிய வளர்ச்சிக்கான அடிப்படைகளில் ஒன்றாகக் கூறுகிறார். பொருளியல் முறையிலான அதிகாரம் பண்பாட்டு அதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது. மொழி அதிகாரத்திற்கான கருவியாக இதன்வழி வளர்ச்சியடைகிறது. இவ்வகையில் பொருளியல் பண்பாட்டு மொழி சார்ந்த ஒரு எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டிய தேவையிருக்கிறது. இவ்வகையில் தேசியம் என்பது கட்டமைக்கப்பட்டதாக இருக்கிற அதே போதில் அது ஒரு நிபந்தனையாகவும் ஒரு வரலாற்று நிலையாகவும் இருக்கிறது.

ஜரோப்பியத் தேசியங்களின் தோற்றத்திற்கும் கொடுங்குழுவியக் காலகட்டத்துக்கும் அடுத்தாக நாம் குடியேற்ற(காலனி)ஆதிக்க எதிர்ப்புத் தேசிய விடுதலை இயக்கங்களைப் பார்க்கிறோம். தனியரசாளுமை(ஏகாதிபத்திய) எதிர்ப்பு, குடியேற்ற(காலனி)ஆதிக்க எதிர்ப்புத் தேசிய விடுதலைப் போராட்டங்களைப் பெரும்பாலுமான மார்க்குசியர்கள் நேர்நிறையானதாகப் பாரத்திருக்கிறார்கள். அயருலாந்துப் போராட்டம் பற்றிய மார்க்குசு எங்கெல்சினுடைய இலெனினுடைய பார்வையின் ஆக்கபூர்வமான தொடர்ச்சி இஃது என்றும் சொல்லலாம். நாம் வாழ்கிற காலத்தில் தேசியம் என்பது இரண்டு இடங்களில் உருவாகியிருக்கிறது.

சோவியத்து ஒன்றியக் கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப்பிறகு பழைய சோவியத்து ஒன்றியத்திற்குள்ளும் கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்குள்ளும் உருவாகியிருக்கிறது. செச்சினியா/செசென்யா (Chechnya), கொசோவோ (Kosovo), பொசுனியா(Bosnia) போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மூன்றாம் உலக நாடுகளில் ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளில் மத்தியகிழக்கு மற்றும் இசுலாமிய நாடுகளில் தேசிய எழுச்சி என்பது உருவாகியிருக்கிறது. இன்றைய பட்டறிவுகளை நாம் பார்த்தோமாயின்  குடியேற்ற ஆதிக்க எதிர்ப்பு- யுத்தக் காலகட்டத்தில் அந்தக் குடியேற்ற ஆதிக்க எதிர்ப்பு என்பது பெருந்தேசியம் –  அந்தக் குறிப்பிட்ட நிலப்பிரப்பில் ஆதிக்கம் பெறுகிறதற்கான எதிர்ப்பாகவே நிறைவேறியிருக்கிறது தெரிய வருகிறது. அக்காலகட்டத்தில் முதன்மையாக மேலெழாத இந்த முரண்பாடு இப்போது முன்னணிக்கு வந்திருக்கிறது. இலங்கையை எடுத்துக் கொண்டால் பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்க எதிர்ப்பென்பது சிங்களப் பெருந்தேசியத்தைக் கட்டியெழுப்பக் கூடிய குடியேற்ற ஆதிக்க எதிர்ப்பாகவே இருந்திருப்பதை நாம் இப்போது காணக் கூடியதாக இருக்கிறது.

சிங்கள புத்த கலாச்சாரத் தேசிய மேலான்மையயை நிலைநாட்டக் கூடிய ஒரு தேசியமாகத்தான் இலங்கைத் தேசியம் உருவாகியது. ஆப்ரிக்க தேசியத்திலும் இஸ்லாமிய தேசியத்திலும் இவ்வகையிலான உள்முரண்கள் கொண்ட பண்புகளை நாம் நிறையப் பார்க்க முடியும். ருவாண்டா ஈரான் அனுபவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். காலனியாதிக்க எதிர்ப்பு கொண்ட இவ்விரண்டு நாடுகளில் ருவாண்டாவில் இனக்கொலை பிரதான அரசியலாகிறது. ஈராக்கில் கொமேனியின் ஷா எதிர்ப்பு ஆட்சியில் பெண் குழந்தைகள் திருமணம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வகையில் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவம் நோக்கிய வளர்ச்சி: இக்காலக்கட்டத்தில்தான் ஜரோப்பியத் தேசியங்கள் உருவாகின்றன. முதலாளித்துவம் தன்னை விரிவாக்கிக் கொண்டு தனியாட்சியமாக வளர்ச்சியடைகிற காலக்கட்டம்: இக்காலக்கட்டத்தில்தான் குடியேற்ற ஆதிக்க எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்கள் உச்சமடைகின்றன. இவற்றிலிருந்து மூன்றாம் உலகின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் போன்றவற்றை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. 

இவ்வாறான சூழலில் பெருந்தேசிய இனத்திற்கெதிராகப் போராடுகிற குறுந்தேசிய இனங்களின் போராட்டத்தை நாம் எவ்வகையில் ஆக்கபூர்வமானதாகப் பாரக்க இயலுமெனில், குறிப்பிட்ட மொழிசார்ந்த பண்பாடு – குறிப்பிட்ட நிலப்பரப்பு – இதில் இறையாண்மையை நிலைநாட்டுவது என்பது ஒரு குடினநாயகபூர்வமான கோரிக்கை எனும் அளவில்தான் நாம் ஆக்கபூர்வமானதாகப் பார்க்க முடியும். ஆனால் காலம் இடம் கடந்த ஒரு கருத்தியலாக இதை முன்வைக்கிற போது எந்தத் தேசியக் கருத்தியலுக்கும் இருக்கிற அதே கருத்தியல் கண்டம்(ஆபத்து) இதற்கும் இருக்கிறது. உருவாண்டாவில்(Rwanda) நடந்த இனக்கொலையை, பொசுனியாவில் நடந்த இனக்கொலையை, இதற்கு ஆதரவாகச் சொல்லலாம். இலங்கையில் நடக்கிற பல்வேறு விடயங்களையும் கூட நாம் இவ்வகையில் ஒப்பீட்டளவில் பாரக்க முடியும். தேசியம் ஒரு கருத்தியலாகிறபோது அதற்கு நேர்கிற ஒரு மிகமுக்கியமான அம்சம்: அது தனிப்பட்டதாக(exclusive)த் தன்னைக் கட்டமைத்துக் கொள்கிறது. அது பண்பாட்டை, மொழியை வரையறுக்கும். இன்னும் மொழி பண்பாடு சார்ந்த விடயங்களை அது மதத்தோடு சேர்த்து வரையறை செய்யும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 65