4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – தொடர்ச்சி)
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்
4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!
அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது குறித்து ஆணைகள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள் எனப் பலவும் வேண்டிய மட்டும் வந்துள்ளன; வந்து கொண்டுள்ளன. இருப்பினும் முழுப்பயனில்லை. உண்மையிலேயே ஆட்சிமொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒரே ஓர் ஆணை மட்டும் பிறப்பித்தால் போதும். அந்த ஆணை,
தமிழில் உள்ள செயல்முறை ஆணைகள், அலுவலக ஆணைகள், நிதி ஆணைகள், பட்டியல்கள், படிவங்கள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், சுற்றறிக்கைகள், கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள், பிற மட்டுமே செல்லத்தக்கன
என அறிவித்தால் போதும். இயல்பாகவே தமிழ் ஆட்சிமொழித்திட்டம் முழுமையாக நிறைவேறிவிடும்.
இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா? இயலக்கூடியதுதானா? என்றெல்லாம் எண்ணம் வரும். தமிழ் வளர்ச்சித் துறையில்தான் முடியாது. பிற துறையினர் தமிழ் வளர்ச்சித் துறையினரின் தக்க வழிகாட்டுதல் இருந்தால் முடித்து விடுவார்கள். தொடர்பான ஒரு நினைவைப் பகிர விரும்புகிறேன். நான் மதுரையில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராகச் சேர்ந்த உடனேயே மறைந்த அலுவலக உதவியாளரின் ஓய்வூதிய விண்ணப்பத்தை முறைப்படி நிறைவு செய்து தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு அனுப்பினேன். விதி முறைப்படி இல்லை என்று திருப்பி அனுப்பினர். உடன் நான் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பத்தைப் பெற்று அதற்கேற்பச் சிறிது மாற்றம் செய்து மீள அனுப்பினேன். அப்பொழுதும் விதிப்படி அனுப்புக என்றனர். நான் மாவட்டட ஆட்சியகப் பணியாளர்களைக் கலந்து பேசி மீண்டும் விண்ணப்பத்தை உரிய மேலனுப்புகைக்காக அனுப்பினேன். மீண்டும் அதே மறுமொழிதான். நான், உடனே விதிப்படி அனுப்ப வேண்டும் என்று கூறாமல் எந்த விதிப்படி எவ்வாறு அனுப்ப வேண்டும் எனத் தெரிவியுங்கள். மாதிரியையும் அனுப்பி வையுங்கள் என எழுதினேன். மறுமொழி இல்லை. தொடர்பு கொண்டு வினவினேன். “நீங்கள் நடுவணரசிற்கு அனுப்ப வேண்டிய விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் அனுப்பாம் தமிழில் அனுப்பியதால் அவ்வாறு குறிப்பிட்டோம். தமிழில் அனுப்புவதால் மறுக்கப்படுவதாகக் குறித்தால் சரியில்லை என்பதால் அவ்வாறு எழுதி அனுப்பினோம்” எனத் தங்களைத் தாங்களே மெச்சிக் கொண்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலேயே தமிழில் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனுப்புவதைக் குறிப்பிட்டு, நன்னன் ஐயா இயக்குநராக இருந்த பொழுது, மாநிலக் கணக்காய்வுத் துறையினர் தமிழில் வரக்கூடிய எதையும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் தேவையெனில், உரிய பயிற்சி அளிப்பதகாவும் ஆணை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக் காட்டினேன். “உங்களுக்குமட்டும் தமிழ்ப்பற்று இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காகத் தமிழில் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்பி உரிய ஊழியர் குடும்பத்தினர் உரிய காலத்தில் பணம் வாங்குவதைத் தள்ளிப் போடுகிறீர்கள்” என்றார்கள். “என்னை எதிர்ப்பதாக எண்ணித் தமிழை எதிர்க்கிறீர்கள். நான் இதைச் செயலரிடம் எடுத்துச் சொல்வேன்” என்றேன். எனினும் நான் உடன் இயக்குநரிடம் பேசி, “தேவையற்றுச் சிக்கலை உருவாக்குகிறார்கள். தமிழ் வளர்ச்சித்துறையே இவ்வாறு செயல்பட்டால் எங்ஙனம் தமிழ் வளரும்” என்றேன். அவர் உடனே நான் அனுப்பிய ஓய்வூதிய விண்ணப்பத்தை அவ்வாறே தமிழில் மேலனுப்புமாறு தெரிவித்தார். இருப்பினும் ஓய்வூதியம் காலத்தாழ்ச்சியாக வரும் வகையில் ஏதும் சூழ்ச்சி செய்யலாம் என அஞ்சி, பணம் வரைவு அலுவலர் என்ற முறையில் எதிர் பார்க்கும் ஓய்வூதியப் பயனில் 90% வழங்கச் செய்தேன். பின்னர் நான் தமிழில் அனுப்பிய ஓய்வூதிய விண்ணப்பத்தைக் கணக்காய்வுத்துறையினர் ஏற்று உரிய ஓய்வூதிய ஆணையும் பிறப்பித்தனர்.
இதே போல் தமிழில் கையொப்பம் இருந்தமையால் விதிப்படி இல்லை எனத் திருப்பி அனுப்பினார்கள். கேட்டால் நிதி ஆவணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட வேண்டும் என்றார்கள். “நான் படிக்கும் பொழுதிருந்தே வங்கிக் கணக்கில் தமிழில்தான் கையொப்பம் இடுகிறேன். ‘Pay self’ என்பதற்கு எனக்குக் கொடுக்க எனக் குறிப்பிடுவேன். இதற்கு முன்பும் நான் சிறைத்துறையில் பணம் வரைவு அலுவலராகத்தான்(பணம் கோரிப் பெற்று வழங்கும் அலுவலராகத்தான்) பணியாற்றினேன். அங்கும் தமிழில்தான் கையொப்பம் இட்டுவந்தேன். இங்கு வந்தபின்பும் சம்பளப்பட்டிகள் முதலானவற்றில் தமிழில்தான் கையொப்பம் இடுகிறேன்” என்றேன். “கையொப்பம் தமிழா, ஆங்கிலமா எனத் தெரியாமல் ஏற்றிருப்பார்கள். நிதி தொடர்பானவற்றில் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும்” என்றனர். “அப்படி என்றால் நீங்கள் மட்டும் ஏன் கையொப்பம் தமிழா? ஆங்கிலமா? என ஆராய்ச்சி செய்கிறீர்கள். அப்படியே ஏற்க வேண்டியதுதானே” என்றேன். சில நேர வாதுரைகளுக்குப் பின் நான் எடுத்துக் கூறிய ஆணைகளைப் பார்த்து விட்டுத் தமிழ்க் கையொப்பத்தை ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் வளர்ச்சித் துறையில்தான் இந்தச் சிக்கல்கள் எல்லாம். தாங்கள், அரசாணைகளை இம்மிப்பிசகாமல் பின்பற்றுவதாக எண்ணிக் கொண்டு ஒன்றும் புரியாமல் தமிழுக்கு எதிராக இருப்பார்கள். பிற துறையினர் அவ்வாறில்லை. தொடக்கத்தில் கூறியதுபோல் தமிழ் வளர்ச்சித் துறையினர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வர். எனவே, நான் சம்பளக் கணக்கு அலுவலகத்திற்கு ஆய்விற்காகச் சென்றேன்.
தமிழ் ஆர்வலராக இருந்த சம்பளக் கணக்கு அலுவலரிடம், “நீங்களும் இவ்வலுவலகத்தினரும் ஒத்துழைத்தால் ஆட்சிமொழித் திட்டத்தை நம்மால் முழுமையாக நிறைவேற்ற இயலும்” என்றேன்.
“என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டனர். நான் தொடக்கத்தில் ஆட்சி மொழி வகுப்பு நடத்தித் தமிழில் சிறப்பாக எழுதுவதற்கு வழிகாட்டியிருந்தேன். எனவே, என்மீது மதிப்பு கொண்டு சொல்வதைச் செய்ய ஆயத்தமாக இருந்தனர். பட்டியல்களுடன் இணைக்கப்படும் ஆணைகள் தமிழில் இல்லா விட்டால் திருப்பி அனுப்புமாறும் சம்பளப் பட்டியல்களைத் தவிரப் பிற பட்டியல்களைத் தமிழில் அளிக்கச் செய்யுமாறும் கணக்குத் தலைப்புகள் தமிழில் தெரிந்தால் சம்பளப்பட்டியல்களையும்’ தமிழில் அளிக்கச்செய்யுமாறும் ‘பணம் பெற்றுக்கொண்டேன், ‘பணத்தை இன்னாரிடம் கொடுத்திடுக’, ‘அவரது மாதிரிக் கையொப்பம் வருமாறு’ முதலிய குறிப்புகளைத் தமிழிலேயே எழுதச் செய்யுமாறும் தெரிவித்தேன். தொடர்பான சுற்றறிக்கையை அவ்வலுவலகத்தில் அளித்துச் சுற்றறிக்கையில் ஒட்டி வைக்குமாறும் ஒவ்வோர் உதவியாளரும் தம்மிடம் வரும் அலுவலகத்தினரிடம் ஒரு படியைக் கொடுக்குமாறும் வேண்டினேன். எப்பொழுது முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கலாம் எனக் கேட்டனர். கால வாய்ப்பு அளித்தால் தள்ளிக் கொண்டே போகும். எனவே, இப்பொழுது முதலே நடைமுறைக்கு வருவதாகச் செயல்பட வேண்டினேன். எனவே, தமிழில் இல்லாத பட்டியல்களையும் தமிழில் ஆணைகள் முதலியன இல்லாத பட்டியல்களையும் உடனே திருப்பி அனுப்புமாறும் இனிமேல், சம்பளக் கணக்ககத்தில் அளிக்க வரும் ஆங்கிலப் பட்டியல்களை ஏற்காமல் திருப்பி அனுப்புமாறும் வேண்டினேன். அவ்வாறே ஒப்புக் கொண்டு அனைவரும் செயல்பட்டனர். மதுரை அலுவலகத்தில் என்னுடன் அவ்வப்பொழுது பணியாற்றிய கணபதி, கா.பொ.இராசேந்திரன், பரிமளதாசு முதலான பிறரும் ஆர்வமுடன் பிற அலுவலகத்தினருக்கு வழிகாட்டினர். சில காலம் பரபரப்பாக இருந்தாலும் பின்னர் இயல்பான நடைமுறைக்கு வந்து அனைவரும் ஆட்சித்தமிழைச் சிறப்பாகச் செயல்படுத்தினர்.
இதே போல் மாநிலம் தழுவி, அனைவரும் தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தைச் செயல்படுத்த அரசு, பட்டியல்கள், அவற்றின் எல்லா வகை இணைப்புகள், அனைத்திலும் உள்ள கையொப்பங்கள், சுருக்கொப்பங்கள் யாவும் தமிழில் இருந்தால் மட்டுமே செல்லத்தக்கன என ஓர் ஆணை பிறப்பித்தால் போதுமானது. அதே நேரம் அனைத்துப் பட்டியல்கள், ஆணைகளுக்குமான மாதிரிக் கையேட்டையும் அரசு வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் ஐயமின்றிச் செயல்பட ஏதுவாகும்.
தமிழ் ஆட்சிமொழித்திட்ட நிறைவேற்றத்தில் சிறிய ஆணை மூலம் சீரிய பணியை ஆற்ற இயலும்.அரசு ஆவன செய்யும் என எதிர்பார்க்கலாமா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தொடரும் கட்டுரைகள்:
5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக!
6. ஆட்சித் தமிழ்ச் சட்டம் 2022 இயற்றுக!
Leave a Reply