இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைகவிதைபாடல்

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 தொடர்ச்சி)

தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12

 

பயனில நீக்கிப் பண்புடன் வாழ்க!

“அன்பு சிவம்! உலகத்துயர் யாவையும்

அன்பினில் போகும்”

(பாரதியார் கவிதைகள் :பக்கம் 26 | பாரதமாதா)

என்று புத்தர் மொழியாக அன்பை வற்புறுத்துபவர் பாரதியார்.

“பொலிவிலா முகத்தினாய் போ போ போ

… … … … … … …

… … … … … … …

சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

… … … … … … …

ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா வா வா

(பாரதியார் கவிதைகள்: பக்கம் 38-40 | போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்)

என அமையும் பாடலில் மக்கள் விலக்க வேண்டிய பண்புகளையும், பெருக்க வேண்டிய பண்புகளையும் விளக்குகிறார்.

“விதியே விதியே தமிழச் சாதியை

என் செய நினைத்தாய் எனக்குரையாயோ” (பாரதியார் கவிதைகள்: பக்கம் 48 | தமிழச்சாதி)

எனப் பாரதியார் துயரம் கொண்டு நையும் உள்ளம் நாமும் பிறர் துன்ப நிலை கண்டு இரங்க வேண்டும் என உணர்த்துகிறது. மேலும், தமிழ்ச்சுற்றத்தார் உலகெங்கும் படும் துயரங்களைக் களைவதற்காகச்

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்

தொழுது படித்திடடி பாப்பா (பாரதியார் கவிதைகள்: பக்கம் 203 | பாப்பாப் பாட்டு)

என்றும்,

        “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்

        பரவும் வகை செய்தல் வேண்டும்

 (பாரதியார் கவிதைகள் :பக்கம் 46 | தமிழ்)

என்றும் பாரதியார், இட்ட கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்

“ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப்படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க்குண்டு

(பாரதியார் கவிதைகள் : பக்கம் 51 | தமிழச்சாதி)

எனத் தமிழர் வாழ முன்னவரின் தமிழ்க் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறார் பாரதியார்.

        “நன்மை வந்தெய்துக, தீ தெல்லாம் நலிக

        அறம் வளர்ந் திடுக மறம்மடி வுறுக”

(பாரதியார் கவிதைகள் : பக்கம் 51 | வாழிய செந்தமிழ்)

என வாழ்ந்து

        “யார்க்கும் எளியனாய் யார்க்கும் வலியனாய்

        யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய்”

(பாரதியார் கவிதைகள் : பக்கம் 95 | விநாயகர் நான்மணிமாலை)

அனைவரும் திகழ வேண்டும் என்கிறார் பாரதியார்.

“சிறுமைகள் என்னிடமிருந்தால் விடுக்க வேண்டும்” (பாரதியார் கவிதைகள் : பக்கம் 125 | பேதை நெஞ்சே) எனச் சிறுமைகளை நீக்க வேண்டுகிறார். எனவே, ‘புதிய ஆத்திசூடி’யிலும் அல்லன நீக்கி நல்லன பேணுதற்குரிய கட்டளைகளை வழங்குகிறார்.

 செல்வச் செருக்கு வந்தால் செல்வம் இல்லாரைத் தூற்றும் பழக்கம் வந்துவிடலாம்; பேச்சில் நேர்மை தவறும் போக்கு வந்துவிடலாம். எனவே, பாரதியார் ‘நேர்படப் பேசு’ (ஆ.சூ 61) ‘தூற்றுதல் ஒழி’ (ஆ.சூ 47) ‘பொய்ம்மை இகழ்’ (ஆ.சூ 73) ‘மௌட்டியந் தனைக் கொல்’ (ஆ.சூ 85) ‘யாவரையும் மதித்து வாழ்’ (ஆ.சூ 87) எனக் கட்டளையிடுகிறார். உலக நடைமுறையையும் மீறக் கூடாது என்பதற்காக ‘நீதி தவறேல்’ (ஆ.சூ 91) ‘இலௌகிகம் ஆற்று’ (ஆ.சூ 102) என்கிறார்.

  இதனால் அற்பர்களையும் நாம் மதிக்கலாமா? கூடாது! அவ்வாறு மதித்தால் அவர்களின் அழிவிற்கு மட்டும் அல்ல பிறரின் அழிவிற்கும் நாம் காரணமாவோம். அற்பர்களை ஒதுக்கித் தள்ளினால்தான் திருந்திய பாதையில் செல்ல முடியும். எனவே ‘(உ)ரோதனம் தவிர்’ (ஆ.சூ 95) ‘(உ)லுத்தரை இகழ்’ (ஆ.சூ 100) என்கிறார்.

  மேலும், “கற்பனையூர்” பாட்டின் குறிப்பில், “கவலைகளை முற்றுந் துறந்து விட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதினாலன்றி மோட்சம் எய்தப்படாது” என்கிறார் பாரதியார் (பாரதியார் கவிதைகள் : பக்கம் 198). ஆகவே, ‘(இ)லீலை இவ்வுலகு’ (ஆ.சூ 99) என்கிறார். இவற்றிற்கெல்லாம் அடிப்படைப் பண்பு தவ உணர்வு ஆகும். எனவே, ‘தவத்தினை நிதம்புரி’ (ஆ.சூ 53) ‘நோற்பது கைவிடேல்’ (ஆ.சூ 64) ‘மொய்ம்புறத் தவஞ் செய்’ (ஆ.சூ 83) ‘மோனம் போற்று’ (ஆ.சூ 84) எனத் தவ அமைதியை வேண்டுகிறார்.

 

– இலக்குவனார் திருவள்ளுவன்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *