(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3 தொடர்ச்சி)

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3


தமிழ் மலையென விளங்கியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாய் விளங்கி, மொழிக்கு வளம் சேர்த்தவர். தமது எழுத்தாலும் பேச்சாலும் சைவ சமயத்தின் பெருமைகளை நாடெங்கும் பரப்பியவர். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உரம் பாய்ந்த உடலும் உறுதி கொண்ட உள்ளமும் உடையவர். தமிழில் மட்டுமின்றி வடமொழி ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் புலமை நலம் சான்ற பெரியார் இவர். இவர்தம் எழுத்தும், பேச்சும், ஆய்வு நோக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் கிடைத்த அரிய செல்வங்களாகும்.

தோற்றம்

தஞ்சாவூர் மாவட்டம், நாகபட்டினத்திற்கு அருகில் இரண்டு கல் தொலைவில் உள்ள காடம்பாடி என்ற ஊரில் 18-7-1879ஆம் ஆண்டு, சொக்கநாதப்பிள்ளை சின்னம்மை ஆகியவர்களுக்கு மகனாகத் தோன்றினார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் வேதாசலம் என்பதாகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததன் காரணமாக இவர் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். சூரிய நாராயண சாத்திரியார் ‘பரிதிமாற் கலைஞன்’ ஆனது போல, சுவாமி வேதாசலம் ‘மறைமலையடிகள்’ ஆனார்.

இளமைப் பருவம்

அடிகள் இளமையிலேயே கல்வி கற்பதில் பேரார்வம் உடையவராக விளங்கினார். தம்முடைய முதல் பள்ளி வாழ்க்கையை வெசுலியன் மிசன் பள்ளியில் தொடங்கினார். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல அடிகள் பேச்சிலும், படிப்பிலும், ஒழுக்கத்திலும் இளமையிலேயே சிறந்து விளங்கினார். அடிகளுக்குப் பத்து வயது நிறைவதற்குள், அடிகளின் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை இயற்கையெய்தினார். ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனப் புறநானூறு உணர்த்தும் கடமையை இவர் தந்தையார் செய்ய இயலாமற் போயினும், மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றியினைச் சிறப்பாகச் செய்தவர் நம் அடிகளார் ஆவர்.

அடிகளாரது இளமைக் காலத்தில், நாகை-நீலலோசனி, பாசுகர ஞானோதயம், திராவிட மந்திரி போன்ற பல கிழமையிதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ‘முருகவேள்’ என்னும் புனைபெயரில் அடிகள் பல கட்டுரைகளை இவ்விதழ்களில் எழுதி வந்தார். அந்நாளில் நாகப் பட்டினத்தில் அமைந்திருந்த ‘இந்து மதாபிமான சங்க’த்திலும் சைவசமயம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். தம்முடைய பதினைந்தாவது வயதிலே பலரும் பாராட்டும் வகையில் கட்டுரை வரையும் வன்மையும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவான சொல்வன்மையும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தவர் மறைமலையடிகளார்.

வெ. நாராயணசாமிப் பிள்ளை, சோமசுந்தர நாயகர் முதலிய சான்றோர்களிடம் இலக்கிய, சமய நூல்களைக் கற்றுத் துறைபோய புலமை பெற்றார். மதுரை நாயகம் பிள்ளை அடிகளாரின் உயிரினிய நண்பர். பட்டத்திற்காகப் படிக்காமல், புலமை வேட்கைக்காகத் தமிழார்வத்தின் காரணமாகப் படித்து இளமையிலேயே பெரும் புலமை பெற்றார் நம் அடிகளார்.

மண வாழ்க்கை

அடிகளுக்கு பதினெட்டு அகவை ஆகும்போதே திருமணம் நடைபெற்றது. 1893-ஆம் ஆண்டு சவுந்தரவல்லி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். 1894-ஆம் ஆண்டில் சிந்தாமணி என்னும் பெண் மகவு பிறந்தது. இல்லற வாழ்வில் பொறுப்புகள் மிகுந்த காரணத்தால், 1894-ஆம் ஆண்டில் தம் பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அடிகளார்.

பள்ளிப்படிப்பை விட்டாலும், தமிழ் இலக்கியங்களைப் படிப்பதை விடாது மேற்கொண்டு வந்தார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையவர்களைத் தமது ஆசிரியர் நாராயணசாமிப்பிள்ளை அவர்களின் மூலம் கண்டு உரையாடி மகிழ்ந்தார் நம் அடிகளார். 2-12-1895 ஆம் ஆண்டு பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களிடமிருந்து ஒரு நற் சான்றிதழினையும் பெற்றார்.

ஆசிரியப் பணி

அடிகளின் ஆசிரியப்பணி முதன் முதலில் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியொன்றில் தொடங்கியது. ஆனால் இப்பணி இரண்டரைத் திங்கள் வரைதான் நீடித்தது. அடிகளின் உடல் நிலைக்குத் திருவனந்தபுரத்தின் தட்ப வெப்பநிலை ஒத்து வராததால் 1896 ஆம் ஆண்டு நாகைக்கே திரும்பிவிட்டார். நாகையில் இருக்கும்போது ‘துகளறு போதம்’ என்னும் நூலுக்கு உரையெழுதினார். ‘முதற் குறள் வாத நிராகரணம்’ என ஒரு மறுப்பு நூலெழுதினார். அக்காலத்தில் சித்தூரிலிருந்து ‘சித்தாந்த தீபிகை’ என்னும் திங்களிதழ், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரத் தொடங்கியது. சித்தாந்த தீபிகை என்பதற்கு ‘உண்மை விளக்கம்’ என்று பெயர். இவ்விதழின் தமிழ்ப் பகுதிக்கு அடிகளார் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 21-6-1897இல் முதல் இதழ் வெளியாயிற்று. திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆகியவற்றின் சில பகுதிகளுக்கு உரையும், அன்பு, அருள் என்னும் கட்டுரைகளும், ‘மூன்று கனவு’ என்னும் நான்கு (ஆங்கில) செய்யுட்களின் மொழிபெயர்ப்பும் வெளியாயின. ஐந்திதழ்கள் வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 9-3-1898இல் சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டதால் சித்தாந்த தீபிகையின் ஆசிரியர் பொறுப்பினை விட நேர்ந்தது.

தமிழ்ப் பேராசிரியர்

சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக அடிகள் பணியாற்றிய காலமே அடிகளின் வாழ்க்கையில் பொன்னான காலமாகும். இக்காலக் கட்டத்தில் பல அரிய ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தன. 1898 ஆம் ஆண்டு சென்னைக்குக் குடியேறிய அடிகளின் வாழ்க்கை 1911 வரை ஏறத்தாழப் பதின்மூன்று ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்தது.

சமுதாயத்திற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைமாறி, பலனை எதிர்பார்த்துப் பணிபுரிகின்ற அளவிற்கு ஆசிரியப்பணி மாறிவிட்ட இக்காலம் போல் அல்லாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு தமிழுக்கும் மாணவர்களுக்கும் தொண்டு புரிந்தவர் நம் அடிகளார் ஆவர்

பத்துப்பாட்டு நூல்களான முல்லைப்பாட்டு பட்டினப் பாலை முதலியனவற்றுக்கு அரிய ஆராய்ச்சியுரைகளை எழுதினார். அடிகளாரின் ஆய்வுரையைக் கண்ட மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்து தம் செலவிலே அச்சிட்டுத்தர வேண்டி அதற்குரிய பொருளையும் திரட்டித் தந்தனர். இவ்வாறு மாணவர்களின் மனங் கொள்ளத்தக்க பேராசிரியராக அடிகள் விளங்கினார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்