ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்
’இந்திய இறையாண்மை’ இதுதான்
துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள்
வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர்
பிடிபட்டால் சிறைவாசம்
தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு
வேடிக்கை பார்ப்பதற்குக்
கடலோரத்தில் காவற்படை!
எதிர்த்துப் பேசாதீர்கள்
’இந்திய இறையாண்மை’
இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்!
அரசியற்சட்ட அமைப்பில்
அறிந்தேற்புப் பெற்றவை
அட்டவணைப் படுத்தப்பட்டவை
இருபத்துமூன்று மொழிகள்!
அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்!
ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்!
தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு
கொண்டாடுவதற்குச் சமற்கிருதம்
திண்டாடுவதற்குத் தமிழ்!
எதிர்த்துப் பேசாதீர்கள்
’இந்திய இறையாண்மை’
இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்!
சோனியா போனால் என்ன?
மோடி வந்தால் என்ன?
சிவப்பு நாடாச் சீர்கேட்டிலிருந்தோ
அதிகாரிகளின் உருட்டல் மிரட்டலிலிருந்தோ
கலப்படத்திலிருந்தோ
கள்ளச் சந்தையிலிருந்தோ
விடுதலை கிடைக்கும் எனக் கனவு காணாதீர்கள்!
உழவர்களின் தற்கொலைகளும்
நெசவாளர்க்குக் கஞ்சித் தொட்டிகளும்
விடுதலையளித்த வெற்றிச்சின்னங்களல்லவா?
இலவச அரிசி
இலவச வேட்டி
இலவச சேலை
வளமான வாழ்வின் அடையாளங்களல்லவா?
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
உழவுக்கும் தொழிலுக்கும்
வஞ்சனை செய்வோம்!
வீணில் உண்டுகளித்திருப்போரை
வந்தனை செய்வோம்!
Leave a Reply