2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 இன் தொடர்ச்சி)
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்
2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக!
தமிழ்வளர்ச்சித் துறை என்னும் பெயர் குறித்துப் பல்வேறு தமிழ் அமைப்பினரும் பிற துறையினரும் இத்துறை தமிழையா வளர்க்கிறது. அப்படியானால் தமிழ் வளரவில்லையா என்பர்.
சிலர் தமிழ் மேம்பாட்டுத் துறை எனப் பெயரிடலாமே என்பர். அப்படிக் கூறினால் தமிழ், மேம்படுத்தப்படவேண்டிய குறை நிலையில் உள்ளதாகப் பொருள் ஆகாதா என விடையிறுப்பேன். அலுவலகங்களில் தமிழை வளர்ப்பதால் தமிழ் வளர்ச்சித் துறை எனக் குறிப்பிடுகின்றனர் என அமைதிப்படுத்தும் முறையில் கூறுவேன். எனினும் இக்குறை எப்பொழுதும் என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே உள்ளது. எனவே, இப்பொழுது இது குறித்து எழுதுகிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தான் முதலில் 1996இல் தமிழ் வளர்ச்சிக்கெனத் தனி அமைச்சுத்துறை அமைத்தார். அதற்கு முன்பு இத்துறை கல்வித்துறையில் இருந்தது. முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கென உருவாக்கப்பட்டதாகக் கருதப்பட்ட இத்துறையை அவர் பொறுப்பிலேயே விட்டு அத்துறை அமைச்சர் ஆக்கினார். பொதுவாக நிதி அதிகாரம் உள்ள துறையைத்தான் வலிமையான துறையாக அதிகாரிகளும் பிறரும் கருதுகின்றனர். எல்லாத் துறைகளிலும் சம்பள நிலையில் மாறுபாடு இல்லா விட்டாலும் இ.ஆ.ப. அதிகாரிகள் நிதி அதிகாரம் குறைந்த பதவிகளைத் தண்டனைப் பதவிகளாகக் கருதிப் பரப்பிவிடுகின்றனர்.
அதிகாரம் இல்லாத துறையெனப் பிறர் மதிப்பதால் தமிழ்க்குடிமகனும் அப்போதைய துறைச் செயலர் திரு வை.பழனிச்சாமி இ.ஆ.ப.வும் தொடர்ந்து வலியுறுத்திய பின்னர் தமிழ்வளர்ச்சித்துறையையும் வணிகவரித்துறையில் இருந்து பிரித்து அறநிலத்துறையையும் சேர்த்துப் பார்க்கும் வகையில் தமிழ் வளர்ச்சி – அறநிலையத்துறை எனச் செயலகத்துறையும் அமைச்சுத்துறையும் அழைக்கப்பட்டன.
ஆட்சி மாறியதும் இப்பெயர் மறைந்து விட்டது. ஓவ்வொரு முறையும் ஆட்சி மாறியதும் இவ்வாறு பெயர் மறைவதும் அதனைச் சேர்க்குமாறு தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் வலியுறுத்தி அதன்பின் மாற்றுவதும் வழக்கமாகி விட்டது. இம்முறையும் அவ்வாறு எழுதியும் துறைப் பொருண்மைகளில் தமிழ் ஆட்சிமொழி எனக் குறிப்பிட்டாலும் அமைச்சுத் துறைப் பெயரில் சேர்க்கப்படவில்லை. தொழில்துறை அமைச்சர்(Minister for Industries) என்பதுதான் அமைச்சுத் துறைப் பெயர். ஊடகத்தினரும் தமிழ் அமைப்பினரும் தமிழ்வளர்ச்சி அமைச்சர் எனக் குறிப்பிட்டாலும் அவர் தொழில்துறை அமைச்சர்தான். தந்தை எட்டடிப் பாய்ந்திருந்தால் மகன் பதினாறடி பாயும் வகையில் செயல்பட்டாலும் இத்துறையைப் பொறுத்தவரை, தந்தையால் சூட்டப்பட்டது, மகனால் மறக்கப்பட்டது. முதல்வரின் கவனத்திற்கு இது செல்லவில்லையா எனத் தெரியவில்லை.
செயலகத் துறையின் பெயரிலும் இயக்ககத்தின் பெயரிலும் தமிழ்வளர்ச்சி இருப்பினும் அமைச்சுப் பொருண்மைகளில் தமிழ்ஆட்சிமொழி என்றுதான் குறித்துள்ளனர். கலைஞர் ஆட்சிமாறியதும் தமிழ்க்காப்புக்கழக வேண்டுகோளை ஏற்றுத் தமிழ்ஆட்சிமொழி எனக் குறிக்கப்பட்டதன் அடிப்படையில் அப்பெயர் தொடர்கிறது. அமைச்சுத்துறைப் பொருண்மைகளில் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறைகளும் உள்ளன.
தமிழ் வளர்ச்சி, கலை-பண்பாடு, அருங்காட்சியகம், தொல்லியல் துறைகள் ஒரே செயலகத்துறையில்தான் இருந்தன. எனவே, ஒரே அமைச்சர்தான் இத்துறைகளுக்கு இருந்தனர்.
இங்கே மற்றொரு வேண்டுகோளைக் குறிக்க விரும்புகிறேன். இலங்கையில் துறை என்றும் திணைக்களம் என்றும் வேறுபடுத்தி அழைக்கின்றனர். இதுபோல், இயக்ககத் துறைகளைத் துறை என்றும் செயலகத்துறைகளைத் திணை என்றும் அழைக்க வேண்டும். (ஆறாவது உலக தமிழ் மாநாட்டில் அளிக்கப் பெற்ற கட்டுரை, கோலாலம்பூர், மலேசியா)
தமிழ் வளர்ச்சி, கலை-பண்பாடு, அருங்காட்சியகம், தொல்லியல் துறைகள் ஒரே துறையாக இருந்தால் வளர்தமிழ்த்துறை என அழைக்கலாம். ஆனால், பிரிந்து உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதற்குப் பொறுப்பேற்க வந்த மூத்த செயலர் ஒருவர் செய்தித்துறை பிக்கல் பிடுங்கல் எனக் கருதி, சுற்றுலாத்துறையில் இருந்த செய்தித்துறையை நீக்கிவிட்டு, அதனினும் தொல்லை நிறைந்த கலைபண்பாட்டுத்துறையைத் தனக்கு விருப்பமான சுற்றலாத்துறையுடன் இணைத்துச் சுற்றுலா – பண்பாட்டுத் துறையாக மாற்றி விட்டார். என்றாலும், முதல்வருக்கு நெருக்கமான செய்தித்துறையுடன் தமிழ்வளர்ச்சித்துறை இணைக்கப்பட்டது ஒரு வகையில் வரவேற்பிற்குரியதாகும்.
பின்னர் இதுவரை, சமய அறநிலையத்துறையும் இணைந்து இத்துறை சுற்றுலா, பண்பாடு, சமய அறநிலையத் துறையாக அழைக்கப்பெறுகிறது. அறநிலையத்துறை முன்பு இந்து சமய அறநிலையத்துறை என்றுதான் அழைக்கப்பெற்றது. ஆனால், கிறித்துவ அலுவலர் ஒருவர் இதன் செயலராக அமர்த்தப்பட வேண்டிய சூழலில்- இந்து சமயத்திற்குக் கிறித்துவர் செயலராக எனக் கேட்கக்கூடாது என்பதற்காக – ‘இந்து’ எடுக்கப்பட்டது; வெறும் சமய அறநிலையத்துறையாக மட்டும் குறிக்கப்படுகிறது. திருவள்ளுவர் விருது வழங்குவிழாவை உரிய நாளில் நடத்தவில்லை என இயக்ககம் செய்த தவறுகளுக்கு அச்செயலர் பலிகடா ஆக்கப்பட்டு இத்துறையிலிருந்து மாற்றப்பட்டார். எனினும் மீளவும் கிறித்துவ அலுவலர் அமர்த்தப்படலாம் என நிலையாக இந்து அகன்று வெறும் சமயஅறநிலைய த்துறையாக மட்டும் அழைக்கப்படுகிறது.
இவற்றை எல்லாம் கூறுவதன் காரணம் பெயர் மாற்றம் என்பது ஒன்றும் புதியதல்ல என்பதைக் குறிக்கத்தான். இப்போதைய அரசிலும் சில துறைப்பெயர்களை முதல்வர் மாற்றி அழைக்கச் செய்துள்ளதை அறிவோம்.
முனைவர் ம.நன்னன், முனைவர் சிலம்பொலி செல்லப்பன் முதலிய சில அறிஞர்கள் இத்துறையின் இயக்குநராகப் பணியாற்றியிருந்தாலும் தமிழறிஞர்களைக் கொண்டதில்லை இத்துறை. தமிழ் அறிஞர்களுக்கும் சிறந்த நூல்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கினாலும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கோ தமிழ் மொழி வளர்ச்சிக்கோ பணியாற்றுவது இத்துறையின் வேலையல்ல. எனவே, இதன் முதன்மைப்பணியும் முழுமைப்பணியும் ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம்தான். எனவே, இல்லாத தமிழ்வளர்ச்சியைத் துறையின் பெயரில் சேர்ப்பதை மாற்றலாம். மாறாக, ஆட்சித்தமிழ்ச் செயலாக்கத் துறை எனப் பொருத்தமாக அழைக்கலாம். இதனால், தமிழ் வளர்ச்சி இயக்ககம் என இப்போது அழைக்கப்படுவது ஆட்சித்தமிழ் இயக்ககம் என்றோ ஆட்சித்தமிழ்ச் செயலாக்க இயக்ககம் என்றோ அழைக்கப்படலாம்.
தமிழ்வளர்ச்சியில் நாளும் ஆர்வம் காட்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்தும் முதல்வர் மு.க.தாலின் அவர்களும் இதில் கருத்து செலுத்தித் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தை ஆட்சித்தமிழ் இயக்ககமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுகிறோம். இதுபோல், செயலகத்துறையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை என்பதை ஆட்சித்தமிழ்த் துறை என மாற்ற வேண்டுகிறோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும் கட்டுரை : 3. உறங்குகின்ற
தமிழ் வளர்ச்சி இயக்கககத்தினைத் தட்டி எழுப்புக!)
Leave a Reply